எழுத்தாளர்களின் “ சென்னைப் பிரகடனம்”- ஒருபார்வை இந்துத்துவாவின் முதுகெலும்பை முறிக்க என்ன செய்ய வேண்டும்? - பெ. மணியரசன்
சென்னை இராசா
அண்ணாமலைபுரம் இராசரத்தினம் முத்தமிழ்மன்ற வளாகத்தில்
29.10.2015 அன்று படைப்பாளிகளின் கூட்டமைப்பான
சரிநகர் சார்பில் இந்துத்துவா
கொலைவெறிக்கு எதிரான சென்னைப்
பிரகடனம் வெளியிடும் நிகழ்ச்சி
நடந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்
மற்றும் கலைஞர்கள் சங்கத்தலைவர்
தோழர் ச. தமிழ்ச்செல்வன்
தலைமை தாங்கினார்.
எழுத்தாளர்கள் இந்திராபார்த்தசாரதி,
திலகவதி, ஞானி பா. செயப்பிரகாசம்,
மனுஷ்யபுத்திரன், அ. மார்க்சு,
வீ.
அரசு,
து.இரவிக்குமார்,
அருணன், வழக்கறிஞர் அருள்மொழி, ஓவியா,
ஆழி செந்தில்நாதன் என
ஏராளமான கலை இலக்கியப் படைப்பாளிகளும்,
மனித உரிமை ஆர்வலர்களும்
இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நானும் பார்வையாளராகக் கலந்துகொண்டேன்.
வரவேற்கத்தக்க பாராட்டத்தக்க நிகழ்வு!
“இந்தியாவின் பன்முகத்
தன்மை மற்றும் கருத்துரிமைக்கான தமிழ் எழுத்தாளர்களின் சென்னைப்பிரகடனம்”
என்ற பிரகடனத்தை தோழர்
து.
இரவிக்குமார் படித்து வெளியிட்டார்.
அனைவரும் கையொலி எழுப்பி
ஆதரித்தனர்; ஆரவாரித்தனர். அப்பிரகடனத்தை
ஏந்தி எழுந்து நின்று
முழங்கினர்.
“வரலாற்றின் இடத்தில்
புராணங்களையும், பகுத்தறிவின் இடத்தில்
மூடநம்பிக்கை களையும், எழுதுகோலுக்கு
எதிராக கடப்பாறையையும், துப்பாக்கியையும் வைக்கிற சங்பரிவாரங்களின் அனைத்து
முயற்சிகளையும் நிராகரிக்க வேண்டும்
என்கிற வேண்டுகோளை தமிழ்ச்சமூகத்தின் முன் வைக்கிறோம்” என்ற
குறிப்பிடத் தகுந்த பத்தியும்
பிரகடனத்தின் ஒரு பகுதி.
சகிப்பின்மை என்று சொல்வது போதுமா?
சகிப்பின்மைக்கு எதிரான
எதிர்வினை என்பதுபோல் நம்
முயற்சிகளைக் கூறுவது நெருடலாக
இருந்தது. இந்துத்துவா குற்றக் கும்பல்
நடத்திய கொலை வெறியாட்டங்கள்,
தாக்குதல்கள், இக்குற்றங்களைத் தடுக்கவோ,
கண்டிக்கவோ முன்வராத பா.ச.க. ஆட்சியாளர்களின் வன்மம் இவற்றையெல்லாம் “சகிப்பின்மை” (Intolerance) என்ற
மென்மையான சொல்லுக்குள் அடக்கிவிட
முடியாது. “இந்துத்துவா
வன்முறைவெறி என்றுதான் இச்செயல்களுக்குப் பெயர் சூட்ட வேண்டும்.
இவர்களின் செயல்கள் சகிப்புத்தன்மையற்ற மனநிலையோடு
நிற்கவில்லை. ஆக்கிரமிப்புத் தன்மை
கொண்டவை. நமது எதிர்வினையானது தருக்கத்தில்
– தற்காப்பு நிலையில் இருக்கக்
கூடாது. தாக்குதல் தன்மை கொண்டிருக்கவேண்டும்.
தாக்குதல்கள் என்று குறிப்பிடுவது
சொல் கட்டமைப்பு அளவில்தான்;
உடல்வகைத் தாக்குதல் அன்று.
நமக்கான சொற்கட்டமைப்பைக் கூட
எதிரிகள் முகாம்தான் உருவாக்கித்
தருகிறதோ என்று ஐயுற
வேண்டியுள்ளது. தமிழ்நாடு எழுத்தாளார்கள்
இதுபற்றியும் சிந்திக்க வேண்டும்.
நிகழ்ச்சி நிரலை அவர்கள் அமைக்கிறார்கள்
எழுத்தாளர்கள் மட்டுமின்றி
மதவெறி எதிர்ப்பாளர்கள் அனைவரும்
சிந்திக்கவேண்டிய ஒரு பொருள்
இருக்கிறது. சென்னைப் பிரகடனக் கூட்டத்தில்
பேசிய தீக்கதிர் ஆசிரியர்
தோழர் குமரேசன் இதுபற்றிய
முதல் நிலைக் கருத்தைக்
கூறினார்.
“இந்துத்துவா வெறியர்களின்
செயல்களுக்கு எதிர்வினையாற்றுவர்களாக நாம் இருக்கிறோம்.
நமது செயல்பாடுகளுக்கு அவர்கள்
எதிர்வினை ஆற்றும் அளவுக்கு
நம் செயல்பாடுகள் இல்லை”
என்பதாகக் கூறினார். அவர்
கூற்று சரிதான்!
நிகழ்ச்சி நிரலை
முன்வைத்து – அதன்மீது ஆதரவு
– எதிர்ப்புக் கருத்துகள் வரும்படிச்
செய்கிறார்கள் இந்துத்துவா வாதிகள்!
1990 – இல் அன்றையத் தலைமை
அமைச்சர் வி.பி.சிங் நடுவண் அரசு அலுவலகங்கள்
மற்றும் நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல்குழு
பரிந்துரையை செயல்படுத்தியபோது அதுபற்றியே
அனைத்திந்திய அளவில் விவாதம்
எழுந்தது.
சமூக நீதிக்கு
ஆதரவான பெரும்புயல் கிளம்பியது.
அதைத் தடுத்து தனது
நிகழ்ச்சி நிரலை முன்வைக்க
அத்வானி தலைமையில் பாபர்
மசூதியை இடித்தது இந்துத்துவா
வெறிக்கும்பல். அதன் பலனையும்
இந்துத்துவாக் கும்பல் அடைந்தது.
இந்திய ஆட்சியைப் பிடித்தது.
இப்போது தனிப்பெரும்பான்மையுடன் இந்திய
ஆட்சியை நடத்துகின்றது.
சமற்கிருதப் பரப்புரை
– மாட்டிறைச்சி
தடை - முற்போக்கு எழுத்தாளர்கள்
கொலை என்று விவாதப்
பொருளை அவ்வபோது ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள்
உருவாக்கி வருகின்றன.
ஆரியப் பார்ப்பனர்களின் நயவஞ்சக அறிவுக் கூர்மையை
முறியடிக்கும் அளவிற்கு அதனை
எதிர்க்கும் முகாமில் அறிவுக்
கூர்மை இருக்கிறதா, அப்படி
இருப்பதும் களத்திற்கு வருகிறதா
– களத்திற்கு
வந்தாலும் மதச்சார்பற்ற ஆற்றல்கள்
அதை ஏற்றுக் கொள்கின்றனவா
என்ற வினாக்கள் நம்
தரப்பில் இருக்கின்றன.
இந்துத்துவா என்றால் என்ன?
முதலில் இந்துத்துவா
என்றால் என்ன என்ற
வரையறுப்பில் அறிவுக் கூர்மை
வேண்டும். “இந்துத்துவா” என்பது
வெறும் இந்து மதவாதம்
அன்று. அதில் ஆரிய இன
ஆதிக்கம்-வர்ணாசிரமப் பார்ப்பனிய
ஆதிக்கம் – இந்துமத வெறி
ஆகிய மூன்றும் அடங்கியுள்ளன. இவை மூன்றும் சேர்ந்ததுதான்
ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும்
இந்தியத் தேசியவாதம் (இந்துராஷ்ட்ரா)
இந்த உண்மை
தெரிந்தாலும் இந்துத்துவாவில் உள்ள
மூன்று கூறுகளையும் வெளிப்படுத்தும் நிலையில் இன்றைய இந்திய
இடதுசாரிகள் இல்லை என்பது
ஒரு துயரம்!
அடுத்து இந்தியாவின்
பன்மை பற்றிக் குறிப்பிடும்
போதெல்லாம் மதப்பன்மை – மொழிப்பன்மை
– பண்பாட்டுப்
பன்மை கூறப்படுகிறது. ஆனால்
இனப்பன்மை கூறப்படுவதில்லை. இந்தியாவில்
தமிழர் உள்ளிட்ட பல
தேசிய இனங்கள் இருக்கின்றன.
ஆனால் “இந்தியன்” என்ற
பெயரில் ஒரு தேசிய இனம்
இல்லை. அதைப்போல் திராவிடன் என்ற
பெயரிலும் ஒரு இனமில்லை. இந்தியா
ஒரு தேசமல்ல. இந்தியாவில்
பல தேசங்கள் இருக்கின்றன. அமெரிக்க
ஐக்கிய நாடுகள் (USA) என்று
ஒருநாட்டைக் குறிப்பிடுகின்றோம். இந்தியாவை
இந்திய ஒன்றியம் என்றுதான்
இந்திய அரசமைப்புச் சட்டம்
கூறுகிறது. ஆனால் நடைமுறையில் “இந்தியத்
தேசம்” என்று குறிப்பிடுவது இந்தியப்
பெருமுதலாளியப் பார்ப்பனிய இந்துத்துவா
ஆற்றல்களுக்கு விருப்பமானதாக இருக்கலாம்.
அவ்வர்க்கங்களின் அரசியல் அமைப்புகளான
காங்கிரசு, பா.ச.க கட்சிகளுக்கு
உவப்பாக இருக்கும். ஆனால்
மார்க்சிய – லெனினிய அடிப்படையில்
தேச - தேசிய இன
வரையறுப்பை அறிந்தவர்கள் இந்தியாவை
ஒரு தேசம் என்று
கூறுவது இந்துத்துவா அமைப்புகளுக்கே
வலுச்சேர்க்கும். இந்தியா ஒரு
நாடென்று (Country) குறிப்பிட்டால்கூட பரவாயில்லை.
நாடு என்பது ஓர்
ஆட்சிஎல்லையை குறிப்பிடும் சொல்.
ஒரு தாயகம்- அதில்
பொதுமொழி – அவற்றைக் கொண்ட
தேசிய இனம் முதலியவற்றைக்
கொண்டதுதான் ஒரு தேசம். எனவே
இந்தியாவை தேசம் (Nation) என்று
குறிப்பிடுவது இதில் உள்ள
தேசப்பன்மையை மறுப்பதாகும்.
இந்து ராஷ்ட்ரா
– பாரத் ராஷ்ட்ரா என்று
இந்துத்துவா அமைப்புகள் ஆரியப்
பார்ப்பனிய அடிப்படையிலான ஒற்றை
தேசத்தை முன் வைக்க
வசதியாக நாமும் இந்தியாவைத்
தேசம் என்று அழைக்கக்
கூடாது.
ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின்
கற்பனையான பாரதீய தேசத்தை
முறியடிக்காமல் – இந்துத்துவாவை முறியடிக்க
முடியாது. அதற்குத் தேசப் பன்மையை
நாம் கையிலெடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள மதச்சார்பற்ற
ஆற்றல்கள் தமிழ்த் தேசம்
என்ற அடித்தளத்தில் நின்றுகொண்டு
ஆரியப் பார்ப்பனிய தேசியக்
கட்டமைப்பான இந்திய தேசம்
– இந்தியத் தேசியம் என்பவற்றை
மறுக்கும் போதே இந்துத்துவாவின் முதுகெலும்பு முறியும்.
சாதி
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை
சாதி வழியாகத்தான் இந்துத்துவா
வரமுயலுகிறது. பிற்படுத்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட
சாதிகளை ஆர். எஸ்.எஸ்.பரிவாரங்கள்
வளைத்திட முயலுகின்றன. சாதி
மோதல்கள் தமிழ்நாட்டில் தீவிரப்பட்டுள்ளன.
இந்து – முஸ்லிம் மோதலை
விட சாதிமோதல்களே தமிழ்நாட்டில்
அதிகம். சாதிவாதத்திற்கெதிராக மதச்சார்பற்ற
ஆற்றல்கள் கருத்துப் போராட்டங்களும்,
களப்போராட்டங்களும் நடத்தவேண்டும். இக்கருத்துகளையும் தமிழ்நாட்டு மதச்சார்பற்ற ஆற்றல்கள்
பரிசீலிக்க வேண்டும்.
Leave a Comment