தலையங்கம் - பயங்கரவாதத்திற்கான நிரந்திரத் தீர்வு
பயங்கரவாதத்திற்கான நிரந்திரத் தீர்வு
(புதிய தமிழர் கண்ணோட்டம் இதழின் திசம்பர் 2008 தலையங்கம்)
மும்பையில் பொதுமக்கள் புழங்கும் இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசியதும் துப்பாக்கிச் சண்டை நடத்தியதும் நவீனக் காட்டுமிராண்டித்தனம். அவர்களின் வெறிச்செயலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அவர்களின் மனிதக் கசாப்பில் மடிந்து போன அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
இந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டோர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இது, ஜம்மு காசுமீர் விடுதலைக்கான ஆய்தப் போராட்ட அமைப்பாகும். பாகிஸ்தான் பிடியில் உள்ள காசுமீரிலிருந்து இவர்கள் செயல்படுகிறார்கள். இந்தத் தாக்குதலை ஜம்மு காசுமீர் விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக அந்த அமைப்பு நடத்தியிருக்கலாம். தேசிய இனவிடுதலையை நாம் ஆதரிக்கிறோம். அதே வேளை, அப்பாவிப் பொதுமக்கள் அன்றாட வாழ்வில் ஈடுபட்டிருக்கும் போது கொல்வது பயங்கரவாதச் செயலாகும். மனித உரிமைப் பறிப்பாகும்.
மும்பையில் நெருக்கியடித்து மக்கள் நகரும் இடம் சத்திரபதி சிவாஜி தொடர்வண்டி நிலையம் (வி.டி.ரயில் நிலையம்). அங்கு பொதுமக்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்கள், கையெறி குண்டுகளை வீசிக் கொன்றுள்ளார்கள். அங்கு மட்டும் 50 பேர் இறந்தார்கள். 60 பேர் காயமடைந்தார்கள். மக்கள் கூடும் சந்தைப் பகுதி, மருத்துவமனை, ஐந்து நட்சத்திர விடுதிகள் எனப் பத்துப் பன்னிரண்டு இடங்களில் இதே அட்டூழியம் நடந்துள்ளது.
ஐந்து நட்சத்திர விடுதிகளான தாஜ்மகால், டிரைடண்ட், ஓபிராய் ஆகியவற்றில் அறையெடுத்து, களம் அமைத்து, பாதுகாப்புப் படையினரோடு போரிட்டுள்ளார்கள். யூதர்கள் வசிப்பிடமான நரிமன் இல்லத்தில் புகுந்து நிலை கொண்டு சுட்டிருக்கிறார்கள். குண்டு வீசி இருக்கிறார்கள். அங்கும் பாதுகாப்புப் படையினரோடு போர் நடந்துள்ளது.
இப்படுகொலையில் மொத்தம் 183 பேர் பலியாகி உள்ளனர். 300 பேர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் வெளிநாட்டினர் 22 பேர். பாதுகாப்புப் படையினர் 20 பேர். பயங்கரவாதிகளில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள், ஒருவர் உயிருடன் பிடிபட்டார் என்று அரசுத் தரப்பு கூறுகிறது. இந்தத் தாக்குதல் நடந்த முறை கவனிக்கத்தக்கது. அவர்கள் யாரையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கவில்லை. கோரிக்கை எதுவும் வைக்கவில்லை.
அரசு எந்திரத்துடன் மோதுவதுதான் அவர்கள் நோக்கமாக இருந்துள்ளது. பொதுமக்களைச் சுட்டுக்கொல்வது, விடுதிகளில் பாசறை அமைத்துப் போர் தொடுப்பது எல்லாம், அரசுப்படையினரைத் தங்களை நோக்கி வரவழைத்து அவர்களுடன் மோதும் உத்தி.
2003-ஆம் ஆண்டு, புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்து இவர்களைப் போன்ற இன்னொரு பிரிவினர் துப்பாக்கிச் சண்டை நடத்தினார்கள். சாவு உறுதி என்ற முடிவோடு இவர்கள் போரிட வருகிறார்கள். எந்த இலட்சியம் இவர்களை இந்த முடிவிற்கு உந்தித் தள்ளியது? தங்கள் தாய்மண்ணை விடுதலை செய்யவேண்டும் என்ற இலட்சியம் தான் இத்தனை துணிச்சலையும் உயிர் ஈக உணர்வையும் இவர்களுக்கு ஊட்டி உள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் இறக்கியுள்ளது.
மும்பையில் வந்து அப்பாவிப் பொதுமக்களை இப்படிச் சுட்டுக்கொல்வது, குண்டுவீசிக் கொல்வது மனிதநேயச் செயலா என்று இவர்களைக் கேட்டால் என்ன சொல்வார்கள்? ஜம்மு காசுமீரில், இந்தியப் படையாட்கள் அன்றாடம் மண்ணின் மக்களைச் சுட்டுக் கொல்கிறார்கள், சித்திரவதை செய்கிறார்கள், பாலியல் வன்முறை செய்கிறார்கள். அதுமட்டும் மனித நேயமா என்று திருப்பிக் கேட்பார்கள். காசுமீரில் இவ்வாறான கசாப்பு வேலையை இந்திய அரசு ஏன் செய்யவேண்டும்? பிரிவினைவாதிகளிடமிருந்து ஜம்மு காசுமீரைப் பாதுகாத்து இந்தியாவுடன் அதன் இணைப்பை வலுப்படுத்தவே படை நடவடிக்கை என்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்.
1947 வரை ஜம்மு காசுமீர் தனிநாடாக இருந்தது. பிரித்தானிய ஆட்சி வெளியேறும் போது, காசுமீரைக் கவ்விக் கொள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போட்டுப் படைகளை அனுப்பின.. காசுமீர் தன்னுரிமைக்கான சனநாயகப் போராட்டங்கள் அடக்குமுறையில் அமுக்கப்பட்டன.
இந்தப் பின்னணியில் தான் ஜம்மு காசுமீர் விடுதலைக்கு ஆய்தப் போராட்ட அமைப்புகள் உருவாயின. அவற்றுள் ஒன்றுதான் லஷ்கர்-இ-தொய்பா. லஷ்கர்-இ-தொய்பா போன்ற ஆயுதப் போராட்ட அமைப்புகள் உருவாகக் காரணம் அரச பயங்கரவாதம் தான். போராளிகளின் பயங்கரவாதம் அரச பயங்கரவாதத்தின் எதிர்வினையே.
“அரச பயங்கரவாதம் அறம் சார்ந்தது, தவிர்க்க முடியாதது, ஆதரிக்க வேண்டிய ஒன்று” என்பது போன்ற உளவியல், ஆட்சியாளர்களாலும் ஊடகங்களாலும் உருவாக்கப்பட்டு வருகிறது. மக்களிடம் திரட்டிய வரிப்பணம், பலநாட்டு நிதி உதவி எனப் பொருளைக் கொட்டி வைத்துக் கொண்டு, படைக்கருவிகளைக் குவித்துக் கொண்டு, படையாட்களைப் பெருக்கி, தேசிய இனத் தாயக உரிமைகோரும் மக்கள் மீது அரசுகள் போர் தொடுக்கின்றன. அந்த அளவுக்கு வசதியும் ஆள் வலிவும் இல்லாத விடுதலை அமைப்புகள், வலுமிக்க எதிரியைச் சந்திக்கப் பல்வேறு குறுக்கு வழிகளைக் கையாள்கின்றன.
விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகள் பொதுமக்கள் இலக்குகளைத் தாக்காமல் தவிர்க்கின்றன. ஆனால் லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகள் பொதுமக்கள் இலக்குகளையும் குறிவைக்கின்றன. அரசுப்படைகள் பொதுமக்களைத் தாக்கும் போது தாங்கள் ஏன் தாக்கக் கூடாது என்று அவை எதிர்வினா எழுப்பக்கூடும் ஆனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தாம் என்பது கவலையும் வேதனையும் தருகிறது.
ஒரு தேசிய இனம் தனது தாயக அரசை அமைத்துக் கொள்ளும் உரிமையை சனநாயக வழியில் செயல்படுத்த வேண்டும். மக்கள் கருத்தை சனநாயக வழியில் அறிந்து அதை ஆட்சியாளர்கள் ஏற்க வேண்டும். சனநாயகத்தைக் கடைபிடிக்க ஆட்சியாளர்கள் முன்வந்தால் மட்டுமே பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்.
ஈழத்தில் தாயக உரிமை பறிக்கப்பட்டு, சிங்களப் பேரினவாத அரசால் இனப் படுகொலைக்கு உள்ளாகும் மக்களைப் பாதுகாக்கவும், ஈழத்தமிழர்களின் தன்னுரிமையை வென்றெடுக்கவும், ஆய்த போராட்டம் நடத்தும் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சித்தரித்து அவர்களை ஒழிக்க இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுதம் தருவது எந்த வகையில் சனநாயகம்? மனிதநேயம்? இலங்கை ரத்னா என்.ராமின் இந்து ஏடு, மும்பை பயங்கரவாதத்தை மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் கண்டிக்காதது ஏன் என்று ஆசிரிய உரையில் (1.12.2008) வினா எழுப்புகிறது. அன்றில்லாவிட்டாலும் மறுநாள் மறுநாளாவது விடுதலைப் புலிகள் அதற்குக் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும் என்று கூறுகிறது.
பொதுவாக உலக நடப்புகள் மீது விடுதலைப் புலிகள் அவ்வப்போது ஆதரவோ அல்லது கண்டனமோ தெரிவிப்பதில்லை. ஒருவேளை பிரபாகரன் மாவீரர் நாள் உரையில் கண்டனம் தெரிவித்திருந்தால் அதை இந்து ஏடு பாராட்டுமா? மாறாக இந்தியாவை ஏமாற்றுவதற்காக பிரபாகரன் செய்யும் சூழ்ச்சி என்றே ஏளனம் செய்திருக்கும். இந்தியாவிடம் பிரபாகரன் நட்புக்கரம் நீட்டுவதையே பாசாங்கு என்று இத்தலையங்கம் சாடுவது கவனிக்கத்தக்கது.
இந்திய அரசு படைவலுவைப் பெருக்குகிறது; பாகிஸ்தானைப் பகை நாடாகக் காட்டுகிறது. இஸ்லாமியர் எதிர்ப்பிலான இந்து தேசியவெறியை பா.ஜ.க. கிளப்புகிறது. காங்கிரசும் அதில் நம்பிக்கை வைக்கிறது. ஆனால், மும்பைப் பயங்கரவாதத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவைத் தன்னோடு அணி சேர்க்க அமெரிக்க வல்லரசு திட்டமிடுகிறது. சோனியா - மன்மோகன் ஆட்சி, அமெரிக்காவுடன் படைக் கூட்டணியை விரும்பி நிற்கிறது. அப்படி அணிசேர்ந்தால் இந்தியா புதைசேற்றில் காலை விட்டதாக முடியும். இந்தியா முழுவதும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகும்.
ஆரியப் பார்ப்பனிய அமைப்புகளான ஆர்.எஸய்.எஸ். அணியினர் போன்றவை பாபர் மசூதியை இடித்ததன் எதிர்விளைவாகத்தான் இந்தியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதம் வேர்விட்டது. அதை ஒட்டிப் பயங்கரவாத அமைப்புகள் உருவாயின என்பதைக் கவனிக்க வேண்டும். அரசியல், கல்வித்திட்டம் இரண்டிலிருந்தும் மதத்தை வெளியேற்ற வேண்டும். மதவாத அமைப்புகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும். மாபெரும் மக்கள் எழுச்சிதான் இவ்வாறான சட்டங்கள் வரத் துணை செய்யும்!
கடைசியாக ஒன்று, மும்பை மாநகரம் வரைமுறை இல்லாமல், வீங்கிக் கிடக்கிறது. மும்பை மாநகரம் இந்தியாவின் பொருளியல் தலைநகரம் என்கிறார்கள். இதன் பொருள் என்ன? இந்திய-பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக்கான தலைநகரம் என்பதாகும். வணிகச் சூதாட்டம், பங்குச் சந்தைச் சூதாட்டம், கருப்புப்பணப் புழக்கம், ஹவாலா, கள்ளக்கடத்தல், தாதா அரசியல், விபச்சாரம் போன்ற எல்லா சமூக நோய்களும், இந்தியாவில் மற்ற நகரங்களை விட மும்பையை அதிகமாகப் பீடித்துள்ளன.
வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினர் மிகை எண்ணிக்கையில் குவிந்து கிடக்கின்றனர். இவற்றை ஒழுங்குபடுத்தி மராட்டிய மாநிலத்தின் தலைநகர் என்ற வரம்புக்குள் அதைக் கொண்டு வர வேண்டும். தமிழர்கள் மும்பையைப் பார்த்தாவது விழிப்புணர்வு பெற வேண்டும். சென்னை மாநகரம் இரண்டாவது மும்பையாக வீங்கிக் கொண்டுள்ளது. வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநிலத்தவர் சென்னையில் தங்கிட ஒழுங்கு முறைகளையும் வரம்புகளையும் விதிக்க வேண்டும்.
இந்திய அரசு, உள்துறை அமைச்சரை மாற்றுவதாலோ புதிய புதிய படைப்பிரிவை உருவாக்குவதோ, பொடா போன்ற கொடிய சட்டங்களை மீண்டும் கொண்டு வருவதாலோ பயங்கரவாதத்தை ஒழித்து விட முடியாது; சனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் கடைப்பிடிப்பதன் மூலமே அதை ஒழிக்க முடியும்.
புதிய தமிழர் கண்ணோட்டம் - திசம்பர் இதழ் 2008
Leave a Comment