ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கர்நாடகத்தில் தனியார் துறையிலும் கன்னடர்களுக்கே வேலை: தமிழ்நாடு இனியாவது திருந்த வேண்டும்! தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை வேண்டும்! கி. வெங்கட்ராமன் அறிக்கை!

கர்நாடகத்தில் தனியார் துறையிலும் கன்னடர்களுக்கே வேலை: தமிழ்நாடு இனியாவது திருந்த வேண்டும்! தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
கர்நாடகாவிலுள்ள தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு 100 விழுக்காட்டுப் பணிகளை வழங்க வேண்டுமென கர்நாடக அரசு சட்டதிருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது.
இதற்கென கர்நாடக அரசின் தொழில்துறை அமைச்சகம், கர்நாடக தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையாணை) விதிகள் – 1961 - சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது. அதற்கானத் திருத்தங்கள் வெளியாகியுள்ளன.
அப்புதியத் திருத்தங்களின்படி, கர்நாடகாவில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்களில் உதவியாளர் உள்ளிட்ட இரண்டாம் நிலைப் பணியாளர்களாக, கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட கன்னடர்களை மட்டுமே நியமிக்க முடியும். அவ்வாறு நியமிக்காத நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு வழங்கியுள்ள நிலம், நீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படைவசதிகளும் இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பெங்களூருவிலுள்ள தகவல் தொழில்நுட்பத்துறை, உயிரி தொழில்நுட்பத் துறை நிறுவனங்களுக்கு 2014ஆம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டதிருத்தத்திற்கு கர்நாடகத் தொழில்துறை அமைச்சர் சந்தோசுலாட் ஒப்புதல் அளித்துள்ளார். கர்நாடக‌ முதல்வர் சித்தராமையாவிடமும் இதற்கு இசைவு பெறப்பட்டுள்ளது. முனைவர் சரோசினி மகிசி ஆணையப் பரிந்துரை, கர்நாடகத்தில் செயலில் உள்ளது. அதற்கு இசையவே இப்புதிய சட்ட திருத்தம் நிலையாணைச் சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
கர்நாடகம், காங்கிரசு – பா.ச.க – சனதா தளம் ஆகிய அனைந்தியக் கட்சிகளால் மாறி மாறி ஆளப்படுகிறது. ஆனால், அங்கு மண்ணின் மக்களான கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பிலும், கட்டமைப்புப் பணி ஒப்பந்த வாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
அந்த மாநிலத்திலுள்ள இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி, பிற இடதுசாரிகள் யாரும் இதனை தொழிலாளி வர்க்க ஒற்றுமைக்கு இடையூறு என்று கூறி தடுப்பதில்லை!
ஆனால், தமிழ்நாட்டில் “மாநிலக் கட்சிகள்” மட்டுமே மாறி மாறி ஆட்சி புரியும் வாய்ப்பிருந்தாலும், இதுவரை இதனை எண்ணிப் பார்க்கவில்லை. மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை – தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டு மக்களுக்கே 90 விழுக்காடு வழங்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரினால், அதனை “இனவெறி” – “வர்க்கப் பிளவு” என பழித்தூற்றுவதற்கு பலப் பிரிவு இடதுசாரிகள் வரிந்து கட்டுகிறார்கள்.
அண்மையில்கூட, தமிழ்நாட்டில் இந்திய ஸ்டேட் வங்கி(SBI)க்கு எடுத்த 1420 புதிய பணியிடங்களில், ஏறத்தாழ 80 விழுக்காட்டு இடங்களக்கு கேரளத்தைச் சேர்ந்தவர்களும், வடமாநிலத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நேர்முகத் தேர்வு நடைபெற்று அவர்கள் வேலையில் அமர்த்தப்படும் நிலை உள்ளது. நல்ல ஊதியம் கிடைக்கும் பணிகள் தமிழ்நாட்டிலேயே தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கிடைக்காமல் புறக்கணிக்கப்படும் இன ஒதுக்கல் அரங்கேற இருக்கிறது.
வங்கிப்பணி மட்டுமின்றி, தொடர்வண்டித்துறை, பி.எச்.இ.எல்., ஆவடி திண்ணூர்தித் தொழிற்சாலை, ஐ.சி.எப். உள்ளிட்ட இந்திய அரசுத் தொழிலகங்கள், வருமானவரி – சுங்க வரி உள்ளிட்ட இந்திய அரசுத் துறைகள் ஆகிய அனைத்திலும் தமிழ்நாட்டில் அயல் மாநிலத்தவர்களே அதிகம் பணியமர்த்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்கள் வெளியில் நிறுத்தப்படுகிறார்கள். இந்த நிலை இனியாவது மாற வேண்டும்.
கர்நாடகத்தைப் பார்த்தாவது தமிழ்நாட்டில் திருத்தம் வர வேண்டும். கர்நாடகத்தைப் போல தமிழ்நாடு அரசும், இதற்கென விசாரணை ஆணையத்தை அமைத்து உரிய பரிந்துரை பெற்று, கர்நாடகத்தைப் போல இந்திய – மாநில அரசுத்துறைகளிலும், தனியார் தொழில் நிறுவனங்களிலும் குறைந்தது 90 விழுக்காடு வேலை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே வழங்குவதற்கு சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
கர்நாடகத்து இடதுசாரிகளைப் போல, இங்குள்ள முற்போக்காளர்கள் மண்ணின் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க முன் வர வேண்டும்.
தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்த அநீதிக்கு எதிராக போராடவும், வெளியார் பணிக்கு அமர்த்தப்படும் இடங்களில் புகுந்து போராடி உரிமையை நிலைநாட்டவும் முன் வர வேண்டும்.

இன்னணம்,
கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9047162164
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.