ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரியைக் காவு கேட்கும் மோடி அரசின் ஒற்றைத் தீர்ப்பாயத் திட்டத்தை முறியடிப்போம்! பெ. மணியரசன் அறிக்கை!

காவிரியைக் காவு கேட்கும் மோடி அரசின் ஒற்றைத் தீர்ப்பாயத் திட்டத்தை முறியடிப்போம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!



 

மாநிலங்களுக்கிடையில் உள்ள தண்ணீர்ச் சிக்கல்களைத் தீர்த்துத் தீர்ப்புரைக்க, இந்தியா முழுமைக்கும் ஒரே ஒரு தீர்ப்பாயம் அமைப்பது என்று இந்திய அரசு முடிவு செய்து அறிவித்திருக்கிறது. நடுவண் அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ள இந்த ஒற்றைத் தீர்ப்பாயத் திட்டம் பின்வருமாறு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது :

இந்த ஒற்றைத் தீர்ப்பாயத் திட்டத்திற்கு அதிகாரம் வழங்கும் வகையில் “மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்ச் சிக்கல் சட்டம் – 1956” – திருத்தப்படும்.

ஒற்றைத் தீர்ப்பாயத்தின் தலைவராக – ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இருப்பார். இந்த ஒற்றைத் தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டவுடன் இந்தியாவில் இப்போது செயல்பாட்டில் உள்ள காவிரித் தீர்ப்பாயம் உள்ளிட்ட எட்டுத் தீர்ப்பாயங்களும் காலாவதி ஆகிவிடும்.

இந்த ஒற்றைத் தீர்ப்பாயம் நேரடியாக – மாநிலங்களிடமிருந்து தண்ணீர்த் தகராறு வழக்கை எடுத்துக் கொள்ளாது. இந்திய அரசு அமைத்துள்ள பூசல் தீர்வுக் குழுவில் (Disputes Resolution Committee) ஒரு மாநிலம் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். அக்குழு தொடர்புடைய மாநிலங்களை அழைத்து சமரசப் பேச்சு நடத்தும். அப்பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லையெனில், அதன்பிறகு தொடர்புடைய மாநிலம் இந்திய அரசுக்கு மனுச் செய்ய வேண்டும். இந்த மனுவை இந்திய அரசு ஏற்றுக் கொண்டு, அந்தக் குறிப்பிட்ட தண்ணீர்த் தகராறுகளை – ஒற்றைத் தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு அனுப்பும்.
ஒற்றைத் தீர்ப்பாயம் அங்கங்கே அவ்வப்போது தேவைக்கேற்ப தீர்ப்பாய அமர்வுகளை (Benches) உருவாக்கிக் கொள்ளும். அவ்வாறான ஓர் அமர்வுக்கு – அந்தக் குறிப்பிட்ட தண்ணீர்த் தகராறுகளை விசாரித்து முடிவு செய்ய தீர்ப்பாயம் அனுப்பி வைக்கும். இந்த அமர்வு மூன்றாண்டுகளுக்குள் வழக்கை விசாரித்து இறுதி முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பாய முடிவுகள் வெளியானவுடன் அது உடனடியாகத் தானாகவே இந்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு அதிகாரம் வழங்கப்படும்.

தீர்ப்பாய அமர்வு விசாரித்து இறுதி முடிவுகள் வழங்கியவுடன் அந்த அமர்வு கலைக்கப்பட்டுவிடும்.

இவைதாம் இந்திய அரசு இப்போது வெளியிட்டுள்ள ஒற்றைத் தீர்ப்பாயம் குறித்த விவரங்கள்!

இந்த ஒற்றைத் தீர்ப்பாயத்தை அமைத்திட அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் 1956-ஆம் ஆண்டுச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்.

இந்த ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கப்படும்போது, இப்போதுள்ள காவிரித் தீர்ப்பாயம் உள்ளிட்ட எட்டு தீர்ப்பாயங்கள் கலைக்கப்படும். ஆக முதல் பலிகடா தமிழ்நாடுதான்!

காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைத்துவிட்டு, அதன் இறுதித் தீர்ப்பைக் குப்பைக் கூடையில் வீசிவிட்டு, புதிய சமரசப் பேச்சைக் கர்நாடகத்துடன் தமிழ்நாடு தொடங்கக் கட்டளையிட வேண்டும் என்ற சூழ்ச்சித் திட்டத்தை மனத்தில் வைத்துக் கொண்டுதான், இந்திய அரசு உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்திருக்கிறது என்ற உண்மை இப்போது அம்பலமாகியுள்ளது.

இந்திய அரசே இந்த சூழ்ச்சித் திட்டத்தை முன்வந்து தொடங்க வேண்டும் என்பதில்லை. புதிய ஒற்றைத் தீர்ப்பாயத்தில் கர்நாடக அரசு ஒரு மனுப் போட்டால், அது சமரசத் தீர்வுக் குழுவிற்கு அதை அனுப்பி வைக்கும். சமரத் தீர்வுக் குழு இரு மாநிலங்களையும் அழைத்துப் பேசும் – பேசும் - பேசிக் கொண்டே இருக்கும். அந்தப் பேச்சுக்கு இப்போது காலவரம்பு விதிக்கவில்லை!

பேச்சு தோல்வி என்று சமரசத் தீர்வுக் குழு அறிக்கை கொடுத்தால்தான் ஒற்றைத் தீர்ப்பாயம் - அந்த வழக்கைத் தனது அமர்வுக்கு அனுப்பி விசாரிக்க அறிவுறுத்தும். (அந்த அமர்வு மூன்றாண்டுக்குள் முடிவுகள் வழங்க வேண்டும்).

தமிழ்நாட்டின் காவிரி உரிமைச் சிக்கல் எப்போது முடிவுக்கு வரும்? அது முடிவுக்கு வரக்கூடாது என்பதுதான் இந்திய அரசின் விருப்பம்!

ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கும் திட்டத்தைத் தமிழ்நாட்டு அரசும் தமிழ்நாட்டு மக்களும் ஒட்டு மொத்தமாக எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

காவிரிக்குப் பொருந்தாது

ஒருவேளை ஒற்றைத் தீர்ப்பாயம் சட்டமாகிவிட்டால், இந்தியாவில் அரங்கேறிவிட்டால், காவிரிச் சிக்கலை அந்த ஒற்றைத் தீர்ப்பாய சுழலுக்குள் திணித்துவிடக் கூடாது. ஏன்?

காவிரித் தீர்ப்பாயம் 2007 பிப்ரவரி 5-இல் இறுதித் தீர்ப்பு வழங்கி, 19.02.2013இல் அது இந்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது. 1956ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்ப் பூசல் சட்டம் – பிரிவு 6 ( 2 )-இன்படி, ஒரு தீர்ப்பாயத்தின் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டால் அதன்பிறகு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அது இணையானதாகும்.

எனவே, முடிந்து போன தீர்வை – ஓர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை – புதிதாக சமரசப் பேச்சுக்கும் – தீர்ப்பாயத்திற்கும் விடுவது சட்டவிரோதச் செயலாகும்.

மாநிலங்களுக்கிடையிலான ஆற்று நீர்ச் சிக்கல்களைத் தீர்ப்பாயங்களுக்கு விட்டால் – அது முடிவுக்கு வராமல் பல ஆண்டுகள் இழுக்கப்படுகின்றன என்றும் அதனால் விரைந்து முடிவு காண ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கப் போவதாகவும் இந்திய அரசு கூறுகிறது. இதைவிட மோசடிச் பேச்சு வேறென்ன இருக்க முடியும்?

காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பை 2007 பிப்ரவரி 5-இல் வெளியிட்டது. அதை அரசிதழில் வெளியிடாமல், வேண்டுமென்றே காலம் கடத்தியது இந்திய அரசு. உச்ச நீதிமன்றம் ஒரு மாதக் காலக்கெடு வைத்து ஆணையிட்ட பின்னர், 2013 பிப்ரவரி 19-இல் இறுதித் தீர்ப்பை வேறு வழியின்றி அரசிதழில் வெளியிட்டது. இதனால் அத்தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குரிய அதிகாரம் பெறுகிறது.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அத்தீர்ப்பை முடமாக்கிப் போட்டது இந்திய அரசுதான். கடந்த செப்டம்பர் மாதம் (2016), ஒரு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடவும், பின்னர் அக்டோபர் 4க்குள் அமைத்திடவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே தாக்கி அதனைத் காலொடித்து போட்டது இந்திய அரசு!

நீதிமான்கள் போலவும் நேர்மைச் செம்மல்கள் போலவும் பா.ச.க. ஆட்சியாளர்கள் பாசாங்கு செய்து கொண்டு – இப்பொழுது நிலவும் நீண்ட, காலதாமதத்தைத் தவிர்க்கவே இந்தியா முழுமைக்கும் ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கப் போகிறோம் என்று கூறுவது வெறும் பொய் மட்டுமா? வஞ்சகம்! தமிழர்களுக்கெதிரான பகையுணர்ச்சி, அனைத்தையும் உள்ளடக்கிய பொய்!

இந்தியத் துணைக் கண்டத்தை வேட்டையாடும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரவேற்பு வளைவுகள் போடுவதையும், நடை பாவாடை விரிப்பதையும் தனது அரசதருமம் என்று ஆக்கிக் கொண்டுவிட்ட நரேந்திர மோடி அரசு – இந்தியாவின் ஆறுகளைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் விற்கப் போகிறது. முதலில் தமிழர்களின் காவிரி நீரை விற்கப் போகிறது.

அதற்கான சட்ட வரைவு (மசோதா) ஒன்றை மோடி அரசு தயாரித்துள்ளது. அதன் பெயர், “தேசியத் தண்ணீர்ச் சட்டக வரைவு – 2016” – (Draft National Water Framework Bill – 2016 – Draft of 16 May 2016) என்பதாகும்.

இந்த வரைவுச் சட்டம், சட்டம் ஆவதற்கு முன் பலியானது தமிழ்நாட்டுக் காவிரி நீர்தான்!
இந்த வரைவுச் சட்டகம், தண்ணீரை – “விற்பனைக்குரிய சரக்கு” என்று வரையறுக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக இதரத் துறைகளில் என்னென்ன செய்யப்படுகின்றனவோ அத்தனையும் ஆறுகளில் செய்யலாம் என்று கூறுகிறது இச்சட்டகம்.

இதன் பொருள், பெப்சி – கோகோகோலா மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ பயன்பாடுகளுக்காக – உள்நாட்டு மக்களிடம் விற்பனை செய்வதற்காகவும் தனியாரிடம் – பன்னாட்டு முதலாளிகளிடம் நமது ஆறுகளை இந்திய அரசு ஒப்படைப்பதை நீதித்துறை தடுக்க அதிகாரமல் இல்லாமல் தடை செய்கிறது இச்சட்டம்!

மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, தில்லியின் ஒற்றை அதிகார மையத்தை உருவாக்கி வரும் நரேந்திர மோடியின் சர்வாதிகார நடவடிக்கைகளில், ஒற்றைத் தீர்ப்பாயமும் ஒன்று!

இச்சட்டகத்தின் பிரிவு 23-இல் உட்பிரிவு 2 பின்வருமாறு கூறுகிறது: “நகர நீர் வழங்கலில் மீ்ட்டர் அளவுப்படி தண்ணீரின் விலை முடிவு செய்யப்படும்”.

இச்சட்டகப்பிரிவு 29-இல் உட்பிரிவு 2 சொல்கிறது: “ஒரு தடவை தீர்ப்பு வந்துவிட்டால் – அந்த ஆற்றுச் சிக்கல் அத்துடன் முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. தேவைப்பட்டால் மீண்டும் மீண்டும் எழுப்பலாம்”.

இதன் 30ஆவது பிரிவு ஒரு மாநிலத்திற்குள் பல்வேறு பகுதி அல்லது குழுக்களிடையே எழும் நீர்ச் சிக்கலையும் தீர்க்கும் வகையில் பொறியமைவு வேண்டும் என்கிறது.

இந்த பிரிவு 30-இன் உட்பிரிவு ( 4 ) கூறுகிறது : இப்பொழுது நிலுவையில் உள்ள தண்ணீர்ச் சிக்கல்கள் அனைத்தையும் இந்தத் “தேசியத் தண்ணீர்ச் சட்டக” வரைவுக்குள் கொண்டு வர வேண்டும்.

இதன்படி காவிரி உரிமைச் சிக்கலும் கொண்டு செல்லப்படலாம்.

எனவே ஏற்கெனவே 2016 மே மாதம் இந்திய அரசு தயாரித்த தேசிய தண்ணீர்ச் சட்டக வரைவு – 2016-க்கு ஏற்பத்தான் இப்பொழுது நடுவண் நீர்வளத்துறை “ஒற்றைத் தீர்ப்பாயச் சட்டம்” கொண்டு வர உள்ளது. இவ்விரண்டிற்கும் ஏற்றபடிதான் முன்கூட்டியே காவிரி மேலாண்மை வாரியம் அமையாமல் தடுத்து விட்டது இந்திய அரசு!

காவிரியைக் காவு கேட்கிறது நரேந்திரமோடி அரசின் ஒற்றைத் தீர்ப்பாயத் திட்டம்! இதுவரை நாம் அவ்வப்போது நடத்தி வந்த அடையாளப் போராட்டங்கள் போல், இனியும் தொடர்ந்தால் காவிரி உரிமையை மீட்க முடியாது. ஒற்றைத் தீர்ப்பாயத் திட்டத்தை முறியடிக்க ஒட்டு மொத்தத் தமிழ்நாடும் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும்; தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும். இவற்றில் உறுதியாக - உண்மையாக தமிழ்த்தேசியப் பேரியக்கம், தனது பங்களிப்பைச் செலுத்தும்!

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.