காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் வலியுறுத்தி இந்திய அரசு அலுவலகம் முற்றுகை : குடந்தையில் தெருமுனைக் கூட்டங்கள்
காவிரி மேலாண்மை அமைக்க மறுக்கும் இந்திய அரசைக் கண்டித்தும், அதை உடனே அமைக்கக் கோரியும் வரும் சூலை 21 அன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் இயங்கும் இந்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டமும், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களின் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.
இப்போராட்டத்தை விளக்கும் வகையில், குடந்தையில் நேற்று பல்வேறு இடங்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் விளக்கத் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
மாலை 4 மணிக்கு, மாங்குடி, தேவராயன்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களுக்கு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் பிரபாகரன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், த.தே.பொ.க. தோழர் ம.தமிழ்த்தேசியன் ஆகியோர் உரையாற்றினர்.
பிறகு, பாபநாசம், கவித்தலம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றக் கூட்டங்களுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் மனோகரன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, தாளாண்மை உழவர் இயக்கம் திரு. கோ.திருநாவுக்கரசு ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
மக்கள் கூடும் இடங்களில் நடைபெற்ற இக்கூட்டங்களை, கணிசமான பொது மக்கள் கவனத்துடன் கேட்டுச் சென்றனர்.
Leave a Comment