ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தில்லையம்பலத்தில் தேவாரம் - கி.வெங்கட்ராமன்

கொண்ட கொள்கையில் உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால் ஒருவர் தமக்கு ஆதரவான துணை சக்திகளைத் திரட்டிக் கொள்ள முடியும் என்பதற்கு சிவனடியார் ஆறுமுகசாமி ஒரு எடுத்துக்காட்டு. சிதம்பரம் நடராசர் ஆலய சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம் பாட கடந்த 9 ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட விடாமுயற்சி இன்று வெற்றிபெற்றுள்ளது. அவர் மட்டுமின்றி பிற பக்தர்களும் அங்கு தமிழில் பாடி வழிபட வாய்ப்பு திறந்து விடப்பட்டுள்ளது. இது வரலாற்றுச்
சிறப்புமிக்க நிகழ்வு.

சிதம்பரம் வட்டம் குமுடிமூலை கிராமத்தைச் சார்ந்த சிவனடியார் ஆறுமுகசாமி இந்தியாவெங்கும் சைவத் தலங்களுக்குச் சென்று தமிழில் வழிபட்டு வந்தார். சிதம்பரத்தில் அது நடக்கவில்லை என்ற ஆதங்கத்தில் 1999 ஆம் ஆண்டு
தனது முயற்சியைத் தொடங்கினார். 9-9-1999 அன்று இரவு பூசை நேரம் முடிந்த பிறகு அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படும் சிற்றம்பல மேடையில் நின்று
சிவபுராணம் பாட முயன்ற போது ஆறுமுகசாமியை அங்குள்ள தீட்சிதர்கள் அடித்து அவமானப் படுத்தி வெளியேற்றினர். இதன் மீது அவர் மேற்கொண்ட சட்ட முயற்சியினால் 28-10-1999 காலை 9.30  மணியளவில் கடலு}ர் சட்டப்
பணிகள் ஆணைய நிர்வாக அலுவலர், சிதம்பரம் நடராசர் ஆலய நிர்வாக செயலர்
ஆகியோர் முன்னிலையில் சிற்றம்பல மேடையில் நின்று திருவாசகம் பாடி நடராசரை வழிபட்டார். அன்று இரவே சிதம்பரம் நகர காவல்நிலைய அதிகாரிகள் முன்னிலையில் நடந்த சமரசத்தில் ஆறுமுகசாமி தொடர்ந்து இதேபோல் பாடி
வழிபடலாம் என சிதம்பரம் தீட்சிதர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அந்த வாக்குறுதி மீண்டும் மீண்டும் மீறப்பட்டது. ஒவ்வொரு முறை ஆறுமுகசாமி
முயலும் போதும் அவரை அடித்துத் துன்புறுத்தி வெளி  யேற்றுவது என்பதைத் தீட்சிதர்கள் தொடர் நடவடிக்கையாக மேற்கொண்டனர். இச்சிக்கல் தொடர்பாக ஆறுமுகசாமி தமது சொந்த முயற்சியில் சில தமிழ் அன்பர்களின் துணையோடு துண்டறிக்கைள் அச்சடித்து மக்களிடம் பரப்பி வந்தார். ஒரு  கட்டத்தில் நம்மையும் அணுகினார். சிதம்பரம் தமிழ் காப்பணி இப்பிரச்சினை தொடர்பாக 7-12-1999-இல் துண்டறிக்கை வெளியிட்டு பரப்புரை செய்தது.தீட்சிதர்களின் தமிழ் விரோத சாதிவெறிப் பார்ப்பனியச்
செயல்பாட்டை அந்த அறிக்கை விளக்கமாக அம்பலப்படுத்திக் கண்டித்தது. ஒரு அமைப்பு என்ற வகையில் இப்பிரச்சினையை
மக்களிடையே தமிழ் காப்பணி முதன்முதலாக எடுத்துச் சென்றது.
ஆறுமுகசாமி தேவாரம் பாட அனுமதிக்கப்படாததை கண்டித்தும் தமிழில் அர்ச்சனை செய்யும் உரிமை எந்த தடையும் இன்றி தமிழக ஆலயங்களில் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ் காப்பணி சார்பில் அதன் தலைவர் (மறைந்த) முனைவர்
ச.மெய்யப்பனார் அவர்கள் தலைமையில் உண்ணாநிலைப்
போராட்;டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.

மெய்யப்பனாரும் தமிழ்  காப்பணியின் வேறு சில நிர்வாகிகளும் இதற்கு   முன்னமேயே சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் தேவாரம் பாடப்பட வேண்டும் என்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. 1987 ஆம் ஆண்டில் தமிழறிஞர் முனைவர்
வ.சுப.மாணிக்கனார் அவர்கள்  தலைமையில் உலகறிந்த பல்வேறு
தமிழறிஞர்கள் ஒன்றிணைந்து சிதம்பரத்தில் உள்ள தமிழ்
உணர்வாளர்கள் துணையோடு இதற்கான முயற்சியை
மேற்கொண்டனர். சிற்றம்பல மேடையில் தேவாரம் ஒலிப்பதை
தீட்சிதர்கள் ஏற்க மறுத்தனர். வ.சுப.மாணிக்கனார் உண்ணா
நிலைப் போராட்டத்தை அறிவித்தார். அப்போது நடராசர்
ஆலயத்திற்கு குடமுழுக்கு விழா நடந்து கொண்டிருந்தது.
தொடர்ந்து தீட்சிதர்கள் அடாவடியாக தமிழை தடுத்துக்
கொண்டிருக்க, தமிழக அரசோ இது பற்றி பாராமுகமாக இருந்தது.
குடமுழுக்கை ஒட்டி ஆலயத்தில் எழுப்பப்பட்டிருந்த "வேள்வித்
தீயில் வீழ்ந்து மாய்வோம்" என்று வ.சுப.மா. இறுதி எச்சரிக்கை
விடுத்தார். அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் திரு. இராம.வீரப்பன் தலையீட்டில் சமரசம் நடந்தது. வேறு வழியின்றி
"காலப்பூசையின்" முடிவில் சிற்றம்பல மேடையில் தேவாரம்
பாடப்படும் என்று தீட்சிதர்கள் ஒத்துக் கொண்டு கையொப்ப
மிட்டனர். ஆயினும் நம்முடையதமிழறிஞர்கள் கவனக்
குறைவாகவோ அல்லது அதற்கு மேல் போராட்டத்தை அடு;;த்த
கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலைமையின்
காரணமாகவோ யார் பாடுவது என்பது குறித்து வலியுறுத்தாமல்
விட்டுவிட்டார்கள். ஆயினும் இது மகத்தான முதல் கட்ட வெற்றி. இதற்குப் பிறகு தான் காலையில் பூசை முடிந்த பிறகு தீட்சிதர்களில்
ஒருவர் சிற்றம்பல மேடையில் 'நடராசர் திருமுன்' பக்தர்கள்
அனைவரின் காதில் விழும்படியாக தேவாரம் பாடுவது நடைபெற்றது.

தமிழ்நாட்டின் பிற ஆலயங்களில் கடவுள் சிலைநிறுவப்பட்டுள்ள கருவறைக்கு அடுத்து இருக்கும் அர்த்த மண்டபத்தில் பக்தர்கள்
அனுமதிக்கப்படும் இடத்தில் நின்று மனமுருகி தமிழில் பாடி வழிபாடு நடத்துவது நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது. ஆனால் சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் மட்டும் இந்த உரிமையை தீட்சிதப் பார்ப்பனர்கள் தடுத்து வந்தனர்.
அர்த்த மண்டபத்திற்கு அடுத்துள்ள மகா மண்டபத்தில் தான் பக்தர்கள் நின்று தமிழில் பாடி வழிபாடு நடத்தலாம் என்று அடாவடி
செய்தனர். இது தொன்றுதொட்டு நிலவும் ஐதீகம் என்று காரணம்
கூறி தமிழுக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு
எதிராகவும் தீண்டாமை கடைபிடித்தனர்.
இக்கொடுமைக்கு எதிராக ஆறுமுகசாமி செய்த முயற்சிக்கு
தமிழ் அன்பர்களும் சில தனிப்பட்ட வழக்குரைஞர்களும் துணை
புரிந்தார்கள். சிதம்பரத்திலும் கடலு}ர் மாவட்ட நீதிமன்றத்திலும்
வழக்குகள் நடந்தன. அவை யெல்லாம் உரிய வெற்றிபெறாத
நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற
வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் வழக்குரைஞர்
தோழர் ராஜுவிடம் ஆறுமுக சாமியை அறிமுகம் செய்து
வைத்து இவ்வழக்கை தொடர்ந்து நடத்த துணை செய்யுமாறு
இக்கட்டுரையாளர் கேட்டுக்கொண்டார்.
ராஜு அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்ட மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அதன் சகோதர அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகியவை இதனை தங்களது இயக்க
போராட்டமாகவே முனைப்போடு முன்னெடுத்தன. பாட்டாளி மக்கள்
கட்சி, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட
கட்சிகளின் உறுதுணையோடு தொடர் போராட்டங்களை
ம.உ.பா.மை. நடத்தியது. ம.க.இ.க. வுடன் இணைந்து செயல்பட
முடியாத சூழலில் த.தே.பொ.க.வும் தமிழ் காப்பணியும் இச்சிக்கலில்
இணையான இயக்கங்களை நடத்தி வந்தது. தெருமுனைக் கூட்டங்கள் உள்ளிட்ட பரப்பல்கள் நடந்தன. இந்த வகையில் கடந்த
12-08-2006 அன்று தமிழ் காப்பணி நடத்திய எழுச்சி மிக்கக் கூட்டம்
குறிப்பிடத்தக்கது(விரிவிற்கு காண்க : தமிழர் கண்ணோட்டம் செப்டம்பர் 2006).
 
ம.உ.பா.மை. துணையோடு ஆறுமுகசாமி அளித்த மனுவின்
மீது தமிழக இந்துசமய அறநிலையத்துறை மயிலாடுதுறை
இணை ஆணையர் 2004 திசம்பரில் அளித்த உத்தரவு
தீட்சிதர்களுக்கு ஆதரவாகஅமைந்தது. தொன்றுதொட்டு வந்த
வழக்கம் என்ற பெயரால் பக்தர்கள் சிற்றம்பல மேடையில் தேவாரம்
பாடுவதை அந்த ஆணை தடை செய்தது. இதன் மீது ஆறுமுகசாமி
முன்வைத்த சீராய்வு மனு மீது அறநிலையத்துறை ஆணையர் 30-
4-2007-இல் அளித்த உத்தரவு தெளிவானது. சிறப்பானது.
தீட்சிதர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட எதிர்வாதங்கள் அனைத்தையும் தக்க முறையில் எதிர்கொண்டு அளிக்கப்பட்ட
ஆணையாகும் இது. தீட்சிதர்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிற
"வகையறாக் கோயில்"- Dinominational temple  என்ற  வாதத்தை இவ்வாணை தெளிவாக
மறுத்தது. 1888-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம்
வழங்கிய ஒரு தீர்ப்பை இதற்கு ஆதாரமாக காட்டியது "ஏ.எஸ்.103
மற்றும் 159ஃ1888" என்ற வழக்கில் நீதிபதிகள் n~ப்பர்டு, முத்துசாமி
ஐயர் ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற ஆயம்
அளித்தத் தீர்ப்பு "சிதம்பரம் நடராசர் கோயில் பன்னெடுங்
காலமாக ஒரு பொதுக் கோயிலாக இருந்து வருகிறது என்பதை
மறுக்க முடியாது. இக்கோயில் தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து
என்பதற்கு ஆதாரமே கிடையாது" எனக் கூறியது(தீர்ப்பு நாள் :
17.03.1890). அதுமட்டுமின்றி 23.01.1940-ஆம் நாள் சென்னை
உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெங்கட்ரமண ராவ், நிஜாம்
ஆகியோர் அடங்கிய ஆயமும் "இக்கோயில் தீட்சிதர்களின்
சொந்தக் கோயில் அல்ல என்பதிலும், அது அரசு சட்டத்தின்
கீழ் வருகிற ஒரு பொதுக் கோயில் என்பதிலும் எவ்வித ஐயமும்
இல்லை" என்று உறுதி செய்தது. ஆயினும் இவ்வாறான
தீர்ப்புகளுக்கும், தமிழக அரசின் ஆணைகளுக்கும் எதிராக உச்ச
நீதிமன்றம் சென்று தடை வாங்கியதை வைத்துக் கொண்டு
நடராசர் ஆலயத்தை தீட்சிதர்கள் தொடர்ந்து தங்களது நிர்வாகத்தின்
கீழ் வைத்திருக்கிறார்கள்.
 
சைவ சமயத்தில் தனிப்பிரிவு அல்லது வகையறா என்பதற்கு
இடமில்லை என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை(ஆதிவிசுவேசுவரர்
காசி விசுவநாதர் திருக்கோயில் எதிர் உ.பி. அரசு - 1997(4)SCC606) எடுத்துக்காட்டி தீட்சிதர்கள் வாதத்தை அறநிலையத்துறை ஆணை
மறுத்தது. அதுமட்டுமின்றி தொன்று தொட்டு நிலவும் பழக்கம்
என்பதற்கான வரையறையை இந்த அரசாணை எடுத்துக்காட்டியது.
ஒரு திருக்கோயிலில் கடை பிடிக்கப்படும் பழக்கவழக்கங்கள்
தொன்மையானவையாகவும் நினைவிற்கு எட்டாதவையாகவும்
இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வழக்கம் தொடங்கிய நாளில்
இருந்து தடையின்றி நடந்திருக்க வேண்டும். அதற்கான
திட்டவட்டமான சான்றுகள் இருக்க வேண்டும்.
சுந்தரர், நடராசர் கோயில் 'திருக்களிற்றுப் படிமருங்கு' நின்று
அதாவது பஞ்சாட்சரப் படியிலிருந்து தேவாரம் பாடினார்
என்பதைப் பெரிய புராணம் பதிவு செய்கிறது. சுந்தரர் தீட்சிதர்
அல்லாதவர். மேலும் கி.பி. 14, 15, 18 ஆகிய நு}ற்றாண்டுகளில்
படையெடுப்புகள் காரணமாகவும் சைவ வைணவ மோதல்
காரணமாகவும் நடராசர் ஆலய பூசைகள் அவ்வப்போது பல
ஆண்டுகள் தொடர்ச்சியாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. இதன் பிறகே
தீட்சிதர்களின் சூழ்ச்சியால் பக்தர்கள் சிற்றம்பல மேடையில்
தேவாரம் பாடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை ஆணை 'இந்திய அரசமைப்புச் சட்டம்
வழங்கும் சம உரிமையை சாதி அல்லது வேறு காரணங்களை
காட்டி, பழக்கவழக்கங்கள் என்ற பெயரால் யாரும் மறுக்க
முடியாது' என்ற சட்டநிலையை எடுத்துக்காட்டி ஆறுமுகசாமியோ
அல்லது வேறு பக்தர்களோ சிற்றம்பல மேடையில் தமிழில்
பாடி வழிபடுவதை தீ;ட்சிதர்கள் தடுக்க முடியாது என
வலியுறுத்தியது.

ஆயினும் தீட்சிதர்கள் இந்த ஆணைக்கு சென்னை உயர்நீதி
மன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கினார்கள். அதன்பிறகு உயர்
நீதிமன்ற வழிகாட்டுதலுக்கிணங்க தமிழ்நாடு இந்துசமய
அறநிலையத்துறை செயலரிடம் முறையீடு செய்தார் ஆறுமுகசாமி.
29-02-2008 அன்று வழங்கிய ஆணையில் பக்தர்கள் காலப்
ப10சை முடிவில் அதன் ஒர் பகுதியாக கருதத்தக்க அளவிற்கு
அரை மணி நேரம் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட வழிபாட்டு
பாடல்களை தமிழில் பாடி வழிபடலாம் என்றும் அவ்வாறு
செல்பவர்கள் தீட்சிதர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்
என்றும் கூறியது. இதனடிப்படையில் ம.க.இ.க., விடுதலை சிறுத்தைகள் துணையோடு 02.03.2008 அன்று காலை தேவாரம் பாடச் சென்ற ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் திமிரோடு வழிமறித்துத் தாக்கினர். காவலுக்கு சென்ற கடலு}ர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறையினரையும் தாக்கினர். கடும் போராட்டத்திற்கு
இடையில் ஆறுமுகசாமியை சிற்றம்பல மேடைக்கு து}க்கிச் சென்று காவல்துறையினர் நிறுத்திய போதும் நடராசர் சிலையை பூணு}ல் அணிந்த மாமிச மலைகளாக குறுக்கே
நின்று மறித்தார்கள் தீட்சிதர்கள். நடராசர் திருமுன் தேவாரம்
பாடுவது என்ற அரசாணையை செயல்படுத்த விடாமல் தீட்சிதர்கள்
செய்த அராஜகம் உலகெங்கும் உள்ள தமிழர்களையும், சனநாயக
சக்திகளையும் விழித்தெழச் செய்தது. பார்ப்பனியத்தின்
கொடுங்கொன்மை விளங்காதவர் களுக்கும் விளங்க வைக்கப்பட்டது.
மாலையில் மீண்டும் தேவாரம் பாட முயன்றவர்கள் மீது
காவல்துறை தடியடி நடத்தி வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 34
பேரை கைது செய்தது. அடுத்த நாள் தீட்சிதர்கள் சிலரும் கைது
செய்யப்பட்டார்கள். ஆறுமுகசாமியும் கைதானார். தமிழில் வழிபாடு நடத்த வருபவர்களைத் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என 04- 03-08 அன்று தமிழக அரசு உறுதியாக அறிவித்தது. இதைத்
தொடர்ந்து 05-03-2008 அன்று காலை ம.க.இ.க. தோழர்கள் ஐந்து
பேர் காவல்துறை பாதுகாப்போடு சிற்றம்பல மேடையில் தேவாரம்
பாடி அரசாணைப்படி உள்ள வழிபாட்டு உரிமையை நிலை
நாட்டினர். இதற்கிடையில் கைதான அனைவரும் 05-03-08 அன்று மாலை விடுதலையாயினர்.
06-03-2008 அன்று சிற்றம்பல மேடையில் நின்று மனமுருகி தேவாரம் பாடி நீண்ட கால தன்னுடைய போராட்டத்தை வெற்றிகரமாக ஆறுமுகசாமி நிறைவு செய்தார்.
ஆயினும் பக்தர்கள் அனைவரும் சிற்றம்பல மேடையில் தமிழில் வழிபாடு நடத்தும் உரிமையை இடையீடு இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்தும் தேவை எழுந்தது. அதற்கான முயற்சியை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்கொண்டது. 11-03-2008 அன்று
சிதம்பரம் நகர காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இதற்கான சந்திப்பு நடந்தது. 12- 03-2008 தொடங்கி நாள்தோறும் காலையில் 'காலப் பூசை' முடிந்ததும் 7.30 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் தமிழில் பாடி நடராசரை வழிபடலாம்  எனவும், அதற்கு தீட்சிதர்கள் எந்த வகையிலும் இடையூறு செய்யக் கூடாது எனவும் உடன்
படிக்கையானது. த.தே.பொ.க. சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் மற்றும் பட்டு தீட்சிதர் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர். இதன்படி 12-03-2008 முதல் 15-03-2008 வரை காவல்துறை பாதுகாப்போடு தமிழகமெங்கும் இருந்து சிவனடியார்கள் சிற்றம்பல மேடையில் கம்பீரமாக தெளிந்த இசையில் தேவாரம், திருவாசகம் பாடினர். 15-03-2008 அன்று தமிழ் வழிபாட்டுரிமை பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவர் முனைவர் நா.இரா.சென்னியப்பனார் எழுத்துப் பூர்வமாக தெரிவித்ததைத்
தொடர்ந்து தமிழகமெங்கும் இருந்து நாள்தோறும் காலையில்
சிவனடியார்கள் சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம்
பாடி வழிபட்டு வருகின்றனர். ஆயினும் சிதம்பரம் நடராசர்
ஆலயம் தொடர்ந்து தீட்சிதர்கள் நிர்வாகத்திலிருப்பது எந்த
வகையிலும் ஞாயமற்றது. தீட்சிதர்கள் தனித்த சமய வகைப்
பிரிவினர் என்பதற்கோ, இது அவர்களது வகையறாக் கோயில் என்பதற்கோ எந்த சட்ட ஆதாரமும் இல்லை. தவிரவும் வகையறாக்
கோயில்களின் நிர்வாகத்தையும் அரசே ஏற்று நடத்தலாம் என்று
உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்புரைத்திருக்கின்றது(காண்க :
தமிழர் கண்ணோட்டம் செப்டம்பர் 2006).
அரசு நிர்வாகத்தின் கீழ் வராமல் பார்ப்பனர்கள் வசமே கோயில் ஒப்படைக்கப்பட்டால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன
நேரும் என்பதற்கு தில்லை தீட்சிதர்களின் அடாவடியே
எடுத்துக்காட்டு. அரசுக் கட்டுப்பாட்டில் வந்தால் பூசை,
சடங்குகள் நின்றுவிடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பூசை
சடங்குகள் நிறைவேற்றுவதற்கு பக்தர்களைக் கொண்ட நிர்வாகக்
குழுவை ஏற்படுத்திக் கொள்ள எந்தத் தடையும் இல்லை. நடராசர்
கோயில் வளாகத்திற்குள்ளேயே இருக்கும் கோவிந்தராச பெருமாள்
கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
அங்கு வழிபாட்டுச் சடங்குகள் எந்த இடைய10றும் இன்றி நடந்து தான் வருகின்றன. அதே போல் ஏற்பாடு நடராசர் ஆலயத்திலும் செய்து கொள்ள முடியும். கோயில் நகைகளைத்; திருடுவது, கோயில் வளாகத்திற் குள்ளேயே குடித்து விட்டு கும்மாளமிடுவது, பிற குற்றச்
செயல்கள் போன்றவற்றில் தீட்சிதர்கள் ஈடுபடுவது யாரும்
அறியாத ஒன்றல்ல. ஏதோ அரசு நிர்வாகத்தில் போனால் தான்
எல்லாம் கெட்டுவிடும் என்று ஐயுறுவதிலும் பொருளில்லை.
அரசு நிர்வாகத்தில் இருந்தால் பொதுமக்கள் தட்டிக்
கேட்டுத் தலையிட சட்ட வாய்ப்பு உண்டு. தீட்சிதர்களின் தனிக்
கோயில் என்றால் அந்த வாய்ப்பு இல்லை. எனவே இனியும்
தாமதிக்காமல் உரிய சட்ட ஏற்பாடுகள் செய்து சிதம்பரம் நடராசர் ஆலயத்தைத் தமிழக அரசு இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு  வரவேண்டும். தமிழ் உணர்வாளர்களின் போராட்டம் அதுவரை தொடர வேண்டும்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.