ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஆப்ரிக்காவை அச்சுறுத்துவது எபோலா கிருமியல்ல! ஏகாதிபத்தியமே! - இளந்தமிழன்



எபோலா எனப் பெயரிடப்பட்ட புதிய வகை நச்சுக் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் நோய், தற்போது மேற்கு ஆப்ரிக்க நாடுகளை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றது. இந்நோய் தாக்கப்பட்டவர்களில் 90 விழுக்காட்டினர் சாவைத் தழுவுகின்றனர் என்பதே, இந்த நோய் தீவிரத்தன்மையை உணர்த்தும்.

1976ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நச்சுக் கிருமியால், அவ்வப்போது ஆப்ரிக்கக் கண்டத்தில் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டு வந்துள்ளது. எனினும், தற்போது வரை இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் இந்த நோய் ஏற்படுத்திவரும் பாதிப்புகள், ஒரு போருக்கு நிகரானதாகக் கருதப்படுகின்றது.

.நா. மன்றத்தால் வழிநடத்தும் உலக சுகாதார நிறுவனம் (WHO) வழங்கிய தகவல்களின்படி, கடந்த 2013 திசம்பரிலிருந்து, 2014 அக்டோபர் 5ஆம் நாள் வரையிலான காலத்தில் மட்டும், சற்றொப்ப 4,033 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். 8,000க்கும் மேற்பட்டவர்கள், இந்நோய் தாக்கத்திற்குள்ளாகி தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் லைபீரியா, சியாரா லியோன், குனியா, நைஜீரியா உள்ளிட்ட மேற்கு ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த சுகாதாரப் பணியாளர்களும் சற்றொப்ப 250க்கும் மேற்பட்டவர்கள் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். இதனால், இந்நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவத் துறையினர் தயங்கி வருகின்றனர். நோயாளியை சுற்றியுள்ள குடும்பத்தினரின் நிலை இன்னும் மோசமாகும். இந்நோயில் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் தாய் – தந்தையரை இழந்து அநாதையாகியுள்ளனர்.

எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனியே தடுத்து வைத்து, அவர்களுக்குத் தொடர் சிகிச்சை அளித்து கண்காணிக்க வேண்டும். நோய்ப் பரவலைத் தடுக்கும் பாதுகாப்புக் கவசங்களைக் கொண்டே, இந்நோயாளிகளுடன் புழங்க முடியும்ஆனால், இதுபோன்ற வசதிகள் ஆப்ரிக்க நாடுகளில் இல்லை.

ஆயிரக்கணக்கானவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், எபோலா நோயாளிகளுக்கான மருத்துவமனைகளில் லைபீரியா, சியாரா லியோன், குனியா ஆகிய மூன்று நாடுகளையும் சேர்த்து மொத்தமே 848 படுக்கைகள் தான் இருக்கின்றன என்கிறது உலக சுகாதார அமைப்பு.

புதிய நோயாளிகளை அனுமதிக்கும் அளவிற்கு, லைபீரிய மருத்துவமனைகளில் ஒரு இடம் கூட இல்லை என்பதால், லைபீரியாவின் தேசிய விளையாட்டு மைதானம், எபோலா நோயாளிகளை பராமரிப்பதற்கான தற்காலிக மருத்துவக் கூடாரமாக மாற்றப்பட்டுள்ளது.

இன்றைய உலகப் பொருளியல் நிலையைக் கணக்கில் கொண்டால், எபோலாவால் தாக்கப்பட்டுள்ள முக்கிய நாடுகளான லைபீரியா, சியாரா லியோன், குனியா உள்ளிட்ட நாடுகள், மிகவும் வறிய நாடுகளாகும். ஆனால், இந்நாடுகளில் கிடைக்கும் இயற்கை வளங்களோ அபரிதமானவை.

உலகிலேயே ரப்பர் அதிகம் விளைவிக்கப்படும் நாடு லைபீரியா. வைரக் கற்கள் ஏற்றுமதியில் உலகின் முதல் பத்து நாடுகளில் சியாரா லியோனும் ஒன்று. உலகளவில், பாக்சைட், வைரம், யுரேனியம், தங்கம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியில் குனியா இரண்டாம் இடம் வகிக்கிறது. இவ்வளவு வளங்கள் இவற்றில் இருந்தும்கூட, இந்த மூன்று நாடுகளும் மிகவும் ஏழை நாடுகள்! இதற்கு முதன்மையான காரணம், இந்த வளங்கள் அனைத்தையும் சுரண்டிக் கொழுப்பவை மேற்குலகப் பணக்கார நாடுகள்!

தங்களுடைய வளங்களை மேற்குலக நாடுகள் சுரண்டுகின்றன என்ற உண்மையை, இம்மக்கள் அறிந்து கொள்ளக் கூடாதென தொடர்ந்து, இந்த நாடுகளில் உள்நாட்டுக் குழப்பங்கள் மேற்குலக நாடுகளால் ஏற்படுத்தப்படுகின்றன.

பழங்குடியின மக்களுக்கு இடையில் மோதல் ஏற்படுத்துவது, இயற்கை வளங்கள் நிறைந்த பகுதிகளைப் பாதுகாக்க சில இனக்குழுவினருக்கு மட்டும் ஆயுதங்கள் அளிப்பது, ஆயுத மோதல்களை ஊக்குவிப்பது, இராணுவப் புரட்சி நடத்துவது எனப் பல்வேறு வகைகளில் இங்கு தொடர்ந்து குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

இதன் காரணமாகவே, நிலையான ஆட்சியின்றி, முறையான சுகாதார வசதிகள் இன்றி, இம்மக்கள் இன்றும் தவித்து வருகின்றனர். தற்போது, எபோலா நோய்க் கிருமி பரவலைத் தடுக்கும் வகையிலான உள்கட்டமைப்பு வசதிகளோ, மருத்துவ வசதிகளோ இன்றி, இந்நாடுகளில் வாழும் மக்கள் நிராதரவாக விடப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற அவல நிலையை ஆப்ரிக்க நாடுகளில் மட்டுமல்ல மூன்றாம் உலக நாடுகளிலும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான், கல்வி - மருத்துவம் – சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் சேவைகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கக் கூடாது, அவை தனியாரிடம்தான் இருக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்கிறது பன்னாட்டு நிதியம் – உலக வங்கி போன்ற முதலாளிய அமைப்புகள்.

இந்நிலையில், உள்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்புக் கருவிகள், நவீன நோய்த் தடுப்பு மருத்துவப் பயிற்சிகள் என எதுவும் கிடைக்கப்பெறாத இந்த ஆப்ரிக்க மக்களுக்கு உதவ முன்வர வேண்டுமென்று, ஐ.நா. அமைப்பு சார்பில் உலகளாவிய வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆனால், மேற்குலக நாடுகளோ, இதற்கு செவி சாய்க்கவில்லை. மேற்குலக நாடுகளின் முகவராகச் செயல்பட்டு, ஆப்ரிக்க நாடுகளை கடனாளியாக்கும் பன்னாட்டு நிதியம் (IMF) அமைப்பு, இந்தக் கொடூரமான சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, மேலும் பல மில்லியன்கள் ‘கடன் அளிக்க’ முன்வருவதாக அறிவித்துள்ளன. உண்மையில், இந்தச் சூழலில் ஆப்ரிக்க நாடுகளுக்கு உதவ வேண்டுமென நினைத்தால், இந்நாடுகளின் கடன்களை முழுவதுமாகவோ பகுதியாகவோ தள்ளுபடி செய்யலாம். ஆனால், இழவு வீட்டிலும் எப்படி ‘இலாபம்’ பார்க்கலாம் என்பதே பன்னாட்டு நிதியத்தின் ‘சிந்தனை’!

ஆப்ரிக்க நாடுகளின் இயற்கை வளங்களை சுரண்டிக் கொழுக்கும் பணக்கார நாடுகள், குறைந்தபட்சம் இந்நாடுகளுக்கு மருத்துவர்களை அனுப்பியும், நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான ஆராய்ச்சிகளை விரைவுபடுத்தியுமாவது இந்நாடுகளுக்கு உதவ முடியும். ஆனால், அதுவும் நடக்கவில்லை. ஒவ்வொரு நாடும், தங்கள் நாட்டு மருத்துவர்களைக் கொண்டு இது குறித்து, தங்கள் நாடுகளிலேயே ஆய்வு செய்வதாகவும், அவரவர் நாட்டு விமான நிலையங்களில் எபோலா பரிசோதனை மையங்கள் ஏற்படுத்துவதாகவும் அறிவித்தன.

முதன் முதலில், கியூப அரசு முதற்கட்டமாக 165 மருத்துவர்களை அனுப்பி வைத்தது. இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 26 அன்று, மேலும் 300 மருத்துவர்களை அனுப்பியது. லைபீரிய மருத்துவர்களுக்கு நோய்த் தடுப்புப் பயிற்சிகளை அளித்தல், நோயாளிகளைப் பராமரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இன்னொரு புறத்தில், வட அமெரிக்காவிலிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. வட அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, எபோலா கிருமியை ஏதோபயங்கரவாதஅமைப்பு என நினைத்துக் கொண்டாரா எனத் தெரியவில்லை. எபோலா பீடித்துள்ள நாடுகளுக்குஉதவுவதற்காகவட அமெரிக்கப் படையினர் 3000 பேர் ‘உடனடியாக’ ஆப்ரிக்காவிற்கு அனுப்புவதாக செப்டம்பர் 6 அன்று வெள்ளை மாளிகையில் ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்த இராணுவக் குழுவில், இராணுவத்தைச் சேர்ந்த மருத்துவர்களும், பொறியாளர்களும் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.   

2010ஆம் ஆண்டு ஹைத்தி நாட்டில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அதை சாக்காகப் பயன்படுத்திக் கொண்டு, 20,000 வட அமெரிக்கப் படையினர் ஹைத்தி நாட்டில்உதவிஎன்ற பெயரில் குவிக்கப்பட்டனர். இதனை, ஆக்கிரமிப்பு நடவடிக்கை என உலகின் பல நாடுகள் கண்டித்த போது, வட அமெரிக்கா அதனை கண்டு கொள்ளவில்லை. தற்போது, அதே போன்று லைபீரிய நாட்டிற்கும் வட அமெரிக்கா தன்னுடைய படையினரை அனுப்பி வைத்துள்ளது.

2010ஆம் ஆண்டு ஹைத்திக்கு அமெரிக்க இராணுவத்தை அனுப்பியதை வைத்தே, தற்போது எபோலாவைக்கட்டுப்படுத்தஆப்ரிக்காவிற்கும் இராணுவத்தை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டது என, வட அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கான பேச்சாளர் ஜான் ஏர்னஸ்ட் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

குறைந்தபட்ச மருத்துவக் கூடங்களும், வசதிகளும் இல்லாத அவல நிலையில்தான் இந்த ஆப்ரிக்க நாடுகள் இன்னமும் வைக்கப்பட்டிருக்கின்றன என்ற செய்தி மேற்குலக ஊடகங்களில் விவாதத்திற்கு வரவில்லை. அதிபர் ஒபாமாவின்இராணுவஉதவியே மிகப்பெரும் செய்தியாக ஊடகங்களில் வலம் வந்தது. இன்னொரு புறத்தில், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்கள் ஆப்ரிக்காவில் எபோலாவில் மடிந்து கொண்டிருக்க, எபோலா நோய் தாக்கப்பட்ட ஒரே ஒரு அமெரிக்கர் குறித்த பரபரப்பு செய்திளே வட அமெரிக்க ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன.

கொள்ளையடிக்கும் பணக்கார நாடுகளில் உள்ள மக்களுக்கு ஆப்ரிக்க நாட்டுக் கொடுமைகள் உரைத்துவிடக் கூடாது என்பதற்காக, இந்நாடுகளில் உள்ள நடுத்தர மக்களிடம், எபோலா நோயாளிகளுக்கு உதவ தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வேண்டுகோள் வைக்கின்றன. எபோலாவிற்கு எதிரான உணர்வு, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வாகத் திரண்டுவிடக் கூடாது என்பதில் அவ்வளவு முன்னெச்சரிக்கை இவர்களுக்கு!

எந்தவித அடிப்படை சுகாதார வசதிகளும் இல்லாத ஆப்ரிக்க நாடுகளில், எபோலா போன்ற அபாயகரமான தொற்று நோய் வந்தால் எப்படி செயலாற்றுவது என 2007ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நாடுகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலம் சில நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டன.

எனினும், 2007க்குப் பிறகு ஏற்பட்ட பொருளியல் பெருமந்தம் காரணமாக, இந்நிறுவனங்களுக்கு பணக்கார நாடுகள் அளித்த நிதியுதவிகள் கணிசமான அளவில் குறைத்துக் கொள்ளப்பட்டன. இதன் காரணமாக, அந்த முயற்சியே நடைபெறவில்லை.

இந்நோய் தாக்கத்திற்குள்ளான நாடுகளுக்குத் தற்போதையத் தேவை, எபோலா நோய்த் தடுப்பு மருந்துகளும், மருத்துவர்களும் தான். ஆனால், மேற்குலக நாடுகளோ இதைச் செய்வதில்லை. மாறாக, இந்நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதாகச் சொல்கின்றன. இன்னொருபுறத்தில், இராணுவத்தை அனுப்பத் துடிக்கின்றன. நோயால் மடிந்து வரும் ஆப்ரிக்க மக்களுக்கு,  எபோலாவைவிட கொடியது, ஏகாதிபத்தியமே என்பது உணர்ந்திருக்கும்.


இப்பொழுதாவது, உலக நாடுகள் விழித்துக் கொண்டு ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா நோயைக் கட்டுப்படுத்தவும், லைபீரியா போன்ற நாடுகளுக்கு ஆக்கப்பூர்வமான உதவிகளைச் செய்யவும் முன்வர வேண்டும்.  

இக்கட்டுரை,தமிழ்த் தேசியப் பேரியக்க கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2014 அக்டோபர் 16-31இதழில்  வெளிவந்தது.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.