தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே நிறைவேற்றாவிட்டால் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம்! இராயக்கோட்டை தமிழக உழவர் முன்னணி ஆர்ப்பாட்டத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே நிறைவேற்றாவிட்டால் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம்! இராயக்கோட்டை தமிழக உழவர் முன்னணி ஆர்ப்பாட்டத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
கிருட்டிணகிரி மாவட்டம் - இராயக்கோட்டையில், வறட்சியைப் போக்கி வேளாண்மையை செழுமைப்படுத்தும் வகையில், தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் மூலம் நீர் கொண்டு வரும் 'தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை' நிறைவேற்றக் கோரி பல்லாண்டு காலமாக, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இக்கோரிக்கையை, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்களைத் தலைமை ஆலோசகராகக் கொண்ட தமிழக உழவர் முன்னணியும், அப்பகுதி உழவர்களையும் மக்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட 'தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் இயக்கமும்' முன்னெடுத்துச் சென்றன.
இவ்வமைப்புகளின் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக, 2010ஆம் ஆண்டு இத்திட்டம் குறித்து அரசு ஆய்வு செய்தது. 2012-2013ஆம் நிதி ஆண்டில், இத்திட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, 2014ஆம் ஆண்டு எப்ரலில் இந்தத் திட்டத்துக்கு ரூ.22.20 கோடி செலவாகும் என மதிப்பீடும் செய்யப்பட்டது. ஆனாலும், இத்திட்டத்திற்கானப் பணிகள் நடக்கவில்லை. 2014ஆம் ஆண்டு, இத்திட்டத்தை நிறைவேற்றக் கோரி இராயக்கோட்டையில் சாலை மறியல் மற்றும் கடையடைப்புப் போராட்டம் எழுச்சியுடன் நடை பெற்றது. எனினும், தொடர்ந்து இத்திட்டம் நிறைவேற்றப் படவில்லை.
எனவே, நடப்பு ஆண்டிலாவது - நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி, இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டுமெனக் கோரி, 19.10.2016 அன்று, இராயக் கோட்டையில், தமிழக உழவர் முன்னணி மற்றும் தென் பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு சார்பில், எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தூருவாசன் தலைமை தாங்கிப் பேசினார். தமிழக உழவர் முன்னணித் தோழர்கள் செ.மு. வேலாயுதம், திரு. த. அனுமந்தப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக உழவர் முன்னணித் தலைமை ஆலோசகர் தோழர் கி.வெங்கட்ராமன், தென்பெண்ணை கிளைவாய்க் கால் கோரும் உழவர் அமைப்பு ஆலோசகர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, ஒசூர் தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை திரு. பெ. முனுசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர்கள் திரு. மு. மாரியப்பன் (பிள்ளையார் அக்ரகாரம்), திரு. இல. இராசேந்திரன் (கொப்பக்கரை), திரு. நா. மாதேஷ் (சச்சலப்பட்டி), திரு. கோ. முனியப்பன் (கோனேரி அக்ரகாரம்), திரு. மா. எல்லப்பன் (லிங்கனம்பட்டி), திரு. முனுசாமி (திரு.வி.க. நகர்), திரு. முருகன் (கொல்லப்பட்டி), திரு. இரா. செல்வம் (முகளூர்), திரு. சீ. விருமாண்டி (கருக்கம்பட்டி), திரு. சின்ன கண்ணன் (மொள்ளம்பட்டி), திரு. முனிராசு (சின்னமெட்டரை), திரு. நாகராஜ் (கோனம்பட்டி) உள்ளிட்டோரும், ஒசூர் அசோக் லேலண்ட் தொழிலாளர் பாதுகாப்புப் பேரவைத் தோழர்களும் உழவர்களும் பொது மக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
தென்பெண்ணைக் கிளை வாய்க்கால் திட்டத்தை, நடப்பு ஆண்டிலேயே நிறைவேற்றாவிட்டால் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முடக்குவோம் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற உழவர்களும், மக்களும் உறுதியேற்றனர்.
செய்தித் தொடர்பகம்,
தமிழக உழவர் முன்னணி
தமிழக உழவர் முன்னணி
பேச: 94432 91201, 76670 77075,
https://www.facebook.com/uzhavarmunnani?fref=ts
http://tamilfarmer.blogspot.in/
https://www.facebook.com/uzhavarmunnani?fref=ts
http://tamilfarmer.blogspot.in/
Leave a Comment