ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கர்நாடகத்தில் ஒடுக்கப்பட்ட இளம் எழுத்தாளரை இந்துத்துவா வெறியர்கள் தாக்கியதற்கு கண்டனம்! - தோழர் பெ. மணியரசன் அறிக்கை


கர்நாடகத்தில் ஒடுக்கப்பட்ட இளம் எழுத்தாளரை இந்துத்துவா வெறியர்கள் தாக்கியதற்கு கண்டனம்!

தமிழ்நாட்டில் சாதி - மதவெறியைத் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை அறிக்கை வெளியிட வேண்டும்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

கர்நாடகம் காவன்கரே பகுதியில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த உச்சங்கி பிரசாத் என்கின்ற 23 அகவையுள்ள இதழியல் படிக்கும் மாணவரை, இந்துத்துவா வெறி கும்பல் ஏமாற்றி அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளது.

இந்த இளைஞர் ஒரு எழுத்தாளராகவும் உள்ளார். அவர் கடந்த ஆண்டு வெளியிட்ட நூலில் இந்து மதத்திலுள்ள தீண்டாமைக் கொடுமை, சாதி ஒடுக்குமுறை ஆகியவற்றைப் பற்றி எழுதி, இவற்றுக்கெல்லாம் மூலகாரணம் இந்துமதக் கொள்கைகள் என்று விமர்சித்திருந்தாராம். உச்சங்கிப் பிரசாத்தின் தாயார் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொய் சொல்லி, முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் அவரை மாணவர் விடுதியிலிருந்து அழைத்துச் சென்று, அங்கு நடுவழியில் கும்பலாக சேர்ந்து தாக்கியுள்ளனர். இனி எழுதுவதற்கு விரல்கள் இருக்கக் கூடாதென விரல்களைத் துண்டிக்கச் சென்றதாகவும், அவரது முகத்தில் குங்குமத்தை பூசி, அடித்துத் தாக்கப்பட்டதாகவும் அவர் மருத்துவமனையில் கூறினார்.

பா.ச.க. நடுவண் அரசில் ஆட்சிக்கு வந்தபின், இந்துத்வா வெறியர்கள் இசுலாமியர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை தாக்குவது அதிகமாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் அதே கர்நாடகத்தில், இந்து மதத்தை விமர்சித்தார் என்பதற்காக எம்.எம். கல்புர்கி என்ற முன்னாள் துணை வேந்தரை, இந்துத்துவா கும்பல் கொலை செய்தது. அரியானாவில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த குடும்பத்தினரை வீட்டோடு வைத்துக் கொளுத்தி, 2 குழந்தைகளைக் கொன்றுள்ளனர். அக்குழந்தைகளின் தாய் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளார். உ.பி.யில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக வதந்தி கிளப்பி, இசுலாமியர் ஒருவரை அடித்துக் கொன்றுள்ளனர்.

ஒடுக்கப்பட்ட மக்கள், இந்துத்துவாவை விமர்சிக்கும் எழுத்தாளர்கள், இசுலாமிய மக்கள் ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ள இந்துத்துவா கும்பலையும் இந்துத்துவா வெறி கொள்கையாளர்களையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதங்களையோ மற்றும் தத்துவங்களையோ விமர்சிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை. கருத்தை கருத்தால் எதிர்கொள்வதை விடுத்து, கொலைவெறிச் செயலில் ஈடுபடுவதென்பது ஆரியப் பார்ப்பனிய வழிப்பட்ட தொடர் செயல்களாகவே உள்ளன. இந்தக் கொலைவெறிச் செயல்களை பகிரங்கமாக இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி கண்டிக்க மறுக்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்த கொலைவெறிச் செயல்களை மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறது. அதன் தலைவர் மோகன் பகவத், தமது விஜயதசமி உரையில் இக்கொலைச் செயல்களும் கொலைவெறித் தாக்குதல்களும் பொருட்படுத்தத் தேவையில்லாத சின்னஞ்சிறிய செயல்கள் என்று கூறியிருக்கிறார்.

இந்துத்துவா கொலைவெறிக் கும்பலின் செயல்கள் தமிழ்நாட்டிலும் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் சாதி அமைப்புகளின் வழியாகத்தான் அவை செயல்படுகின்றன. திருச்செங்கோட்டில் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு உயிர் அச்சத்தை ஏற்படுத்தி, ஊரே விட்டே காலி செய்த வன்செயலில், சாதியும் இந்துத்துவாவும் இணைந்தே ஈடுபட்டன. பா.ச.க.வின் அமீத்ஷா தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் நிகழ்வுகளில் பங்குகொண்டு அவற்றை இந்துத்துவா வளையத்துக்குள் கொண்டுவர திட்டமிட்டு செயல்படுகிறார்.

எனவே, இசுலாமியருக்கு எதிராக மட்டும்தான் இவர்கள் செயல்படுவார்கள் என்றில்லை. சாதியத்திற்கு எதிராக – ஆரியப் பார்ப்பனியத்திற்கு எதிராக செயல்படும் எல்லோரையும் தாக்கும் திட்டத்தில் இவர்கள் இருக்கிறார்கள். எனவே, தமிழ்நாட்டில் இந்துத்துவா மற்றும் சாதிவெறிச் செயல்களுக்கு வாய்ப்பளிக்காமல் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய தேவையுள்ளது.

பிரபலமான இந்துத்துவா அமைப்புகளின் பெயர்களில் இந்தக் கொலைவெறிக் கும்பல் பொதுவாக செயல்படுவதில்லை. புதிது புதிதாக தற்காலிகப் பெயர்களை சூட்டிக் கொண்டு, இந்துத்துவா அமைப்பினர் கொலைவெறித் தாக்குதல்களில் இறங்குகின்றனர். ஆனால் அவர்களைப் பாதுகாக்க, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க அமைப்புகள் வெவ்வேறு உத்திகளுடன் முன்வருகின்றன.

எனவே, தமிழ்நாட்டில் மதவெறி மற்றும் சாதிவெறியைத் தூண்டி யார் பேசினாலும் எழுதினாலும் அவர்கள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். இது குறித்த ஒரு விரிவான எச்சரிக்கை அறிக்கையை தமிழ்நாடு அரசு முதலில் வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் சாதி – மத வெறிகளுக்கு இடம்கொடுக்காமல், அனைத்துப் பிரிவுத் தமிழ் மக்களும், தமிழர் அறம் காத்து, ஒருவருக்கொருவர் இணக்கத்துடன் செயல்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.