ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

"கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும்". பெ. மணியரசன் கோரிக்கை!

"கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும்"
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர், பெ. மணியரசன் கோரிக்கை!


“சிவகங்கை மாவட்டம் - கீழடி (மதுரை சிலைமான் அருகில்), பண்டைய தமிழ்நாட்டில் பரவலாக இருந்த நகர நாகரிகத்துக்கு முகாமையானச் சான்றாகத் திகழ்கிறது. இங்கு நடைபெறும் அகழாய்வில் வெளிப்பட்ட பல்வேறு வரலாற்றுச் செய்திகள் வியப்பைத் தருவதாக உள்ளன. இரண்டாம் கட்ட அகழாய்வு முடிவுறும் நிலையில் தமிழ்நாடு அரசு உடனடியாக கீழடி கிராமத்தில் பல்நோக்கு கள அருங்காட்சியகம் (Site Museum) அமைக்க நிலம் தந்து உதவ வேண்டும்” என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள், நேற்று (27.09.2016) கீழடி அகழாய்வை நேரில் பார்வையிட்டார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ. பால்ராசு, மதுரை மாநகரச் செயலாளர் தோழர் இரெ. இராசு, தானம் அறக்கட்டளை திரு. சிவக்குமார், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் மேரி, தோழர்கள் மதுரை சிவா, கரிகாலன், இளமதி, பாலமுருகன் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.



கீழடி அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட்ட பின், தலைவர் பெ. மணியரசன் அவர்கள் கூறியதாவது:



“கீழடியில் நடைபெற்ற அகழாய்வின் மூலம் தமிழர்களின் தொன்மை நாகரிகம் நகரம் சார்ந்ததாகவும், பன்னாட்டுத் தொடர்போடு நாம் விளங்கியதையும், கல்வியில் மேம்பட்ட சமூகமாக வாழ்ந்தரையும் அறிந்து கொள்ள முடிகிறது. தற்போது இங்கு 70க்கும் மேற்பட்ட பழந்தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானையோடுகள் கிடைத்துள்ளன.

சூது பவள மணிகள், சங்கு வளையல்கள், தந்தத்தில் செய்யப்பட்ட பகடைக்காய் -தாயக்கட்டைகள், சங்ககாலப் பாண்டிய மன்னன் பெருவழுதி வெளியிட்ட நாணயங்கள், இரும்பாலான அம்பு முனைக்கருவிகள், அழகிய ரோமானிய மண்பானைகள் என ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு பொருட்கள் கீழடி ஆய்வில் கிடைத்துள்ளன. மாபெரும் வணிகச் சமூகம் இங்கு வாழ்ந்துள்ளதை அறிய முடிகிறது. சங்க காலத்தைச் சேர்ந்த சுட்ட செங்கல்களாலான கட்டுமானங்கள் பரவலாக உள்ளன.

ஆடைகளுக்கு வண்ணமேற்றும் சாயத் தொழிற்சாலை ஒன்று உள்ளது. அதில், சாயத் தொட்டிகள், தண்ணீரை கொண்டு செல்லும் சுடுமண் குழாய்கள், கழிவு நீரை வெளியேற்றும் சுடுமண் குழாய்கள், நீர்த்தேக்கத் தொட்டிகள் எனப் பல இருக்கின்றன. இவற்றைப் பார்க்கும்போது, நாகரிகத்தில் மேம்பட்ட மக்கள் இங்கு வாழ்ந்துள்ளதை தெரிந்து கொள்ள முடிகிறது.
மேலும், சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற வாழ்வியல் கூறுகள் அனைத்தையும் இங்கு காண முடிகிறது. இது போன்ற அரிய தொல்லியல் ஆய்வுகளை வருங்காலத் தலைமுறையினரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது தமிழ்நாடு அரசின் கடமை!

நடுவண் தொல்லியல் துறை தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ள இந்த ஆய்வின் மூலமாக, தமிழ்நாடு வரலாறு மட்டுமன்றி, இந்தியாவின் வரலாறும்கூட மறு வாசிப்பிற்கு உள்ளாகியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளோடு வணிகத் தொடர்பு மேற்கொண்ட மிகச் செழுமையான தமிழர் நாகரிகத்தை, சிறப்போடு வெளிக்காட்டும் வகையில், கீழடி கிராமத்திலேயே கள அருங்காட்சியகம் (Site Museum) அமைக்க வேண்டும்.
ஆனால், இங்கு கிடைக்கும் தொன்மைச் சான்றுப் பொருட்கள் அனைத்தும் மைசூர் நடுவண் அருங்காட்சியகத்தில் கொண்டு போய் வைக்கிறார்கள். இதுபற்றி, தொடர்புடைய அதிகாரிகளைக் கேட்டதற்கு, “அவற்றை இங்கு வைப்பதற்கு கள அருங்காட்சியகம் இல்லை; அதை அமைப்பதற்கு இந்த இடத்திற்கு பக்கத்திலேயே 2 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தருமாறு தமிழ்நாடு அரசிடம் கேட்டுள்ளோம். இன்னும் அது கிடைக்கவில்லை. பக்கத்திலேயே புறம்போக்கு நிலம் 2 ஏக்கர் உள்ளது. அதை இந்தியத் தொல்லியல் துறைக்கு ஒப்படைத்தால், அந்த இடத்தில் இந்தியத் தொல்லியல் துறை கள அருங்காட்சியகம் கட்டி, கீழடியில் திரட்டப்படும் தொன்மைச் சான்றுகள் அனைத்தும் இங்கேயே வைக்கப்படும்” என்றார்கள்.

2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டத் தமிழர்களிடம் அரைப் பழங்குடி நாகரிகமே நிலவியது என்ற வடநாட்டு ஆய்வாளர்கள் கூற்றைத் தகர்க்கும் வண்ணம் கீழடி ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளதைக் கருத்திற் கொண்டு உடனடியாக பல்நோக்கு கள அருங்காட்சியகத்தை அமைக்கத் தமிழ்நாடு அரசு நிலம் அளித்து உதவ வேண்டும்.

மூன்றாம் கட்ட ஆய்வுக்கு நடுவண் தொல்லியல் துறையே ஒப்புதல் அளித்துள்ள செய்தி, கீழடி அகழாய்வின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்த்துகின்ற நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் கவனம் செலுத்தி, உடனடியாக அந்த 2 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி ஒப்படைத்திட அதிகாரிகளுக்கு ஆணையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
கீழடி மற்றும் கொந்தகை கிராம உள்ளாட்சித் தலைவர்கள், கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக அருங்காட்சியகம் அமைக்க நிலம் ஒதுக்கி, அதற்கான தீர்மானங்கள் சிவகங்கை மாவட்ட நிர்வாகக் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ள நிலையில், இதுவரை அதற்கான முன்முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொடங்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு முதல்வர் காலந்தாழ்த்தாது வெளியிட வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.

இரண்டாண்டுகளாக, இங்கு கள ஆய்வு நிகழும் இடத்திலேயே தங்கிப் பணியாற்றி வரும் நடுவண் தொல்லியல் கண்காணிப்பாளர் முனைவர் அமர்நாத் ராமகிருஷ்ணா மற்றும் அவரது உதவியாளர்கள் ராஜேஷ், வீரராகவன் ஆகியோரையும் அவர்களுக்கு உறுதுணையாக உள்ள தொல்லியல் பயிலும் மாணவர்களையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வாழ்த்தி மகிழ்கிறது.

இந்த ஆய்வுக்கு உறுதுணையாக இருந்து ஆலோசனைகள் நல்கி வரும் தொல்லியல் அறிஞர் முனைவர் வெ. வேதாசலம், ஆய்வுக்கு இடம் தந்த உதவிய நில உரிமையாளர்கள், நாளும் பொழுதும் அயராது உழைத்து களப்பணியாற்றி வரும் பொதுமக்கள் மற்றும் கீழடி கிராமத்தாரையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் பாராட்டுகிறது.

கீழடி அகழாய்வில் தொடர்ந்து ஈடுபட்டு பல்வேறு புதிய தகவல்களை தமிழ் கூறு நல்லுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய மேற்கண்ட அனைவரையும் தமிழ்நாடு அரசும் பாராட்டிப் பெருமைப்படுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.


தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.