இந்திய அரசின் தமிழர் அடையாள அழிப்பு முயற்சியை தமிழ்நாட்டு பா.ச.க ஞாயப்படுத்துகிறது! தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
இந்திய அரசின் தமிழர் அடையாள அழிப்பு முயற்சியை
தமிழ்நாட்டு பா.ச.க ஞாயப்படுத்துகிறது!
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
இவ்வாண்டு தமிழ்நாட்டில்
பொங்கல் விழாவுக்கு 14.01.2017 அன்று தமிழ்நாடு அளவில் கட்டாயப் பொது விடுமுறை இல்லையென்றும்,
விருப்பமுடைய ஊழியர்கள் மேலதிகாரிகள் அனுமதியுடன் பொங்கல் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்
என்றும், இந்திய அரசு அறிவித்தது. இதைக் கண்டித்துத் தமிழ்நாடே கொந்தளித்து எழுந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ்நாட்டிலுள்ள நடுவண் அரசின் ஊழியர் சங்கக் கூட்டமைப்பு,
நான்கு நாட்கள் தொடர் போராட்டங்களை அறிவித்து, பொங்கல் விடுமுறையை வலியுறுத்தியது.
இப்பின்னணியில், 14.01.2017
– பொங்கல் அன்று, தமிழ்நாட்டளவில் கட்டாயப் பொது விடுமுறை என்று இப்போது நடுவணரசு அறிவித்துள்ளது.
“நடுவண் அரசு ஊழியர்கள்
நல ஒருங்கிணைப்புக் குழு” என்ற அமைப்பு, தமிழ்நாட்டிற்கு இருப்பதாகவும் அதில் தமிழ்நாட்டிலுள்ள
நடுவண் அரசு அலுவலகங்களின் தலைமை அதிகாரிகள் உறுப்பு வகிப்பதாகவும், அந்த அமைப்புதான்
2017 – சனவரி 14 – பொங்கல் கட்டாய விடுமுறையை தனிநபர் விருப்ப விடுமுறையாக மாற்றியது
என்றும், இம்மாற்றத்திற்கும் நடுவண் அரசுக்கும் தொடர்பில்லை என்றும், நடுவண் அமைச்சர்
பொன். இராதாகிருட்டிணன் கூறுகிறார்.
அத்துடன் இரண்டாம் சனிக்கிழமை
(14.01.2017) அன்று பொங்கல் வருவதால், இயல்பாகவே அன்று நடுவண் அரசு அலுவலகங்களுக்கு
விடுமுறை என்றும், பொங்கல் விடுமுறை விடவேண்டிய தேவையில்லை என்றும் பொன். இராதாகிருட்டிணன்
கூறுகிறார்.
அஞ்சலகம், தொலைப்பேசித்துறை,
பாதுகாப்புத்துறை, நடுவண் பொதுநலத்துறை திட்ட அலுவலகங்கள் போன்ற நடுவண் அரசின் அலுவலகங்களுக்கு
இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை கிடையாது. இவற்றில் பணியாற்றும் தமிழர்கள் தனிநபர் விருப்ப
அடிப்படையில் பொங்கல் விடுமுறை பெற வேண்டும்
என்பது மேற்கண்ட அறிவிப்பின் உள்ளடக்கமாகும்.
சனிக்கிழமை விடுமுறை
என்பதால் தனிநபர் விருப்ப விடுமுறை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டது என்று பொன். இராதாகிருட்டிணன்
கூறுகிறார். இரண்டாம் சனிக்கிழமையில் அலுவலகத்திற்கே முழு விடுமுறை விட்டால், அன்று
ஊழியர்கள் தனி விருப்பத்தின் பேரில் மேலதிகாரியிடம் விடுமுறை கோர வேண்டிய தேவை எங்கிருந்து
வந்தது? எல்லா ஊழியருக்கும் விடுமுறை தானே!
தனக்கு அமைச்சர் பதவி
கொடுத்த பா.ச.க. அரசின் தமிழர் எதிர்ப்பு நடவடிக்கைகளை மூடி மறைத்திட, பொன். இராதாகிருஷ்ணன்
பொருந்தா வாதம் செய்கிறார்.
அடுத்து, அனைத்திந்திய
அளவில் கட்டாயப் பொது விடுமுறை நாட்கள் 14 என்றும், மாநிலத்திற்கேற்ப தேர்வு செய்து
கொள்ள வேண்டிய விடுமுறை நாட்கள் 3 என்றும் பொன்னார் கூறுகிறார். இந்த மூன்று விடுமுறை
நாட்களையும், நடுவண் அரசு அங்கீகரித்துள்ள 12 விடுமுறை நாள் பட்டியலிலிருந்து குறிப்பிட்ட
மாநிலத்திலுள்ள நடுவண் அரசு ஊழியர் நல ஒருங்கிணைப்புக் குழு தேர்வு செய்து கொள்ளலாம்
என்றும் அவர் கூறுகிறார்.
அவ்வாறு தமிழ்நாட்டில்
இதுவரை தேர்வு செய்யப்பட்டு வந்த மூன்று நாட்கள்: 1. பொங்கல், 2. சித்திரை ஆண்டுப்
பிறப்பு, 3. விநாயகர் சதுர்த்தி.
இதில், பொங்கல் விழாவை
நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக சரசுவதி பூசை நாளை மேற்படி ஊழியர் நல ஒருங்கிணைப்புக்
குழு, இவ்வாண்டு முதலில் தேர்வு செய்துள்ளது. இது, பொங்கலை ஒட்டி அனைவருக்கும் தெரிந்த
பின்தான், போராட்டம் வெடித்தது.
தமிழ்நாடு அளவில் நடுவண்
அரசின் பொதுக் கட்டாய விடுமுறை நாளாக பொங்கல் நாள் இருந்ததைக் கைவிட்டு, சரசுவதி பூசையை
தேர்வு செய்ததை பொன். இராதாகிருட்டிணனும், தமிழிசை சவுந்திரராசனும் விழுந்து விழுந்து
ஆதரிக்கிறார்கள். இச்செயல் தமிழினத் துரோகமாக அவர்களுக்குத் தெரியவில்லை! ஏனெனில்,
அவர்கள் தமிழர் பண்பாட்டைக் கைவிட்டு, இந்துத்துவா பண்பாட்டிற்குத் தங்களை ஒப்புக்
கொடுத்து, பதவி பெற்றவர்கள்.
“தசரா” விழாவில் வரும்
ஆயுத பூசைக்கு ஏற்கெனவே தமிழ்நாட்டில் பொது விடுமுறை நடுவண் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
அத்தோடு நில்லாமல், தசரா விழாவின் இன்னொரு நாளான சரசுவதி பூசைக்கு விடுமுறைப் பட்டியலில்
இடம் கொடுத்து, பொங்கல் விடுமுறையை வெளியே தள்ளி விட்டார்கள். இதற்கு என்ன பெயர் என்பதை
ஒவ்வொரு தமிழரும் ஊகித்துக் கொள்ள முடியும்.
அனைத்திந்திய பொது விடுமுறைப்
பட்டியலில் இருந்த பொங்கல் நாளை, மாநிலத்திற்கேற்றபடி மாற்றிக் கொள்ளும் விருப்பத்
தேர்வு விடுமுறை நாள் பட்டியலில் 2008 – சூன் 11 அன்று, அப்போதிருந்த காங்கிரசு – தி.மு.க.
கூட்டணி அரசு சேர்த்தது. காங்கிரசு மிதவாத இந்துத்துவா கட்சி என்று தமிழ்த்தேசியப்
பேரியக்கம் தொடர்ந்து கூறி வருகிறது.
இடம் கிடைக்கும்போதெல்லாம்
இந்துத்துவா பா.ச.க. அரசு, தமிழர் அடையாளங்களை, தமிழர் பண்பாட்டை ஒழித்துக் கட்டி ஆரியத்தின்
அடிவருடிகளாக தமிழர்களை மாற்றிட முனைந்து செயல்படுகிறது. பொன். இராதாகிருட்டிணன், தமிழிசை
போன்றவர்கள் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்துத் தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ள
– தவறான விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள நடுவண்
அரசு அலுவலகங்களின் தலைமை அதிகாரிகள், பொங்கல் விடுமுறையை நீக்கி சரசுவதி பூசைக்குப்
பொது விடுமுறை கொடுத்துள்ளார்கள் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் பணியாற்றும்
நடுவண் அரசின் உயரதிகாரிகள் தமிழின விரோதச் செயல்களில் ஈடுபடக் கூடியவர்களாக இருக்கிறார்கள்
என்ற உண்மை தெரிய வருகிறது.
பொங்கல் விழா விடுமுறையை
நீக்கி, தசரா விடுமுறையை இரண்டு நாளாக்கும் தனது தமிழர் மறுப்பு - இந்துத்துவாத் திட்டத்தை,
தான் செயல்படுத்தியதுபோல் காட்டிக் கொள்ளாமல், தமிழ்நாட்டின் அதிகாரிகள் முடிவு செய்தார்கள்
என்று பா.ச.க. தலைமை பாசாங்கு செய்கிறது.
நடுவண் அரசு அலுவலகங்களில்
பணிபுரியும் தமிழர்கள், இப்பொழுது இருந்ததைப் போல் விழிப்போடு இருந்து அந்த அதிகாரிகளின்
தமிழர் விரோதச் செயல்களை எதிர்த்துப் போராடுவதுடன் தமிழ் மக்களின் பார்வைக்கும் கொண்டுவர
வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள இந்திய
அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், அதிகளவில் அயல் மாநிலத்தவர்கள் மேலிருந்து
கீழ் வரை பணியமர்த்தப்பட்டு வருவதைத், தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து எதிர்த்துப்
போராடி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு
முன், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரிலிருந்து, “நெய்வேலி” என்ற பெயர்
நீக்கப்பட்டது. திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் உற்பத்தியாகும், துப்பாக்கிகளில்
“திருச்சி” என்று பொறிக்கப்பட்டு வந்த சொல்லை நீக்கி, “கொல்கத்தா” என பொறிக்கச் செய்து
விட்டார்கள். தற்போது, பொங்கல் விடுமுறையை நீக்கி மாட்டிக் கொண்டார்கள்.
எனவே, தமிழ்நாட்டிலுள்ள
இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிலகங்களில், அதிகாரிகளிலிருந்து தொழிலாளி வரை தொண்ணூறு
விழுக்காட்டினர் தமிழர்களாகவே அமர்த்தப்பட வேண்டும், அவற்றில் பத்து விழுக்காட்டிற்கு
மேலுள்ள வெளி மாநிலத்தவர் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின்
தற்காப்பு முழக்கத்தை ஒவ்வொரு தமிழரும் தன் முழக்கமாக உரத்து எழுப்ப வேண்டுமென்று தமிழ்த்தேசியப்
பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.
Leave a Comment