அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு, தோழர் பெ. மணியரசன் விளக்கம்!
அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் விளக்கம்!
அ. மார்க்சு அண்மையில் அவரது முகநூலில் ஒரு சித்தரிப்பு வெளியிட்டிருந்தார். அலிகர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் து. மூர்த்தி அவர்கள் அப்பல்கலையின் தமிழ்த்துறைத் தலைவராகப் பதவி உயர்வு பெற்ற செய்தியை அ. மார்க்சிடம் மூர்த்தி தொலைப்பேசியில் சொன்னாராம்.
அதை ஒட்டி, தஞ்சைத் தமிழ்ப்பல்கலையில் மூர்த்தி பணியாற்றிய போது நடந்த நிகழ்வுகளின் பழைய நினைவுகள் அ. மார்க்சுக்கு வந்தனவாம். அவற்றுள் ஒன்று:
“1983 யூலைக் கலவரஙகளை ஒட்டி நாங்கள் வெளியிட்ட துண்டுப்பிரசுரங்களும், தேசியம் குறித்த கேள்வி – பதில் தொகுப்புகளும் அன்று தமிழக அளவில் பேசப்பட்டவை.
அப்போது நான் சி.பி.எம். கட்சியில் இருந்தேன். அவர்கள் எனது இந்தச் செயல்பாடுகளை இரசிக்கவில்லை என்பதை விளக்க வேண்டியதில்லை. நான் கட்சியிலிருந்து விலக்கப்பட்டேன்.
கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்களை மார்க்சிஸ்ட் கட்சியினர் எவ்வாறு கையாள்வார்கள் என்பதையும“ சொல்ல வேண்டியதில்லை. இவர்கள் நக்சலைட் எனக் காவல்துறைக்குத் தகவல் கொடுப்பது உட்பட எல்லாம் நடந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள்.
அந்த பணியில் முன்னணியில் இருந்தவர்களில் ஒருவர் அன்று சி.பி.எம். கட்சியின் வட்டச் செயலாளராக இருந்த பெ. மணியரசன்”.
கட்சியை விட்டு அ. மார்க்சு நீக்கப்பட்ட பின் அவரை நக்சலைட்டு என்று காவல்துறைக்கு சி.பி.எம். கட்சியினர் தகவல் கொடுத்ததாக அவர் இப்போது கூறியிருப்பது முற்றிலும் பொய். சி.பி.எம். கட்சியில் அப்படி அவர் பற்றிக் காவல்துறையில் தகவல் கொடுக்கவில்லை.
அடுத்து, அ. மார்க்சு நக்சலைட் என்று தகவல் கொடுத்த முன்னணியில் இருந்தவர்களில் மணியரசனும் ஒருவர் என்று அ. மார்க்சு கூறியிருப்பது முற்றிலும் பொய். அப்படிப்பட்ட இழிசெயல் எனக்குப் பழக்கமில்லை.
ஈழத்தமிழர் சிக்கல் தொடர்பாக எழுதியதற்காக அ. மார்க்சை சி.பி.எம். கட்சி நீக்கவில்லை. அவர் வேறொரு நிகழ்வுக்காக நீக்கப்பட்டார். ஈழத்தமிழர் சிக்கலுக்காக இவர் நீக்கப்பட்டதுபோல், ஒரு தோற்றம் காட்டுவது மோசடி.
தமக்குப் பிடிக்காதவர்கள், தமது தன் அகங்காரத்தை ஏற்காதவர்கள் போன்றவர்களை அவதூறு செய்வது அ. மார்க்சின் வாடிக்கை. தொடர்ந்து அவரது முகநூலிலும் சில கட்டுரைகளிலும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் குறித்து அவதூறாகவே எழுதி வருகிறார். தமிழ்த் தேசியப் பேரியக்கம் இந்துத்துவா ஆதரவு இயக்கம் என்று எழுதி வருகிறார். நாங்கள் அ. மார்க்சின் “நம்பகத்தன்மை”, “தர்க்க நேர்மை” ஆகியவை குறித்து நன்கு அறிந்திருப்பதால் அவரது அவதூறுகளுக்கு மறுப்பு எழுதும் வழக்கமில்லை. அந்த அவதூறுகளைப் பொருட்படுத்துவதும் இல்லை.
தொடர்ந்து, துணிந்து பொய்சொல்லும் ஆற்றல் அ. மார்க்சுக்கு இருப்பதால் ஒரு தடவையாவது நமது மறுப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று இதை எழுத நேர்ந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் திருவாரூர் சி.பி.எம். கட்சி மாவட்ட அலுவலகத்திற்குப் போனாராம். அங்கு அவரை இட்லரின் குற்ற விசாரணை அறை போல் – ஓர் இடத்தில் வைத்து விசாரித்த இடத்தைப் பார்த்ததும் பழைய நினைவுகள் வந்ததாம். சி.பி.எம். தலைவர்கள் அ. மார்க்சை குற்ற விசாரணை செய்யும் போது நானும் உடன் இருந்து அந்தக் குற்ற விசாரணைக்குத் துணை செய்தேனாம். இப்படியெல்லாம் கதையளந்திருந்தார்.
அப்போது நடந்தது என்ன?
அ. மார்க்சை சி.பி.எம். தலைமைக்கு நான்தான் அறிமுகப்படுத்தினேன். தீக்கதிர் இதழில் புனைபெயர்களில் தொடர்ந்து கட்டுரை எழுதி வந்தார்.
போகப் போக சில கட்டுரைகளில் சி.பி.எம். தலைமையின் நிலைபாடுகளுக்கு சிற்சில இடங்களில் முரணாக எழுதுகிறார் என்று கருதி – தீக்கதிர் ஆசிரியர் குழு, மார்க்சு கட்டுரைகளை வெளியிடவில்லை.
இது குறித்து தீக்கதிர் ஆசிரியருக்கு அ. மார்க்சு கடிதம் எழுதினார்.
இதுதான் அ.மார்க்சு சி.பி.எம். தலைமை மீது சினம் கொள்ளத் தொடங்கிய புள்ளி. அப்போதும்கூட, என் கருத்து அவரது அந்தக் கட்டுரைகளைத் தீக்கதிரில் வெளியிட்டிருக்கலாம் என்பதுதான்.
அதுபற்றி சி.பி.எம். தலைமையில் நான் பேசியுள்ளேன்.
ஆனால், சி.பி.எம். தலைமை அ. மார்க்சு கருத்துகளில் மாற்றம் வந்திருக்கிறது என்று கூறி – குறிப்பான அந்தச் செய்திகள் சிலவற்றைச் சொல்லி வெளியிட மறுத்துவிட்டார்கள்.
தஞ்சை நகரம் பூச்சந்தை அருகே தோழர் ஐ. மாயாண்டி பாரதி அவர்கள் சிறப்புரையாற்றும் பொதுக்கூட்டம் ஒன்று கட்சி சார்பாக நடத்தினோம். அதில் ஐ.மா.பா. பேசியதை ஒலிநாடாவில் பதிவு செய்தார் மார்க்சு. இது தெரிந்து சி.பி.எம். மாவட்டத் தலைமை கேட்டது.
அப்பேச்சில் ஐ.மா.பா. 1948-51 கட்சியின் தலைமறைவு கால நிகழ்ச்சிகள் சிலவற்றைக் கூறி கட்சியின் ஈக வரலாற்றைப் பெருமிதத்துடன் குறிப்பிட்பிட்டிருந்தார். குறிப்பாக நெல்லைச் சதி வழக்கு – அதில் வெடிகுண்டுப் பிரச்சினை ஆகியவற்றைக் கூறியதாக நினைவு.
இதை அறிந்த மாவட்டத் தலைவர்கள் அ. மார்க்சை திருவாரூரில் கட்சியின் மாவட்டத் தலைமையகத்திற்கு வரச்சொல்லி ஒலிநாடாவைப் போடச் செய்து கேட்டனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்ற முறையிலும் – தஞ்சை வட்டப் பொறுப்பாளர் என்ற முறையிலும் என்னையும் அக்கூட்டத்திற்கு அழைத்திருந்தார்கள்.
அப்போது தஞ்சை – திருவாரூர் – நாகை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்தது. கட்சியின் மாவட்டத் தலைமையகம் திருவாரூரில் இருந்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர்கள் எட்டுப்பேர்.
அக்குழுவில் நானும் திருத்துறைப்பூண்டி தோழர் இரா. கோவிந்தசாமி அவர்களும் உறுப்பினர்கள்.
இறுதியில் ஐ.மா.பா. பேச்சு அடங்கிய ஒலிநாடாவை அழித்துவிடச் சொன்னார்கள். நான் அந்த இடத்தில், செயற்குழுவில் இல்லாத அடிப்படை உறுப்பினரான மார்க்சை வைத்துக் கொண்டு செ.கு. தோழர்கள் அறிவித்த முடிவை விதிமுறைப்படி மறுத்துப் பேசக் கூடாது. செயற்குழுத் தோழர்களிடம் தனியேதான் கூற வேண்டும். அப்படித்தான், அந்த ஒலிநாடாவால் ஒன்றும் ஆபத்தில்லை, அது பழைய நிகழ்ச்சிகள் என்று கூறினேன்.
அதை மாவட்டச் செயலாளரும் பெரும்பாலான மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களும் ஏற்கவில்லை.
இவ்வளவுதான் அன்று நடந்தது. இதனை ஏதோ பாசிஸ்ட் குற்ற விசாரணை (Interrogation Chamber) போல் விசாரித்தார்கள் என்றெல்லாம் அ. மார்க்சு அளப்பது, வழக்கம்போல் தன்னைத் தானே அவர் இரசித்துப் பூரித்துக் கொள்ளும் மனத்திரிபின் ஒரு பகுதிதான்!
அ. மார்க்சு தாம் செயல்பட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கிளையிலும் மற்ற இடங்களிலும் இந்தச் சிக்கலைப் பெரிது படுத்திப் பேசி, கட்சிக்கு எதிரான பரப்புரையைக் கட்டவிழ்த்து விட்டார். அதன்பிறகுதான் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அவர் முகநூலில் கூறியிருப்பது போல் ஈழத்தமிழர்கள் சிக்கலை எழுதியதற்காக அவர் நீக்கப்படவில்லை.
தன்னோக்கு வாதச்(Subjectivism) சிந்தனைகளால் அ. மார்க்சு பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து அவரைப் பக்குவப்படுத்தவும், சி.பி.எம். தலைமையுடன் எங்களுக்குள் அரசியல் கொள்கை வழிப்பட்ட மாறுபாடுகளை இலைமறை காய் போல் சாடையாகச் சொல்லி அவரை ஆற்றுப்படுத்தவும் மூத்த தோழர் இரா. கோவிந்தசாமி அவர்களும், நானும், தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களும், ஒருநாள் – அ. மார்க்சு இல்லம் சென்று அவருடன் தனிமையில் பேசினோம். (தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் அவர் குடியிருந்த இல்லம்).
“எங்களுக்கும் சி.பி.எம். அனைத்திந்தியத் தலைமையின் கொள்கைகளில் மாறுபாடுகள் இருக்கின்றன. மாவட்டத் தலைமையின் சில செயல்பாடுகளிலும் மாறுபாடுகள் இருக்கின்றன.
பொறுமையாக இருங்கள். ஓர் உள்கட்சி விவாதம் நடத்த இருக்கிறோம். அதன்பிறகு பேசிக் கொள்வோம்” என்றோம்.
ஆனால், அ. மார்க்சு எங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. சி.பி.எம். மாவட்டத் தலைமை திட்டமிட்டு அவரைத் திருப்திப்படுத்த எங்களை அனுப்பி வைத்ததாகவே அச்சந்திப்பை அவர் கருதிக் கொண்டார்.
சி.பி.எம். அந்த அளவு அ. மார்க்சு குறித்து கவலைப்படவில்லை. கட்சிக் கிளை ஒன்றின் உறுப்பினர் மார்க்சு. அதற்கு மேல் கட்சிக்குள் செல்வாக்கும் தோழர்கள் பலரின் பிடிப்பும் உள்ளவர் அல்லர் அவர். அவர் ஒரு பேராசிரியர், எழுத்தாற்றல் பெற்றுள்ளார்; கலை இலக்கியத் துறையில் இருக்கிறார்;
அவரை இழந்துவிடக் கூடாது என்ற பொறுப்புணர்ச்சி மட்டுமே மாவட்டத் தலைமைக்கு இருந்தது.
பின்னர் மார்க்சு, சி.பி.எம். கட்சியை விட்டு விலகி ம.க.இ.க.வுடன் தொடர்பு கொண்டிருந்தார். அதன் பின்னர், மக்கள் போர் அமைப்பில் சேர்ந்தார். அப்போது தஞ்சை மாவட்ட சி.பி.எம்.மிலிருந்து இவருடன் யாரும் போகவில்லை.
பிறகு மக்கள் போர் அமைப்பிலிருந்தும் விலகி எங்கெங்கோ போய் சீரழிந்துவிட்ட அறிவுத்துறையாளராக இப்போது ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்.
அதைப் பற்றியெல்லாம் நாங்கள் ஒரு போதும் விமர்சிக்கவில்லை. என்னைப் பற்றியும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் குறித்தும் வன்மத்துடன் தொடர்ந்து அவதூறு செய்யும் அ. மார்க்சின் பொய்களை மறுப்பதற்காகவே இந்த விளக்கத்தைத் தெரிவித்தேன்.
Leave a Comment