ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கன்னடர்களின் நல்லுறவுக்காகக் காவிரியைக் காவு கொடுக்கத் துடிக்கிறார் மு.க. ஸ்டாலின். பெ. மணியரசன் அறிக்கை!

கன்னடர்களின் நல்லுறவுக்காகக் காவிரியைக் காவு கொடுக்கத் துடிக்கிறார் மு.க. ஸ்டாலின். காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!
தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று (27.06.2017) இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், அனைத்திந்திய அளவில் ஆற்று நீர் இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அம்மடலில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை அவர் முன்வைக்கவில்லை! அதுமட்டுமின்றி, தமிழர்கள் காவிரி நீர் உரிமை கோருவதைப் புறந்தள்ளிவிட்டு, கங்கை நீர் இணைப்பைக் கோர வேண்டும் என்று மடைமாற்றும் ஸ்டாலின் உள்நோக்கமும் அதில் பொதிந்துள்ளது! அக்கடிதத்தில், அவர் எழுதிய வரிகளே இதற்குச் சான்று!

“உன்னதமான இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகள் தீர்வதோடு, அண்டை மாநிலங்களுக்கு இடையில் அமைதி நிலவி தேசிய ஒருமைப்பாட்டினை மேலும் வலுவாக்கவும், தேசிய வளர்ச்சி மற்றும் தேசிய பொருளாதாரம் மேம்படவும் மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதால் நதிநீர் இணைப்புத் திட்டங்களில் தாங்கள் (பிரதமர்) உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.

அண்டை மாநிலங்களுக்கு இடையிலுள்ள தண்ணீர்ச் சிக்கல் தீர்ந்து அவற்றிற்கிடையே அமைதி நிலவ அனைத்திந்திய ஆற்று நீர் இணைப்பு உதவும் என்ற ஸ்டாலின் கூற்றில், கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள காவிரிச்சிக்கலையும் உள்ளடக்கித்தான் கூறுகிறார் என்பது தெளிவு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று இந்திய அரசை வலியுறுத்தித் தமிழர்கள் தமிழகந்தழுவிய அளவில் முழுஅடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தி வரும் இக்காலத்தில், அக்கோரிக்கையை மடைமாற்றுவது போல் அனைத்திந்திய ஆற்று நீர் இணைப்பை முன்னிறுத்துகிறார் ஸ்டாலின். முன்னாள் நடுவண் அமைச்சர் கே.எல். இராவ் அவர்கள், 1972இல் பேசிய கங்கை – காவரி இணைப்பை அக்கடிதத்தில் நினைவூட்டியுள்ளார்.

கங்கை - காவிரி இணைப்பை அக்காலத்திலிருந்து இக்காலம் வரை உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். வாச்பாயி தலைமையமைச்சராக இருந்தபோது அமைக்கப்பட்ட கங்கை காவிரி இணைப்புக் குழுவை லல்லு பிரசாத் கடுமையாக எதிர்த்தார். “கங்கையிலிருந்து வாய்க்கால் வெட்டினால் அதில் தண்ணீர் ஓடாது, இரத்தம்தான் ஓடும்” என்று அப்போது எச்சரித்தார். பின்னர், செயல்பட முடியாத கங்கை – காவிரி இணைப்புக் குழு கலைக்கப்பட்டது.

கங்கையிலிருந்து தென்னாட்டிற்குத் தண்ணீர் கொண்டுவர வடநாட்டவர் ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதேபோல், மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கொண்டுவர ஒரிசா, ஆந்திரா, தெலங்கானா அரசுகளும், அம்மாநிலங்களின் மக்களும் ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

ஏற்கெனவே இயற்கை இணைத்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு ஓடி வந்த காவிரி, பாலாறு, தென்பெண்ணை ஆகியவற்றை சட்டவிரோதமாக அண்டை மாநிலங்கள் பறித்துக் கொண்டு, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வராமல் தடுத்துவிட்டன. ஆங்கிலேய அரசு 120 ஆண்டுகளுக்கு முன் கட்டித்தந்த முல்லைப் பெரியாறு அணையையும் இடிக்க வேண்டுமென்று கேரளாவைச் சேர்ந்த காங்கிரசு – கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் கங்கணம் கட்டிச் செயல்படுகின்றன. கர்நாடகத்தில், காவிரியைத் தடுப்பது காங்கிரசு – பா.ச.க. – மதச்சார்பற்ற சனதா தளம் ஆகிய அனைத்திந்தியக் கட்சிகளே!

இந்த உண்மைகள் மு.க. ஸ்டாலினுக்கு நன்கு தெரியும். தெரிந்தே காவிரி உரிமைப் போராட்டத்தை திசை திருப்பி, மடை மாற்றுவதற்காக கங்கை காவிரி இணைப்புத் திட்டத்தை அவர் இப்பொழுது தமிழர்களிடையே முன்னுக்குக் கொண்டு வருகிறார்.

வரலாற்று வழியாகவும் சட்டத்தின்படியும் தமிழ்நாட்டுக்கு உரிமையாய் உள்ள காவிரி உரிமையை இன்றுவரை அண்டை மாநிலத்திலிருந்து மீட்க முடியாமல் போராடிக் கொண்டுள்ளோம். இந்நிலையில், இமயமலையிலிருந்து கங்கை நீரை காவிரி ஆற்றுக்குக் கொண்டு வருகிறேன் என்று மு.க. ஸ்டாலின் புறப்பட்டிருப்பது, விவரம் தெரியாமல் அல்ல! விவரத்தோடுதான் திசைதிருப்புகிறார்.

காவிரித்தாயை தங்கள் நினைவிலிருந்து தமிழர்கள் அகற்ற முடியாமல் மீண்டும் மீண்டும் கர்நாடகத்தோடு காவிரி நீர் உரிமை கேட்டு, வீதிக்கு வந்து போராடுகிறார்கள். தமிழ்நாட்டில் இந்தப் போராட்டம் வலுப்பெற்றால், கன்னடர்களுக்கு எதிரான தமிழின உணர்ச்சி வளரும். அவ்வாறு கன்னடர்களுக்கு எதிரான தமிழுணர்ச்சி தமிழ்நாட்டில் மக்கள் போராட்டமாக வடிவெடுத்தால், தி.மு.க. தலைவர்களின் சொந்தங்களும் சொத்துகளும் கர்நாடகத்தில் இருக்கும் நிலையில், அவர்களுக்கு இக்கட்டான நிலை ஏற்படும்.

தமிழ்நாட்டில் எழும் காவிரிப் போராட்டத்தை ஆதரிக்கவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாமல் திண்டாட வேண்டிய நிலை தி.மு.க.வுக்கு ஏற்படும். அதன் தன்னலச் சந்தர்ப்பவாதம் அம்பலப்பட்டுவிடும் என்று அஞ்சியே “காவிரியை மற – கங்கையை நினை” என்ற உபதேசத்தை ஸ்டாலின் பரப்பத் தொடங்கியுள்ளார் என்று காவிரி உரிமை மீட்புக் குழு வலுவாக ஐயுறுகிறது.

எங்கள் ஐயம் தவறு என்றால், ஸ்டாலின் கங்கை காவிரி இணைப்பு என்ற கானல் நீர் திட்டத்தை மறுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், பாலாறு – பவானி ஆறுகளில் அண்டை மாநிலங்கள் கட்டும் தடுப்பணைகளைத் தகர்த்தெறிய கோரிக்கை வைத்தும் இந்தியப் பிரதமருக்கு புதிய மடல் எழுத வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
www.kannotam.com
www.Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.