ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கர்நாடக நிதிநிலை அறிக்கையில் மேக்கேத்தாட்டு அணை கட்ட நிதி ஒதுக்கியிருப்பதை இந்திய அரசு நீக்கச் செய்ய வேண்டும்! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

கர்நாடக நிதிநிலை அறிக்கையில் மேக்கேத்தாட்டு அணை கட்ட நிதி ஒதுக்கியிருப்பதை இந்திய அரசு நீக்கச் செய்ய வேண்டும்!
---------------------------------------------------------------------------------
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!
காவிரியில் அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கியதற்கு கண்டனம் தெரிவித்து, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று (13.03.2015), கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கான திட்டத் தயாரிப்புப் பணிகளுக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். 

இவ்வாறு அவர் மேக்கேத்தாட்டுப் பகுதியில் அணை கட்டுவதற்கு, நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல் பெறவில்லை. காவிரின் குறுக்கே மேக்கேத்தாட்டு மற்றும் இராசிமணல் பகுதிகளில் கர்நாடக அரசு, புதிய அணைகள் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டுமென்று, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு, விசாரணையில் உள்ளது. காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பும் உச்ச நீதிமன்றப் பரிசீலனையில் உள்ளது. 

இந்நிலையில், கர்நாடக அரசு மேக்கேத்தாட்டுவில் புதிய அணை கட்ட நிதி ஒதுக்கி இருப்பது, முற்றிலும் சட்ட விரோதச் செயலாகும். இந்திய அரசு, உடனடியாக இதில் தலையிட்டு, கர்நாடகத்தின் நிதிநிலை அறிக்கையிலிருந்து மேக்கேத்தாட்டு அணைக்கான நிதி ஒதுக்கும் பகுதியை நீக்கிடச் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்திய அரசமைப்புச் சட்டம், உச்ச நீதிமன்றம் என்பவையெல்லாம் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்கும் தகுதியற்றவை என்ற முடிவுக்கு தமிழக மக்கள் வரவேண்யிருக்கும்.

கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி ஒரு தடவை கூட தண்ணீர் திறந்துவிட்டதில்லை. கர்நாடக அணைகள் நிரம்பிய பின் ஓடி வரும் மிகை நீர்தான் மேட்டூருக்கு வந்து கொண்டிருக்கிறது. அத்தண்ணீரையும் தடுத்து தேக்கிட, புதிய அணைகள் கட்ட முனைகிறது கர்நாடகம். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்த நிலையிலும், கர்நாடக அரசு தனது அணைகட்டும் பணியை நிதிநிலை அறிக்கையிலேயே கூறியிருக்கிறது. 

தமிழ்நாட்டின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பேராபத்து சூழ்ந்துள்ள இந்நிலையில், தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, இச்சிக்கலை சந்திப்பதற்கான ஒருமித்தத் தீர்வைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், அனைத்துக் கட்சிக் குழுவினரை தில்லிக்கு அழைத்துச் சென்று, பிரதமரைச் சந்தித்து, கர்நாடகத்தின் திட்டத்தை தடுத்து நிறுத்த அரசியல் அழுத்தம் கொடுக்கவும் களத்தில் இறங்க வேண்டும்.

மேக்கேத்தாட்டுவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்கு கர்நாடக அரசு, நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்திருக்கும் நிலையில், அடுத்தகட்டப் போராட்டம் பற்றி கலந்தாய்வு செய்ய, காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம், வருகிற 16.03.2015 – திங்கள் அன்று மாலை 4 மணிக்கு, தஞ்சாவூரில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.