இந்திய இடதுசாரிகள் அருங்காட்சியகத்தில் இருக்கிறார்கள் - நிகரன் விடைகள்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகியது எதைக் குறிக்கிறது?
பிரிட்டனிலும் இனச்சிக்கல்தான்
முதன்மைச் சிக்கலாக இன்றும் இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. கடந்த 23.06.2016 அன்று பிரிட்டனில் நடந்த கருத்து வாக்கெடுப்பில் 52 விழுக்காட்டினர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக
வேண்டும் என்பதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.
பிரிட்டனில் உள்ள ஸ்காட்லாந்து,
வட அயர்லாந்து ஆகிய மாநிலங்களிலும் இலண்டனிலும்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகக் கூடாது என்பதற்கு ஆதரவாக
வாக்களித்துள்ளார்கள்.
பிரிட்டனில் உள்ள இங்கிலாந்து மாநிலம்
ஆங்கிலேயர் தாயகம். பிரிட்டனில் மிகப் பெரும் பான்மையினர் ஆங்கிலேயர்கள். உலக
நாடுகளில் பலவற்றை ஆண்ட இனம் தங்கள் இனம், உலகில் பல
நாடுகளில் ஆங்கிலம் கல்வி மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட
வரலாற்றுப் பெருமிதங்களுக்குரிய தங்களது ஆங்கில இனம் பத்தோடு பதினொன்றாக, மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் உறுப்பு வகிப்பதா என்ற கேள்வி அவர்களிடம்
எப்போதும் உண்டு.
அடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு வகிப்பதால் அதன் விதிமுறைப்படி
பல்வேறு அயல் இனத்தினர் தாராளமாகப் பிரிட்டனில் குடியேறி விடுகிறார்கள். அயல் இன
ஏதிலிகளை ஏற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறான இனக் காரணங்கள் கருதி
இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலேயர்கள்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பெரும்பான்மை
வாக்களித்தார்கள்.
ஐரோப்பாவின் பல இன நாடுகளோடு பிரிட்டன்
சேர்ந்திருப்பது, ஆங்கிலேயரின் ஒற்றை ஆதிக்கத்திலிருந்து
தற்காத்துக் கொள்ள தங்களுக்கொரு தற்காப்பு ஏற்பாடு என்று ஸ்காட்லாந்தியர்களும்,
வட அயர்லாந்தியரும் எண்ணுகின்றனர். எனவே,
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்திருக்கப்
பெரும்பான்மையாக வாக்களித்தனர்.
இலண்டன் மாநகரில் பல இனத்தினர் கணிசமாக
வாழ்வதால் ஒன்றியத்தில் இணைந்திருக்கப் பெரும்பான்மையாய் வாக்களித்தனர்.
ஸ்காட்லாந்தியர் 62 விழுக்காடு அளவுக்கு ஒன்றியத்திலிருந்து பிரியக் கூடாது என்று
வாக்களித்ததெம்பில், மீண்டும் ஸ்காட்லாந்தில் தனி
நாட்டிற்கான கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர்
நிக்கோலா ஸ்டூர்ஜியன் கோரிக்கை எழுப்பியுள்ளார். அத்துடன் ஐரோப்பிய ஒன்றிய உறவைத்
துண்டிக்க மாட்டோம் என்றும் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக
வேண்டும் என்று வாக்களித்ததற்கும், விலகக் கூடாது என்று வாக்களித்ததற்கும்
அடிப்படையான காரணம் இனம், அதாவது தேசிய இனம்!
வளர்ச்சியடைந்த முதலாளிய நாடுகள் தேசிய
இனச் சிக்கலைத் தீர்த்துக் கொண்டு விட்டன என்று லெனின் கூறியதை மறு ஆய்வு செய்ய
வேண்டியுள்ளது.
இந்தியாவில் தேசிய இனத் தன்னுரிமைச்
(சுயநிர்ணய) சிக்கல் , 1947 ஆகத்து 15 - உடன் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறிக் கொண்டிருக்கும் இந்திய
இடதுசாரிகளை அருங்காட்சியகத்தில்தான் வைக்க வேண்டும்.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சூலை 1 – 15, 2016 இதழிலிருந்து)
Leave a Comment