ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“காவிரி உரிமை மீட்க – இனி என்ன செய்ய வேண்டும்?”தஞ்சை காவிரி உரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் பெ. மணியரசன் பேச்சு!

“காவிரி உரிமை மீட்க – இனி என்ன செய்ய வேண்டும்?”தஞ்சை காவிரி உரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேச்சு!


காவிரிப் பாசன உழவர் அமைப்புகளின் ஆதரவோடு, தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து, “காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம்” தஞ்சையில் 17.12.2016 அன்று எழுச்சியோடு நடத்தின.

தஞ்சை - நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள காவிரி திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு தொடங்கியது. த.நா.பொ.ப.து. மூத்த பொறியாளர் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் பொறிஞர். எம்.பி. துரைராஜ் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் திரு. கி. மனுராஜ் அறிமுகவுரையாற்றினார்.

த.நா.பொ.ப.து. மூத்தப் பொறியாளர் சங்க மாநிலச் செயலாளர் பொறிஞர் அ. வீரப்பன் கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கிப் பேசினார். அதன்பின், மீத்தேன் திட்டத்தை எதிர்த்துப் போராடிய மே பதினேழு இயக்கத் தலைவர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களுக்கும், மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராளி பொறிஞர் கோ. திருநாவுக்கரசு, மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் ஆகியோர்க்கும் பாராட்டு தெரிவித்து, சிறப்புச் செய்தனர். தோழர் திருமுருகன் காந்தி வராததால் அவருக்காக மே17 இயக்கத்தை சேர்ந்த தோழர் அருண் தங்கராசு பாராட்டைப் பெற்றுக் கொண்டார்.

இதனையடுத்து நடைபெற்ற கருத்தரங்கில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், தமிழர் தேசிய முன்னணிப் பொறுப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திரு. மாசிலாமணி, காவிரிப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. காவிரி வெ. தனபாலன், காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. சுவாமிமலை சுந்தர விமலநாதன், தென்னக நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு, தமிழ்நாடு மின்துறை பொறியாளர் சங்கத் தலைவர் பொறிஞர் சா. காந்தி, த.நா.பொ.ப.து. மூத்தப் பொறியாளர் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் பொறிஞர் இரா. பரந்தாமன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். முன்னதாக, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் நா. இராசாரகுநாதன், காவிரி உரிமை குறித்து பாவீச்சு வழங்கினார்.

நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன், “இனி நாம் என்ன செய்யப் போகிறோம்?” என்ற தலைப்பில் பேசினார். அவர் பேச்சின் சுருக்கமான எழுத்து வடிவம் :  

“காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கை, ஒரு மாநாடு போல் நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் பொறுப்பாளர்களே, குழுமியுள்ள நண்பர்களே, தோழர்களே, சகோதரிகளே – உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

“காவிரிச் சிக்கலில் இனி நாம் என்ன செய்யப் போகிறோம்?” என்ற தலைப்பில் உள்ள “நாம்” என்பது யாரைக் குறிக்கிறது?

காவிரிச் சிக்கல் மூன்று தரப்பை உள்ளடக்கியது. முதலில், தமிழ்நாடு. அடுத்து, கர்நாடகம். மூன்றாவதாக இந்திய அரசு. 

“தமிழ்நாடு” என்பதில், தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டு மக்களும் உள்ளனர். காவிரி உரிமையை மீட்பதில் தமிழ்நாடு அரசுக்குக் கூடுதல் பங்கிருக்கிறது. எனவே, இங்கு நம்முடைய எதிர்காலக் கடமை மட்டுமின்றி, தமிழ்நாடு அரசின் எதிர்காலக் கடமையும் சேர்த்தே பேச வேண்டும்.

காவிரி வழக்கில், தமிழ்நாடு அரசு உரிய சட்டச் சான்றுகளுடன் சரியான வாதங்களை முன்வைத்து வாதாடவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 262 மற்றும் “மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறு சட்டம் – 1956” ஆகியவற்றிலுள்ள சட்ட விதிகளின் கூறுகளை தந்திரமாக அரைகுறையாகப் பேசி, இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞரும் கர்நாடக அரசின் வழக்கறிஞர் பாலி நாரிமனும் திட்டமிட்டு உண்மைக்கு மாறாக திசைதிருப்பி வாதாடியபோது, சட்ட உண்மைகளை வைத்து அவற்றை அம்பலப்படுத்தவும் முறியடிக்கவும் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் வாதப்போர் நடத்தவில்லை.   

இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகில் ரோத்தகி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுமாறு உச்ச நீதிமன்றம் இந்திய அரசுக்குக் கட்டளையிட முடியாது என்றும், இந்திய நாடாளுமன்றத்தில்தான் அது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் கூறினார். 1956 - மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறு சட்டத்தின் பிரிவு 6 (A) உட்பிரிவு 7, அப்படி கூறவில்லை. தீர்ப்பாயத் தீர்ப்பின்படி அமைக்கப்படும் காவிரி மேலாண்மை வாரியம் போன்ற ஒரு பொறியமைவில், தேவைப்பாட்டால் சில திருத்தங்களை (Modification) செய்யலாம் என்றுதான் அது கூறுகிறது.

இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட 2013-க்குப் பிறகாவது, காவிரி மேலாண்மை வாரிய அட்டவணையை நாடாளுமன்றத்தில் முன்வைத்து திருத்தங்கள் கோரியிருக்கலாமே? ஏன் இந்திய அரசு அவ்வாறு செய்யவில்லை?

காவிரி மேலாண்மை வாரியம் என்பது காவிரித் தீர்ப்பாயம் முன்வைக்கும் பரிந்துரை தான் என்கிறது இந்திய அரசு! இது எவ்வளவு மோசடியானது?

பக்ராபியாஸ் மேலாண்மை வாரியம் போல, காவிரிச் சிக்கலுக்கு “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்க வேண்டும் என்பதுதான் காவிரித் தீர்ப்பாயம் முன்வைத்துள்ள தீர்வுத் திட்டம் (Scheme). இந்திய அரசு, இதற்கு மாற்றாக அதிகாரமுள்ள வேறொரு பொறியமைவை முன்வைக்கலாம். ஆனால், அதிகாரமுள்ள ஏதாவதொரு செயல்படுத்தும் பொறியமைவு அமைப்பதை தீர்ப்பாயம் கட்டாயமாக்கியுள்ளது. பொறியமைவுத் தேவை என்பது பரிந்துரை அன்று, கட்டாயம்!

2007 பிப்ரவரி 5-இல் காவிரித் தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கிய பிறகு, 10 ஆண்டுகளாகப்போகும் நிலையில்கூட, காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மாற்றாக வேறொரு பொறியமைவை நடுவண் அரசு வகுக்கவில்லை. மேலாண்மை வாரியம் அல்லது அதைப்போல் வேறொரு செயலதிகாரமுள்ள கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாதிரி கட்டமைப்பு என்பதுதான் தேர்வுக்குரியது (Choice).

அந்த வகையில்தான், காவிரி மேலாண்மை வாரியம் என்ற வடிவத்தை பரிந்துரையாகத் தீர்ப்பாயம் கூறுகிறது. ஆனால், இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகம் – தமிழ்நாட்டிற்கிடையே தண்ணீரை பகிர்ந்து திறந்துவிடுவதற்கான அதிகாரமுள்ள பொறியமைவு உருவாக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்ப்பாயம் கட்டாயமாக்கியுள்ளது. அது பரிந்துரையன்று! ஒருபடி மேலே போய், அவ்வாறான செயல்படுத்தும் பொறியமைவு அமைக்கப்படவில்லையெனில், காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வெறும் துண்டுத் தாளாகத்தான் (Piece of Paper) இருக்கும் என்பதைத் தீர்ப்பாயமே கூறியுள்ளது.

காவிரித் தீர்ப்பாயம் முன்வைக்கும் தீர்வையும் செயல்படுத்த மாட்டேன், நானும் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க மாட்டேன் என இந்திய அரசு அடாவடித்தனம் செய்வது, தமிழினத்தைத் திட்டமிட்டு வஞ்சிக்கும் செயல் இல்லையா?

கர்நாடகாவில் காங்கிரசு அரசு நடக்கிறது. இந்தியாவை பா.ச.க. ஆள்கிறது. காவிரிச் சிக்கலில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை செயல்படுத்த மாட்டேன் என திரும்பத் திரும்ப கர்நாடக காங்கிரசு அரசு கூறுவது எதனால்? இந்தியாவை ஆளும் பா.ச.க. அளிக்கும் துணிச்சலில்தான் அவ்வாறு கூறுகிறது.

“கன்னடர்களும் இந்திய மக்கள்தான் – தமிழர்களும் இந்திய மக்கள்தான்” என்று இந்திய அரசு சமமாகக் கருதவில்லை. இரு இனத்தாருக்குமிடையில் நடுநிலையாக காவிரித் தீர்ப்பைச் செயல்படுத்தவில்லை. திட்டமிட்டு தமிழ்நாட்டை இந்திய அரசு இனப்பாகுபாட்டுடன் நடத்துகிறது என நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம்! காங்கிரசு – பா.ச.க. என இதில் கட்சி வேறுபாடு இல்லை.

உச்ச நீதிமன்றத்தில் பேசுவதற்குரிய இந்த வாதங்களையெல்லாம் தமிழ்நாடு அரசு ஏன் தயாரிக்கவில்லை? கர்நாடக அரசின் வழக்கறிஞர் பாலி நாரிமன் வீட்டிற்கு, அம்மாநில முதல்வர் சித்தராமையா நேரில் சென்று பேசுகிறார். அம்மாநிலத்தின் முன்னாள் நீதிபதிகளிடம், வழக்கறிஞர்களிடம் கலந்தாய்வு செய்து அவர்களுக்கான வாதங்களைத் தயார் செய்கிறார்கள்.

ஆனால், தமிழ்நாடு அரசு என்ன செய்கிறது? தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் என்ன செய்கிறார்? காவிரி உரிமையைக் காக்கும் பொறுப்பும் மக்கள் பாதிக்கப்படுவார்களே என்ற அச்சமும் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறதா? ஏன் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறீர்கள்? தமிழ்நாடு அரசு தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசின் காவிரி சிறப்புத் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக, முன்னாள் தலைமைப் பொறியாளர் சுப்பிரமணியம் அவர்கள் இருக்கிறார்கள். அவர் செயல்படுகிறாரா? வழக்கறிஞர்களுக்கு சான்றுகளை – தருக்கங்களை வழங்குகிறாரா? அவருடன் தமிழ்நாடு அரசு பேசுகிறதா? அவர் பேச்சை தமிழ்நாடு அரசு கேட்கவில்லையா? எல்லாம் மர்மமாக இருக்கிறது! பிறகு எதற்கு அந்த “செல்” ?

இனிமேலாவது, அந்தக் காவிரித் தொழில்நுட்பப் பிரிவை உரியவாறு தமிழ்நாடு அரசு பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமில்லை, பணி ஓய்வு பெற்ற பாசனப் பொறியியல்துறை வல்லுநர்கள், தகுதிமிக்க வழக்கறிஞர்கள் ஆகிய அரசுக்கு வெளியே உள்ள வல்லுநர்களை தமிழ்நாடு அரசு பயன்படுத்த வேண்டும். 

இப்போது, இந்திய அரசு புதிதாக ஒரு சட்டத்தை இயற்றவுள்ளது. அனைத்துத் தண்ணீர் தகராறுகளையும் விசாரிக்க ஒற்றைத் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்கப் போகிறார்களாம். அப்படியென்றால், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித்தீர்ப்பு என்னாவது? செயல்படுத்த வேண்டிய நிலையிலுள்ள தீர்ப்பைக் கைவிட்டு, திரும்பவும் முதலிலிருந்து காவிரிச் சிக்கல் புதிய ஒற்றைத் தீர்ப்பாயத்தில் தொடங்கப்படுமா? என்ன அநீதி இது?

தமிழ்நாட்டு மக்களும் திருந்த வேண்டும். மீண்டும் மீண்டும் 1,000 ரூபாய்க்கும் 2,000 ரூபாய்க்கும் வாக்குகளை விற்றுவிட்டு, உரிமைகளை இழந்து நிற்கதியாக நிற்கக்கூடாது. நம் உரிமைப் பறிப்பிற்கு எதிராக – நமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஆவேசம் பெற வேண்டும். போராட வேண்டும். பறிக்கப்படும் நம்முடைய உரிமையை மீட்கும் போராட்டத்தில் பின்தங்கியிருக்கும் தமிழ்நாடு அரசு செயல்படும் வகையில் தமிழ்நாட்டு அரசை நோக்கியும் நாம் போராட வேண்டும்.

கடந்த மூன்று மாதங்களில் இதுவரை, 26 உழவர்கள் காவிரி டெல்டா மாவட்டங்களில், நீரின்றி பயிர்கள் கருகிவிட்டதைக் கண்டு அதிர்ச்சியில் மாரடைப்பிலும், தற்கொலை செய்து கொண்டும் இறந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் வேளாண் துறை அமைச்சர் இதே தஞ்சை மாவட்டத்தில்தான், பாபநாசத்தில் இருக்கிறார். உணவுத்துறை அமைச்சர் மன்னார்குடியில்தான் இருக்கிறார். அதேபோல், வேதாரணியம் - தலைஞாயிற்றில் தமிழ்நாடு கைத்தறித்துறை அமைச்சர் இருக்கிறார். ஏன் இவர்கள், இறந்த உழவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறக்கூடாது? ஏன் அவர்களது காய்ந்த வயல்களைப் பார்வையிடக்கூடாது? எது உங்களைத் தடுக்கிறது?

நாங்கள் சென்று நேரில் பார்த்தோம். காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஒரு குழுவாகச் சென்று தஞ்சை மாவட்டத்தில் கருகிக் கிடந்த வயல் வெளிகளைப் பார்த்தோம். இங்கே, கல்விராயன்பேட்டையிலிருந்து உழவர் அறிவழகன் வந்திருக்கிறார். அவரை நாங்கள் பார்க்கச் சென்ற போது, “அய்யா எங்களையா பார்க்க வந்தீங்க.. நாங்கதான் நாதியற்றவர்கள் ஆச்சே!” என்று குமுறினார்.

ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லாதவர்களாக தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளாக நிற்கிறார்கள். தமிழ்நாடு அரசு ஏன் இவர்களுக்கு இழப்பீடு அளிக்க மறுக்கிறது? வயலில் வேளாண் பணியில் ஈடுபட்டிருக்கும்போது உழவர் இருந்தால், அவருக்கு 1 இலட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென்று அரசாணை உள்ளது. இறந்து போன உழவர் குடும்பங்களுக்கு அதைக்கூட வழங்கப்படவில்லை. இது எவ்வளவு பெரிய அநீதி!

தனது வயலில் நீரின்றி காய்ந்து சருகாகிக் கிடந்தப் பயிர்களைக் கண்டு, வயலிலேயே அதிர்ச்சியில் விழுந்து இறந்தார் ஆதிச்சபுரம் உழவர் அழகேசன். அவர் மனைவி இதைத் தெளிவாக காவல்துறை புகாரில் எழுதிக் கொடுத்துள்ளார். அழகேசன் சாவுக்கான முதல் தகவல் அறிக்கையிலும் (FIR), அவர் மனைவி கூறிய காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இவற்றையெல்லாம் தமிழ்நாடு அரசு சாகுபடி பாதிக்கப்பட்டதால் நடந்த சாவுகளாக அல்லது தற்கொலைகளாகப் பதிவு செய்வதில்லை.

நமது காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திலோ, வேளாண்மை பொய்த்து உழவர்கள் தற்கொலை செய்து கொண்டாக பதிவு செய்கிறார்கள். அண்மையில் கள ஆய்வு செய்ய வந்த, நடுவண் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் அந்தப் பட்டியலை கர்நாடக அரசு கொடுத்தது. தமிழ்நாடு அரசிடம் அப்படியொரு பட்டியலே இல்லை! காவிரி நீர் போதாமையால் கர்நாடகத்தில் விவசாயிகள் அதிகம்பேர் இறந்துள்ளார்கள் என்று அந்த நடுவண் குழு உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை தந்தது. உண்மையிலேயே காவிரி நீர் தடுக்கப்பட்டதால் இறந்து போன தமிழ்நாட்டு விவசாயிகளின் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கொடுக்கவில்லை.

தண்ணீரின்றி சாகுபடி பொய்த்ததால் உயிர் நீத்த உழவர்கள் குடும்பத்திற்கு தலா 15 இலட்ச ரூபாய், தமிழ்நாடு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். தண்ணீரின்றி நெற்ப்பயிர் கருகிப்போன நிலங்களுக்கு – ஒரு ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தண்ணீரின்றி சாகுபடி செய்ய முடியாமல் இவ்வாண்டு தரிசாகப் போடப்பட்ட நிலங்களுக்கு – ஒரு ஏக்கருக்கு 15,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம் செய்தால், தொழிலாளர்களுக்கு வேலையில்லாக் கால ஊதியம் ( Layoff Labour ) வழங்குவதைப் போல், விவசாயத் தொழிலாளிகளின் குடும்பத்திற்கு ரூபாய் 25,000 வாழ்வூதியத் தொகை வழங்க வேண்டும்.

இந்த இழப்பீடுகளை வழங்க இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு சிறப்பு நிதி பெற வேண்டும். இந்திய அரசின் ஒப்புதலுக்குக் காத்திராமல், உடனடியாக இந்த இழப்பீட்டுத் தொகைகளை வழங்க வேண்டும். 

இந்திய அரசு தமிழ்நாட்டுக்கெதிரான இனப்பகை அரசியல் நடத்துகிறது. மேலாண்மை வாரியம் அமைக்கவிருந்த நிலையில், கடைசி நொடியில் அதைத் தட்டிப் பறித்தது இந்திய அரசு! எனவே, காவிரி உரிமையை மீட்க இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும்.

நடுவண் அரசு அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் கருப்புக் கொடி காட்ட வேண்டும். அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழ் மக்கள் கலந்து கொள்ளக் கூடாது. நடுவண் அமைச்சரவையிலுள்ள தமிழ்நாட்டு அமைச்சர் பதவி விலக வேண்டும். இந்திய அரசு கொடுக்கும் விருதுகளை தமிழர்கள் யாரும் வாங்கக்கூடாது! இந்திய அரசின் வங்கிகளில் உழவர்கள் வாங்கியக் கடன்களை திருப்பிச் செலுத்தக்கூடாது. காவிரிப்படுகையில் இந்திய அரசு பெட்ரோலியம், மீத்தேன் உள்ளிட்ட எதையும் எடுக்க அனுமதிக்கக் கூடாது.

வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து காந்தியடிகள் 1920இல் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கும்போது, பேயாட்சி நடத்துவோருக்கு ஒத்துழைப்பது ஒரு பாவம் (It would be a Sin to co-operate with the Satanic Government) என்றார். காந்தியடிகள் காட்டிய ஒத்துழையாமைப் போராட்டத்தை இப்பொழுது, இந்திய அரசுக்கு எதிராக தமிழர்கள் நடத்த வேண்டிய தேவையுள்ளது.

தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைத் திருடிக் கொண்டிருக்கும் கர்நாடகாவுக்கு எதிராக, தமிழ்நாடு அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். கர்நாடகத்தில் உற்பத்தியாகும் மஞ்சள், புகையிலை போன்றவற்றை ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டுச் சந்தையில் விற்க அனுமதிக்கக்கூடாது. கர்நாடகப் பொன்னி அரிசி உள்ளிட்ட கர்நாடக அரிசி எதுவும் தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்கக் கூடாது. மக்கள் அதை வாங்கக்கூடாது. நெய்வேலியிலிருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டுத் திரைப்படத்துறையினர், கர்நாடகத் திரைப்படத்துறையினருடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது!

இவையெல்லாம்தான் தமிழர் ஒத்துழையாமை இயக்கத்தின் அடிப்படைக் கூறுகள்! இவ்வாறான அறவழிப் போராட்டங்களை நடத்தி, இந்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் அழுத்தம் கொடுத்து, நெருக்கடி கொடுத்து, காவிரியில் நமக்கான நீதியைப் பெறுவோம்! தனித்தனி உழவர்கள் மனம்நொந்து உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள்! நம்பிக்கை பெறுங்கள்! நம்மால் வாழ முடியும்! நீங்கள் உயிர் நீத்த பின், உங்கள் குடும்பம் என்னாவது என்று எண்ணிப் பாருங்கள்! நமது அறவழிப் போராட்டங்களுக்குப் பலனில்லையென்றால், தமிழர்கள் அனைவரும் வீதிக்கு வந்து, கூட்டாகப் போராடி கூட்டாகச் சாவோம்! தனி மனிதர்கள் யாவரும் விரக்தியடைந்து உயிரைப் போக்கிக் கொள்ளக் கூடாது! நம்மால் நீதியைப் பெற முடியும்! நம்பிக்கையோடு செயல்படுங்கள்! போராடுங்கள்!”

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

த.நா.பொ.ப.து. மூத்தப் பொறியாளர் சங்க மாநிலச் செயலாளர் பொறிஞர் அ. வீரப்பன், கருத்தரங்கின் தீர்மானங்களை முன்மொழிந்து, அவை பலத்த கையொலிகளுக்கிடையே நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ஏழுநூற்றுக்கும் மேற்பட்ட உழவர்களும் தமிழ் மக்களும் திரளாகப் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தலைமைச் செயற்குழு தோழர்கள் பழ. இராசேந்திரன், நா. வைகறை, குடந்தை க. விடுதலைச்சுடர், பெண்ணாடம் க. முருகன், சென்னை க. அருணபாரதி, திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் காமாட்சிபுரம் காமராசு, புளியங்குடி க. பாண்டியன், தீந்தமிழன், திருத்துறைப்பூண்டி, ப. சிவவடிவேலு, பா. பார்த்தசாரதி உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி தலைமையில் திரளான மகளிர் ஆயம் தோழர்களும், தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் சி. ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் தோழர் கோட்டூர் தனபாலன் உள்ளிட்ட உழவர் முன்னணிப் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.

#TamilsBoycottGovtOfIndia
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம் 

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.