“சூழலைக் காக்க நமக்கான மாற்று அரசியல் எது?” - தோழர் கி.வெங்கட்ராமன் உரை!
“சூழலைக் காக்க நமக்கான மாற்று அரசியல் எது?” பூவுலகின் நண்பர்கள் ஐம்பூதச் சுற்றுச்சூழல் விழாவில் தமிழ்த் தேசப் பொதுவுடைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் உரை!
உலக சதுப்பு நிலப் பாதுகாப்பு நாளான பிப்ரவரி 2 அன்று, பூவுலகின் நண்பர்கள் மற்றும் இலயோலா சூழலியல் மன்றம் (என்விரோ கிளப்) ஆகிய அமைப்புகளின் சார்பில், சென்னை இலயோலாக் கல்லூரியில் ‘ஐம்பூதச் சுற்றுச்சூழல் விழா’ சிறப்புற நடைபெற்றது.
காலை 10 மணியளவில், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு.சந்துரு, காலை அமர்வுக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். இலயோலாக் கல்லூரி செயலர் அருட்தந்தை முனைவர் ஆல்பர்ட் வில்லியம், முதல்வர் அருட்தந்தை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஈரோடு திரு. வெ.ஜீவானந்தம் அவர்கள், இயற்கை வேளாண் அறிவியலாளர் திரு. கோ.நம்மாழ்வார் அவர்களது படத்தைத் திறந்து வைத்தார். கானுயிர் புகைப்படக் கண்காட்சியை எழுத்தாளர் ஞாநி கேமரா கிளிக் செய்து தொடங்கி வைத்தார். தொகாப்பியத்திலுள்ள ஐம்பூதக்கோட்பாட்டை விளக்கி, தமிழிய ஆய்வாளரும், பேராசிரியருமான முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்கள் சிறப்புரை வழங்கினார்.
தொடர்ந்து, ஐம்பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு ஆகிய தலைப்புகளில் நடைபெற்றக் கருத்தரங்கில் இயற்கை வேளாண் அறிவியலாளர் திரு. பாமயன், இயக்குநர் ம.செந்தமிழன், மருத்துவர் பாரதிச்செல்வன், சென்னை வானிலை மைய இயக்குநர் திரு. இரமணன் உள்ளிட்ட பல்வேறு ஆய்வாளர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.
நிகழ்வில் கலந்து கொண்டு, கருத்துரையாற்றிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் :
“பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐம்பூதச் சூற்றுச்சூழல் விழா சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வை ஒருங்கிணைத்த அனைவருக்கும் எமது பாராட்டுகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கருத்தரங்கில் உரையாற்றிய பெரும்பாலானத் தோழர்கள், அணுஉலை எதிர்ப்பு, மீத்தேன் எரிவாயுத் திட்ட எதிர்ப்பு, கெயில் எண்ணெய்க் குழாய்த் திட்ட எதிர்ப்பு என சூழலியல் சார்ந்த தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளுக்கானப் போராட்டங்களில் ஈடுபட்டவாகளாக உள்ளதை நான் பார்க்கிறேன்.
இக்கருத்தரங்கத்தில் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு தலைப்பிலும், தமிழ்ச் சமூகத்தின் தொன்மையைப் பறைசாற்றிப் பேச முடியும். அந்தளவிற்கு, மரபு அறிவியலைக் கொண்ட செம்மாந்த இனமாக நாம் வாழ்ந்திருக்கிறோம். ஆனால், இன்றைக்கு இந்த இனம் தமது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்தக் கொள்ளப் பலமுனைகளிலும் போராடிக் கொண்டுள்ளது.
இயற்கையை தெய்வமாக வழிபடும் வடநாட்டுப் பண்பாட்டுக்கும் இயற்கையை வெறும் பயன் பாட்டுப் பொருளாகக் கருதும் மேற்கத்தியப் பண்பாட்டுக்கும் மாறாக இயற்கையை சமூகத்தின் ஓர் உறுப்பாக, மூத்த உறுப்பினராகப் பார்த்தப் பண்பாடு பண்டைத் தமிழர் பண்பாடு, ஆனால் அது இன்று மேற்குலகப் பார்வைக்குத் தாழ்ந்துள்ளது இதற்குக் காரணமென்ன?
தமிழ்ச் சமூகத்தில் நிலவிவரும் சாதிக் கொடுங்கோன்மைகளுக்கு எதிராக, சமூகத் தளத்திலும், பண்பாட்டுத் தளத்திலும் போராடிய திராவிட இயக்கமாகட்டும், உழைக்கும் மக்களின் பொருளியல் உரிமைகளுக்காகக் களமாடிய பொதுவுடைமை இயக்கமாகட்டும், இவ்விரண்டு முற்போக்கு இயக்கங்களும் சில பிற்போக்கான அம்சங்களைக் கொண்டிருந்தன. நமது சமூகத்தின் வேராக இருந்த கிராமங்களை, இம்முற்போக்கு இயக்கங்கள் பிற்போக்கின் அடையாளமாகவே கண்டன. நிலத்தை இழந்தால் நாம் அனைத்தையும் இழப்போம் என்ற சமூகப் பார்வையை மக்களிடம் வளர்க்க வேண்டிய இவ்வியக்கங்கள், ‘நிலம்’ – ஒரு விற்பனைக்குரிய பண்டம் என்ற நுகர்வியப் பார்வையையே மக்களிடம் வளர்த்தன.
இவ்விரண்டு இயக்கங்களும், மக்கள் வளர்ச்சிக்கு பெரும் ஈகங்களை செய்துள்ள போதிலும், தேசிய இனம் குறித்த தெளிவான பார்வை இல்லாத போது, அந்த ஈகங்கள் நம்மை மீண்டும் வந்த இடத்திற்கே அழைத்துச் செல்கின்றன.
“நிலங்களை விற்றுவிட்டு கிராமத்தை விட்டு ஓடிச் சென்று நகரங்களில் குடியேறுங்கள். அது தான் முற்போக்கு, கிராமங்கள் – வெறம் பிற்போக்கின் அடையாளம்” என்று கூறி, நகரமயமாக்கலுக்கு இக்கருத்தியல்கள் பெரிதும் துணை நின்றதை நாம் மறுக்கவியலாது. பொதுவுடைமை இயக்கங்களோ, நிலத்திற்கு அதிக விலை கேட்டு இயக்கம் நடத்தியதே தவிர, ‘நிலம்’ – நமது தாய் என மக்களை உணர்வுவூட்டி வளர்க்க வில்லை.
எனவே தான், வல்லாதிக்க பெருங்குழும நிறுவனங்கள் உங்கள் நிலத்தை விற்றுவிடுங்கள் என்று கூறும் போது, நம் மக்கள் எளிதாக ஏமாறுகிறார்கள். நிலத்தடி நீரை விற்கக் கோரும் போது நம் மக்கள் நீருக்கு விலை கேட்கிறார்கள்.
இவ்வாறான உலகமயச் சூழலில், நமக்கு மாற்று நுகர்வியக் கொள்கையும் மாற்றுத் தொழில்நுட்பமும் தான் அடிப்படையானத் தேவைகளாகும். பூச்சுக் கொல்லிகளை சேர்க்காமல் இயற்கை வேளாண்மை செய்வது, கதிரவன் ஒளியிலிருந்து மின்சாரம் பயன்படுத்துவது என நாம் நடைமுறையில் பல மாற்றுத் தொழில்நுட்பங்களை செயல்படுத்தி வந்தாலும் கூட, அதை நிலையானதாக்க, அதற்கான மாற்று அரசியலும் நமக்குத் தேவை என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.
பொலீவியாவில் தண்ணீர் தனியார் மயத்திற்கு எதிரான போராட்டங்களும், அம்மண்ணின் பிற போராட்டங்களும் ஒரு மாற்று அரசியலோடு இணைக்கப்பட்டன. அந்த மாற்றங்கள், ஒரு மாற்று அரசியலின் கீழ் இணைக்கப்பட்ட பிறகே அது நிலைக்க முடிந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்கள், இப்போது அரசியல் கட்சிகளையே நடத்துமளவிற்கு வளர்ந்துவிட்டன. கட்சிகளும், கம்பெனிகளூம் இரண்டறக் கலந்து விட்டன. அரசியல் என்பது காசுபோட்டு காசு எடுக்கும் தொழிலாகிவிட்டது. நீதித்துறை, ஊடகத்துறை என அனைத்துத் துறை அநீதியாளர்களுடனும் கார்ப்பரேட்டுகள் கைகோக்கும் ஒட்டுண்ணி அரசியல் இங்கு மேலோங்கியுள்ளது. இந்த போலி அரசியலை நாம் தகர்த்தாக வேண்டும்.
உலகளவில் இன்று நிகரமைச் சூழலியல் (Eco-socialism) குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. வெறும் விவாதங்களாக இல்லாமல், பல குழுக்கள் பன்னாட்டு அரங்கில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றனர். சூழலியல் சிக்கல்களை எதிர் கொள்ள மாற்றுக் கோட்பாடுகளை முன்வைத்து அவர்கள் விவாதிக்கின்றனர். இந்திய அளவில், நமது முத்தவர் கோ.நம்மாழ்வார், மூ.வந்தனா சிவா, காந்தியவாதியான ஜே.சி.குமரப்பா என பலரும் இது குறித்த நிறைய வெளிப்படுத்தியுள்ளனர். புறக்கணிக்கப்பட்ட ஒரு மாபெரும் பொருளியலாளர் ஜே.சி.குமரப்பா. ஆனால் அவர் வர்ணசாதி இந்த மாற்றுக்குத் துணையாக இருக்கட்டும் என்றார். இந்தியத் தேசியத்திற்குள் அவர் முன் மொழிந்தார் இதுதான் அவரது முரண்.
இந்திய சுதேசியம் என்றொல்லாம் ஒன்றும் கிடையாது. அது வெறும் கற்பனையே! இந்தியா விடுதலை பெறும் போது, காந்தியும் வெளியே வைக்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டது, சிலருக்கு அவசியமாகவும், சிலருக்குத் தேவையாகவும் இருந்தது. கொன்றவன் கொலையாளி என அகப்பட்டுக் கொண்டான். அவர் கொல்லப்பட வேண்டியவர் என நினைத்தவர்கள் அகப்படாமல் தப்பித்துக் கொண்டனர். அவர் தேவையற்றவர் எனக் கருத்தியவர் மனிதருள் மாணிக்கம் எனக் கொண்டாடப்பட்டார்.
காந்தியின் சுதேசியம் , தற்சார்ப்பு கிராமப் பொருளியல் கொள்கை உள்ளிட்ட கொள்கைகள், இந்திய விடுதலைக்குப் பிறகு காந்தியைப் போலவே வெளியில் வைக்கப்பட்டன. மனித குலத்திற்கெதிரான சனாதன தர்மத்தின் வழியேதான் காந்தி இதை சிந்தித்தார். என்ற போதிலும், இது போன்ற மாற்றத் திட்டங்களைப் புறக்கணித்துவிட்டு, பெரிய பெரிய தொழிற்சாலைகள், பெரிய பெரிய அணைகள் என சுழலியல் நாசத்திட்டங்களை முன்வைத்த நேருதான் இன்றுவரை நவீன இந்தியாவின் சிற்பி என இந்தியாத் தேசியவாதிகளால் எடுத்துரைக்கப்படுகிறார்.
இது போன்ற பெரியக் கட்டமைப்புகளை மையத்தில் குவித்த அதிகாரம் அடக்குமுறைகளை வைத்து கொண்டு தான் இந்தியாவைப் பாதுகாக்க முடியும் என இந்தியத் தேசியவாதிகள் தெளிவாக நம்புகிறார்கள். உலகமயத்துடனோ, பன்னாட்டு மூல தனத்துடனோ இணையாமல் இது நடப்பதில்லை. அதனால்தான், இந்திய சுதேசியம் என ஒன்று கிடையதென நாம் அடித்துக் கூறுகிறோம்.
ஆனால், பலர் முன் வைக்கும் ‘Think globally act globally’ என்ற முழக்கம் சரியானதல்ல. உலகளவில் சூழலியல் சிக்கல்களுக்கானத் தீர்வு என்பது, உலகளவில் ஒரு தீர்வல்ல. உலக தழுவிய தீர்வை உள்ளூரில் செயல்படுத்த ஒன்றுமில்லை. அத்தீர்வு, ஒவ்வொரு மண்ணிற்கும் வேறுவேறாகும்.
இதில் வரும் ‘local’ என்பது என்ன? இந்த ‘local’ என்பது அந்தந்த மொழி சார்ந்த மண் என்பதாகும். இங்கு பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள், தொல்காப்பியத்திலுள்ள ஐம்பூதக் கோட்பாடுகளை சிறப்பாக விளக்கிப் பேசினார். மேற்குலக அறிவியலாளர்கள் நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகிய நான்கு கூறுகளை மட்டும் பேசிக் கொண்டிருந்த போது, நமது மூதாதையர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ‘விசும்பு’ எனப்பெயரிட்டு, காற்று அல்லாத வெளியை அடையாளப்படுத்தியிருந்தனர்.
இந்த, மரபார்ந்த அறிவும், அறிவியலும் வேறு எந்த இனத்தில் காண முடியும்? சூழலியல் சிக்கல்களுக்கானத் தீர்வுகளை நோக்கிப் புறப்படும் முன், இந்த மரபான அறிவையும், தொழில்நுட்பங்களையும் புறக்கணித்தால் நமக்குப் பயன் உண்டா?
பூவை ‘பூ’ என்று நாம் சொன்னால், ஆரியர்கள் அதை ‘புஷ்பம்’ எனச் சொல்வார்கள். மொழியில் என்ன இருக்கிறது என நாம் கருதி, நமது தாய் மொழியைப் புறக்கணித்தால் அதே இடத்தில் இன்னொரு மொழி வந்து ஆதிக்கம் செலுத்தும். எனவே, மொழியைப் பாதுகாக்காமல் மரபு அறிவியலையும், தொழில்நுட்பங்களையும் நாம் பாதுகாக்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். ஜே.சி.குமரப்பா தவறி விழுந்த இடம் இது தான்!
எனவே, மொழி சார்ந்து தான் மண் இருக்க முடியும். மொழி சார்ந்து தான் மரபு இருக்க முடியும். மரபு சார்ந்து தான் அவ்வினத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் இருக்க முடியும். ஆனால், மொழியை மறுப்பதன் மூலம் நாம் மரபு, அறிவியல் என அனைத்தையும் மறுக்கிறோம் என்பதை சிலர் புரிந்தும், புரியாமல் இங்கு பேசுகிறார்கள்.
தமிழ் இந்து நாளேட்டில், தமிழ் இனத்திற்கு அறிவியல் தான் தெரியும், தொழில்நுட்பம் தெரியாது என்று எழுதினார்கள். அடிப்படை அறிவியல் தெரிந்தவர்கள் தான், அதை Trial and error முறையில், முயன்று தவறி தொழில்நுட்பத்தைப் படிப்பார்கள் என்ற அடிப்படை அறிவியல் கூட தெரியாமல் இங்கு எழுதுகிறார்கள்.
தஞ்சை பெரிய கோவில் எழுப்புவதற்கு முன் இவர்கள், எத்தனை கோபுரங்களை கட்டி இடித்தார்கள்? இன்றைக்கு நவீன கால கணக்கியல் வளந்திராத அந்த காலத்திலேயே, இம்மி என்றால் எவ்வளவு என கணக்குப் போட்டுத் தந்திருக்கிறது தமிழினம். சோழர்களின் நில அளவீடு முறையைக் கண்டு எல்லோரும் வியக்கின்றனா. அறிவியலை அறியாமல் இவற்றையெல்லாம் தமிழன் படைத்திருப்பானா?
பரத நாட்டியம் பரவலாக புழங்குவது, தமிழ்நாட்டில் தான். ஆனால், அதற்கான பரத சாஸ்திரத்தை ஆரியர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். சிற்பக்கலையில் சிறந்து விளங்குவது தமிழகம்தான். ஆனால், ஆரியர்கள் சில்பசாஸ்திரம் என அதை எழுதி வைத்திருக்கிறார்கள். நாம் கோட்பாடுகளை எழுதி வைக்கவில்லை, ஆனால் ஆரியர்கள் கோட்பர்டுகளை மட்டுமே எழுதி வைத்திருக்கிறார்கள்.
தஞ்சை பெரிய கோவிலை ராஜராஜச்சோழன் கட்டினான் என்றால், அவன் காலத்தில் வாழ்ந்த கோத்தனாருக்கு சிற்ப சாத்திரம் தெரிந்திருக்கிறது. சிற்பக் கலை நுணுக்கங்கள் தெரிந்திருக்கிறது என்று பொருள். எனவே, மொழியை இழப்பதென்பது நமது வரலாற்றை இழப்பதென்று பொருள். வரலாற்றை இழப்பதென்பது நாம் நம்மையே இழக்கிறோம் என்று பொருள். எனவே, நமது மொழி – வரலாற்றை மீட்கும் போதுதான், மரபார்ந்த அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் நாம் முழுமையாக மீட்டெடுக்க முடியும்.
இந்தியமும் இன ஒடுக்குமுறையும், மொழி ஒடுக்கு முறையும் பிரிக்க முடியாதது. இந்தியத்திற்கு அடிப்படையான ஆரிய பார்ப்பனியமூம் சாதி ஒடுக்குமுறையும் இணைந்திருப்பது.
பிறப்பு அடிப்படையிலான சாதிய ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கும் இச்சமூகத்தில், சாதி ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கும் வகையில் இட ஒதுக்கீடு தேவையென நாம் போராடுகிறோம். அது சரியே! அதே நேரத்தில், மருத்துவம் – பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மரபார்ந்த அறிவுடன் நடைமுறையில் இயங்கிக் கொண்டுள்ள சமூகத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமெனவும் நாம் கருதுகிறோம்.
இசைத்துறையில் இளையராஜா சாதித்ததை போல எல்லோரும் சாதித்துவிட முடியாது. புறக்கணிக்கப்பட்ட பறையை அவர் மேடையேற்றினார். அந்த இசையின் மேன்மையும் அதைக் கையாண்ட மக்களின் மேன்மையும் வெளிப்பட்டது. எனவே தான், மரபாந்த அறிவைக் கொண்டுள்ள சமூகங்களின் ஆற்றலை வெளிப்படுத்த தனி இடஒதுக்கீடு வழங்கி, அவர்களது மரபு அறிவை, அறிவியலை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறோம். இவ்வாறான, மாற்று வளர்ச்சி முறை ஒவ்வொரு மொழி சார்ந்த மண்ணுக்கும் வேறுவேறானவையே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
ஐதராபாத்திற்கும் வேறு தமிழ்நாட்டிற்கும் ஒரே மாற்று கிடையாது. அரிசி, நெல் கூட நமக்கு வேறுவேறானவை. அதே போல், தில்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரே மாற்று கிடையாது. அது போலவே, உலகம் முழுமைக்குமோ, இந்தியா முழுமைக்குமோ ஒரு மாற்று கிடையாது. ஒவ்வொரு மொழி சார்ந்த மண்ணுக்கும், அம்மண்ணிக்கேற்ப உள்ள தனித்தன்மையுடன் இணைந்தே இம்மாற்று செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கான மாற்று அரசியலை உருவாக்க வேண்டும்.
We are a people என்பார்கள். ஆங்கில இலக்கண முறைப்படி A People என்றால் கூட தவறு என சிலர் நினைக்கலாம். ஆனால், உண்மையில் ஒரு மக்கள் சமூகம் என்றால், அது ஒரு தேசிய இனம் சார்ந்த மக்கள் சமூகம் தான். ஒரு மொழி மற்றும் பண்பாட்டு அடிப்படையிலான மக்கள் சமூகம் தான்.
சோமாலியா நம் கண் மின்னே உள்ள எடுத்துக் காட்டு. சோமலியர்கள், தங்கள் ஆட்சியுரிமை பெற்ற பிறகு தங்கள் அழிந்து போன மொழியைத் தான் முதலில் மீட்டார்கள். அதன் பின்னர், அம்மொழியின் மரபார்ந்த அறிவியலை மீட்டார்கள்.
சோமலியாவின், கிராம மக்களுக்கு உள்ள கால்நடை அறிவியல்(Vertinary science) என்பது உலகம் வியக்கும் அளவிற்கு புகழ் பெற்றது. 1000 ஆடுகளை மேய்த்துச் செல்லும் ஒரு சோமாலியர், எந்த ஆடு நொண்டி நொண்டி நடக்கிறது, அதற்கு என்ன குறை என சில நிமிடங்களில் சொல்லிவிடுவார். ஆனால், அவரை ‘நாட்டு வைத்தியர்’ என மேற்கத்திய மருத்துவர்கள் இழிவுபடுத்துவர்கள். ஆம் அவர் ‘நாட்டு வைத்தியர்’ தான். அவருக்கென ஒரு நாடு இருக்கிறது. அவர் அந்த நாட்டுக்கான மருத்துவர்! எனவே, அவர் ‘நாட்டு’ வைத்தியர்!
தமிழர்களே, நமக்கான நாடு எது? தமிழ்நாடுதான்! அதை அடையும் திசை நோக்கி நாம் கரம்கோப்போம்! அதுவே நமக்கான மாற்று அரசியல்! அதுவே, நம் மொழியையும், மரபார்ந்த அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் மீட்டெக்கும்! அதற்கான போராட்டங்களில் நாம் கரம் கோப்போம் எனத் தெரிவித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு மீண்டுமொரு நன்றி கூறி விடைபெறுகிறேன்! "
இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.
Leave a Comment