ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மோடியின் எதிரி மோடியே !


இராசீவ் காந்திக்குப் பிறகு அனைந்திந்திய செல்வாக்குப் பெற்ற அரசியல் தலைவர் காங்கிரசிலும் உருவாக வில்லை, பா.ச.க.விலும் உருவாகவில்லை. கற்பனை செய்து பார்க்கும் இடத்தில் கூட கம்யூனிஸ்டுகள் இல்லை. அந்த வெற்றிடத்தைத் தாம் நிரப்ப வேண்டும் என்ற பேராசைதான் நரேந்திர மோடியைப் பிடித்தாட்டுகிறது.

அதற்காக மோடி அலைகிறார், அலைகிறார்; அலைந்து கொண்டே இருக்கிறார். பேசுகிறார்; பேசுகிறார்; பேசிக் கொண்டே இருக்கிறார்.

மேடைக்கொரு ஒப்பனை செய்து கொள்கிறார். வேளைக்கொரு முழக்கத்தை உருவாக்கிக் கொள்கிறார். காணொளிக் காட்சி மூலம் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிப் பிள்ளைகளிடம் உரையாடுகிறார். சியாச்சின் சிகரம் ஏறிப் படை வீரர்களுக்கு லட்டு கொடுக்கிறார். அமெரிக்காவின் மடீசன் பூங்காவிலிருந்து அரியானாவின் முதல்வர் பதவி ஏற்பு விழா வரை அத்தனை அரங்குகளிலும் “நானே நானே” என்று குதூகலிக்கிறார்.

இந்த ஒப்பனைகள், ஓசைகள் அனைத்தையும் விட உண்மையும் நேர்மையும் கவர்ச்சியானவை என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டார் மோடி.

இந்திய மக்களுக்கு அவர் உண்மையானவராக நடந்து கொள்ளவில்லை என்பது மட்டுமின்றி, சொந்தக் கட்சிக்கே உண்மையானவராக அவர் நடந்து கொள்ளவில்லை. தமது அரசின் கொள்கைகளைத் தமது கட்சியின் உயர்நிலைக் குழுவில் விவாதித்து முடிவு செய்து பின்னர் அறிவிப்பதே பண்டிதநேரு காலத்திலிருந்து தலைமை அமைச்சர்கள் கடைபிடித்து வந்த நடைமுறை. “இந்தியாவே இந்திரா - இந்திராவே இந்தியா” என்று அடிவருடிகள் முழக்கம் கொடுக்கும் அளவிற்கு எதேச்சதிகாரியாய் விளங்கிய இந்திரா காந்தி கூட காங்கிரசின் தலைமைச் செயற்குழுவில் முகாமையான முடிவுகளை எடுத்த பின்னரே அரசின் திட்டங்களாக அறிவித்து வந்தார்.

1998 - 2004 காலத்தில் கூட்டணி ஆட்சிக்குத் தலைமை தாங்கிய வாஜ்பாயி தேசிய முன்னணியின் கூட்டமைப்புக் குழுவில் முகாமையான முடிவுகளை எடுத்த பின்னரே செயல்திட்டங்களை அறிவித்தார்.

பா.ச.க.வின் உயர்மட்டக்குழுக் கூட்டம் எதையும் மோடி நடத்தவில்லை. மோடி அறிவித்துவரும் தொழிலாளர் ஒடுக்குமுறைச் சட்டங்கள், 58 ஆயிரம் கோடி ரூபாய்க்குப் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது, தூய்மைத் திட்டம் போன்ற எதுவும் பா.ச.க.வின் உயர்மட்டக் குழுவில் உருவான திட்டமன்று.

ஆனால் நரேந்திர மோடி இதுவரை எந்தத் தலைமை அமைச்சரும் பொது அரங்குகளில் உச்சரிக்காத “எனது அரசு - எனது அரசு” என்ற சொல்லாடலை செயலலிதா பாணியில் மூச்சுக்கு மூச்சு முழங்குகிறார். “எனது அரசு” (my Gov) என்ற தலைப்பில் தலைமை அமைச்சர்க்கான இணையதளத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.

2014 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் “பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்துவோம் (We have to strengthen the Public sector for providing efficient services to our citizens)” என்று உறுதி அளித்துள்ளது பா.ச.க. 58,000 கோடி ரூபாய் அளவிற்கு, பொதுத்துறை நிறுவனப் பங்குகளைத் தனியார்க்கு விற்பதுதான் அந் நிறுவனங்களை வலுப்படுத்தும் திட்டமா?

தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட உறுதிமொழிக்கு மாறாக, மோடி அரசு செயல்படும் போது அக்கொள்கை மாற்றம் பற்றி பா.ச.க.வின் கொள்கை வகுப்பு அமைப்புகளில் விவாதிக்க மாட்டார்களா? ஏன் பா.ச.க.வின் உயர்மட்ட அமைப்பு, மோடி பதவி ஏற்றபின் கூடவில்லை? மோடிக்காக முண்டாத்தட்டும் தளபதியான அமீத்சாவை பா.ச.க.வின் அனைத்திந்தியத் தலைவர் ஆக்கிவிட்டார். அவர்கள் இருவரும் தனியே பேசிக் கொண்டால் கட்சியின் ஒப்புதலைப் பெற்றதாகப் பொருளோ?

இந்தியாவும் பாகிஸ்தானும் போர் புரியக் கூடிய விளிம்பிற்கு வந்து விட்டது போல் செய்திகள் வருகின்றன. அன்றாடம் தங்கள் எல்லைக்குள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்கின்றன என்று இரு நாடுகளும் அறிக்கை வெளியிடுகின்றன. ஐ.நா.வின் தலையீட்டைப் பாகிஸ்தான் கோரியுள்ளது. எல்லையில் வழக்கமாக வழங்கும் தீபாவளிப் பலகாரங்களைக்கூட இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு இவ்வாண்டு கொடுக்கவில்லை என்கிறார்கள். 

இந்தியாவை யாராலும் வெல்ல முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிக்கிறார். அவர் அறிவிப்பைப் பார்த்தால் போர் மூளப்போவதுபோல் தோன்றுகிறது.

இந்த அளவிற்குப் போர் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் போது கூட பா.ச.க.வின் அனுபவம் மிக்க மூத்த தலைவர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவைக் கூட்டி விவாதிக்கவில்லையே! எல்லாவற்றையும் மோடி பரிவாரங்களே பார்த்துக் கொள்ளுமா?

கேள்வி கேட்பாரற்ற அனைத்திந்திய ஒற்றைத் தலைவராக வடிவெடுக்க மோடி செய்யும் முயற்சிகளை இந்திய மக்கள் முறியடிப்பதற்கு முன் அவரது பா.ச.க. கட்சியே முறியடித்தாலும் வியப்பதற்கில்லை.

பதவிப் பித்தர்கள் - ஒழுக்கத்தில் ஊனமுற்றோர் மிகுந்துள்ள கட்சி பா.ச.க. கட்சி  மோடியை ஜாக்கி வைத்து தூக்கிவிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைமைகூட மோடியின் ஒற்றைத் தலைவர் சாகசங்களை ஏற்றுக் கொள்ளாது என்று நம்பலாம். வருங்காலத்தில் பா.ச.க. கட்சியினரும் ஆர்.எஸ்.எஸ். தலைமையும் மோடிக்கு எதிரான திட்டங்களைத் தீட்டலாம். மோடி தமது தலைக்கனத்தைத் தாங்கும் ஆற்றலற்று தாமே சரியலாம்.

இது ஒருபுறம் இருக்க, மோடியின் போலித்தனங்கள் மக்களிடம் அவரை அம்பலப்படுத்திவிடும்.

வெற்றி பெற்று முதல் முதலாக நாடாளுமன்றக் கட்டடத்தில் நுழைந்த போது, அதன் படிக்கட்டுகளைத் தொட்டு வணங்கினார். நாடாளுமன்றம் சனநாயகக் கோயில் என்றார். அப்போதே நாம் நமது இதழ் நிகரன் விடையில், “நாடாளுமன்றம் கோயில் - அதில் உள்ள தெய்வம் தான்தான்” என்பதை மறைமுகமாக மோடி உணர்த்துகிறாரோ என்று எழுதினோம். அப்படியேதான் ஒற்றைப் பிம்பமாக மட்டுமே நடந்து கொள்கிறார். அவரது பேச்சுக்கும் செயலுக்கும் நேர் முரண்பாடு உள்ளது.

முதலமைச்சர்களோடு நானும் குழுவாக இணைந்து - ஒரு கூட்டமைப்பாக (Team) இருந்து விவாதித்து, முடிவுகள் எடுப்போம் என்றார். ஆனால் மாநில அதிகாரங்களையும் பறித்து, நடுவண் அமைச்சர்களின் அதிகாரங்களையும் பறித்து தலைமை அமைச்சர் அலுவலகம் (PMO) நேரடியாக எல்லா முடிவுகளையும் எடுக்கும் என்ற நடைமுறையைக் கொண்டு வந்துவிட்டார். ஆய்வு செய்து பரிந்துரை அளிப்பதற்காகச் செயல்பட்டுவந்த அமைச்சரவைக் குழுக்களை எல்லாம் கலைத்து விட்டார். திட்டக்குழுவைக் கலைத்தவர் அதற்கு மாற்றாக ஏற்கெனவே அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள “மாநிலங்களுக்கான கூட்டமைப்பை” (Inter State Council) உயிர்ப்பித்திருக்கலாம். அதைச் செய்யாமல் தமது ஒற்றை அதிகார மையத்தை வலுப்படுத்தவே திட்டக் குழுவைக் கலைத்துள்ளார்.

தங்கு தடையற்ற முதலாளியம் வளர வேண்டும் என்று அறிவித்த இராசாசி, தொழிலகங்களுக்கு உரிமம் தரும் முறையைக்கூட எதிர்த்தார். அதை அவர் “லைசென்ஸ் ராஜ்” என்று பகடி செய்தார். அதே சொற்கோவையைத்தான் இப்போது மோடி பயன்படுத்துகிறார். தொழிற்சாலை ஆய்வாளர்கள் தொழிற்சாலைகளுக்குச் சென்று தொழிற்சாலைச் சட்டத்தில் உள்ளபடி உள்கட்டுமானங்கள் இருக்கின்றனவா, தொழிலாளர்களுக்கானப் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கின்றனவா என்று சோதிப்பதை மோடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனை “இன்ஸ்பெக்டர் ராஜ்” என்று டோக்கியோவில் முதலாளிகள் கூடிய அவையில் எள்ளிநகையாடினார். இது தான் சுதேசியமோ? பா.ச.க. கூறிக்கொள்ளும் “தேசியப் பெருமிதமோ”?

“உங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிறோம்; சிவப்பு நாடாவை ஒழிக்கிறோம்” என்று வெளிநாட்டு முதலாளிகள் முன் கெஞ்சுகிறார். சிவப்பு நாடா என்று மோடி கேலி செய்ததன் மூலம், சட்ட முறைப்படி உரிமம் வாங்கும் “இடையூறுகள்” இனி உங்களுக்கு இருக்காது என்று முதலாளிகளிடம் உறுதி கொடுத்துள்ளார் என்று பொருள்படும். 

முதலாளிகளுக்கு முன்கூட்டியே அறிவித்து விட்டுதான் இனி தொழிற்சாலை ஆய்வு அதிகாரிகள் தொழிலகங்களில் நுழைய வேண்டும் என்று புதிய சட்டம் இயற்றப் போகிறார். 

பன்னாட்டு நிறுவனங்களால் தலைமை அமைச்சரானவர், பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவைக் காட்டிக் கொடுப்பதைத் தமது இலட்சியமாக்கிக் கொண்டுவிட்டார். 

‘சிவப்பு நாடா’ முறையை ஒழிக்கப்போகிறேன் என்று முழங்கும் மோடி அரசு, ‘சிவப்பு விளக்குப்’ பகுதியை சட்டப்படியானதாக மாற்ற முயல்கிறது. பா.ச.க. தலைவர்களில் ஒருவரும், அனைத்திந்திய மகளிர் ஆணையத்தின் தலைவருமான லலிதாகுமாரமங்கலம் விபச்சாரத்தை சட்டப்படியானத் தொழிலாக்க வேண்டும் என்று பேசியுள்ளார். பன்னாட்டு நிறுவனங்களின் ‘பண்பாட்டு’ நடவடிக்கைகளில் ஒன்று, விபச்சாரம். பன்னாட்டு நிறுவனங்களை மேலும் மேலும் சுண்டி இழுப்பதற்கான இன்னொரு கவர்ச்சித் திட்டமாக விபச்சாரத்திற்கு சட்ட ஏற்பிசைவு அளிக்கப்  போகிறார்கள் போலும்!

மோடி இந்திய மக்களுக்கு நம்பிக்கையானவர் இல்லை. மோடி பன்னாட்டு நிறுவனங்களின் பணியாளர். மோடி சனநாயகவாதி அல்லர்; எதேச்சாதிகாரி ஆவதே அவரது இலட்சியம். கட்சியிலும் அரசிலும் கூட்டுத் தலைமைக்குக் கொள்ளி வைப்பவர் மோடி. சொந்தக் கட்சித் தலைவர்களில் ஒருவரான கட்கரியின் வீட்டிலேயே உளவுக் கருவி வைத்தவர். 

இரட்டை நாக்கு; ஒற்றை அதிகார நோக்கு; ஒய்யார உடல் மொழி; ஓடித்திரியும் பரபரப்பு; பாரத மாதாவின் கற்பனை மகன்; பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ப்பு மகன் என்பவையே மோடியின் பண்பும் வரலாறும். இந்தக் கனங்களே மோடியை சரித்துவிடும்.

இக்கட்டுரை,தமிழ்த் தேசியப் பேரியக்க கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2014 நவம்பர் 1 -15இதழில்  வெளிவந்தது.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.