ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கண்ணையா குமாருக்கு பல வாழ்த்துகளும் ஒரு வினாவும்! - தோழர் பெ.மணியரசன் சிறப்புக் கட்டுரை!கண்ணையா குமாருக்கு 
பல வாழ்த்துகளும் ஒரு வினாவும்!
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ.மணியரசன் சிறப்புக் கட்டுரை!


சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கண்ணையா குமார் இடைக்காலப் பிணையில்வெளியில் வந்ததும் 3.3.2016 இரவு சநேப வளாகத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் எழுச்சிமிகு வரவேற்புக்கொடுத்துள்ளனர். நாமும் அவர்க்கு நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அப்போது கண்ணையகுமார் நெஞ்சுரத்தோடு தமது சமூக - அரசியல் நிலைபாட்டை விளக்கியுள்ளார். இந்தியத் தலைமை அமைச்சரையும் நையாண்டியுடன், அதேவேளை கறாராக விமர்சித்துள்ளார். அவை அனைத்தும்பாராட்டிற்குரியவை.

5.3.2016 அன்று சி.என்.என் – ஐ.பி.என் தொலைக்காட்சி நேர்காணலிலும் நல்ல கருத்துகளைப் பேசினார்.

ஆனால் இந்தியத் தேசியத்தை வலியுறுத்துவதில் பா.ச.க.வுடன் போட்டி போடுவது போல் அவரது பேச்சுகள்உள்ளன.

காசுமீர் விடுதலை கோரி கண்ணையா முழக்கமிட்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டுகளில் ஒன்று.அதற்குத் தமது 3.3.2016 உரையில் விடையிறுத்த கண்ணையா “நாங்கள் விடுதலை கேட்கிறோம். இந்தியாவுக்குவெளியே போக அல்ல, இந்தியாவுக் குள்ளேயே! பட்டினி, வறுமை, சுரண்டல், துயரங்கள் ஆகியவற் றிலிருந்துவிடுதலை கேட்கிறோம்.

தலித்துகள், பழங்குடிகள், சிறுபான்மையினர் பெண்கள் அடங்கியோர் உரிமைக்கான விடுதலை கேட்கிறோம்.இவ்விடுதலை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வழியாக, நாடாளுமன்றத்தின் வழியாக, நீதித்துறையின்வழியாக உறுதி செய்யவேண்டும் என்கிறோம். இது பாபா சாகேப் (அம்பேத்கர்) அவர்களின் கனவு, தோழர்ரோகித் (வெமுலா) கனவு!

நான் சிறையில் இருந்தபோது எனக்கு இரண்டு கிண்ணங்கள் கொடுக்கப்பட்டன. ஒன்று நீலநிறம். இன்னொன்றுசிவப்பு. அவற்றைப் பார்த்தேன். எனக்கு விதியின் மீதோ கடவுள் மீதோ நம்பிக்கை இல்லை. ஒரே தட்டில்நீலக்கிண்ணமும், சிவப்புக் கிண்ணமும் வந்தது என்றால் நாட்டில் ஏதோ நல்லது நடக்கப் போகிறது என்றுபொருள்! நீலக்கிண்ணம் அம்பேத்கர் இயக்கம், சிவப்புக்கிண்ணம் இடதுசாரி இயக்கம். இரண்டு இயக்கங்களும்இணைந்தால் நாம் அரசாங்கம் அமைக்க முடியும். இது எல்லார்க்கும் நீதியை நிலை நாட்டும்!”

கண்ணையா குமார் இந்தியாவில் ஒடுக்கப்பட்டுள்ள தலித்துகள், பழங்குடிகள், சிறுபான்மையினர், பெண்கள்ஆகியோரைக்  கவனத்தில் கொண்டு அவர்களின் விடுதலை கோரியது நூற்றுக்கு நூறு சரி! ஆனால் இந்தியத்தேசிய ஆதிக்க வாதத்தில் ஒடுக்குமுறையின் கீழ் ஒடுக்குண்டு கிடக்கும் பல்வேறு தேசிய இனங்களின் உரிமை பற்றியோ, இந்தி மற்றும் சமற்கிருதத்தால் ஒடுக்கப்பட்டு உழலும் பல்வேறு மொழிகளின் உரிமை பற்றியோ அவர் கருத்து கூறவில்லை. தொலைக்காட்சி நேர்காணலிலும் இந்தியாவின் பன்மைத் தன்மையைப் பற்றி பொதுவாகக் குறிப்பிட்டார். இனம், மொழி சார்ந்து எதுவும் குறிப்பிடவில்லை. ஏன்?

தேசிய இனங்களின் சமத்துவமும் இறையாண்மையும் இல்லாமல் இந்தியத் தேசிய ஆதிக்கவாதமும்இந்துத்துவா இனவாதமும் – ஆரிய – பார்ப்பனிய சமூக ஆதிக்கமும் நிலவுவதால்தானே, இந்தியாவில் பலதேசிய இனங்கள் விடுதலையை கோருகின்றன. விடுதலை தேவைப்படாத அளவிற்குத் தேசிய இனங்களின்சமத்துவமும் இறையாண்மையும் நிலைநாட்டப்படும் என்று கண்ணையாகுமார் கூறவேண்டுமல்லவா?

அவ்வாறு அவர் கூறாததற்குக் காரணம்  அவர் இந்தியத்தேசிய இடதுசாரி! இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்தவர்! பா.ச.க.வும், காங்கிரசும் இந்தியத் தேசிய ஆதிக்கவாதத்தின் வலதுசாரி பிரிவுகள்; சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் இந்திய தேசிய ஆதிக்கவாதத்தின் இடதுசாரிபிரிவுகள்!

கண்ணையா குமார் அடிக்கடி குறிப்பிடும் இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு தேசம் என்றுகூறவில்லை. அரசுகளின் ஒன்றியம் என்றுதான் கூறுகிறது.  கண்ணையாகுமார் தன்னை பிசிறில்லாத இந்தியத் தேசியவாதியாக கூறிக் கொள்வது  பா.ச.க.வின் இந்தியத் தேசிய ஆதிக்கவாதத்துடன் போட்டிப் போடத்தான் பயன் படுமே தவிர ஒடுக்கப்பட்டுள்ள தேசிய இனங்களுக்கும், தேசிய மொழிகளுக்கும் நீதி வழங்க பயன்படாது.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.