வல்லாதிக்கக் கூட்டணியின் கோபன்ஹேகன் கூத்து - கி.வெங்கட்ராமன்
நாம் அச்சப்பட்டதைப் போலவே அமெரிக்க வல்லாதிக்கத்தின் விருப்பத்திற் கிணங்க இந்தியாவின் துணையோடு ஆபத்தானதொரு ஒப்பந்தம் கோபன்ஹேகன் பருவநிலை மாநாட்டில் திணிக்கப்பட்டுள்ளது.
“பருவநிலைப் பேச்சுவார்த்தையை இயற்கை அறிவியல் என்ற அடிப்படையிலிருந்து மாற்றி அரசியல் ஆதிக்கப் பகிர்வு என்பதோடு முடிச்சுப் போடுகிறார்கள். அணு ஒப்பந்தத்தை போலவே பருவ நிலை மாற்ற ஒப்பந்தத்தையும் அமெரிக்காவின் கண்காணிப்புக்கும், கட்டுத்திட்டங்களுக்கும் உட்பட்ட இளைய பங்காளியாக இந்தியாவை நிலை நிறுத்த இந்திய அரசு பயன்படுத்திக் கொள்கிறது’’ என்று நாம் கூறியது (தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், திசம்பர் 2009) ‘கோபன்ஹேகன் ஒப்பந்தம்’ என்ற பெயரால் நடந்தேறியிருக்கிறது.
இந்த ஒப்பந்தமும், இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட விதமும் உலகெங்கிலும் உள்ள சனநாயக சக்திகளுக்கு எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது. புவிவெப்பமாதலை குறைப்பதற்கான ஐ.நா. பருவநிலைப் பேச்சுவார்த்தை 2009 திசம்பர் 7 முதல் 18ஆம் நாள் நள்ளிரவு வரை டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடந்து அதன் இறுதியில் திசம்பர் 19 அன்று விடியற்காலை ‘கோபன்ஹேகன் ஒப்பந்தம்’ அறிவிக்கப்பட்டது.
இந்த உச்சி மாநாடு தொடக்கத்திலிருந்தே தில்லுமுல்லுகளும் திரைமறைவு பேரங்களும் நிறைந்ததாக இருந்தது. மாநாட்டின் முதல் நாளான 7.12.2009 அன்றே பேராளர்களுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது.
2007 திசம்பரில் இந்தோனேசியாவின் பாலி நகரில் தொடங்கி பல்வேறு கட்டங்களில் பல நாடுகளில் நடந்த பேச்சுவார்த்தைகளில் உருவான கோபன்ஹேகன் வரைவு முற்றிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு திடீரென்று மாநாட்டின் முதல் நாளான திசம்பர் 7 அன்று ‘டென்மார்க் ஆவணம்’ என்ற பெயரால் ஒரு வரைவு கசியவிடப்பட்டது. இந்த ஆவணம் பற்றி முதலில் மறுத்துப் பேசிய டென்மார்க் அரசு பிறகு இதுவும் விவாதத்திற்குரிய ஒரு கருத்து தான் என்பதாக விளக்கமளித்தது. மாநாடு நடந்த பெல்லா அரங்கம் கூச்சல் குழப்பத்தால் நிரம்பியிருக்க நாள்தோறும் ஏதாவதொரு வதந்தி கசிந்து கொண்டே இருந்தது.
உண்மையில் என்ன நடக்கிறது என்பதே பலருக்கும் புரியாமல் விழித்தார்கள். மாநாட்டு அரங்கத்திற்கு வெளியே சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். டென்மார்க் காவல்துறையினர் இப்போராட்டக்காரர்களை அடித்து விரட்டுவதும், கைது செய்வதுமாக இருந்தனர். ஆனால், உண்மையான பேச்சுகள் திரைக்குப் பின்னால் பின்அறைப் பேச்சுகளாக நடைபெற்றன. திசம்பர் 16 வரையிலும் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை என்பதாகவே இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பலரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
“உருப்படியாக எதுவும் நடக்கவில்லை என்றால் ஏற்கெனவே அறிவித்துள்ளவாறு திசம்பர் 18 அன்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கோபன்ஹேகன் வரமாட்டார். நாட்டுத் தலைவர்கள் கோபன்ஹேகன் வருவது ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்காக அல்ல. பேச்சுவார்த்தை முடிவை அறிவிப்பதற்காகவே” என்று உண்மை விளம்பி போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தார் ஜெய்ராம் ரமேஷ்.
ஆனால் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமாவும், சீனப்பிரதமர் ஜென் பியாஓ-வும் இந்தியாவின் மன்மோகன்சிங்கும் தங்களுக்குள் ஏற்கெனவே பேசி வைத்ததை கோபன்ஹேகனில் திசம்பர் 18ஆம் நாள் அரங்கேற்றினார்கள். தனக்குக் கீழுள்ள பாளையப்பட்டு குறுநில மன்னர்களிடம் பேரரசன் பேசுவது போல் மாநாட்டு அரங்கில் ஒபாமா பேசினார்.
‘நான் சொல்வதை ஏற்பதாய் இருந்தால் ஒப்பந்தம்; இல்லையென்றால் இல்லை!’ என்பது போல் அவரது பேச்சு அமைந்திருந்தது. “பொதுநோக்கு - வேறுபட்ட பொறுப்பு” என்ற ‘கியோட்டோ ஒப்பந்த’க் கோட்பாட்டை தனது பேச்சுத் திறமையால் திரிபுபடுத்தினார் ஒபாமா. ‘பொதுநோக்கு-வேறுபட்ட எதிர்வினை’ என்றார். இது வெறும் வார்த்தை விளையாட்டல்ல. பேச்சுவார்த்தையின் அடிப்படையையே தனது ஆதிக்க நலனுக்கு ஏற்பத் திரித்துக் கொள்வது ஆகும். 18ஆம் நாள் நள்ளிரவு கடந்ததும் திரைமறைவு பேச்சுவார்த்தையின் உச்சநிலை நாடகங்கள் அரங்கேறின.
ஒபாமா(அமெரிக்கா), லூலா(பிரேசில் பிரதமர்), ஜூமா (தென்னாப்பிரிக்கப் பிரதமர்), மன்மோகன்சிங்(இந்தியா), ஜென்பியாஓ(சீனா) ஆகியோருக்கிடையில் கமுக்கப் பேரங்கள் நடந்தன. இதனடிப்படையில் கோபன்ஹேகன் ஒப்பந்தம் வரையப்பட்டது. இந்த ஒப்பந்தம் ‘தலைமையின் நண்பர்கள்’ என்றழைக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, சவுதி அரேபியா உள்ளிட்ட 25 நாடுகளின் பேராளர்கள் முன்வைக்கப்பட்டு அவர்களின் ஒப்புதலும் பெறப்பட்டது. மொத்தத்தில் கோபன்ஹேகன் பேச்சுவார்த்தையில் பங்குபெற்ற 197 நாடுகளில் வெறும் 27 நாடுகளின் ஒப்புதல் பெற்ற ஆவணமே இந்த ‘கோபன்ஹேகன் ஒப்பந்தம்’ ஆகும்.
எப்படி இது நடந்தது என்பதை ‘ஜி-77 + சீனா’ என்ற அணியின் தலைவராக இருந்த சூடான் நாட்டு அமைச்சர் பெர்னார்டு டீடாஸ் - டி - காஸ்ட்ரோ முல்லர் விளக்குகிறார்.
“கோபன்ஹேகன் பருவநிலை மாநாட்டுக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே ஐரோப்பிய நாடுகளின் மிரட்டல்கள் தொடங்கிவிட்டன. வளர்முக நாடுகளின்- குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களை கையூட்டுக் கொடுத்தும் மிரட்டியும் பணியவைக்கும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஈடுபட்டது. தொடக்கத்திலேயே ‘டென்மார்க் ஆவணம்’ கார்டியன் ஏட்டில் கசியவிடப்பட்டது. உச்சி மாநாட்டின் பேச்சுவார்த்தையை எப்படி நடத்துவது என்ற வழிமுறையைப் பற்றிப் பேசுவதிலேயே முதல் வாரம் கழிந்தது. பின்அறைப் பேச்சுவார்த்தையில் சூடான் குழுவின் தலைவர் என்ற முறையிலும் ஜி-77 நாடுகளின் பேராளர் என்ற முறையிலும் கலந்து கொண்டு நானும் பேசினேன். பயன் கிடைக்காது என்பது தெரிந்ததும், இந்தத் திரைமறைவுப் பேச்சுவார்த்தையிலிருந்து ஒதுங்கிக் கொண்டேன்.
திசம்பர் 18ஆம் நாள் ஒபாமா வந்தார். அமெரிக்காவுக்கும் பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா, சீனா அடங்கிய ‘பேசிக்’ (ஙிகிஷிமிசி) அணிக்கும் இடையில் பின்அறைப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. மாநாட்டு அரங்கில் 5 மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பேராளர்கள், அனுமதிக்கப்பட்ட தொண்டு நிறுவனத் தலைவர்கள் அனைவரும் விடிய விடியக் காத்திருந்தோம். தாமதத்திற்கான காரணம் சொல்லப்படவும் இல்லை. பின்னிரவுக் கடந்தபின் மாநாட்டின் தலைவரும் டென்மார்க் பிரதமருமான லார்ஸ் லோக்கே ராஸ்மூசன் மேடையில் தோன்றினார்.
அவர் கையில் இருந்த ஆவணத்தை உயர்த்திக் காட்டியபடி ஒலிபெருக்கியின் முன்னால் வந்து ‘கோபன்ஹேகன் ஒப்பந்தம்’ முடிந்துவிட்டது என்று அறிவித்தார்.
உடனடியாக தலைமைச் செயலக ஊழியர்கள் அந்த ஆவணத்தின் நகல்களை பேராளர்களிடம் வழங்கினர். மாநாட்டு வழிமுறையின்படி இந்த ஆவணத்தின் மீது அனைத்து நாட்டுப் பேராளர்களின் கருத்து எதுவும் கேட்கப்படவில்லை. கருத்துகூற அனைவருக்கும் சேர்த்து 1 மணி நேரம் வழங்கப்பட்டது. கருத்தூன்றிப் படிப்பதற்குக் கூட நேரம் அளிக்கப்படாததால் அரங்கம் கூச்சல் குழப்பத்தால் அதிர்ந்தது. ஒழுங்குப் பிரச்சினை எழுப்புவது மட்டுமே பேசுவதற்கான ஒரே வழியாக விடப்பட்டிருந்தது. அதிலும் எல்லோருக்கும் வாய்ப்பில்லை.
பல்வேறு நாடுகளின் பிரதமர்கள் அல்லது குடியரசுத் தலைவர்கள் அல்லது பொறுப்பான பேராளர்கள் தாங்கள் பேசுவதற்கு வாய்ப்புக்கேட்டு தங்கள் பெயர் பலகையை மேசையில் ஓங்கித் தட்டி ஓசை எழுப்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அதன்பிறகே ஒரு சிலர் பேச அனுமதிக்கப்பட்டனர். அப்படி அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது மாநாட்டுத் தலைவர் அமர்ந்து பேச்சுக் கேட்கும் மாநாட்டு மரியாதைகூட கடைபிடிக்கப் படவில்லை. அவர் அங்குமிங்கும் திரும்பி தலைமைச் செயலக ஊழியர்களிடம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். அனுமதிக்கப்பட்ட சில நாடுகள் (கியூபா, பொலிவியா, நிகரகுவா, வெனிசுவேலா, சூடான்) தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. இந்த நிலையில் ‘கோபன்ஹேகன் ஒப்பந்தம்’ குறித்து ஐ.நா. பருவநிலை மாநாடு “குறித்துக் கொண்டது” என்று மாநாட்டுத் தலைவர் ராஸ்மூசன் அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தை ஏற்கும் நாடுகள் கையொப்பமிடலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதற்கு முன்னமேயே மாநாட்டில் பேசிய பிரிட்டன் அமைச்சர் மில்லிபாண்ட் “மாற்று தொழில்நுட்பங்களைக் கடைபிடிக்க தேவையான நிதி உதவியைப் பெற விரும்பும் நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால் தான் அந்த நிதி உதவிக் கிடைக்கும்” என்று கூறினார். அமெரிக்கப் பேராளரும் அதையே வலியுறுத்தினார்.
"நாடுகளுக்கிடையில் நிலவிய நம்பிக்கையை ‘கோபன்ஹேகன்’ தகர்த்து விட்டது’’ என்றார் காஸ்ட்ரோ முல்லர் (நிuணீக்ஷீபீவீணீஸீ.நீஷீ.uளீ திசம்பர் 23.12.09). இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் இணைந்து அமெரிக்க வல்லாதிக்கம் கூறிய வழியில் ஒப்பந்தம் வரைந்து அதை 27 நாடுகள் ஏற்றுக் கொண்டு மீதம் உள்ள 170 நாடுகள் மீது திணிக்க முயல்கின்றன. இது தான் கோபன்ஹேகன் பருவநிலை ஒப்பந்தம்.
“கியோட்டோ வழிமுறை கண்டிப்பாக பின்பற்றப்படும். இந்தியா அதிலிருந்து வழுவாது. அவ்வாறு வழுவும் ஒப்பந்தத்தை ஏற்காது” என்று இந்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் மீண்டும் மீண்டும் உறுதி கூறினார். ஆனால் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் முற்றிலும் வேறாக உள்ளது.
புவிவெப்பமாதல் என்பது உலகம் சந்திக்கும் பொதுப் பிரச்சினை என்றும் கி.பி. 2050க்குள் புவி வெப்பநிலையை 2கு சென்டிகிரேட் குறைக்க வேண்டும் என்றும் பொதுப்பட பேசும் இந்த ஒப்பந்தத்தின் முதல் பத்தி, இந்த இலக்கை அடைவதற்கு குறைக்க வேண்டிய கார்பன் வெளியீட்டு அளவு பற்றி மவுனம் சாதிக்கிறது. கோபன்ஹேகனுக்கு அடித்தளமிட்ட பாலி வரைவுத்திட்டம் கியோட்டோ ஒப்பந்தத்தின் நோக்கத்தை சாதிப்போம் என்று உறுதி கூறியது.
ஆனால் அமெரிக்காவும் இந்திய அணியும் வரைந்துள்ள கோபன்ஹேகன் ஒப்பந்தமோ “முந்தைய மாநாடுகளின் இறுதி இலக்கை நோக்கி பயணிப்போம்” என்று வழுக்கலாகப் பேசுகிறது (கியோட்டோ ஒப்பந்தம், பாலி வரைவு ஆகியவற்றுக்கு காண்க: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், திசம்பர் 2009 மற்றும் தமிழர் கண்ணோட்டம் மே 2007).
2020க்குள் எந்தளவுக்கு கார்பன் வெளியீட்டைக் குறைக்க வேண்டும், 2050க்குள் என்ன செய்ய வேண்டும் என்பனவற்றை கியோட்டோ ஒப்பந்தம் வரையறுத்தது. ஆனால், இவைபற்றி கோபன்ஹேகன் ஒப்பந்தம் விரைவில் முடிவெடுப்போம் என்று மட்டுமே பேசுகிறது.
“எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் கார்பன் வெளியீட்டை குறைக்கும் உச்சபட்ச அளவு பற்றி உலகளவிலும் அந்தந்த நாட்டளவிலும் வரையறுக்க முயற்சி செய்வோம்” என்று ஒப்பந்தத்தின் பத்தி 2 தொளதொளப்பாக பேசுகிறது. “வளர்ச்சியடைந்த நாடுகள் 2020க்குள் வரம்புகட்ட வேண்டிய கார்பன் அளவு குறித்து தனித்தனி நாடுகளாகவோ அல்லது கூட்டாக சேர்ந்தோ வரையறுக்கும். அந்த வரையறுப்பு அறிக்கை வரும் 31.01.2010க்குள் ஐ.நா.
பருவநிலை மாநாட்டுத் தலைமைச் செயலகத்திற்கு ஒரு தகவல் அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும். இந்த முடிவு கியோட்டோ ஒப்பந்தத்தில் கட்டுப்பட்டுள்ள நாடுகளையே உறுதியாக கட்டுப்படுத்தும்’’ என்று ஒப்பந்தத்தின் பத்தி 4 கூறுகிறது. கியோட்டோ ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திடவில்லை. எனவே, இந்த பத்தியில் கூறப்படும் நிபந்தனையை அமெரிக்கா கட்டாயம் ஏற்க வேண்டியத் தேவையில்லை. அதுவாக விரும்பி அறிக்கை அளித்தால் உண்டு.
இதே போல், வளர்முக நாடுகள் தங்கள் தங்கள் நாடுகளில் கார்பன் வெளியீட்டை தடுப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து 31.01.2010க்குள் தலைமைச் செயலகத்திற்கு தகவல் அறிக்கை அனுப்ப வேண்டும். இந்த ஏற்பாடுகளை தங்கள் சொந்த நிதியிலிருந்து அந்தந்த நாடுகள் செய்து கொண்டாலும் “அவை அனைத்து நாட்டு கலந்தாய்வுக்கும், கூராய்வுக்கும் உட்படுத்தப்படும். அதற்கான உறுதியான வழிமுறைகள் இறுதி செய்யப்படும்’’ என்று கோபன்ஹேகன் ஒப்பந்தத்தின் பத்தி 5 கூறுகிறது. அமெரிக்க வல்லரசின் கண்காணிப்புக்கும் கட்டுத்திட்டங்களுக்கும் உட்பட்ட இளையப் பங்காளியாக இந்தியா இருப்பதை உறுதி செய்யும் விதியே இது.
“கோபன்ஹேகன் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா உள்ளிட்ட ஒப்பந்த நாடுகள் மேற்கொள்ளும் திட்டங்களை தலையிட்டுக் கண்காணிப்பதற்கு அமெரிக்கா உரிமை பெற்றுள்ளது” என்று அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் அறிவியல் ஆலோசகர் டேவிட் ஆக்சல்ராடு கூறுவது இதனை உறுதி செய்கிறது. கோபன்ஹேகன் ஒப்பந்தம் சட்டப்படியாகக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தமல்ல என்று சொல்லப்பட்டாலும், பிற நாடுகள், வல்லரசுகளின் பணபலத்தாலும் படை பலத்தாலும் இணங்கச் செய்யப்படும் என்பது தெளிவு.
இந்தப்புவியை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு பேச்சுவார்த்தையை வல்லரசுகளும் அவற்றின் பங்காளிகளும் இந்தப் புவிப்பந்தை பங்கு போட்டுக் கொள்ள பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே கோபன்ஹேகன் கூத்து. கோபன்ஹேகன் தோல்வி சில செய்திகளை மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கின்றது.
ஒன்று: புவிவெப்பமடைவதால் தீவு நாடுகள் விழுங்கப்படுவதையோ கடற்கரை நாடுகள் அழிக்கப்படுவதையோ, புவி நடுக்கோட்டு நாடுகள் வறட்சியில் சிக்குவதையோ இவ்வகை நாடுகளின் கோடிக்கணக்கான மக்கள் மெல்லச் செத்தொழிவதையோ பற்றி ஏகாதிபத்தியங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. மக்கள் பேரழிவில் சிக்கினாலும் இந்த ஏகாதிபத்திய முதலாளிகள் தங்கள் இலாபங்களில் சிறு சிராய்ப்பை ஏற்றுக் கொண்டு கூட அந்த அழிவை தடுக்க முன்வர மாட்டார்கள்.
இரண்டாவது: இந்த பேரழிவுக் கூட்டணியில் உறுதியான பங்காளியாக இந்தியா இணைந்திருக்கிறது. இயற்கையைப் பாதுகாக்க இந்தியா என்ற கட்டமைப்பு உதவாது.
மூன்றாவது: புவியைக் காக்கும் போராட்டம் இந்த ஏகாதிபத்தியக் கூட்டணியை எதிர்க்கும் போராட்டத்தில் மையம் கொண்டுள்ளது. நான்காவது: இந்தியாவையோ சீனாவையோ அல்லது வேறு வளர்ச்சி அடையும் நாடுகளையோ நம்பி வல்லாதிக்கத்திற்கெதிரான வளரும் நாடுகளின் கூட்டணி சாத்தியமில்லை.
தங்கள் தங்கள் தேசிய இறையாண்மை, தேசியப் பொருளியல், தேசிய வாழ்முறை ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்வதற்கான மாற்று வழியை - மாற்றுப் போராட்டங்களை கண்டறிவதே ஒரே வழி. இதன் பொருள் பலமுனை உலகம் தேசியங்களின் எழுச்சியில் உருக்கொள்ள வேண்டும் என்பதேயாகும்.
Leave a Comment