ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

செண்பகவல்லி தடுப்பணையை இடித்த கேரள அரசுக்கு கண்டனம்! - தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

செண்பகவல்லி தடுப்பணையை இடித்த கேரள அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்! பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
கேரள அரசு செண்பகவல்லி தடுப்பணையை முற்றிலுமாக இடித்துவிட்டது என்று வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர், சங்கரன்கோயில் பகுதி வேளாண்மைக்கும், குடிநீருக்கும் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கேரள அரசு செய்துள்ள இந்த அடாவடி நடவடிக்கை தமிழின பகை நோக்கம் கொண்டதாகும். தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வாசுதேவநல்லூர் பகுதியில் 15 குளங்கள் சிவகிரி பகுதியில் 33 குளங்கள் வழியாகவும், சங்கரன்கோயில் வட்டத்தில் நேரடி பாசனத்தின் வழியாகவும் ஏறத்தாழ 11,000 ஏக்கர் நிலப்பரப்புக்கு பாசன நீரையும், அப்பகுதிக்கு குடிநீரையும் வழங்கி வந்த செண்பகவல்லி தடுப்பணை சிவகிரி சமீன் அவர்களால் அன்றைய திருவாங்கூர் சமசுத்தானத்தின் ஒப்புதலோடு 1773 இல் கட்டப்பட்ட அணையாகும்.

இந்த அணையில் ஒரு பகுதியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்வதற்கு ஒத்துக்கொண்ட  கேரள அரசு அப்பணிக்காக தமிழக அரசிடம் தான் கோரிப் பெற்ற தொகையை மிக நீண்டகாலத்திற்கு பிறகு திருப்பி அனுப்பிவிட்டது.

செண்பகவல்லி தடுப்பணையை கேரள அரசு செப்பனிடவேண்டும் என்று வலியுறுத்தி சிவகிரி விவசாயிகள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் கேரள அரசின் எதிர்ப்பை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியான எட்டு வாரகாலத்திற்குள் தடுப்பணை சீரமைக்கும் பணியை முடித்து, நீதிமன்றத்திற்கு கேரள அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என கடந்த 03.08.2006 இல் தீர்ப்பு உரைத்தது.
இத்தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை. தமிழக அரசும் உருப்படியான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை.

செண்பகவல்லி அணையை சீரமைக்க மறுத்துவந்த கேரள அரசு இப்போது ஒட்டுமொத்த தடுப்பணை சுவரையும் இடித்துவிட்டது. சட்டத்தையும் நீதியையும் துச்சமாக மதித்து கேரள அரசு மேற்கொண்டுள்ள இந்த அடாவடி நடவடிக்கைக்கு தமிழக அரசின் செயலற்ற தன்மை ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

செண்பகவல்லி தடுப்பணையையே இல்லாததாக்கும் கேரள அரசின் இந்த சட்டமீறல் திருநெல்வேலி மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழினத்திற்கே விடப்பட்டுள்ள அறைகூவல் ஆகும்.

தமிழக அரசு இச்சிக்கலில் உடனடியாக தலையிட்டு கேரள அரசின் இந்த அடாவடிச்செயலை தடுத்து நிறுத்தி, செண்பகவல்லி தடுப்பணையை சீரமைத்து தருமாறு கேரள அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

கேரள அரசின் இந்த தமிழின பகைச்செயலைக் கண்டித்தும், செண்பகவல்லி தடுப்பணையை உடனே சீரமைக்க வலியுறுத்தியும் சிவகிரி வட்ட உழவர் பெருமக்களும், ஒட்டுமொத்த தமிழர்களும் அணிதிரள வேண்டும் என்றும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு காய்கறி, எலுமிச்சை, முட்டை, மணல், வைக்கோல், மாடுகள், எண்ணெய் வகைகள் எதுவும் செல்லாமல் பொருளாதார தடை உள்ளிட்ட அனைத்துவகை போராட்டங்களுக்கும் அணியமாக வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.