ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்த்தேசியர்கள் பெரியாரை விமர்சித்ததுதான் சாதிப் படுகொலைகளுக்குக் காரணம் என்பது உண்மையா? வழக்கறிஞர் அருள்மொழிக்கு தோழர் பெ. மணியரசன் கேள்வி!

தமிழ்த்தேசியர்கள் பெரியாரை விமர்சித்ததுதான் சாதிப் படுகொலைகளுக்குக் காரணம் என்பது உண்மையா? வழக்கறிஞர் அருள்மொழிக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கேள்வி! 
அண்மையில் மாணவி அனிதாவுக்கு இரங்கல் தெரிவித்த கூட்டத்தில் இயக்குநர் அமீர், வடநாட்டு ஊடகங்கள் அனிதாவை “தலித்” என்று உள்நோக்கத்தோடு பிரித்துப் பேசுகின்றன, அவர் தமிழ்ப்பெண், அவருடைய மரணம் – தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று குறிப்பிட்டார். அப்போது கூட்டத்திலிருந்து பாய்ந்து மேடைக்கு வந்த இயக்குநர் ரஞ்சித், அமீரிடமிருந்து ஒலிவாங்கியைப் பிடுங்கிக் கொண்டு, “தமிழ், தமிழன் என்று சொல்லாதீர்கள், தமிழன் என்று சொல்லிக் கொண்டு சாதிக் கொடுமைகள் நடக்கின்றன, நாங்கள் தலித்துகள்” என்று ஆத்திரத்தோடு பேசினார். திரும்பத் திரும்ப மைக்கைப் பிடுங்கிக் கொண்டு, அமீரைப் பேசவிடாமல் தடுத்துவிட்டார். இதற்கு எதிர்வினையாக, தமிழ்த்தேசியர்கள் இயக்குநர் ரஞ்சித் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்து ஆங்கில நாளேடு இதுபற்றி இன்று (17.09.2017), ஒரு செய்தித் தொகுப்பு வெளியிட்டிருக்கிறது. அதில், கருத்துக் கூறிய திராவிடர் கழகப் பொறுப்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள், “மேல்சாதி பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக தலித் இளைஞர்கள் கொல்லப்படுவது, இன்றைக்கு நடப்பதைப்போல் 1990களில் நடக்கவில்லை. இப்பொழுது படுகொலைகள் நடப்பதற்கானக் காரணம், தலித்தியர்களும், தமிழ்த்தேசியர்களும் பெரியாரை விமர்சித்ததுதான்! இதன் விளைவுதான் தருமபுரி நாயக்கன்கொட்டாய் தீ வைப்புச் சம்பவம் (2012)” என்று கூறியுள்ளார்.

திராவிடர் கழகத்தில் பன்முகப் பார்வையும், பண்பான விவாதமும் செய்யக்கூடியவர் வழக்கறிஞர் அருள்மொழி. ஆனால், மேற்கண்ட அவரது விமர்சனம் தன்நோக்குவாதம் (Subjectivism) சார்ந்ததாக உள்ளது. அவருக்கு சில கேள்விகள்!

1968இல் (25.12.1968), அண்ணா முதல்வராக இருக்கும்போது - பெரியார் தெம்பாகப் பரப்புரை செய்து கொண்டிருந்த காலத்தில், கீழவெண்மணியில் குழந்தைகள் உட்பட ஒடுக்கப்பட்ட வகுப்பினர் 44 பேர் – ஒரு குடிசையில் வைத்து, மேல்சாதியினரால் எரித்துக் கொல்லப்பட்டார்களே!

திராவிட ஆட்சியில் - பெரியாரின் பகுத்தறிவுப் பரப்புரை நடந்த காலத்தில் இது நடந்தது ஏன்? வெண்மணிப் படுகொலைக்கு உரியவாறு உடனடியாக ஒரு கண்டன அறிக்கைகூட பெரியார் அப்போது தரவில்லை என்பதும், அந்த கொடுமை நடந்த இடத்தை பெரியார் போய் பார்த்து – மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை என்பதும் கூடுதல் செய்தி!

அதேகாலத்தில் 1968 நவம்பர் 17 அன்று, நாகப்பட்டினம் சிக்கல் கடைத்தெருவில், ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பக்கிரிசாமி என்ற கம்யூனிஸ்ட் தோழர் பட்டப்பகலில் ஆதிக்கசக்திகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். அதுபோன்று ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த பலர் அக்காலத்திலும் – அதாவது பெரியார் வாழ்ந்த காலத்திலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பெரியார் ஆதரித்த காமராசர் ஆட்சி நடந்த காலத்தில், 1950களில் இராமநாதபுரம் மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடியபோது, அதை எதிர்த்த இமானுவேல் சேகரனார் 11.09.1957 அன்று கொலை செய்யப்பட்டதும், பெரும் கலவரம் மூண்டதும் – ஏன் நடந்தது?
பெரியார் காங்கிரசு ஆட்சியை ஆதரித்துக் கொண்டிருந்த போதும், பிறகு தி.மு.க. ஆட்சியை ஆதரித்துக் கொண்டிருந்தபோதும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தேநீர் கடைகளில் தனிக்குவளையில் தேநீர் கொடுத்த முறை – தமிழ்நாடெங்கும் பரவலாக - மிக அதிகமாக இருந்தது. அண்மைக்காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தினாலும், பிற்படுத்தப்பட்ட மற்றும் முன்னேறிய வகுப்பிலுள்ள சனநாயக ஆற்றல்களின் பரப்புரையாலும் போராட்டத்தாலும் இரட்டைக் குவளை முறை பெருமளவு குறைந்துவிட்டது. இதுபற்றி வழக்கறிஞர் அருள்மொழி என்ன விடை சொல்கிறார்?

அண்மைக்காலங்களில் தலித் ஆண்கள் மேல்சாதிப் பெண்களை திருமணம் செய்து கொண்டதால், சில இடங்களில் அந்த ஆண்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது பெரும் கொடுமை! தமிழினத்திற்கே அவமானம்! ஆனால், வழக்கறிஞர் அருள்மொழி கூறுகின்ற 1990கள் – அல்லது அதற்கு முந்தைய காலத்தைவிட, ஒடுக்கப்பட்ட வகுப்பு ஆண்கள் மேல்சாதிப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு இல்லறம் நடத்தக்கூடிய நிகழ்வுகள் இப்பொழுது அதிகரித்துள்ளன என்ற உண்மையை மறுக்கிறாரா?

1980களுக்குப் பிறகு, தலித்திய – தமிழ்த்தேசியப் பரப்புரைகள் இல்லாத காலத்தில், தி.மு.க.வினர் தங்களுடைய குடும்பத் திருமண அழைப்புகளில் சாதிப் பட்டம் போட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள். சாதிச் சங்கங்களில் பொறுப்பேற்றார்கள். இதற்கெல்லாம் யார் காரணம்?

திராவிட முன்னேற்றக் கழகம், தனது கட்சியின் ஒன்றியச் செயலாளர் – மாவட்டச் செயலாளர் போன்ற பொறுப்புகளையும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வாய்ப்புகளையும் சாதி பார்த்துதான் ஒவ்வொரு பகுதியிலும் வழங்கியது. இப்போக்கு 1970களிலிருந்து மிகவும் தீவிரமடைந்தது. பொதுத் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பினரை வேட்பாளராக தி.மு.க. நிறுத்துவதில்லை. ஆசிரியர் வீரமணியால் “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் வழங்கிப் பாராட்டப்பட்ட செயலலிதாவின் அ.தி.மு.க.வும் இதையேதான் செய்தது. திராவிடக் கட்சிகளின் இந்த சாதியப் போக்கு தமிழ்த்தேசியம் தோன்றி பெரியாரை விமர்சிப்பதற்கு முன்பாகவே ஏற்பட்டுவிட்டது. இதற்கு யார் காரணம்?

வழக்கறிஞர் அருள்மொழி, தலித்தியர்களும் தமிழ்த்தேசியர்களும் பெரியாரை விமர்சித்ததால்தான் சாதிக் கொடுமைகள் அதிகரித்துவிட்டன என்று கூறுவது, பெரியாரிய சிந்தனையை ஏற்றுக் கொண்ட திராவிடக் கட்சிகளைவிட தலித்திய அமைப்புகளும் தமிழ்த்தேசிய அமைப்புகளும் சமூகச் செல்வாக்கோடு பெரும் அமைப்புகளாக வளர்ந்துள்ளனவா? அல்லது வழக்கறிஞர் கூறுவதுபோல், தலித்திய – தமிழ்த்தேசிய அமைப்புகள் பெரியாருக்கு எதிராக செய்யும் விமர்சனத்தை பின்னுக்குத் தள்ளக்கூடிய ஆற்றல் திராவிட இயக்கங்களுக்கு இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது.

சாதிய சங்கங்களும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வன்கொடுமைகளும் அதிகரித்ததற்கான காரணங்கள் என்று நாங்கள் பின் வருபவற்றை கருதுகிறோம்.

1960களில் தி.மு.க. குடும்பத்தினரின் திருமண அழைப்புகளில் மணமக்கள் பெற்றோர் பெயர்களில் பெரும்பாலும் சாதிப்பட்டம் இருக்காது. இப்பொழுது, தி.மு.க.வினர் சிறுவர்களாக உள்ள பேரக் குழந்தைகளின் பெயர்களில் கூட சாதிப்பட்டம் போட்டு திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கிறார்கள். இதுபோல் அவர்கள் எல்லா நிலைகளிலும் சாதியை முன்னிறுத்தும் போக்கு வளர்ந்திருக்கிறது.

அதைப்போலவே, திருமண அழைப்பிதழ்களில் கம்யூனிஸ்ட்டு கட்சியினரும் சாதி போடும் பழக்கம் இப்போது உருவாகியிருக்கிறது. இதற்கான காரணங்கள் :

1. 1960களில் தி.மு.க, இன விடுதலை – நாட்டு விடுதலை என்ற இலட்சியத்தை முன்வைத்து இயங்கியது. நாட்டு விடுதலையைக் கைவிட்டு, ஆட்சிக்கு வந்த பின் அதிகாரம் – ஊழல் என்ற நிலையில், தி.மு.க. சீரழிந்தது. இலட்சியமில்லாத அமைப்பின் பொறுப்பிலும், உறுப்பிலும் இருப்பவர்களிடையே சமூகச் சீரழிவுகள் தோன்றுவதும், அது தொற்றுநோய் போல் சமூகம் முழுவதும் பரவுவதும் இயல்பே!

அதைப்போல், இரசியப்புரட்சி – சீனப்புரட்சி போல் இங்கேயும் புரட்சி நடக்கப் போகிறது என்ற இலட்சியத்தை முன்வைத்து இயங்கிய கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள், அந்த இலட்சியத்தைக் கைவிட்டபிறகு, அதற்கு மாற்றாக வேறொரு புதிய இலட்சியத்தை முன்வைக்காத நிலையில் - அதன் உறுப்பினர்களிடையே சீரழிவு ஏற்பட்டது.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை, எல்லா ஆளும் கட்சியையும் ஆதரித்து வந்திருக்கிறது. அரசியல் முடிவுகளில் மிகவும் பிற்போக்காக, சீரழிவு சக்திகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, தனிப்பட்ட பரப்புரையில் மட்டும் கடவுள் மறுப்பு – பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்று பேசுவதென்பது ஒரு தன் முரண்பாடு! அந்த தன் முரண்பாட்டுப் பரப்புரை, பெரிய பயன் தராது.

அத்துடன், பெரியார் காலத்திலும் சரி, அவருக்குப் பிந்தைய காலத்திலும் சரி, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பையே முதன்மைப்படுத்தி – பார்ப்பனரல்லாதோரிடம் உள்ள சாதி ஒடுக்குமுறையை – பார்ப்பன எதிர்ப்பு அளவுக்கு இல்லாவிட்டாலும் உரிய அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து திராவிடர் கழகம் பரப்புரை செய்யவில்லை!

இவையும், இன்னும் சிலவும் தமிழ்நாட்டுக்குள் உள்ள காரணங்கள்!

2. இதற்கு மேல், இந்தியத்தேசியம் என்பது ஆரியவாதம் மற்றும் பார்ப்பனிய வாதம்தான்! காங்கிரசு ஆட்சியிலும் பா.ச.க. ஆட்சியிலும் இந்த ஆரியப் பார்ப்பனியவாதம்தான், அரசு அதிகாரத்தோடு செயல்படுகிறது. மீண்டும் மீண்டும் வெவ்வேறு வழிகளில் வர்ணசாதி வலியுறுத்தப்படுகின்றன!

இந்த இந்திய ஆரியக் கட்டமைப்புக்குள் இருந்து வெளியேறுவதற்கு, திராவிடர் கழகம் எதுவும் செய்யவில்லை! பெரியார் காலத்திலும், அதற்குப் பிறகும் இந்தியத்தேசியவாதிகளை தொடர்ந்து ஆதரித்தே வந்திருக்கிறது. இன்றும், காங்கிரசோடு கூட்டணி போல் தி.க. செயல்படுகிறது.

வர்ணசாதிப் பிளவுகளிலும், அவை தொடர்வதிலும், சாதி ஒடுக்குமுறைகளிலும் இந்தியத்தேசிய ஆளும் வர்க்க சக்திகள் மூலகாரணமாக விளங்குகின்றன. இவற்றின்பால், திராவிடர் கழகத்தின் அணுகுமுறை என்ன?

தமிழ்த்தேசியம் – இந்தியத்தேசியத்தை மறுக்கிறது. தமிழ்த்தேசியம் முன்வைக்கும் தமிழர் அறம், “மனிதர்கள் அனைவரும் சமம், தமிழர்கள் அனைவரும் சமம்” என்கிறது. சாதி மதம் கடந்த சமத்துவம் மட்டுமல்ல, ஆண் – பெண் சமத்துவமும் தமிழர் அறத்தில் உள்ளது என்பதை தமிழ்த்தேசியவாதிகளாகிய நாங்கள் பரப்புரை செய்கிறோம். மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.

ஒடுக்கப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - முன்னேறிய வகுப்புகளின் தமிழர்கள் அனைவரும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக வரலாற்றில் வாழ்ந்து வருகிறோம். நம் முன்னோர்கள் அனைவரும் ஓர் இனத்தின் மூலவர்கள்! தமிழ்ச் சாதி அனைத்திற்கும் – தாய்மொழி தமிழ்! திருவள்ளுவப்பேராசான், கணியன் பூங்குன்றன், கரிகால்சோழன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் நெடுஞ்செழியன் போன்றோர், இன்று ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்கும் பொதுவானவர்கள்; நம்முடைய மூலவர்கள்!

ஆரியத்தின் வர்ணாசிரமம் கற்பித்த – பிறப்பால் உயர்வு தாழ்வு என்ற சாதிக் கொடுமைகள் பிற்காலத்தில் புகுந்து, நம்மைச் சீரழித்துவிட்டன. நம் இனம் தோன்றி வளர்ந்திருந்த அந்த காலத்து சமத்துவத்தை மீட்போம் என்ற இனவழிப்பட்ட இயற்கையான உறவு உணர்ச்சியை நாங்கள் தமிழர்களிடம் எடுத்துக் கூறி, ஒற்றுமைக்கான எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறோம். அதேவேளையில், சாதி ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிராக பரப்புரை மட்டுமின்றி, அங்கங்கே போராட்டங்களும் செய்து வருகிறோம்.

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழைப் படிக்காதே ஆங்கிலத்தையே படி என்றும் கூறியதோடு, தமிழினம் என்று சொல்வது குறைபாடுடையது – திராவிட இனம் என்பதே சரி என்று இல்லாத திராவிட இனத்தை – தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீது திணித்தது போன்ற பெரியாரின் பிழைகளை தமிழ்த்தேசியவாதிகள் விமர்சிப்பது குற்றமா? பெரியாரின் கருத்துகளைத்தான் பெரும்பாலான தமிழ்த்தேசியவாதிகள் விமர்சிக்கின்றனர். அவர் தமிழர் அல்லாதவர் என்பதை முதன்மைப்படுத்துவதில்லை! தமிழ் இனத்தில் பிறக்கவில்லை என்பதை அவருக்கான தகுதிக் குறைவாக தமிழ்த்தேசியப் பேரியக்கம் கருதவில்லை.

எங்களுடைய தமிழ்த்தேசியம் வளர்ச்சி பெற்று, முழு வீச்சில் மக்களிடையே செல்வாக்கு பெறும்போது, சாதி அடையாளங்கள் பின்னுக்குத் தள்ளப்படும். தமிழர்களிடையே ஒற்றுமை பெருமளவு ஏற்படும் என்பதை உறுதியாக நம்பலாம்!

இதற்கான முன்னோட்டம்தான், ஜல்லிக்கட்டு உரிமைப் போராட்டத்தில் சாதி கடந்து குமரி முனை முதல் கும்மிடிப்பூண்டி வரை தமிழர் என்ற உணர்ச்சியில் ஒன்று திரண்டது. இப்பொழுது, அனிதா உயிரிழப்புக்கு தமிழ்நாடு முழுக்க இரங்கல் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும், நீட் தேர்வை எதிர்த்துப் போராடுவதும் தமிழ் இன உணர்ச்சியோடுதான் நடைபெறுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.