ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

"கூமுட்டை குஞ்சு பொரிக்காது!" தமிழர் கண்ணோட்டம் தலையங்கம்!

"கூமுட்டை குஞ்சு பொரிக்காது!" தமிழர் கண்ணோட்டம் தலையங்கம்!

அ.இ.அ.தி.மு.க.வின் குழுச் சண்டையில் இந்தியாவின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தலையிடுகிறார் என்பது 14.08.2017 அன்று புதுதில்லியில் ஓ. பன்னீர்ச்செல்வம் அவர்களுடன் 1 மணி நேரம் தனிமையில் அவர் விவாதித்தார் என்ற செய்தி உறுதிப்படுத்துகிறது.

ஓ. பன்னீர்ச்செல்வமும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் பா.ச.க. தலைமையால் இயக்கப் படுகிறார்கள்; டி.டி.வி. தினகரன் பா.ச.க. தலைமையின் விருப்பத்திற்கு இணங்காமல் தனித்துவம் காப்பதுபோல் செயல்படுகிறார் என்று சமூக வலைத்தளங்களில் சசிகலா ஆதரவாளர் சிலர் எழுதி வந்தனர். 

தமிழ்த்தேசியம் பேசுவோரிலும் ஒரு சாரார், பா.ச.க. நடுவண் அரசின் ஆதிக்கத்தையும் தலையீட்டையும் எதிர்க்கும் வகையில் சசிகலா அணியை ஆதரிப்பதாகச் சொல்லி வருகிறார்கள். 

மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் 14.08.2017 அன்று பேசிய டி.டி.வி. தினகரன் தமது பேச்சின் இறுதியில், நடுவண் அரசுடன் அ.தி.மு.க. அமைச்சர்கள் இணக்கமாகச் செயல்பட்டு, அவர்கள் செயல்படுத்தும் சிறப்பான திட்டங்களைத் தமிழ்நாட்டிலும் நன்கு செயல்படுத்த முயல வேண்டும் என்று கூறினார். “அ.இ.அ.தி.மு.க.வில் என் தலைமை உறுதிப்பட்டால் இணங்கிப்போவேன். எதிர்ப்பு அரசியல் நடத்த மாட்டேன்; எனவே நீங்கள் என்னை எதிர்க்க வேண்டியதில்லை” என்பதைத் தில்லிக்குத் தெரிவிக்கவே, டி.டி.வி. மேற்படி “இணக்க” அறிவுரை வழங்கினார்.

கல்வி அதிகாரம், வணிக வரி அதிகாரம் ஆகியவற்றைத் தமிழ்நாட்டிடம் இருந்து பறித்துக் கொண்டு நீட் தேர்வு கொண்டு வந்தாலும், சரக்கு - சேவை வரி (ஜி.எஸ்.டி.) கொண்டு வந்தாலும் பா.ச.க. ஆட்சிக்கு அடிபணிந்து செல்வோம் என்பதை அ.இ.அ.தி.மு.க.வின் மூன்று அணிகளும் உறுதிபடத் தெரிவிக்கின்றன. 

இந்திய விடுதலை நாள் (15.08.2017) கொடியேற்ற உரையில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டு உரிமைகளைக் காப்பது - மீட்பது பற்றி எதுவும் கூறவில்லை. தமிழ்மொழி வளர்ச்சி பற்றியோ - இந்தித் திணிப்பை ஏற்க மாட்டோம் என்பது பற்றியோ எதுவும் அவர் கூறவில்லை. காவிரி, பாலாறு, பவானி, தென்பெண்ணை ஆற்று உரிமைகளைக் காப்பது - கச்சத்தீவை மீட்பது பற்றி எதுவும் பேசவில்லை. 

இதே இந்திய விடுதலை நாள் கொடியேற்ற உரையில், கர்நாடகக் காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா, “கர்நாடகத்தில் அயல் மொழி ஆக்கிரமிப்பை அனுமதிக்க மாட்டோம்” என்று உறுதிபடத் தெரிவித்து - இந்தித் திணிப்பு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் கர்நாடகத்தில் உள்ள காவிரி அணைகளைப் புதுப்பிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். 

இதன் பொருள் கிருஷ்ணராஜசாகர், ஏமாவதி, ஏரங்கி, கபினி, இலட்சுமண தீர்த்தம் உள்ளிட்ட காவிரி நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை அதிகப்படுத்திக் கொள்வது என்பதாகும். மேக்கேதாட்டில் புதிய அணை கட்டித் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூடப் போகாமல் தடுப்பது ஒருவகைத் திட்டம். அதில் காலதாமதமோ சிக்கல்களோ ஏற்பட்டால் ஏற்கெனவே உள்ள அணைகளின் கொள்ளளவை அதிகப்படுத்தி, மேக்கேத்தாட்டு திட்டத்தை இந்த வகையில் நிறைவேற்றிக் கொள்வது என்பது இன்னொரு புதிய திட்டம்! 

காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாடு அரசு முல்லைப்பெரியாறு சிற்றணையை வலுப்படுத்தும் கட்டுமானப் பணிகளைக் கேரள அரசு தடுக்கக் கூடாது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை காவிரியிலும் முல்லைப் பெரியாறு அணையிலும் நடுவண் அரசு செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட எடப்பாடி பழனிச்சாமி விடுதலை நாள் உரையில் குறிப்பிடவில்லை. 

அண்டிப் பிழைக்கும் ஆதாய அரசியல் நடத்துவதால் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டின் உரிமைகளை விடுதலை நாள் உரையில் வெளிப்படுத்தவில்லை. ஆளத்துடிக்கும் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட விடுதலை நாள் அறிக்கை பாரதமாதா பசனையில் படுவேகம் காட்டுகிறது.
“உலக அரங்கில் இந்தியா ஒரு வல்லரசாக உயரவும், இந்தச் சுதந்திர தினத்தன்று நாம் அனைவரும் முழு மனதுடன் சபதம் ஏற்போம்” என்கிறார். 

காவிரி உரிமை, முல்லைப் பெரியாறு உரிமை, நீட் தேர்வு நீக்கம், வணிக வரி உரிமை மீட்டல், இந்தித் திணிப்பு - சமற்கிருதத் திணிப்பு ஆகியவற்றைக் கைவிடக் கோருதல், கச்சத்தீவு மீட்டல், மாநில சுயாட்சி கோருதல் போன்ற எந்த உரிமைக் கோரிக்கையும் மு.க. ஸ்டாலினது “வல்லரசு சபத” அறிக்கையில் இல்லை. 

“ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைத் தூக்கி எறிந்து அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாகவும், சம உரிமையுடனும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள சகல சுதந்திரங்களுடனும் செயலாற்றி, இந்நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், பன்முகத் தன்மைக்கும், முன்னேற்றத்துக்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபட வேண்டும்”. 

மு.க. ஸ்டாலின் என்ற பெயர் போடாமல் இந்த அறிக்கையைப் போட்டிருந்தால், தில்லிச் செங்கோட்டையில் நரேந்திர மோடியின் பேச்சு என்றே மக்கள் புரிந்து கொண்டிருப்பர்! 

தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் திருநாவுக்கரசர், சென்னை சத்தியமூர்த்தி பவனில் விடுதலை நாள் கொடி ஏற்றும்போது, தலையில் வடநாட்டுத் தொப்பி அணிந்து கொண்டார். இந்தியத்தேசியம் என்றால் அதில் வடநாட்டு அடையாளம் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது காங்கிரசாரின் உளவியல்! நடைமுறை உண்மையும் அதுதான்! 

“பெற்ற விடுதலையைப் பேணிக் காப்போம் - பெருமை சேர்ப்போம்” என்று கூறி நம்முடைய சீமான் இப்போதுதான் புதிய வடிவில், தமது பாணி தி.மு.க.வுக்கு ஆனா ஆவன்னா எழுதத் தொடங்கியுள்ளார். அவரும் பறிபோன தமிழர் உரிமைகள் பற்றியோ, உரிமை மீட்பு பற்றியோ தமது விடுதலை நாள் அறிக்கையில் எழுதவில்லை. 

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி தமிழ் மண்ணைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனை - ஆர்க்காடு நவாப்பை காட்டிக் கொடுக்கும் கயமையின் சின்னங்களாகப் பார்க்கிறோம். ஆனால் அந்த எட்டப்பனைவிட, ஆர்க்காடு நவாப்பைவிட மிகமிகக் கேவலமாக அ.தி.மு.க. - தி.மு.க. தலைவர்கள் நடந்து கொள்கிறார்கள். ஏன் இவ்வாறு சொல்கிறோம்?

இதோ ஸ்டாலின் அறிக்கையைப் பாருங்கள். “ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைத் தூக்கியெறிந்து, இந்தியா வல்லரசாகச் சபதம் ஏற்போம்” என்று கூறியுள்ளாரே, இதன் பொருள் என்ன? நம் தமிழை, நம் தமிழினத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, பாரதீய வல்லரசுப் பசனையில் சங்கமிக்க வேண்டும் என்பதுதானே இதன் பொருள்!

தமிழ்நாட்டின், தமிழினத்தின் உரிமைகளை ஸ்டாலின் வலியுறுத்தாதது ஒருபக்கம்; நம்முடைய இன, மொழி உரிமைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, இந்திய ஏகாதிபத்திய வெள்ளத்தில் மூழ்கச் சொல்வது என்ன ஞாயம்? 

இதே ஸ்டாலின், கடந்த மாதம் தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்குத் திடீர் மடல் ஒன்று எழுதினார். கங்கை - காவிரி இணைப்பைத் தொடங்குங்கள்; அப்போதுதான் அண்டை மாநிலங்களுக்கிடையே நிலவும் தண்ணீர்ச் சண்டையைத் தீர்க்க முடியும் என்று அதில் கூறியிருந்தார். “காவிரியை மற - கங்கையை நினை” என்று தமிழர்களுக்கு மறைமுகமாகச் சொல்லித் தருகிறார் ஸ்டாலின். காவிரி பறிபோனாலும் கர்நாடகத்துடன் நல்லுறவு தொடர வேண்டுமென விரும்புகிறார்! 

தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வை அந்தந்தக் காலத்திற்கேற்ப இந்திய ஆட்சியாளர்கள் - தங்களின் கீழ் சேர்த்துக் கொண்டு, தமிழ்நாட்டின் அரசியலை இயக்குகிறார்கள். காங்கிரசும் பா.ச.க.வும் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தி.மு.க.வைக் கீழ்படுத்திக் கொண்டோ அல்லது தி.மு.க.வில் பிளவை ஏற்படுத்தி, பிரிந்து வந்த அ.தி.மு.க.வைக் கீழ்ப்படுத்திக் கொண்டோ காங்கிரசு தமிழ்நாட்டில் அரசியல் நடத்தியது. தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க. 1972இல் பிரிந்த போது, அதன் பின்னணியில் அன்றையத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி இருந்தார். 

இப்போது அ.இ.அ.தி.மு.க.வின் குழுச் சண்டையை வேகப்படுத்தி, பிளவுபடுத்தி பா.ச.க. அரசியல் நடத்துகிறது. 

தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கழகங்கள் தமிழின உரிமைக் காப்புக் கட்சிகளாகவோ - உரிமை மீட்புக் கட்சிகளாகவோ, இனி ஒரு போதும் செயல்பட முடியாது. அவற்றில் பிளவு ஏற்பட்டால் அது இலட்சியப் பிளவாக இருக்காது. தன்னல ஆதாயம் - அதற்காக அண்டிப் பிழைக்கும் உத்தி ஆகியவற்றின் அடிப்படையிலேயே அப்பிளவுகள் அமையும்! 


கூமுட்டை குஞ்சு பொரிக்காது; கொள்கையற்றக் கழகங்கள் உரிமை காக்காது! 


“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” - தமிழ்த்தேசிய மாதமிருமுறை இதழின் ஆகத்து 16-31 இதழின் தலையங்கம் இது!

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.