காவிரித்தாய்க் காப்பு முற்றுகை! தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் போராட்டம்! காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு!
காவிரித்தாய்க் காப்பு முற்றுகை! தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் போராட்டம்! காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு!
இன்று (23.02.2017), தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்றது. தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அயனாவரம் தி. முருகேசன், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியர்ராசு, மனித நேய மக்கள் கட்சி வணிகப் பிரிவு தமிழ்நாடு செயலாளர் திரு. ஜெ. கலந்தர், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் திரு. அருண் மாசிலாமணி, மனித நேய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் கர்நாடகம் அணை கட்டுவதைத் தடுத்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், முழுமையான வறட்சி நிவாரணப் பணிகளைச் செய்தல், காவிரிச் சமவெளியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தல் ஆகிய மிக மிக இன்றியமையாக் கடமைகளில் தமிழ்நாடு அரசு செயலற்ற நிலையில் உள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொடர் முற்றுகைப் போராட்டம் 14.03.2017 அன்று தொடங்குகிறது. அது பற்றிய தீர்மானம் வருமாறு :
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் 21.2.2017 அன்று அறிவித்த வறட்சி நிவாரண நிதி உதவிகள் மிகவும் குறைவானவை. சூடேறிய பாத்திரத்தில் சில நீர்த்துளிகள் உடனே ஆவியாகிவிடுவதைப் போல் இந்த நிவாரணத் தொகை உழவர்களின் துயர் துடைக்கப் போவதில்லை.
இந்திய அரசு தர வேண்டிய நிதி உதவியை பெறவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு உரிய அழுத்தம் தரவில்லை. இந்திய அரசு அதிகாரிகள் கள ஆய்வு செய்துவிட்டு, கடமை முடிந்தது என்று தமிழ்நாட்டைக் கைவிட்டு விட்டார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
வறட்சியால் தமிழ்நாட்டுச் சாகுபடி பாதிப்பு என்று புள்ளி விவரம் தந்த முதலமைச்சர், கர்நாடகம் தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் திறந்துவிடாமல் அபகரித்துக் கொண்டதால் காவிரிப் பாசனப் பகுதியில் செயற்கையான வறட்சி உண்டாக்கப்பட்டதைப் பற்றி வாய் திறக்க மறுத்தது ஏன்?
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட இருந்த நிலையில், அதைத் தடுத்துவிட்ட நடுவண் அரசு, இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. இந்த அநீதியால், காவிரிப் பாசன மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டு, சாகுபடி அழிந்தது பற்றி முதல்வர் அறிக்கையில் குறிப்பிடாதது பெரும் ஏமாற்றமாக உள்ளது.
கடந்த காலங்களில் காவிரி உரிமை மீட்பில் முழு அக்கறை செலுத்தாமல், இந்தியத் தலைமை அமைச்சருக்குக் கடிதம் எழுதுவது, உச்ச நீதிமன்றத்தில் மனுப்போடுவது என்ற அளவில் தமிழ்நாடு அரசு தனது செயல்பாட்டைக் குறுக்கிக் கொண்டதால் – அரசியல் அழுத்தம் தர எந்த முயற்சியும் எடுக்காததால் - காவிரி உரிமைச் சிக்கலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கூட செயல்படுத்திக் கொள்ள முடியாத அவலம் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டது.
இதனால் துணிச்சல் பெற்ற கர்நாடகம் இப்போது 5,912 கோடி ரூபாயில் மேக்கேதாட்டில் காவிரியின் குறுக்கே 66.50 ஆ.மி.க. (TMC) கொள்ளளவில் புதிய அணை கட்டும் வேலையில் இறங்கிவிட்டது.
தமிழ்நாடு அரசு தற்காப்பு உணர்ச்சியற்று இருக்கிறது; தற்காப்பு அக்கறையற்று இருக்கிறது; தற்காப்பு ஆற்றலற்று இருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த செயலின்மையை கண்டு கொண்ட கேரளம் பவானி ஆற்றில் ஆறு இடங்களில் தடுப்பணைகள் கட்டுகிறது. ஆந்திர அரசு மேலும் புதிதாகப் பாலாற்றில் இப்போது தடுப்பணை கட்டுகிறது.
தமிழ்நாட்டு உரிமைகளையும் வாழ்வாதாரங்களையும் காக்கும் ஆற்றலும் அக்கறையும் அற்ற தமிழ்நாடு அரசைக் கண்டிப்பதுடன் அதனை விரைந்து செயல்பட வலியுறுத்தியும்,
திட்டமிட்டு, தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் இந்திய அரசைக் கண்டித்தும் 14.3.2017 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியிலிருந்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்ந்து முற்றுகை இடும் போராட்டத்தைக் காவிரி உரிமை மீட்புக் குழு நடத்த முடிவு செய்துள்ளது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை முற்றுகைப் போராட்டம் தொடரும்.
கோரிக்கைகள்
1. தமிழ்நாடு அரசே, இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, கர்நாடகம் மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்து!
1. தமிழ்நாடு அரசே, இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, கர்நாடகம் மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்து!
2. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட இந்திய அரசுக்கு நெருக்குதல் கொடு!
3. இந்திய அரசிடம், வறட்சி நிவாரண சிறப்பு நிதி பெற்று சாகுபடி இழந்த உழவர்களுக்கு 1 ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கு. உழவுத் தொழிலாளர்களுக்கு 1 குடும்பத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் உதவித்தொகை வழங்கு. மக்களுக்குக் குடிநீர் கிடைக்க உறுதி செய்!
அனைத்துக் கால்நடைகளுக்கும் தீவனமும் குடிநீரும் கிடைக்க ஏற்பாடு செய்!
4. சாகுபடி அழிந்ததைக் கண்டு உயிரிழந்த உழவர்கள் அனைவரின் குடும்பத்திற்கும் தலா 15 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கு!
5. இந்திய அரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் உழவர்கள் பெற்ற கடன் அனைத்தையும் எந்த வரம்புமின்றித் தள்ளுபடி செய்!
6. தனியார் கடன் வசூலை ஓராண்டிற்குத் தள்ளி வை!
7. காவிரிச் சமவெளியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு! காவிரிச் சமவெளியில் மீத்தேன், எரிவளி, பெட்ரோலியம், நிலக்கரி உள்ளிட்ட எந்தக் கனிம வளமும் எடுப்பதற்குத் தடை போடு! முற்றிலுமாக மணற்கொள்ளையைத் தடுத்து நிறுத்து!
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
இணையம்: www.kaveriurimai.com
பேச: 94432 74002, 76670 77075
முகநூல் : www.fb.com/kaveriurimai
Leave a Comment