ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ் இனத்தை ஐ.நா. மன்றம் பாதுகாக்காது - தனிநாடு தான் பாதுகாக்கும் - பெ.மணியரசன்

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2009 நவம்பர் இதழில் வெளியான கட்டுரை)
தஞ்சை கோஸ்ட் அரிமா கழகத்தின் (லயன்ஸ் கிளப்) சார்பில் 2009அக்டோபர் 24-ஆம் நாள் ஐக்கிய நாடுகள் மன்ற நாள் கடைபிடிக்கப்பட்டுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. தஞ்சை செஞ்சிலுவைச் சங்க அரங்கத்தில் நடந்த இக்கருத்தரங்கிற்கு அரிமா டி. மணிவண்ணன் தலைமை தாங்கினார்.“ஈழச் சிக்கலில் ஐ.நா.மன்றம் தோற்றதா, வென்றதா” என்ற தலைப்பில் உரையரங்கம் நடந்தது. அதில் முதலில் பூண்டி புட்பம் கல்லூரி முன்னாள் பேராசிரியர் முனைவர் டி. கோவிந்தராசன் உரை நிகழ்த்தினார். அடுத்து தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் தோழர் பெ.மணியரசன் உரையாற்றினார். அவர் பேச்சின் சுருக்கம்:
“ஈழச் சிக்கலில் ஐ.நா.மன்றம் தோல்வி கண்டதா, வெற்றி கண்டதா” என்று பேசத் தொடங்கும் முன் பாரதியார் பாடல் ஒன்றை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். பாஞ்சாலி சபதத்தில் தருமன் நாட்டைப் பணையம் வைத்து சூதாடித் தோற்றுவிடுகிறான். நாட்டைப் பணையம் வைத்ததால் தருமன் மீது பாரதியார் ஆத்திரம் கொண்டு சாடுகிறார்.

“ஆயிரங்களான - நீதிஅவை
உணர்ந்த தருமன்தேயம்
வைத்திழந்தான் - சிச்சீசிறியர்
செய்கை செய்தான் “

என்று சீறிவிட்டு ஒரு பொதுக் கருத்தைப்பதிவு செய்கிறார்.

“காட்டும் உண்மை நூல்கள் -
பலதாம்காட்டினார் களேனும்
நாட்டு ராஜ நீதி - மனிதர்
நன்கு செய்யவில்லை.
ஓரஞ் செய்திடாமே - தருமத்து
உறுதி கொன்றிடாமே
சோரஞ் செய்திடாமே -
பிறரைத்துயரில் வீழ்த்திடாமே,
ஊரையாளும் முறைமை -
உலகில்ஒர்புறத்தும் இல்லைசாரமற்ற
வார்த்தை - மேலேசரிதை சொல்லு கின்றோம்”.

அன்றிலிருந்து இன்று வரை உலக நிலைமை இதுதான். ஈழச்சிக்கலில் ஐ.நா.மன்றம் தோற்றதா வென்றதா என்பதை எனது பேச்சின் ஊடாக நீங்கள் முடிவு செய்துகொள்ளலாம்.

இரண்டாம் உலகப்போரில் செர்மனி- இத்தாலி - சப்பானுக்கெதிராக அணிசேர்ந்த அமெரிக்கா, பிரிட்டன் பிரான்ஸ், ரசிய நாடுகள் ஐ.நா.மன்றம் அமைப்பது குறித்து 1942, 1943,1944 ஆண்டுகளில் தொடர்ந்து பேசி வரைவுகளை உருவாக்கின.

1944 பிப்ரவரியில் டம்பர்டன் ஓக்ஸ் மாநாட்டில் ஐ.நா.மன்றத்திற்கான விதிமுறைகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. 1945 அக்டோபர் 24-இல் முறைப்படி ஐ.நா.மன்றம் அமைப்பது என்று முடிவானது. ஆனால் அந்த நாளுக்கு 79 நாட்கள் இருக்கும் நிலையில் அமெரிக்கா 1945 ஆகஸ்ட் 6-ஆம் நாள் சப்பானின் ஹிரோசிமாவிலும் ஆகஸ்ட் 9-ஆம் நாள் நாகசாகியிலும் தலா ஓர் அணுகுண்டை வீசி இலட்சக் கணக்கான மக்களை அழித்தது. பிறக்கும்போதே அமெரிக்காவின் அணுகுண்டுப் பயங்கரவாதத்தால் ஊனப்பட்டுத்தான் பிறந்தது ஐக்கிய நாடுகள் மன்றம். அதன்பிறகு, எத்தனையோ நிகழ்வுகளில், எண்ணிலடங்கா மக்கள் - நாடுகளின் ஆக்கிரமிப்பிலும், இனப் படுகொலைகளிலும் மாண்டார்கள். 1994-இல் ருவாண்டாவில் ஹுட்டு இனத்திற்கும் டுட்சி இனத்திற்கும் இடையே நடந்த மோதலில் 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். 1998 முதல் 2002 வரை காங்கோவில் நடைபெற்ற உள்நாட்டுப்போரில் ஐம்பது லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டி அமெரிக்கா 2003-ல் ஈராக்கை ஆக்கிரமித்தது. பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். குடியரசுத்தலைவர் சதாம் உசேனைத் தூக்கிலிட்டுக் கொன்றது அமெரிக்கா. கடைசியில் ஈராக் சென்ற அமெரிக்க வல்லுநர் குழு, தடைசெய்யப்பட்ட ஆயுதம் எதையும் ஈராக்கில் பார்க்கவில்லை என்று அறிக்கை கொடுத்தது. ஆப்கானிஸ்தான் மண்ணையும் மக்களையும் அமெரிக்கப் படைகள் கடித்துக் குதறி சின்னா பின்னப்படுத்துகின்றன. மடிந்த மக்கள் ஏராளம் , ஏராளம்! ஐ.நா. மன்றம் அமெரிக்காவுக்கு எடுபிடி வேலைதான் செய்து வருகிறது. நம் கண்முன்னே, நம் இனமக்களை ஈழத்தில் இலட்சக்கணக்கில் சிங்கள வெறி அரசு கொன்று குவித்தது. இந்தியா, சீனா- பாகிஸ்தான் மூன்று நாடுகளும் இலங்கைக்குப் போர்த்தளவாடங்கள் கொடுத்தன. நிதியை வாரி வழங்கின. இந்தியாவும்- பாகிஸ்தானும், இந்தியாவும்- சீனாவும் ஒன்றையொன்று எதிர்த்துக் கொண்டுள்ளன.

ஆனால் இம் மூன்று நாடுகளும் ஈழத்தில் தமிழர்களை அழிப்பதில் ஒரு முகப்பட்டு செயல்படுகின்றன. சாட்சிகள் இல்லாத போர் அது. செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்றப்பட்டது. ஐ.நா. மனித உரிமை அமைப்புகள் வெளியேற்றப்பட்டன. போரைத் தடுக்க முடிய வில்லை ஐ.நா.வால். போர் நடக்கும் இடங்களில் உலகெங்கும் செஞ்சிலுவைச் சங்கமும் ஐ.நா.மனித உரிமை அமைப்புகளும் செயல்பட்டுள்ளனவே, அப்படி புதுக்குடியிருப்பிலும், முள்ளி வாய்க்காலிலும் இந்த அமைப்புகள் செயல்பட முடியாமல் ராசபட்சே தடுத்தார். அந்தத் தடையை ஏன் ஐ.நா.வால் மீற முடியவில்லை.

போர் முடிந்தபிறகு, அந்தப் போரில் இருதரப்பு மனித உரிமை மீறல்களையும் விசாரிக்க இலங்கை அரசு ஒரு குழு அமைக்கவேண்டும் என்று சுவிட்சர்லாந்து நாடு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தது. அது உப்புச் சப்பற்ற தீர்மானம். அதைக்கூட தோற்கடித்தன இந்தியா, சீனா, கியுபா போன்ற நாடுகள். உல அமைதிக்காக உருவாக்கப்பட்ட ஐ.நா.மன்றம் அரசுகளின் பயங்கரவாதத்திற்கும் மனித குல அழிப்புக்கும் துணையாகவே நிற்கிறது. மூன்று லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களுக்குள் சொல்லொணாச் சித்திரவதைகளை அனுபவிக்கின்றனர். சிங்களப் படையாட்கள், முகாம்களுக்குள் உள்ள தமிழர்களைச் சுட்டுக் கொல்கிறார்கள். நோய்க்கு மருந்தின்றி ஆயிரக்கணக்கில் சாகின்றனர்.1000 பேருக்கு ஒரு கழிப்பறை. அது பின்னர் 800 பேருக்கு ஒரு கழிப்பறை என்று மாற்றப்பட்டதாம். 800 பேருக்கு ஒரு கழிப்பறை என்றால் நிலைமை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். குடிக்கத் தண்ணீரில்லை. குளிப்பதற்கு பலநாட்கள் காத்திருக்க வேண்டும். இளைஞர்களைச் சுட்டுக் கொல்கிறார்கள். இளம் பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாகிறார்கள். நோயாளிகள் மருந்தின்றி மடி கிறார்கள். இட்லரின் வதைமுகாம்கள் போல் உள்ளன இராசபட்சேயின் வன்னிமுகாம்கள். செர்மனி சென்றி ருந்தபோது மியூனிச் அருகே டாக்காவ் என்ற இடத்தில் காட்சியகமாக வைக்கப்பட்டுள்ள இட்லரின் வதை முகாம் (Concentration Camps) ஒன்றை ஐயா நெடுமாறன் அவர்களும் நானும் பார்த்தோம். அதைவிடக் கொடிய முகாமாக வன்னி முகாம்கள் இருக்கின்றன.
இவற்றைப் பார்வையிட்ட ஐ.நா. பொதுச்செயலாளர் பான்.கி.மூன். இந்த முகாமகள் நன்கு பராமரிக்கப் படுவதாகக் கொழும்பில் கூறினார். பான்.கி.மூ.னின் பொய்யுரையைக் கண்டித்து இலண்டனிலிருந்து வரும் டைம்ஸ் ஏடு ஆசிரியவுரை தீட்டியது. ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர்களிலேயே மிகவும் மோசமானவர் பான் கி.மூன். இவருக்கு முன்னாலிருந்த கோஃபி அன்னான், இலங்கை அரசின் இனப் படுகொலைப்போரைக் கண்டித்து அவ்வப்போது அறிக்கையாவது வெளியிட்டார். ஆனால் பான்.கி.மூன் கொலைகாரன் இராசபட்சேவுக்கு நற்சான்று அளித்தார். தமிழ்நாட்டுத் தமிழர்கள் பல போராட்டங்கள் நடத்தினோம். போரை நிறுத்த முடியவில்லை. இப்பொழுதும் நாம் போராடுகிறோம். வன்னி வதை முகாம்களிலிருந்து தமிழர்களை விடுதலை செய்ய முடியவில்லை. காரணம் என்ன?

நமக்கொரு நாடில்லை. உலகநாடுகளோடு உறவுகொள்ள, ஐ.நா. மன்றத்தில் பேச, தமிழ் இனத்திற்கென்று ஒரு நாடில்லை. பத்துக் கோடித் தமிழர்கள் நிலக்கோளமெங்கும் வாழ்கிறோம். நமக்கொரு நாடில்லை. ஆனால் ஒன்றரைக் கோடி சிங்களர்களுக்கு ஒரு நாடு இருக்கிறது. ஆறரைக் கோடிப்போர் தமிழ்நாட்டில் வாழ்கிறோம். தமிழ்நாடு நமது தாயகம். தமிழ்நாட்டைத் தன்னுடைய காலனியாகத்தான் டெல்லி வைத்திருக்கிறதே தவிர உரிமையுள்ள மக்களாக நம்மை நடத்தவில்லை.
1947-க்கு முன்னால் இலண்டனுக்குக் காலனியாகத் தமிழ்நாடு இருந்தது. அதற்குப்பிறகு டெல்லிக்குக் காலனியாக இருக்கிறது. தமிழினம் உலக அனாதை இனமாக உள்ளது. கடந்த சனவரி மாதம் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது கொத்துக்குண்டு வீசி பாலஸ்தீன மக்களைக்கொன்றது. பொதுமக்கள் மீது விமானக் குண்டு வீச்சு நடத்தி குவியல் இருக்கின்றன. அந்த நாடுகள் சில முன்முயற்சி எடுத்து ஐ.நா. பொது அவையில் போர் நிறுத்தத் தீர்மானம் கொண்டுவந்தன. அத்தீர்மானத்தை அமெரிக்காவும், இஸ்ரேலும் எதிர்த்தன. ஆனால் 142 நாடுகளின் வாக்குகளைப் பெற்று போர் நிறுத்தத் தீர்மானம் வெற்றிப்பெற்றது. இஸ்ரேல் நாடு போரை நிறுத்தவேண்டும் என்ற தீர்மானத் திற்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களித்தது.
இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டுமானால் விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று திரும்பத் திரும்பக் கூறிவந்த இந்தியாவும் மற்ற நாடுகளும் ஹமாஸ் இயக்கம் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்று கோரவில்லை. கேட்க நாதியற்ற இனம் தமிழ் இனம். அதனால்தான் ஈழத்தில் பேரழிவு நடந்தது. தமிழக மீனவர்களை சிங்களப்படை சுட்டுக்கொல்கிறது. காவிரி, முல்லைப் பெரியாறு உரிமைகளை அண்டை மாநிலங்கள் பறிக்கின்றன. இங்கும் சரி, ஈழத்திலும் சரி, யார் தமிழ் இனத்திற்கு எதிராகச் செயல் படுகிறார்களோ அவர்களை இந்தியா ஆதரிக்கிறது. ஊக்கப்படுத்துகிறது. நம் மீனவர்கள் வருகிறார்கள் என்று சிங்களப்படைக்குத் துப்புச் சொல்லிவிட்டு இந்தியக் கடலோர காவல்படை ஒதுங்கிக் கொள்கிறது. இதையெல்லாம் ஐ.நா. தட்டிக்கேட்காது. தமிழ் இனத்திற் கென்று ஒரு நாடல்ல, இரு நாடு வேண்டும். அங்கேயும் தனி நாடு வேண்டும். இங்கேயும் தனி நாடு வேண்டும்.
இந்த ஐ.நா.மன்றம் போய் இன்னொரு ஐ.நா.மன்றம் வந்தாலும் தமிழ் இனத்திற்குப் பாதுகாப்பில்லை. தமிழ் இனத்திற்கென்று நாடு அமையும் போது தான் நமக்கான பாதுகாப்பு கிடைக்கும். இவ்வாறு பேசினார். இறுதியாக அரிமா ஆர். சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2009 நவம்பர் இதழில் வெளியான கட்டுரை)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.