ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழின எழுச்சியும் தடங்கல்களும் - பெ.மணியரசன்

தமிழின எழுச்சியும் தடங்கல்களும்
பெ.மணியரசன்
சிங்களப் பேரினவாத வெறி அரசு ஈழத்தமிழர்களைக் கொன்று குவிப்பது, தமிழ்நாட்டில் மிகப்பரந்த தற்காப்பு உணர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. காங்கிரஸ், அ.இ.அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவிர்த்த மற்ற அரசியல் கட்சிகள் போர் நிறுத்தம் கோரிவருகின்றன. மேற்கண்ட மூன்று கட்சிகளும் சிங்களர் நடத்தும் தமிழ்இன அழிப்புப் போரை நிறுத்துமாறு கோரக் கூடாது என்ற நிலை எடுத்துள்ளன.


jeyalalitha_meetஅரசியல் கட்சிகளுக்கு அப்பால், பல்வேறு உழைக்கும் மக்கள் பிரிவினர்-முடிதிருத்துவோர் சங்கம் உள்ளிட்டு மூட்டை தூக்குவோர் சங்கம் வரை, போர் நிறுத்தம் கோரி உண்ணாப்போராட்டமோ அல்லது ஆர்ப்பாட்டமோ செய்து வருகின்றன. அதேபோல் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்
பேரவை தொடங்கி, அந்தந்தப் பகுதி சிறிய நடுத்தர வணிகர் அமைப்புகள் வரை போர் நிறுத்தம் கோரி, ஏதோ ஒரு வகையில் இயக்கம் நடத்தி வருகின்றன.

பெரும் தொழிற்ச்சாலைகளில், பொதுத்துறை நிறுவனங்களில் செயல்படும்பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஈழத்தமிழர் இனப்படுகொலையைக் கண்டிக்கும் இப்போராட்டத்தில் பங்கு பெறாமல் ஒதுங்கி நிற்கின்றன. தமிழக மற்றும் இந்திய அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் அமைப்புகளும் அவ்வாறே ஒதுங்கி நிற்கின்றன. ஆனால் அவ்வமைப்புகளில் உள்ள சனநாயக உணர்வாளர்களும், இன உணர்வாளர்களும் தங்கள் விருப்பத்தின் பேரில் போர் நிறுத்தக் கோரிக்கைப் போராட்டங்களில் பங்கு கொண்டனர்.

பார்ப்பனிய மேலாதிக்க அமைப்பான பாரதியசனதாக் கட்சியின் தமிழகப் பிரிவு கூட போர் நிறுத்தம்கோருகிறது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் போர்நிறுத்தம் கோரி எந்த இயக்கமும் நடத்தவில்லை. அதுமட்டுமின்றி போர்நிறுத்தக் கோரிக்கையை எதிர்த்தும் வருகின்றன. 22.11.2008 அன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சி நேருக்குநேர் நிகழ்ச்சியில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுச் செயலாளர் என்.வரதராசன் ஏகாதிபத்தியங்களின் தூண்டுதலால் தான் விடுதலைப் புலிகள் பிரிவினைப் போர் நடத்துகிறார்கள் என்றார்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போன்ற ஏகாதிபத்திய நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்துள்ளன. ஆனால் சற்றும் நாகூசாமல், விடுதலைப் புலிகளை ஏகாதிபத்தியம் தூண்டி விடுகிறது என்கிறார் வரதராசன். பெருந்தேசிய இன ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு, அதன்கீழ், இரண்டாம் தரக்குடிமக்களாக வாழ்வதே சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு விதிக்கப்பட்ட விதி. இதுவே பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற நிலை எடுத்து மார்க்சியலெனியத்தைக் கொச்சைப்படுத்தி வருகிறது மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி. இந்தியாவிலும் இதே பேரினவாதஆதரவுத் தேசியக் கொள்கையையே அது கடைபிடிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்சின் இன்னொரு அரசியல் வடிவமாகவே அண்ணா தி.மு.க.வை செயலலிதா நடத்தி வருகிறார். ஆதலால், தமிழ், தமிழ் இனம் சார்ந்த உரிமைப் போராட்டங்களைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். அந்த இனப் பகைமையின் தொடர்ச்சியாகவே, ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு உள்ளாவதைக் கண்டித்து எந்தப் போராட்டமும் அவர் நடத்தவில்லை.

தமிழ் இனத்தைப் பகைத்துக் கொண்டாலும், தமிழர்களின் வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற ஓர் அரசியல் சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. இந்தத் தமிழ் இன எதிர்ப்பு நீரோட்டத்தின் இரண்டு கரைகளாக செயலலிதாவும் கருணாநிதியும் இருக்கின்றனர். தமிழ் இன உணர்ச்சியைப் பயன்படுத்திப் பதவி அரசியல் நடத்தும் பாசாங்குக்காரர் கருணாநிதி. அவருடைய பாசாங்கு, தன்னலப் போக்கு, சூழ்ச்சிகள் போன்றவை தமிழ் மக்களில் கணிசமானோரை செயலலிதா பக்கம் விரட்டியுள்ளன.

தமிழ் இனப் பகைவரான செயலலிதாவின் அரசியல் வலிமைக்கு எதிர்வகை ஆதாரமாக இருப்பவர் கருணாநிதி. அதேபோல் கருணாநிதியின் பாசாங்கு இன அரசியலே பாலைவன நீர்போல்ஒரு சாரார்க்குக் காட்சி அளிப்பதற்குக் காரணம் செயலலிதாவின் தமிழ் இன எதிர்ப்பு அரசியலே. இவ்வாறாக, செயலலிதா கருணாநிதியின் அரசியல் வலிமைக்கு எதிர்வகை ஆதாரமாகச் செயல்படுகிறார்.

"அரசியல் என்பது குருதி சிந்தாத போர், போர் என்பது குருதி சிந்தும் அரசியல்" என்றார் மாவோ. போரிலும் சரி, அரசியலிலும் சரி பகைவர்களை முற்றிலுமாக முறியடிக்க வேண்டுமெனில், பாசாங்குக்காரர்களை முதலில் அடையாளம் காணவேண்டும். அவர்கள் குழப்புவதற்கு இடம் கொடுக்கக் கூடாது.

பாசாங்குக்காரர் என்பவர் யார்? ஒரே நேரத்தில் எதிர் எதிர் முகாம்களுக்கிடையே உறவு வைத்துக்கொள்பவர். எந்த நேரத்திலும் தன்னலம் காக்க ஏதாவதொரு முகாமுக்கு இரண்டகம் செய்பவர். இன்று தமிழ்த் தேசியம் எதிர்கொள்ளும் மிகமோசமான குழப்பவாதிகள் இந்த இரண்டுங்கெட்டான் இன உணர்வாளர்கள் தாம்! ஈழத்தில் போர் நிறுத்தம் செய்வதை 15 நாட்களில் இந்திய அரசு உறுதி செய்யவேண்டும் இல்லையேல் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவர் என்று 14.10.2008 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி முன்மொழி;ந்த தீர்மானத்தை, அதில் கலந்து கொண்ட அனைவரும் ஏற்றனர். (காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியினர் பிறகு மாற்றிக்கொண்டனர்)

நாடாளுமன்றத் தி.மு.க. உறுப்பினர்கள் முந்திக்கொண்டு விலகல் கடிதங்களை முன்கூட்டியே கலைஞரிடம் கொடுத்தனர். பின்னர் மனிதச் சங்கிலி (24.10.2008) நடத்தி போர் நிறுத்தத்திற்கு ஓங்கிக்குரல் கொடுத்தார் கலைஞர். ஆனால், 26.10.2008 மாலை பிரணாப்முகர்ஜி சென்னை வந்து அவரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின் அப்படியே தலைகீழாக மாறிவிட்டார். நடுவண் அரசு நடவடிக்கை திருப்தி அளிக்கிறது என்றார். பிரணாப்முகர்ஜி நடுவண் அரசு முடிவுகளை அன்று (26.10.2008) மாலை தமிழகமுதல்வர் வீட்டு வாயிலில் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். அம்முடிவுகள்:

1. இந்திய அரசு போர் நிறுத்தம் கோராது.
2. இலங்கை அரசுக்குப் படைக்கருவிகள் கொடுப்பது, இந்தியாவில் உள்ள சில நிறுவனங்களைப் பாதுகாக்கவே.
3. இலங்கைப் படையினர்க்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை நிறுத்த முடியாது. அவ்வாறான பயிற்சி பல நாட்டுப் படையினர்க்கும் இந்தியாவில்
அளிக்கப்படுகிறது.
4. இலங்கைத் தமிழர்களுக்கு உதவிப் பொருட்கள் இந்திய அரசு சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் அனுப்பி வைக்கப்படும். இப்பொருட்கள்
செஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக அனுப்பி வைக்கப்படும்.

மேற்கண்ட நடவடிக்கைகளில் எது மனநிறைவைத் தந்தது கலைஞர் கருணாநிதிக்கு? உதவிப் பொருட்களை போர் நடக்கும் வன்னிப்பகுதிக்குள் கொண்டு போய் கொடுக்க செஞ்சிலுவைச் சங்கத்தை இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. போர் நிறுத்தம் கோர மறுத்ததுடன், சிங்கள அரசுக்கு ஆய்த உதவி, நிதி உதவி, பயிற்சி அளிப்பது ஆகியவற்றை நிறுத்திவிட இந்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. எதில் மனநிறைவடைந்தார்? அது மட்டும் அல்ல, அடுத்த நாட்டில் எந்த அளவு இந்தியா தலையிடமுடியும்?

இலங்கையின் உள் விவகாரத்தில் இந்தியா தலையிட்டு போர் நிறுத்தம் கோரினால், பிறகு இலங்கை இந்தியாவின் உள் விவகாரங்களில் இனத் இந்தியா தலையிட்டு போர் நிறுத்தம் கோரினால், பிறகு இலங்கை இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடும் நிலை ஏற்படும் என்று நடுவண் அரசுக்குப் பரிந்து பேசினார் கருணாநிதி. அத்தோடு நில்லாமல், விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தம் செய்ய முன் வரவேண்டும் அல்லவா? சிங்கள அரசு மட்டும் ஒருதலைச் சார்பாக போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று கோரமுடியுமா எனவும் கேட்டார்.

ஆனாலும் தமிழ்நாட்டில் அங்கங்கே, அரசியல் இயக்கங்கள் சார்பிலும், அரசியலுக்கப்பாற்பட்ட பல்வேறு தரப்பினர் சார்பிலும் போர் நிறுத்தம் கோரி போராட்டங்கள் தொடர்கின்றன. ஈழத் தமிழர்க்கான போராட்டம் வேறு யார் தலைமைக்கும் போய்விடாமல் தம் தலைமையின் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட வடிவத்தில் மட்டும் நடைபெற வேண்டும் என்பதே கலைஞர் கருணாநிதியின் திட்டம்.

இப்பொழுது மீண்டும் ஈழத்தமிழர்க்காக கண்ணீர் சிந்தத் தொடங்கிவிட்டார். கிறித்துவ அமைப்பினர் வழங்கிய விருந்தினைப் பெற்றுக் கொண்டு 23.11.2008- ல் சென்னையில் பேசிய போது, ஈழத்தமிழர்களுக்கு நல்ல முடிவு ஏற்பட வேண்டும் என்பதே எனது முதன்மையான, கடைசியான ஆசை என்றார். சட்டமன்றக் கட்சிகளின் அனைத்துத் கட்சிக் கூட்டத்தை 25.11.2008 அன்று கூட்டி பிரதமரைச் சந்தித்து போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துவது என்று தீர்மானம் போட்டார்.

அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், அ.இ.அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் புறக்கணித்தன. தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, போர் நிறுத்தம் கோரி நடுவண் அரசு அலுவலகங்;களில் மறியல் வைத்த நாளில் இக்கூட்டத்தை கலைஞர் கூட்டினார்.

ஈழத்தமிழர்க்காதரவாக எழும் தற்காப்புணர்ச்சியை இவ்வாறு மழுங்கடிக்கிறார், மடை மாற்றுகிறார் கலைஞர். கருணாநிதி. பகைநோக்கோடு, ஈழத்தமிழர் சிக்கலை அணுகும் செயலலிதா, கிளர்ந்து வரும் தமிழக எழுச்சியைத் திசை திருப்பி தம்மை மையப்படுத்திக் கொள்வதற்காக பசும்பொன்னில் தம்மைக் கொல்லச் சதி என்று கூச்சலிட்டு, கண்டனப் போராட்டங்கள் நடத்தத் தம் கட்சியினர்க்குக் கட்டளையிட்டார்.

அதற்கு முன் தம்மைக் கைது செய்யச் சதி என்றார். வெவ்வேறு சிக்கல்களுக்காக அன்றாடம் அங்கங்கே போராட்டங்கள் என்று அறிவித்து வருகிறார். ஆனால் ஈழத்தமிழர்களுக்காக ஒரு போராட்டமும் நடத்தவில்லை அ.இ.அ.தி.மு.க..

இத்தனை திசை திருப்பல்கள் இருந்தபோதும், ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தில் பொங்கிய எழுச்சி வற்றிவிடவில்லை. எனினும், தமிழகம் தழுவிய பேரெழுச்சியாக அது வளர்ந்துவிடவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். இந்திய அரசை நெருக்கிப் பணிய வைத்து, அதன் வழி சிங்கள அரசு நடத்தும் போரை நிறுத்தும்படிச் செய்ய முடியவில்லை.

போரை நிறுத்தும்படி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கோ அல்லது சோனியாகாந்தியோ உரிய முறையில் ஒரு தடவை கூறினால் போதும். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யும். பசில் இராசபட்சே, இராசபட்சே, எதிர்க்கட்சித் தலைவர் இரணில் விக்கிரம சிங்கே என்று சிங்கள இனவெறித் தலைவர்கள் ஒவ்வொருவராகத் தில்லி வந்து மன்மோகன், சோனியா, அத்வானி உள்ளிட்டோரைச் சந்தித்து, போர் நடத்த ஒப்புதல் பெற்றுக்கொண்டு, போரை நிறுத்த முடியாது என்று கொக்கரிக்கின்றனர், கொட்டமடிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் போர் நிறுத்தம் கோரி நாம் இவ்வளவு போராடியும் உரிய பலன் கிடைக்கவில்லையே, ஏன்? சுப்பிரமணியசாமி, சோ. இராமசாமி, இலங்கை ரத்னா என்.ராம் போன்ற மக்கள் ஆதரவற்ற ஆரியக் கேடர்கள் ஈழத்தமிழர்களுக்கெதிராக அன்றாடம் நஞ்சு கக்குகின்றனர். போர் நிறுத்தம் கூடாதென்று பயங்கரவாத அரசியல் பேசுகின்றனர். அவர்களுக்கிருக்கும் மக்கள் ஆற்றல் என்ன? அவர்களால் எப்படி தமிழ் இனத்திற்கெதிராக, குறிப்பாக மனித உரிமைக்கெதிராக இவ்வளவு சுதந்திரமாகத் தமிழ்நாட்டில் பேசியும் எழுதியும் திரிய முடிகிறது?

அடுத்தவர் தோளில் தொற்றியே நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகி, நடுவண் அமைச்சர்களாகவும் ஆகிவிடும், ஓணான்களான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், சுதர்சனம் போன்ற காங்கிரசார், ஈழத்தமிழ் இனத்தின் மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சியோடு, வெறுப்பை உமிழ்வது எப்படி?

சென்னை சிங்களத் தூதரகத்தின் சம்பளப் பட்டியலில் உள்ள ஞானசேகரன் போன்ற காங்கிரசார் சிலர் நாவடக்கமின்றி தமிழீழத் தலைவர் பிரபாகரனைக் கொச்சையாகத் தொலைக்காட்சிகளில் இழிவுபடுத்திப் பேசுகின்றனர். பணம் தருபவனின் பாராட்டைப் பெறுவதற்காக இவர்கள் இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

தமிழகக் காங்கிரஸ் தலைவர்களில் வேறுபலர், கட்சிக் கட்டுப்பாட்டை ஏற்று, விடுதலைப் புலிகளுக்கெதிராக எப்போதாவது பேசினாலும், மேற்கண்டவர்களைப் போல், தமிழ் இனத்திற்கு எதிராக வெறி கொண்டு அலைவதில்லை, ஆர்ப்பரிப்பதில்லை. அவர்களை நாம் மதிக்கிறோம். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எத்தனை தடவை கூறிவிட்டார் திருமாவளவனைக் கைது செய்ய வேண்டும் என்று! திருமாவளவன் மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ஏன்? தமிழ் இனத்தின் மீதே இளங்கோவனுக்கு ஏதோ ஒருவகைக் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான் அவர் திருமாவளவன் மீது பாய்கிறார்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்கு நடத்தும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு இந்திய அரசைக் கோரிய போது, அதை எதிர்த்தவர் இதே இளங்கோவன் தான். "தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டுமா வாழ்கிறார்கள்? மற்ற இனத்தாரும் வாழ்கிறார்கள். சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை எப்படி வழக்கு மொழியாக்க முடியும்" என்று கேட்டார்.

மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டதையே இளங்கோவன் ஏற்கவில்லை என்று தெரிகிறது. கோபிச்செட்டிபாளையம் மக்களவைத் தொகுதியில் மிகப்பெரும்பாலான வாக்குகளைத் தமிழர்களிடமிருந்தே இளங்கோவன் பெற்றுள்ளார். சத்தியமங்கலம் தாளவாடி எல்லைப்பகுதிகளில் கொஞ்சம் கன்னடர்களிடமும் அவர் வாக்கு வாங்கியிருக்கக் கூடும். ஆனால் வாக்களித்து, சட்டப்பேரவை உறுப்பினராக, மக்களவை உறுப்பினராக, அமைச்சராக உயர்த்திய தமிழ் இனத்தின் மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ஏன்? அவருக்கு இவ்வளவு துணிச்சல் எப்படி வந்தது?

எல்லாம் செயலலிதா, கருணாநிதி ஆகிய இருவரும் கொடுத்த துணிச்சல் தான். திருமாவளவனைக் கைது செய்யுமாறு செயலலிதா விடாமல் கோருகிறார். விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய வைகோ, கண்ணப்பன், சீமான், அமீர் ஆகியோரைத் தளைப்படுத்தி தில்லிக்கு விசுவாசம் காட்டிய கருணாநிதியே, அவர்களைப் போல் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசும் திருமாவளவனை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்கிறார் இளங்கோவன்.

ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி காந்தியடிகள் பிறந்த நாளில் (2.10.2008) அனைத்துக் கட்சி உண்ணாப் போராட்டம் என்ற புத்தெழுச்சியை விரிவாகத் தொடங்கி வைத்தது இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் தமிழகத் தலைமை. அதன் பிறகும் அக்கோரிக்கையை அக்கட்சி தீவிரமாக முன் வைத்துவருகிறது. இந்திய அரசு அலுவலகங்கள் முன் அனைத்துக் கட்சி மறியலுக்கும் (25.11.2008) அது முன்மொழிவு செய்தது. ம.தி.மு.க., தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பு வசிக்கும் அமைப்புகள் உள்ளிட்டுப் பல்வேறு அமைப்புகள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து, வெற்றிகரமாக மறியல் போராட்டம் நடத்தின.

இந்த அணுகு முறையால் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் மதிப்பும் தமிழ் நாட்டில் உயர்ந்தது. ஆனால், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஏ.பி. பரதன், தமிழகச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் 19.11.2008 அன்று செயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்துத் தேர்தல் கூட்டணி பற்றிப் பேசினர். கேட்டால், இதுவேறு, அதுவேறு என்பார்கள்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து, தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் பாதுகாப்பு, போர் நிறுத்தம், என தனது முதன்மையான அரசியல் போராட்டத்தை ஈழத்தின் பக்கம் திருப்பியுள்ளது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. அவ்வாறு இருக்க, இந்த ஈழ நிலைபாட்டிற்கு நேர் எதிரான செயலலிதாவுடன் தேர்தல் உடன்பாடு காண்பது, பாலில் உப்புக்கல் கலந்தால் பால் திரிந்து போவது போல், சி.பி.ஐ.யின் ஈழ அரசியல் செயலலிதா உறவால் திரிந்து போகாதா? ஈழத்தமிழர் உரிமைக்காகப் போராடிய அரசியல் பலன் சி.பி.ஐ. கட்சிக்கும் கிடைக்குமா? தமிழ் மக்களிடையே உருவாக வேண்டிய இன உணர்ச்சியும், மனித உரிமைக்கான எழுச்சியும் பாதிக்கப்படாதா? சி.பி.ஐ.யின் இந்த அணுகுமுறை ஒரு மாற்று அரசியலை உருவாக்கப் பயன்படாது.

ஈழ விடுதலை ஆதரவு, விடுதலைப் புலிகள் ஆதரவு, ஈழத்தமிழர் துயர்துடைப்பு போன்றவற்றிற்குப் பல்வேறு உதவிகளையும் ஈகங்களையும் செய்தவர் வைகோ. இதற்காக ஏற்கனவே பொடாவில் 18 மாதங்கள் சிறை வைக்கப்பட்டார். இப்பொழுது கலைஞராலும் சிறை பிடிக்கப்பட்டார். ஆனால் அவரின் செயலலிதா ஆதரவு அரசியல், அவருக்குத் தமிழ் உணர்வாளர்களிடம் கிடைக்க வேண்டிய பெருஞ்செல்வாக்கை ஊனப்படுத்திவிடாதா? நாளையப் பலாக்காயை விட இன்றையக் களாக்காய் மேல் என்ற அரசியல் நிலைபாடுகள், அவர்கள் வளர்ச்சிக்கும் தடங்கலாகின்றன, தமிழர் எழுச்சிக்கும் தடங்கலாகின்றன.

இந்த காலகட்டத்தில் ஈழத்தமிழர் உரிமைக்காகத் தமிழ்நாட்டில் அதிகம் போராடிய அமைப்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. ஆனால் அக்கட்சி கலைஞர் கருணாநிதியின் பாசாங்கு அரசியல் தலைமையின் கீழ் குறுகிக் கிடக்கிறது. அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் குறிப்பிட்ட சாதி அமைப்பாக இருப்பதால், அந்த அடித்தளத்தைத் தக்க வைத்துக் கொண்டுதான், தமிழர் அரசியலைப் பேசமுடிகிறது. தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை கோரி மதுரையில் அக்கட்சி நடத்திய மாநாடு, தனது அடித்தளத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி தான். குறிப்பிட்ட தமிழ்ச் சாதிக்கு அழுத்தம் கொடுக்கும் போது, பிற தமிழ்ச் சாதிகள் அந்த அமைப்பை அதன் தமிழர் ஆதரவு முழக்கத்தை எட்டி நின்று தான் ரசிக்கின்றன.

தீண்டாமை மற்றும் சாதி ஆகியவற்றின் ஒடுக்கு முறையை முறியடிக்கப் போராடுவதும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குப் போராடுவதும் கட்டாயத் தேவை. அந்தப் போராட்டம் ஒட்டு மொத்தத் தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்துடன் இணைக்கப்படும் போதுதான் தமிழர் ஒற்றுமை வளர்க்கப்படும். சாதி என்பதன் சாரமே சமூகப்பிளவும், மேல் கீழ் உறவும் தான். அதனால்தான்,

"சாதி ஒழித்தல் ஒன்று- நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று" என்று பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

"சாதி என்ற தாழ்ந்த படி
நமக்கெல்லாம் தள்ளுபடி" என்றார்.

அடுத்து பாட்டாளி மக்கள் கட்சி. ஈழத்தமிழர் உரிமைக்காகப் பல போராட்டங்களை அக்கட்சி நடத்தி வருகிறது. விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் விடுதலைப் போராளிகள் என்று புதுதில்லியில் செய்தியாளர்களிடம் கூறினார் மருத்துவர் இராமதாசு. மற்ற சிக்கல்களில் கலைஞர் கருணாநிதியின் செயல்பாட்டை, அவரது நிலைபாட்டை வினாவுக்கு மேல் வினா கேட்டு, மடக்கி வரும் மருத்துவர் இராமதாசு ஈழச்சிக்கலில் மட்டும் கருணாநிதி கிழித்த கோட்டைத் தாண்டமாட்டேன் என்பது போல் நடந்து கொள்வது ஏன்?

14.10.2008 அனைத்துக்கட்சி தீர்மானங்களை செல்லாக்காசாக்கி நடுவண் அரசுடன் உடன்பாடு கண்ட கருணாநிதியை மருத்துவர் விமர்சிக்கவில்லை? பிரணாப்முகர்ஜியுடன், தாம் மட்டும் பேசி உடன்பாடு கண்ட முதல்வர் இந்திய அரசு நடவடிக்கை திருப்தி அளிக்கிறது என்று செய்தியாளர்களுக்கு செவ்வி கொடுத்தார். மறுபடியும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, பிரணாப்முகர்ஜி கூறிய முடிவுகளை அதில் வைத்து விவாதித்து அதன் பிறகல்லவா நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல் பற்றி ஒரு முடிவெடுத்திருக்க வேண்டும் கலைஞர். இதைக் கூட மருத்துவர் இராமதாசு கேட்கவில்லையே ஏன்?

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 17.11.2008 அன்று கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட கோ.க.மணி, போர் நிறுத்தம் கோரி 25.11.2008 அன்று முழு அடைப்பு நடத்துவதென்ற தீர்மானத்தை ஆதரித்தார். ஆனால் அக்கூட்டத்தை விட்டு வெளியே வந்தபின், முழு அடைப்பு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி அதில்தான் முடிவெடுக்கவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். 18.11.2008 நாளிதழ்களில் (எ.டு. தினமணி) கோ.க.மணியின் முழுஅமைப்பு ஆதரவுச் செய்தியும் மறுபரிசீலனை கோரிய அறிக்கையும் வெளிவந்தன.

சிங்கள அரசு நடத்தும் ஈழப்போரை மெய்நடப்பில் இந்திய அரசு தான் நடத்துகிறது. எனவே இந்திய ஆட்சியில் பங்கு வகிக்கும் பா.ம.க. ஒருபக்கம் நடுவண் அரசுக்கு நெருக்கடி ஏற்படாமலும் மறுபக்கம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் இரட்டை நிலை எடுத்திருப்பது பளிச்சென்று தெரிகிறது. இந்த உத்தியை மூடி மறைக்க அது கலைஞர் நிழலில் ஒதுங்கிக் கொள்கிறது. ஈழச் சிக்கலில் தமிழகக் கட்சிகளிடையே பிளவு வந்து விடக்கூடாது என்ற பொது நிலையில் கலைஞர் முடிவுகளை ஏற்றுக் கொள்வது போல் ஒரு தோற்றத்தை பா.ம.க. வெளிப்படுத்திக் கொள்கிறது.

இந்த இரட்டை நிலை ஒருபக்கம் இருக்க, பா.ம.க. குறிப்பிட்ட சாதியை மட்டுமே தனது அடித்தளமாகக் கருதுகிறது. ஆனால் அச்சமூக மக்கள், அக்கட்சியில் கணிசமாக இருந்தாலும் கணிசமானோர் பல்வேறு கட்சிகளிலும் இருக்கின்றனர். மேலும் புதிய ஆட்சிக் கோட்பாடொன்றை மருத்துவர் இராமதாசு முன்வைக்கிறார்.

"பெரும்பான்மை ஆளவேண்டும்; சிறுபான்மை அதில் பாதுகாப்பாக இருக்கவேண்டும்" என்கிறார். இதன் பொருள் பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட சாதியினர் ஆளவேண்டும். சிறுபான்மைச் சாதிகள் அதில் ஆளும் உரிமையற்று ஆனால் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்பதாகும். மருத்துவர் கூறும் பெரும்பான்மைக் கோட்பாடு சாதியோடு நிற்காது. மதத்திற்கும் நீளும். இந்துத்துவா அமைப்புகள் பெரும்பான்மைக் கோட்பாடு அடிப்படையில் தான் "இந்து தேசம் கலாச்சார இந்திய தேசியம்" என்ற கருத்தியலை முன்வைக்கின்றன. இப்பெரும்பான்மைக் கோட்பாடு பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு வழி அமைத்ததாக முடியும்.

இந்தக் கோட்பாட்டை ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கும் சேர்த்துப் பொருத்தினால் பா.ம.க. வின் நோக்கம் நிறைவேறுமோ நிறைவேறாதோ என்று கருதி, தமிழ்நாட்டை வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கக் கோருகிறார். சாதி அடிப்படையில் தமிழ்நாட்டையே இரண்டாகப் பிரிக்கக் கோரும் ஒரு கட்சி எவ்வளவுதான் தமிழ் இன உணர்வு பற்றிப் பேசினாலும் அதன் அணுகுமுறை அக்கட்சி சார்ந்துள்ள சாதி உள்ளிட்ட எந்தச் சாதித் தமிழ் மக்களையும் தமிழ்த் தேசிய இன உணர்வு அடிப்படையில் ஒன்று திரட்டப் பயன்படாது. தமிழ்நாட்டையே வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரிக்கக் கோரும் கட்சி ஈழத்தில் வடக்கையும், கிழக்கையும் இணைக்கக் கோருவது தன் முரண்பாடுதான்.

பெரும்பான்மை ஆளவேண்டும்;, அதில் சிறுபான்மை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற கருத்தியலும், தமிழ்நாட்டை வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தில்லி ஏகாதிபத்தியத்திற்கு இனிப்பானவை. ஏனெனில் அது தன் பகை இனமாகக் கருதும் தமிழ் இனம் பிரிந்து சிதறிப் போவதையே ஆவலுடன் எதிர்பார்க்கிறது. மொழிவாரி மாநில அமைப்புகளைத் தகர்த்து நிர்வாக வசதிகேற்ற சின்னசின்ன மாநிலங்களை உருவாக்கவே இந்திய ஆளும் வர்க்கம் விரும்புகிறது. துணைகண்டமாக விரிந்து கிடக்கும் இந்தியாவை நிர்வாக வசதிக்காக, சின்னச் சின்ன நாடாகப் பிரித்துத் தருவார்களா? அவ்வாறு இந்தியாவைச் சிறுசிறு நாடுகளாகப் பிரிக்கும் கோரிக்கையை பா.ம.க. முன்வைக்குமா?

ஒரு நாடு அல்லது தேசம் என்பதற்கான அடிப்படை அலகு, மதமோ, சாதியோ அல்ல. தேசிய இனம் தான் அடிப்படை அலகு, அதன்படியே உலகில் நாடுகள் அமைந்துள்ளன. சில தேசிய இனங்கள் கொண்ட நாடாக இருந்தால் தேசிய இனங்களின் கூட்டாட்சி தான் நடக்கிறது. இவ்வாறு அமையாத இடங்களில் விடுதலைப் போராட்டங்கள் நடக்கின்றன. தமிழர்களுக்குள்ளேயே சாதி அரசியலை முதன்மைப்படுத்தும் பா.ம.க. நடத்தும் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் எந்த அளவு தமிழர் ஒற்றுமையையும் எழுச்சியையும் உருவாக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

சனநாயகம் என்பதை பெரும்பான்மைவாதமாக சுருக்கிவிடக்கூடாது. அவ்வாறு செய்தால் அது ஒரு ஏதேச்சாதிகாரமாகும். பெரும்பான்மை சிறுபான்மை உள்ளிட்ட அனைவர்க்கும் ஆளும் உரிமையை வழங்குவதே சனநாயகம், தேசத்தின் கடைசிக் குடிமகனுக்கும் ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருக்கவேண்டும். கருப்பினத் தந்தைக்குப் பிறந்த ஒபாமா, வெள்ளை ஆதிக்க நாட்டில் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை உலகம் கொண்டாடக் காரணம், சிறுபான்மைக்கு வழங்கப்பட்ட சனநாயக உரிமையைப் பாராட்டவே.

சிங்களப் படையினரால், தமிழக மீனவர்களும், சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஈழத் தமிழர்களும் குண்டு வீசிக் கொல்லப்படுகிறார்கள். இந்திய அரசு சிங்களப் படைக்கு ஆய்தமும் பயிற்சியும் தருகிறது. போரைத் தொடர்ந்து நடத்தும்படி சிங்கள அரசை வலியுறுத்துகிறது. போர் நிறுத்தம் கோரி தமிழ்நாட்டில் விரிந்து பரந்து போராட்டங்கள் நடந்தாலும், இந்திய அரசை நெருக்கிப் பணிய வைத்து, போர் நிறுத்தத்தை நம்மால் சாதிக்க முடியவில்லையே, தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை, தளைப்படுத்தப்படுவதை நிறுத்த முடியவில்லையே என்ற பின்புலத்தில் மேற்கண்ட திறனாய்வு செய்யப்பட்டது. தமிழ் இன எழுச்சி முழுவீச்சுப் பெறாததற்குரிய காரணங்களை அறிந்து அக்குறைகளைக் களைய வேண்டும் என்ற நோக்கில் தான் இப்பகுப்பாய்வு செய்யப்பட்டது.

ஈழத்தமிழர் இனப்படுகொலை, மீனவர் கொலை, போன்றவற்றிற்கெதிராக மட்டுமின்றி, ஆற்றுநீர் உரிமை, தாயக மண்ணுரிமை போன்றவற்றை மீட்பதற்காகவும் உரியவாறு தமிழ்நாட்டில் தமிழர் இன எழுச்சியும் ஒற்றுமையும் உருவாகிவிடவில்லை என்பதைக் கணக்கில் கொண்டு, தமிழர்கள் இப்பகுப்பாய்வைத் திறனாய்வு செய்ய வேண்டுகிறோம். பகைக் கட்சிகளும், பாசாங்குக் கட்சிகளும் தமிழர்களைப் பிளவுபடுத்துகின்றன. சாதிக் கட்சிகளும் பிளவுபடுத்துகின்றன. பகை மற்றும் பாசாங்குக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டே, ஈழத்தமிழர் உரிமைக்காகவும், தமிழகத் தமிழர் உரிமைக்காகவும் போராடுவது உரிய பலனைத்தராது. தீண்டாமை ஒழிப்பு, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களுக்கான சமூக நீதி, நடைமுறைப் பண்பில் சாதி மறுப்பு உள்ளிட்ட குமூகவியல் கொள்கைகளை புரட்சிகர தமிழ்த்தேசியம் தன்னுள் கொண்டிருக்கவேண்டும்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.