ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தில்லியில் தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா? அல்லது அயல் நாட்டினரா? இந்திய அரசே உடனே தலையிடு! பெ. மணியரசன் அறிக்கை!

தில்லியில் தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா? அல்லது அயல் நாட்டினரா? இந்திய அரசே உடனே தலையிடு! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!
#SaveMotherCauvery
இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வஞ்சித்து விட்டதாலும், பருவமழைப் பொய்த்து விட்டதாலும் வரலாறு காணாத வறட்சியில் தமிழ்நாடு தத்தளித்துக் கொண்டுள்ளது. இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு உழவர்கள், தண்ணீரின்றி வாடிய பயிர்களைக் கண்டு அதிர்ச்சியில் இறந்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த உழவர் குடும்பங்களுக்கும், நட்டமடைந்துள்ள உழவர்களுக்கும் உரிய வறட்சி நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு சற்றொப்ப ரூ. 39,565 கோடி கேட்ட நிலையில், இந்திய அரசு வெறும் 1,748 கோடி ரூபாயே வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டு உழவர்களுக்கு முழுமையாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும், உழவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மார்ச்சு மாதம் முதல் வாரத்திலிருந்து இந்தியத் தலைநகர் புதுதில்லியின், ஜந்தர் மந்தர் பகுதியில், கடும் குளிரையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் - தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழ்நாட்டு உழவர்கள் போராடி வருகின்றனர். அவர்களது போராட்டம் தற்போது அனைத்திந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
உரிய அளவில் வறட்சி நிவாரணம் வழங்காத இந்திய அரசு, தலைநகர் தில்லியில் நாள்தோறம் நடைபெற்று வரும் தமிழக உழவர்களின் போராட்டத்திற்கு உரிய மதிப்பைக் கூட அளிக்கவில்லை. தமிழ்நாடு அரசு உரியவாறு இந்த உழவர் போராட்டத்தைப் பயன்படுத்தி, இந்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்க இதுவரை தகுந்த முயற்சி எடுக்கவில்லை. அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு துறையினரும் மட்டுமே அவர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அரசு, தமிழ்நாடு அரசு கோரிய அளவுக்கு முழு அளவிற்கு வறட்சி நிவாரணத்தை அளிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து ஆணையிட வேண்டும்.
இந்த கோரிக்கைகளுக்காகவும், காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலமாக அறிவிக்க வேண்டும், தமிழக ஆறுகளில் நடக்கும் மணல் விற்பனையை நிறுத்திவிட்டு – உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் அது குறித்து ஆய்வு நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, நாளை (மார்ச்சு 28) முதல், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாள்தோறும் தொடர்ந்து முற்றுகையிடப்படும் அறப்போராட்டத்தை நடத்தவுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெ. மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு.

இடம்: தஞ்சை.

இணையம்:www.kaveriurimai.com
பேச: 94432 74002, 76670 77075

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.