மகளிர் ஆயம் நடத்திய மதுக்கடை மறியல் போரில் குழந்தைகள் - பெண்கள் உள்ளிட்டு 80 பேர் கைது!
தமிழ்நாடு அரசே! மதுக்கடைகளை மூடு - மக்களை வாழ விடு! தஞ்சையில் மகளிர் ஆயம் நடத்திய மதுக்கடை மறியல் போரில் குழந்தைகள் - பெண்கள் உள்ளிட்டு 80 பேர் கைது!
“தமிழக அரசே! மதுக்கடைகளை மூடு - மக்களை வாழ விடு” என்ற முழக்கத்தை முன்வைத்து, நேற்று (2015 - ஆகத்து - 23) , தஞ்சையில் மகளிர் ஆயம் சார்பில் நடைபெற்ற மதுக்கடை மறியல் போராட்டத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 80 மகளிர் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை புதிய பேருந்து நிலையம் எதிரிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடை முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, மகளிர் ஆயம் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி தலைமையேற்றார்.
"மக்களை அழிக்கும் மதுக்கடைகளை உடனே மூடுக!", "மதுவால் வரும் வருமானம் அரசுக்கு அவமானம்" என்பன உள்ளிட்ட ஆவேச முழக்கங்களை எழுப்பிக் கொண்டு மதுக்கடைடய நோக்கி முன்னேறிச் சென்ற மகளிர் தோழர்களைக் காவல் துறையினர் தடுத்தனர்.
அங்கு காவல்துறைக்கும் தோழர்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனது. சாலையில் அமர்ந்த மகளிர் தோழர்களை காவல்துறையினர் பலவந்தமாக இழுத்து வாகனத்தில் ஏற்றினர்.
சற்றொப்ப 80 தோழர்கள் தற்போது கைது செய்யப்பட்டு ஓர் மண்டபத்தில் அடைத்து வைத்து, மாலையில் விடுதலை செய்தனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து அம்மதுக்கடை மூடப்பட்டது.
டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும் வரை போராட்டத்தை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து நடத்துவோம்! மதுக்கடைகளை இழுத்துப் பூட்டுவோம்!
Leave a Comment