போபாலில் நடந்தது - போலி மோதல் கொலையா? - விசாரணை தேவை! கி. வெங்கட்ராமன் அறிக்கை!
போபாலில் நடந்தது - போலி மோதல் கொலையா? - விசாரணை தேவை! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
மத்தியப்பிரதேசத் தலைநகர் போபாலின் உயர் பாதுகாப்பு நடுவண் சிறையிலிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்பட்ட, எட்டு பேரை அம்மாநிலக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றது பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது.
“இந்திய இசுலாமிய மாணவர் இயக்கம்” (சிமி - Students Islamic Movement of India – SIMI) அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம் சாட்டப்பட்டு – அக்குற்றங்கள் இன்னும் மெய்ப்பிக்கப்படாமல் விசாரணைக் கைதிகளாகவே அந்த எட்டு பேரும் போபால் சிறையிலில் அடைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 01.11.2016 அன்று அதிகாலை அவர்கள் சிறையிலிருந்து தப்பி விட்டதாகவும், அம்முயற்சியில் சிறைக்காவலர் ஒருவரை அவர்கள் கொன்று விட்டதாகவும் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் அறிவித்தார். எட்டு பேரையும் பிடித்துத் தருபவர்களுக்குப் பரிசும் அறிவித்தார்.
இந்நிலையில், தப்பி ஓடிய எட்டு பேரும் போபாலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள புறநகர் கிராமமான எய்ன்கேடி (Eintkhedi) என்ற பகுதியில் ஒளிந்திருந்ததாகவும், அவர்களை சுற்றி வளைத்த போது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும், திருப்பி காவல்துறையினர் 46 ரவுண்டுகள் சுட்டதில் அவர்கள் எட்டு பேரும் இறந்துவிட்டனர் என மத்தியப்பிரதேச காவல்துறை தலைவர் (ஐ.ஜி.) யோகேஷ் சவுத்ரி அறிவித்தார். மேலும், சுட்டுக் கொல்லப் பட்டவர்களிடமிருந்து 4 நாட்டு துப்பாக்கிகளும், சில கூரிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.
உடனடியாக, தப்பியோடியவர்களை சுட்டுக் கொன்றக் காவலர்களுக்கு பா.ச.க முதல்வர் சிவராஜ் சவுகான் பரிசுகள் அறிவித்துப் பாராட்டினார். பா.ச.க.வினர் இவர்கள் சுட்டு வீழ்த்தப்பட வேண்டியவர்களே என உற்சாகக் கூத்தாடினர்.
ஆனால், இந்த எட்டு பேரும் சுட்டுக் கொன்ற பிறகு காவல்துறை அதிரடிப்படை தலைவர் சஞ்சீவ் ஷாமி, சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் ஆயுதம் ஏதும் வைத்திருக்கவில்லை என்று கூறியதும், மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங்கும் சுட்டுக் கொல்லப்பட்டவர்களிடம் ஸ்பூன் போன்ற ஆயுதங்களே இருந்தன என்று கூறியதும், இது திட்டமிடப்பட்ட போலி மோதல் கொலையா என்ற ஐயத்தை எழுப்பியது.
இந்நிலையில், இந்த நிகழ்வு குறித்து ஊடகங்களில் சில காணொலிகள் வெளியாகின. அதில், சிறையில் இருந்து தப்பித்த அந்த 8 பேரும் ஒரு சிறிய குன்றின் மீது நின்று கொண்டிருக்கும் காட்சியும், அதில் அவர்கள் எவ்வித ஆயுதங்களும் இன்றி நின்றிருந்ததும் வெளியானது. இன்னொரு காணொலியில், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொள்ளும் காவலர் ஒருவர், தாங்கள் அவர்கள் இருக்கும் பகுதியை சுற்றி வளைத்துவிட்டதாகவும், அவர்கள் நம்மோடு பேச முற்படுகின்றனர், இப்போது என்ன செய்யலாம் என கேட்கும் ஒலியும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் வெளியான இன்னொரு காணொலியில், சுட்டு இறந்து கிடந்த உடல்கள் மீது துப்பாக்கியால் சுடும் காட்சியும் பதிவாகியுள்ளது. இறந்தவர்கள் மீது சுட்டுக்கொல்லும் அளவிற்கு காவல்துறை ஏன் வெறியுடன் செயல்பட வேண்டும்? ஒருவேளை, அவர்கள் இறக்கவில்லை எனில், அவர்களை உயிருடன் மீட்டு சிகிச்சை அளித்து, கைது செய்யவே காவல்துறை முயற்சி மேற்கொள்ள வேண்டுமே தவிர, அவர்களை சுட்டுக் கொல்ல யார் அனுமதி தந்தது? ஆயுதம் இல்லாமல் இருந்தவர்களை கால்களில் சுட்டுக் காயப்படுத்தி கைது செய்திருக்க முடியும். ஆனால், ஏன் காவல்துறையினர் அவ்வாறு செய்யவில்லை?
வெளியான காணொலிகளும், அதிகாரிகள் வெளியிடும் முன்னுக்குப் பின்னான முரண்பட்ட தகவல்களும் இது போலி மோதல் கொலைதான் என்ற நம் ஐயத்தை மேலும் வலுவாக்கியுள்ளது.
இந்த எட்டு பேரும் சிறையிலிருந்து எப்படி தப்பிச் சென்றார்கள் என்பது குறித்து மட்டும்தான் விசாரிப்போம் என மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் கூறுவது சரியல்ல. எனவே, இந்த மோதல் படுகொலை குறித்து பணியிலுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும். அதிகாரிகள் குற்றம் செய்திருப்பது உறுதியானால், அவர்கள் மீது கொலைக் குற்றத்திற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இன்னணம்,
கி. வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
கி. வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பேச: 7667077075, 9047162164
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
Leave a Comment