விடுதலையானார் தோழர் கவித்துவன்!
ஆந்திராவில் இருபது தமிழர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து “இந்தியாவை நம்பி ஆனாதை ஆனோம், திராவிடத்தை நம்பி ஏமாந்து போனோம்” என்ற வாசகங்களைத் தாங்கிய கண்டனச் சுவரொட்டிகளை தமிழகமெங்கும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் ஒட்டப்பட்டன.
இந்த “குற்றத்திற்காக”, கடந்த 23.04.2015 அன்று திருச்சி கண்டோன்மண்ட் காவல் நிலையத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களை முதல் குற்றம்சாட்டப்பட்டவராகக் கொண்டும், திருச்சி த.தே.பே. மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் அவர்களை இரண்டாம் குற்றம்சாட்டப்பட்டவராகக் கொண்டும், இந்திய தண்டனைச் சட்டம் 153(A) [இனங்களுக்கிடையே பகைமையை ஏற்படுத்துதல்] மற்றும், TNOPD - பிரிவு 3 [தனியார் சொத்துக்கு சேதம் விளைவித்தல்] ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அன்று(23.04.2015) மாலையே, திருச்சியில் தமிழ்த் தேசியப் பேரியக்க திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன், காவல்துறையினரால் பிணை மறுப்புப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி நடுவண் சிறையில், அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், மறு நாளான 24.04.2015 அன்று காலை, சென்னை க.க. நகரில் அமைந்துள்ள தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமையகத்திற்கு, திருச்சி காவல்துறையினர் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையிலான காவலர்கள் ஒரு படையாக வந்து, அலுவலகத்தை சோதனையிட்டனர்.
அன்று (24.04.2015) மாலை, தஞ்சை - தமிழ்த் தேசியப் பேரியக்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த, தலைவர் பெ.மணியரசன் அவர்கள், காவல்துறையினர் தம்மை கைது செய்து கொள்வதாக இருந்தால் கைது செய்யட்டும் என அறிவித்தார். ஆனால், இந்த நிமிடம் வரை தோழர் பெ.மணியரசன் அவர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லை.
இதனைத் தொடர்ந்து, 27.04.2015 அன்று காலை, திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த, தோழர் கவித்துவன் அவர்களின் பிணை மனுவுக்கு, தமிழக அரசுத் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால், மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இம்மனுவின் மேல்முறையீட்டு விசாரணை, கடந்த 30.04.2015 அன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு நடைபெற்ற போது, தோழர் கவித்துவனுக்கு பிணை அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் த. பானுமதி, வழக்கறிஞர்கள் நாராயணன், சு. அருணாச்சலம், பகத்சிங், அகராதி, மணி ஆகியோர், தோழர் கவித்துவனுக்கு நேர்நின்று வாதிட்டனர்.
இதனையடுத்து, தோழர் கவித்துவன் 04.05.2015 அன்று, மாலை 4.30 மணியளவில் திருச்சி நடுவண் சிறையிலிருந்து பிணையில் விடுதலையானார். சிறைவாயிலில், தமிழ்த் தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையிலான தோழர்களும், தமிழின உணர்வாளர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
Leave a Comment