ஏழு தமிழர் விடுதலை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும்! - பெ. மணியரசன் வேண்டுகோள்!
ஏழு தமிழர் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!
இராசீவ் கொலை வழக்கில் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்கள், தாங்கள் 20 ஆண்டுகளைக் கடந்தும் நீண்ட காலம் சிறையில் வாடுவதைக் குறிப்பிட்டு, தங்களை விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை மனு செய்திருந்தனர்.
இதனடிப்படையில், தமிழ்நாடு அரசு இந்த ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வது என முடிவு செய்து நடுவண் அரசின் உள்துறை அமைச்சகத்திற்குக் கருத்துக் கேட்டு இன்று, கடிதம் அனுப்பியிருக்கிறது. அண்மையில் வெளியான உச்ச நீதிமன்ற அரசியல் அமர்ப்பின் தீர்ப்பிற்கு ஏற்ப, இந்த கடிதத்தைத் தமிழ்நாடு அரசு அனுப்பியிருக்கிறது.
இது வரவேற்கத்தக்கது. ஏழு தமிழர் விடுதலை நோக்கிய முயற்சியில், முக்கியமான ஒருபடி முன்னேற்றமாகும்.
தமிழ்நாடு அரசின் முடிவை ஏற்று, இந்திய அரசு இந்த ஏழு தமிழர்களின் விடுதலைக்கு ஒத்துழைப்பதற்கு முடிவு செய்து உடனே அறிவிக்க வேண்டும் என இந்திய அரசை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Leave a Comment