ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதா? சாதி வெறியர்களுக்கு ஆதரவானதா? கோகுல்ராஜைக் கொலை செய்தவர்களைக் கைது செய்ய மறுப்பது ஏன்? - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதா? சாதி வெறியர்களுக்கு ஆதரவானதா? கோகுல்ராஜைக் கொலை செய்தவர்களைக் கைது செய்ய மறுப்பது ஏன்? தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்ற பொறியியல் மாணவரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சுவாதி என்ற பெண்ணும், காதலர்களாகப் பழகி வந்திருக்கிறார்கள்.

26.06.2015 அன்று, கோகுல்ராஜூம் சுவாதியும் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலில் பேசிக் கொண்டிருந்த போது, பெண்ணின் வகுப்பைச் சேர்ந்த சாதி வெறியர்கள் கோகுல்ராஜைக் கடத்திக் கொண்டுபோய், அவரது தலையைத் துண்டித்து தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டதுபோல், போட்டுவிட்டுத் தப்பியுள்ளார்கள்.

கோகுல்ராஜ் சாதி வெறியர்களால் கடத்தப்பட்டார் என்பதற்கு, கண்ணுற்ற சாட்சியாக சுவாதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அர்த்தநாரீசுவரர் கோவில் கண்காணிப்பு ஒளிப்படக் கருவியில், கடத்த நிகழ்வு பதிவாகியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், கொலைகாரர்களைத் தளைப்படுத்த வலியுறுத்திப் போராடி வருகின்றன.

ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் கொலையா தற்கொலையா என்று இன்றுவரை முடிவு செய்யாமல், நாள் கடத்துவது அவர்கள் சாதி வெறிக் கொலைகாரர்களைப் பாதுகாக்க மறைமுகமாக முயலுகிறார்களோ என்ற ஐயத்தை வலுவாக ஏற்படுத்துகிறது.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மற்றும் பலவீனமான சமூகங்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலையைத்தான் கோகுல்ராஜ் கொலையில் ஆட்சியாளர்கள் கடைபிடிக்கும் ஒருதலைச்சார்பான போக்கு உறுதிப்படுத்தும். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் சாதி வெறியர்கள் தங்குதடையின்றி அட்டூழியங்கள் செய்ய அரசின் இப்போக்கு தூண்டுகோலாக அமையும்.

கோகுல்ராஜை கொலை செய்தவர்கள் மீது கொலை வழக்குப் போடாமல் சாக்குபோக்கு சொல்லிவரும் தமிழக அரசின் ஒடுக்கப்பட்ட மக்கள் விரோதப் போக்கையும், சாதி வெறியர்களுக்கு மறைமுகமாகக் கைகொடுக்கும் செயலையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக முதலமைச்சர் அவர்கள், மிகமுக்கியமான இந்த சமூகச்சிக்கலில் உடனடியாகத் தலையிட்டு, காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து, கோகுல்ராஜை கொலை செய்த சாதி வெறிக் கும்பலைச் சேர்ந்த அனைவரையும் உடனடியாகத் தளைப்படுத்த ஆணையிடுமாறும், மேற்படி இளம் பெண் சுவாதிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது தோழர் பெ. மணியரசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095 

முகநூல் : www.fb.com/tamizhdesiyam 
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.