ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

முப்பரிமாண திரைக்கலைஞர் மனோரமா கலையுலகின் திசைகாட்டி தமிழ்க்கலை இலக்கியப்பேரவை அகவணக்கம்

முப்பரிமாண திரைக்கலைஞர் மனோரமா கலையுலகின் திசைகாட்டி
தமிழ்க்கலை இலக்கியப்பேரவை அகவணக்கம்
தமிழ்த் திரையுலகில் “ஆச்சி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட திரைக்கலைஞர் மனோரமா (78) 11.10.2015 சனிக்கிழமை இரவு 11 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி, சற்று மனத்தை நடுநடுங்க செய்தது. திரையுலகத்திற்கு மட்டுமல்ல, இலக்கியர்களுக்கும், திரைத்துறை ஆர்வலர்களுக்கும் கலைஞர் மனோரமாவின் இழப்பு பேரிழப்பாகும்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, புதிய உத்தியில் கதைப்பாத்திரங் களுக்கு உடல்மொழி வழி உயிர் ஊட்டி, கதாநாயகி, நகைச்சுவை, குணச்சித்திரம் என முப்பரிமணங்களில் தனக்கான ஆளுமையை சிறப்பாக வெளிக்கொணர்ந்தவர். மேடை நாடகத்தில் தொடங்கிய இவரது கலைப் பயணம் அரை நூற்றாண்டுக்கும் மேலான ஓர் நீண்ட கதையை இளைய தலைமுறையினருக்கு பாடமாய்ச் சொல்லும்.
வைரம் நாடக சபாவில் நாடக கலைஞராக வாழ்வைத் தொடங்கி, 1958 ஆம் ஆண்டு வெளிவந்த கவிஞர் கண்ணதாசன் உருவாக்கிய ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக சினிமா திரையில் முதன் முதலாக மனோரமா அறிமுகம் ஆனார்.
கவிஞர் கண்ணதாசன் தான் மனோரமாவை நாடகத்திலிருந்து திரையுலகத்திற்கு அழைத்து வந்தவர். ”கதாநாயகியாக நடித்தால் ஓர் குறிப்பிட்ட காலம் மட்டுமே திரையுலகில் நிற்க முடியும். நகைச்சுவை குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்தால் மூச்சு உள்ள வரை ஓர் ஒப்பற்ற கலைஞராக உயர்வாய்” என்று கண்ணதாசன் மனோரமாவுக்கு சொன்னது போல் நகைச்சுவை, குணச்சித்திரம் என திரையுலகில் இறுதிவரை நின்றவர் மனோரமா.
1000 – த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ‘உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில்’ தன்னுடைய பெயரை பதிவு செய்து, மாபெரும் சாதனைப் படைத்ததோடு மட்டுமல்லாது, தமிழ் திரையுலகம் மூலம் முதல்வர்கள் ஆன அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், செயலலிதா என ஐவருடன் நடித்த மாபெரும் கலைஞர் மனோரமா மட்டுமே. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் எனப் பல மொழிகளில் தனக்கே உரித்தான நடிப்பில் முத்திரைப் பதித்துள்ளார்.
ஆச்சி மனோரமா அவர்கள் திரைக்கலைஞர்கள் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று நாடக, திரைக்கலைஞர்களுடன் நின்றவர், அதோடு மட்டுமன்று, தமிழர் உரிமைகளுக்காக, திரையுலகம் அவ்வபோது நடத்தும் போராட்டங்களிலும் பங்கேற்று தனது குரலை வெளிப்படுத்தியவர். தன்னல மில்லாமலும், அவ்வளவு எளிதாக யார்மீதும் கோபத்தை வெளிக்காட்டாமலும், முன்னோரை மதிக்கும் பாங்கிலும் அனைவர்மீதும் அன்பு செலுத்தும் பண்பிலும் மனித நேயமிக்க பெருந்தகையாக வாழ்ந்தவர் ஆச்சி மனோரமா.
நாடகம், திரைத்திரை என கலைஇலக்கிய மேன்மைக்கு இறுதிவரை இணைந்திருந்து, வருகின்ற தலைமுறை கலைஞர்கள் பின்பற்றும் ஓர் திசைகாட்டியாக தனது வாழ்வியலை விட்டுச்சென்றிருக்கும் மனோரமாவின் மறைவிற்கு தமிழ்க்கலை இலக்கியப் பேரவை அகவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகத்தினருக்கும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.