குற்றாலம் முண்டந்துறை வனச்சரகர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!
குற்றாலம் முண்டந்துறை வனச்சரகர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!
பழங்குடியின மக்கள் மீதான வனச்சரகர்களின் வன்கொடுமைகளைக் கண்டித்தும், குற்றாலம் முண்டந்துறை வனச்சரகர்களைக் கைது செய்யக் கோரியும், ஆதிவாசிகள் விடுதலை முன்னணி சார்பில் புளிங்குடியில் நேற்று (09.07.2014) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் பல்வேறு பழங்குடியின மக்கள் காலங்காலமாக வசித்து வருகின்றனர். காலங்காலமாக வனப்பகுதியில் வாழ்ந்து வரும் அம்மக்கள் மீது வனச்சரகர்கள் அவ்வப்போது வன்செயல்களை நிகழ்த்துவது தொடர்கதையாகியுள்ளது.
அவ்வகையில், சொக்கம்பட்டி பளியர் பழங்குடியின மக்கள், குற்றாலம் வனப்பகுதியில் தேன் சேகரிப்பதற்காகச் சென்ற 7 பேரிடம் குற்றாலம் வனச்சரகர் ரூ. 21,000 தண்டம் வசூலித்துள்ளார். முண்டந்துறை வனப்பகுதியில் சிறுவன மகசூல் பொருட்களை பழங்குடியின மக்கள் எடுப்பதற்கு முண்டந்துறை வனச்சரகர் அனுமதி மறுத்துள்ளார். வனவுரிமைச் சட்டத்தின்படி, வனத்தின் மீது முழு உரிமை கொண்ட அம்மக்களிடம் வனச்சரகர்கள் தங்கள் அதிகாரத்தைக் காட்டுவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
வனச்சரகர்களின் அத்துமீறிய இந்நடவடிக்கைகளைக் கண்டித்தும், மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட, மேக்கரை மலைப்பண்டாரம் பழங்குடியின மக்களை தங்கள் சொந்த வாழ்விடத்தில் மீண்டும் குடியமர்த்த மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், அனைத்து பளியர் மலைக் கிராமங்களிலும் வனவுரிமைச் சட்டத்தின்படி கிராமசபைக் கூட்டங்களை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடத்த வேண்டும் எனக் கோரியும், இக்கண்டன ஆர்ப்பாட்டம் புளியங்குடியில் ஒருங்கிணைக்கப்பட்டது.
புளியங்குடி தி.நா.புதுக்குடி காமராசர் சிலை அருகில் மாலை 5 மணியளவில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, ஆதிவாசிகள் விடுதலை முன்னணி கொள்கை பரப்புரைத் தலைவரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுக்குழு உறுப்பினருமான தோழர் க.பாண்டின் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா.வைகறை, தோழர் அ.ஆனந்தன், குடிமக்கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. அய்யப்பன், நெல்லை மாவட்ட மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் தோழர் நெல்லை கணேசன், புளிங்குடி தமிழின உணர்வாளர் திரு. சத்தியராசன், தமிழக ஆதிவாசிகள் கூட்டமைப்பு மாநிலப் பொதுச் செயலாளர் திரு. ஆறுமுகம் காணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிறைவில், த.தே.பொ.க. புளிங்குடி நகரச் செயலாளர் தோழர் இசக்கி ஆடும் பெருமாள் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், காரையார் பி.வேலுச்சாமி, பாஸ்கர், சொக்கம்பட்டி பால்துரை, கோட்டலை செல்லையா, மேக்கரை இலட்சுமி, தலையணை பால்தினகரன், வாசு பழனிச்சாமி, தலையணை ஈசாக்கு, புளிங்குடி கண்ணன் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின கிராம மக்கள், தங்கள் குழந்தைகளுடன் திரளாகக் கலந்து கொண்டனர்.
Leave a Comment