குளங்கள் - கால்வாய்கள் தூர்வாரப்படாததால் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீர்..!
குளங்கள் - கால்வாய்கள் தூர்வாரப்படாததால் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீர்..!
தூத்துக்குடி மாவட்ட குறைதீர் கூட்டத்தில் தமிழக உழவர் முன்னணி புகார் தெரிவிப்பு!
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் பெய்து வரும் நிலையில், தாமிரபரணி ஆற்றுக் கரைகளில் உள்ள குளங்கள் - கால்வாய்கள் தூர்வாரப்படாததால், மழைநீர் வீணாக கடலுக்கு செல்வது குறித்தும், அதை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக உழவர் முன்னணி சார்பில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், 20.11.2015 அன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திரு. இரவிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. முருகையா ஆகியோர் கூட்டத்துக்கு வரவில்லை. கூட்டத்தை திருச்செந்தூர் வருவாய் அதிகாரி திரு. தியாகராஜன் நடத்தினார். வேளாண்மை துறை இணை இயக்குநர், துணை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய, தமிழக உழவர் முன்னணி தமிழகத் துணைத் தலைவரும், குரும்பூர் உழவருமான தோழர் மு. தமிழ்மணி, “தாமிரபரணி பாசனத்தில் உள்ள 53 குளங்களும், பாசன கால்வாய்களும் தூர்வாரப்படாததால் தண்ணீரை சேமித்து வைக்க முடியாமல் மழை நீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக கடம்பாகுளம் தூர் வாரப்படாததால், இருபோக நிலத்தில் ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்ய முடிகிறது. அதுபோல, கடம்பா குளத்தின் வடிநீர் கால்வாய் தூர்வாரி சீரமைக்கப்படாததால் அதன் கீழுள்ள 12 குளங்கள் நிரம்பவில்லை. திருவைகுண்டம் அணையிலிருந்து அள்ளப்பட்டு வரும் மணல் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, இந்தக் குளங்களை நாமே தூர்வாரி விடலாம்” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தாமிரபரணி வடிநில செயற்பொறியாளர் திரு. சுப்பிரமணியன், நடுவண் அரசு திட்டத்தின் மூலம் 53 குளங்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பொத்தாம் பொதுவில் பதில் அளித்தார்.
தொடர்ந்து நடைபெற்றக் கூட்டத்தில், குறைதீர் கூட்டத்துக்கு வந்து புகார் செய்யும் விவசாயிகளை சில அதிகாரிகள் மிரட்டுவது குறித்தும், கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவது குறித்தும் உழவர்கள் புகார்கள் தெரிவித்தனர். அதிகாரிகள் அவற்றை விசாரிப்பதாக பதில் அளித்தனர்.
Leave a Comment