ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும்” தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

“தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும்” தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
“நம்முடைய இளைஞர்களிடம் இன உணர்வு வளர்ந்து வருகிறது; தமிழ்த்தேசியம்தான் ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஆனால் தேர்தலில் பங்கெடுக்காமல், மாநில ஆட்சியைக் கைப்பற்றாமல் எப்படித் தமிழ்த்தேசியத்தை அடைய முடியும் என்று கேட்கிறார்கள். தேர்தலில் பங்கெடுப்பது பற்றி தெளிவான முடிவு தேவை” என்று நம்முடைய பேராசிரியர் ஒருவர் அண்மையில் என்னிடம் கூறினார்.

அந்தப் பேராசிரியர் தமிழ்த்தேசியத்தின் மீது உண்மையான அக்கறை உள்ளவர். தேர்தல் குறித்து நம்முடைய இளைஞர்களிடம் பெரும் நம்பிக்கை இருக்கிறது என்பது உண்மைதான்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் தேர்தலில் பங்கெடுக்காததால் இந்தக் கேள்வியை நம்மிடம் கேட்கிறார்கள். தேர்தலில் பங்கெடுக்கவில்லை என்றதும், நக்சல்பாரி இயக்கத் தோழர்கள்தான் நம் மக்களுக்கு நினைவுக்கு வருவர். ஏனெனில் தேர்தல் புறக்கணிப்பை ஒரு போராட்ட முறையாக அறிவித்துச் செயல்படுத்தியவர்கள் அவர்கள். காலப்போக்கில் அவர்களிலும் பல பிரிவுகள் உண்டாகித் தேர்தலில் பங்கெடுப்போரும் இப்போது இருக்கிறார்கள்.

நக்சல்பாரி கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் தேர்தலைப் புறக்கணிப்பதற்கும், நாம் தேர்தலில் பங்கெடுக்காததற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது. அவர்கள், சமூக மாற்றத்திற்கு ஆயுதப் புரட்சியே ஒரே வழி என்று கருதுபவர்கள். நாம் ஆயுதப்புரட்சி வழியை ஏற்காதவர்கள். அறப்போராட்டம், மக்கள்திரள் போராட்டம் என்ற வடிவத்தை ஏற்றுக் கொண்டவர்கள்.

நக்சல்பாரி இயக்கத்திலிருந்து தமிழ்த்தேசிய விடுதலைப் போராளியாக, தலைவராக உருவெடுத்தவர் தோழர் தமிழரசன். அவரும் அவருடைய தோழர்களும் - தமிழ்த்தேசியத்திற்காக உயிரீகம் செய்தவர்கள்; அவர்களில் சிறைக் கொடுமைகளையும், காவல் துறையினரின் கடும் வன்முறைகளையும் ஏற்றவர்கள் பலர். அவர்களுடைய ஈகத்தைப் போற்றுகிறோம்; ஆனால் அவர் களுடைய ஆயுதப் புரட்சிப் பாதையை நாம் ஏற்க வில்லை.

தேர்தலில் பங்கெடுக்காதது ஏன்?

இரண்டு காரணங்கள். முதல் காரணம், இன்றையத் தேர்தல் நடைமுறை என்பது ஊழல்வாதிகளுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கும்; இலட்சியகளையும் ஊழலர்களாக மாற்றிவிடும். பணம், சாதி இரண்டும் தேர்தலில் போட்டியிட அடிப்படைத் தகுதியாக்கப்பட்டு, அதுவே நடைமுறையில் உள்ளது.

இரண்டாவது காரணம், சட்டப் பேரவைக்கான அதிகாரம் ஏற்கெனவே மிகக்குறைவு.

இப்பொழுதோ உருப்படியான அதிகாரம் எதுவுமே இல்லை என்ற அளவுக்கு, மாநில உரிமைப் பறிப்புகள் அன்றாடம் அரங்கேறுகின்றன.

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் சீர்கேடு பெருத்துள்ளது. இந்த சீர்கேட்டைப் பெருக்கச் செய்தவர்கள் யார்? கழகம் தொடங்கிய போது தனிநாடு கேட்டு முழங்கியவர்கள். “அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு” என்று எக்காளமிட்ட தி.மு.க.வினர்!

தேர்தல் - அதன்வழி கிடைக்கும் பதவி என்பதை முதன்மை நடைமுறையாக வைத்துக் கொண்டால் எந்த இலட்சியரும் கால ஓட்டத்தில் ஊழலராக மாறி விடுவார். தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு, தேர்தல் மூலம் - சட்டப்பேரவை மூலம் தமிழ்நாட்டிற்குக் கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுத் தருவோம் என்றது தி.மு.க.! “மாநில சுயாட்சி” என்றார் கருணாநிதி!

இப்படியெல்லாமா தி.மு.க. தலைவர்கள் இலட்சிய முழக்கமிட்டார்கள் என்று இன்றையத் தலைமுறையினர் வியக்கும் நிலைதான் உள்ளது. ஊழல் அரசியலும், உட்கட்சி சனநாயகமற்ற தன்னலத் தலைவர் வழிபாடும் செழித்துள்ள தி.மு.க.தான் இன்றையத் தலைமுறையினர்க்குத் தெரியும்.

வாக்காளர்க்குக் கொடுக்கும் பணத்தை உயர்த்தி விடுவது, வட்டார அளவில் சாதிய உணர்வைத் தூண்டி விடுவது, வாரிசு அடிப்படையில் தலைவர் உருவாக்குவது, வாய்ப்புள்ள வழிகளில் எல்லாம் ஊழல் செய்து பணம் சேர்ப்பது, மாநிலத் தன்னாட்சி அதிகாரம் பேசி மாட்டிக் கொள்ளாமல் தில்லிக்கு மண்டியிட்டு கங்காணி அரசியல் நடத்துவது - இவைதாம் இப்போது தி.மு.க.வின் புதிய ஐம்பெருங்கோட்பாடு!

இப்படியெல்லாம் சீரழியாமல் இலட்சிய வீரர்களாக தேர்தலில் போட்டியிட முடியாதா? வெற்றி பெற முடியாதா? இளம் தோழர்கள் சிலர் இவ்வாறு கேட்கிறார்கள். அந்தந்த விளையாட்டிற்கும் தனித்தனி விதிகள் இருக்கின்றன!
இன்றையச் சூழலில் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், தேர்தல் என்பது கோடீசுவர அரசியல் குழுமங்களிடையே நடக்கும் போட்டியாகி விட்டது. வாக்காளர்க்குப் பணம் கொடுப்பது மட்டுமல்ல, பரப்புரை - படாடோபங்கள் - பரிவாரங்கள் முதலியவற்றுக்கான மொத்தச் செலவு வாக்காளர்க்குக் கொடுக்கும் தொகையைவிட அதிகம்!

பா.ச.க. கட்சி நிர்வாகிகள் அண்மையில் தில்லியில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் அமீத்சா ஆகியோர் தலைமையில் கூடி 2019 மக்களவைத் தேர்தலைச் சந்திப்பதற்குரிய திட்டங்களை விவாதித்து முடிவுகள் எடுத்தனர்! காங்கிரசு ஏற்கெனவே தேர்தல் அணி சேர்க்கை வேலையைத் தொடங்கிவிட்டது. அமெரிக்க பாணி தேர்தல் நடைமுறையை இந்தியாவில் பா.ச.க.வும் காங்கிரசும் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

அதேபோல்தான் கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தல் நடைமுறைகளைக் கடைபிடித்தன. பா.ம.க.வும் தன்னால் முடிந்த அளவிற்கு அதே பாணியைச் செயல்படுத்தியது.

ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலுக்கு மிகச் சாதாரணமாக பத்து இலட்ச ரூபாய் தமிழ்நாட்டில் செலவு செய்கிறார்கள். வெற்றி பெற்றால் பல மடங்காக இதை ஈட்டிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இச்செலவினைச் செய்கிறார்கள். அவர்களைத் தேர்தலில் வெல்ல வேண்டுமாயின், தமிழ்த்தேசியர்களும் அதிகமாகச் செலவு செய்ய வேண்டும். அதிகச் செலவு செய்வதற்குப் பணம் சேர்க்க ஊழல் செய்ய வேண்டும். அல்லது செலவு செய்யும் வலிமை படைத்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும்.

அடுத்து, சாதிச் செல்வாக்குள்ளவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். இதனால் இலட்சிய உறுதி, போர்க்குணம், ஈகம் ஆகியவை பின்னுக்குத் தள்ளப்படும்!

இத்தேர்தல்களில் இலட்சியர்கள் போட்டியிட்டால் என்னாவார்கள்?

இலட்சியர்கள் தேர்தலில் போட்டியிடலாம். எப்போது? எதற்காக? இந்த வினாக்களுக்கு சரியான தெளிவான விடை வேண்டும்.

1. மக்களிடையே கணிசமானவர்களிடம் இலட்சிய தாகம் வளர்ந்து, அவர்கள் தங்கள் தேசத்தின் உரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் வீதிக்கு வருகிறார்கள்! ஆட்சியாளர்க்கு எதிரான மக்களின் சினம் அவர்களின் நெஞ்சில் கொழுந்துவிட்டு எரிகிறது என்ற சமூகக் கொதி நிலை இருக்க வேண்டும்.

2. இவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால், தேசத்தின் உரிமை, மக்களின் வாழ்வுரிமை இரண்டிலும் இடைக்காலத் தீர்வுகள் சிலவற்றைக் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட வேண்டும்.

இந்த இரண்டும் இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டால் இலட்சியர்கள் மிகவும் மோசமாக புறக்கணிக்கப்படுவார்கள். மேற்கண்ட இரண்டு நிலையும் மக்களிடம் உருவாக நாம் கருத்துப் பணியும், களப்போராட்டமும் நடத்தியிருக்க வேண்டும்; போராடி இருக்க வேண்டும்; ஈகங்கள் செய்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில் கணிசமான மக்களைத் திரட்டி இருக்க வேண்டும்.

இவையன்றி, மேடையில் நாம் பொங்கி எழும் புலிப்பாய்ச்சலோ, அவ்வப்போது நடத்தும் அடையாளப் போராட்டங்களோ சராசரி வெகுமக்களின் கொதி நிலையை உயர்த்திவிடாது; நம் மீது நம்பிக்கையையும் வளர்த்து விடாது!

இதற்கு முதல் தேவைகள் 1. தமிழ்த்தேசிய அமைப்பிடம், அதன் தலைவர்களிடம் இலட்சியத்தில் களங்க மற்ற தெளிவிருக்க வேண்டும்; அதில் ஊசலாட்டமற்ற பற்றுறுதி இருக்க வேண்டும். 2. உடனடிப் பலனை எதிர்பார்க்காமல் பொறுமையுடன் களப்பணியாற்றும் பக்குவம் இருக்க வேண்டும்.

வெள்ளைக்கார ஆட்சி 1920இல் தேர்தல் வழியாக அமையும் சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றை உருவாக்கியது. அனைவர்க்கும் வாக்குரிமை இல்லை என்றாலும், ஆட்சியாளர்கள் வரையறுத்த தகுதிகளுக்குட்பட்ட வெகு மக்களுக்கு வாக்குரிமை இருந்தது.

காந்தியடிகள் தலைமையிலான காங்கிரசு, 1920 தேர்தலில் பங்கேற்கவில்லை. அதன் பிறகு நடந்த தேர்தல்களிலும் பங்கேற்கவில்லை. 1930-களில் உப்புச் சத்தியாகரகம், தலைவர்கள் கைது, அதை ஒட்டிய தொடர் போராட்டங்கள் என்ற பின்னணியில், 1937 பொதுத் தேர்தலில் காங்கிரசு போட்டியிட்டது. போட்டியிட்ட ஒன்பது மாநிலங்ளிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

ஆனால் இரண்டே ஆண்டில் 1939-இல் அத்தனை அமைச்சரவைகளையும் பதவி விலகுமாறு காங்கிரசு கட்டளை இட்டது. தமிழ்நாட்டின் இராசாசி அமைச்சரவை உட்பட அனைத்து அமைச்சரவைகளும் பதவி விலகின.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் புரட்சியாக நடந்தது. இருந்தாலும் 2001ஆம் ஆண்டு நடந்த இலங்கைக் குடியரசுத் தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் - “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு” என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, தேர்தல் களத்தில் இறக்கி விட்டார். விடுதலைப்புலிகள் நிர்வாகிகளோ, அல்லது உறுப்பினர்களோ தேர்தலில் போட்டியிடவில்லை. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்ட பழைய நாடாளுமன்ற வாதிகளையே நிறுத்தினார்கள். அவர்களைக் கட்டுப்படுத்தும் மக்கள் வலிமையும் இடைக்கால நிர்வாகமும் விடுதலைப் புலிகள் வசம் அப்போது இருந்தது.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளுக்கு நேர்மாறான சில எடுத்துக்காட்டுகளையும் கூறவேண்டும்.

1. இன விடுதலை, நாட்டு விடுதலை என்ற இலட்சி யங்களை முழங்கி வந்த தி.மு.க. - இலட்சியத் தெளிவற்ற, இலட்சியத் துல்லியமற்ற, இலட்சிய உறுதியற்ற தலைவர்களையும் பிரமுகர்களையும் கொண்டிருந்தது. தேர்தலில் பங்கெடுத்து காங்கிரசை விட மோசமாகச் சீரழிந்தது.

2. “தமிழப் பேரரசு” என்ற இலட்சிய முழக்கத்துடன் தமிழ்நாட்டு விடுதலை கோரி நாம் தமிழர் கட்சி நடத்தினார் ஆதித்தனார். திராவிடத் திரிபைக் கடுமை யாக எதிர்த்தார். 1962 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் பல தொகுதிகளில் போட்டி யிட்டனர். ஆதித்தனார் உட்பட அனைவரும் தோற்றனர். 1967 தேர்தலில் கட்சியைக் கலைத்துவிட்டு தி.மு.க.வில் இணைந்து விட்டார் ஆதித்தனார்.

3. மிசோரம் விடுதலைக்காக ஆயுதப் போராளி களை உருவாக்கி இந்தியப் படையை எதிர்த்துப் போரிட்டவர் லால் டெங்கா! இராசீவ் காந்தியுடன் உடன்பாடு போட்டு, ஆயுதப் புரட்சியைக் கைவிட்டு, தேர்தல் பாதைக்குத் திரும்பினார். தேர்தலில் தோற்று, மக்கள் புறக்கணிப்பால் மனம் நொந்து இறந்தார் லால் டெங்கா.

4. ஜம்மு காசுமீர் இறையாண்மைக்குப் போராடிய சேக் அப்துல்லா மக்களின் மாபெருந் தலைவராக விளங்கினார். இந்திரா காந்தியுடன் உடன்பாடு போட்டு, தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் அக் கட்சி சீரழிந்தது. சேக் அப்துல்லாவுக்குப் பின், அவர் மகன் பரூக் அப்துல்லா, பரூக்கின் மகன் உமர் அப்துல்லா ஆகியோர் தலைமையில் அக்கட்சி காங்கிர சுடனும் பா.ச.க.வுடனும் கூட்டணி சேர்ந்து, காசுமீர் விடுதலை அமைப்புகளிடம் கருங்காலிப் பட்டம் வாங்கிக் கொண்டது. இப்போது காசுமீர் விடுதலைக் காகப் போராடும் அமைப்புகள், சேக் அப்துல்லா பெயரை இனத்துரோகிகள் பட்டியலில் சேர்த்துள்ளன! ஒரு காலத்தில், “காசுமீர் சிங்கம்” என்று அம்மக்களால் கொண்டாடப்பட்டவர் அவர்!

5. கனடாவில் கியூபெக் மாநிலம் பிரஞ்சுக் காரர்களின் தாயகம். மற்ற மாநிலங்கள் ஆங்கிலேயர் தாயகம். “கியூபெக் கட்சி” என்ற பெயரில் செயல்பட்ட பிரஞ்சுக்காரர்கள் கட்சி, தனிநாடு கேட்டுப் போராடியது. பின்னர் தேர்தலில் நின்று அம்மாநிலத்தில் வெற்றி பெற்றது. அதன்பிறகு அந்தக் கட்சி ஆங்கி லேயர் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கனடாவின் நடுவண் அரசில் பங்கேற்றது.

அதன் பிறகு கியூபெக் விடுதலைக் கோரிக்கையை கைவிட்டது. புதிதாக கியூபெக் மக்களுக்கான உருப்படி யான உரிமை எதையும் அக்கட்சி பெற்றுத் தரவில்லை. ஆனால் கியூபெக்கில் இப்போதும் விடுதலை இயக்கங்கள் செயல்படுகின்றன - சிறுத்துப் போன நிலையில்!

தமிழ்த்தேசியத்தை உண்மையான இலட்சியமாகக் கொண்டுள்ள இயக்கம் இந்த நடைமுறை உண்மை களைக் கவனத்தில் கொண்டு, எச்சரிக்கையுடன் தேர்தல் பங்கெடுப்பு பற்றி முடிவு செய்ய வேண்டும்.

இலட்சியத் தெளிவு, இலட்சியத் துல்லியம், ஊழல் பண்பற்ற போர்க்குணம், களச் செயல்பாடுகளில் தீவிரப் பங்கெடுப்பு என்று செயல்முறை உள்ள ஓர் உண்மையான தமிழ்த்தேசிய அமைப்பு தேர்தலில் வென்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதாக வைத்துக் கொள்வோம். இன்றைய நிலையில் அந்த ஆட்சி தமிழ்நாட்டில் என்ன மாற்றங்களைச் செய்ய முடியும்?

தி.மு.க. தனிநாடு கேட்ட காலத்தில் தமிழ் நாட்டிற்கிருந்த அதிகாரங்கள் பலவற்றை - இப்போது இந்திய அரசு பிடுங்கிக் கொண்டது. பள்ளிக்கூடக் கல்வி அதிகாரம் கூட இப்போது மாநில அரசிடம் இல்லை. வணிக வரி வசூலிக்கும் அதிகாரத்தை சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி) போட்டு பிடுங்கி விட்டது.

நடுவண் அரசு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டுமானால், தனியார் தொழில் தொடங்க வேண்டுமானால் மாநில அரசின் ஒப்புதல், மாநில சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் வேண்டும். இப்போது அவையெல்லாம் தேவை இல்லை என தில்லியில் ஒற்றைச் சாளர முறை கொண்டு வந்துவிட்டார்கள்.
நாம் என்ன உணவை உண்பது என்று தீர்மானிக்கும் சட்ட அதிகாரம் தில்லியில் உள்ளது. தமிழ்நாட்டில், மாட்டிறைச்சி உண்ணும் உரிமைக்கு தில்லி ஏகாதிபத்தியம் தடைபோடுகிறது!

முதல் கட்டமாக, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை உரிமையை மாநில அரசிடமிருந்து நீட் தேர்வு மூலம் இந்திய அரசு பறித்து விட்டது. சில ஆண்டுகள் கழித்து மதிப்பெண் அடிப்படையில், வெளி மாநில மாணவர்களைச் சேர்க்கும் சட்ட ஏற்பாடு வந்துவிடும்.

மாவட்ட நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் பணிய மர்த்தத்திற்கும், மாநில அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணியமர்த்தத்திற்கும் அனைத்திந்தியத் தேர்வு முறை வரப்போகிறது.

இந்திய அரசின் இந்த ஏகாதிபத்திய நடவடிக்கைகளைத் தமிழ்நாடு சட்டப்பேரவை சட்டம் இயற்றித் தடுக்க முடியாது; அரசாணை போட்டாலும் தடுக்க முடியாது. நீட் தேர்வு தமிழ்நாட்டைக் கட்டுப் படுத்தாது என்று இரு தடவை ஒருமனமாக தமிழ்நாடு சட்டப்பேரவை சட்ட முன்வடிவு நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. அவர் கையொப்பமிடவில்லை! நடுவண் அமைச்சரவையின் பரிந்துரை இல்லாமல் குடியரசுத் தலைவர் அதில் கையொப்பமிட முடியாது.

மாநில அரசுக்கும் நடுவண் அரசுக்கும் பொது வான அதிகாரப் பட்டியலில் உள்ள எந்தப் பொருள் மீதும் நடுவண் அரசின் ஆணைக்கும் சட்டத்திற்கும் புறம்பாக மாநில அரசு ஆணை போட முடியாது; சட்டமியற்ற முடியாது.

ஏறு தழுவலுக்கு (சல்லிக்கட்டுக்கு) தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவை ஏற்று, குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டாரே என்று கேட்கலாம். அதற்கு நடுவண் அரசு பரிந்துரை செய்தது. அப்போது தமிழ்நாட்டு சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்ட முன் வடிவை ஏற்றுத்தானே இந்திய அரசு சட்டமாக்கியது என்றும் கேட்கலாம்.

சென்னைக் கடற்கரையில் பத்து இலட்சம் பேர் பல நாட்களாக - இரவு பகலாக அங்கேயே தங்கி சல்லிக்கட்டு உரிமைக்காக அறப்போராட்டம் நடத்தி னார்கள். அதேபோல் தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகர்களிலும் முக்கிய நகரங்களிலும் ஒவ்வொரு இடத்திலும் பல்லாயிரக்கணக்கிலான ஆண்களும் பெண்களும் இளையோரும் பெரியவர்களும் கூடி அறப்போராட்டம் நடத்தினார்கள்.

காவல்துறையை வைத்துக் கலைத்தால் பெரிய அளவில் குருதி வெள்ளம் பெருகும்; உயிர்ப் பலி ஏராளமாக இருக்கும் என்ற அச்சத்தின் காரணமாக தமிழ்நாடு அரசின் கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக் கொண்டது. இங்கேதான் கவனிக்க வேண்டும். அதே அ.இ.அ.தி.மு.க. அரசு நீட் தேர்வுக்கு அனுப்பி வைத்த சட்ட முன்வடிவை இந்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. ஏன்? சல்லிக்கட்டுக்கு நடந்தது போல் மக்கள் வெள்ளத்தின் அறப்போராட்டம் இல்லை!

மக்கள் வெள்ளமெனத் திரண்டு போராடித்தான் சல்லிக்கட்டு போன்ற மரபுரிமைகளையும், தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாடு அரசு மாணவர் சேர்க்கும் உரிமையையும் பெற முடியும் என்றால் தமிழ்நாடு சட்டப்பேரவை எதைச் சாதிக்கும் நமக்கு?

மேற்படி இரண்டு உரிமைகளும் மிகச் சாதாரணமாக நடைமுறையில் மாநில அரசிடம் இருந்த உரிமைகள்.

தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பைத் தடுத்திடும் அதிகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உண்டா? இல்லை!

மின்சாரப் பற்றாக்குறை காலத்தில் நடுவண் அரசின், நெய்வேலி மின்சாரத்தைத் தமிழ்நாட்டுக்குத் திருப்பிவிடும் உரிமை தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உண்டா? இல்லை!

தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை நிலைநிறுத்தும் அதிகாரம், தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உண்டா? இல்லை!

மீத்தேன் உள்ளிட்ட ஐட்ரோகார்பன் எடுப்பதைத் தடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உண்டா? இல்லை!

நம் வேளாண்மையில் மரபீனி மாற்று விதைகளைத் திணிக்கிறது இந்திய அரசு. தமிழ்நாடு அரசுக்கு அதைத் தடுத்திடும் அதிகாரம் உண்டா? இல்லை!

மக்களவை - உரிமைப் பறிப்பு அவை

மக்களவையில் மொத்த உறுப்பினர்கள் 543 - இதில் இந்தி மாநிலங்கள் பத்தின் மொத்த உறுப்பினர்கள் 225 பேர். தமிழ்நாட்டின் மொத்த உறுப்பினர் 39. புதுவைக்கு ஒருவர். ஆக மொத்தம், 40 பேர்.

தமிழ்நாட்டுக்கு ஆதரவாக வேறு எந்த மாநிலமும் வாக்களிக்காது. 543 -இல் 40 என்பது மிகமிகச் சிறு பான்மை. நம்முடைய மக்கள் தொகை 8 கோடி. பிரித் தானிய, பிரான்சு நாடுகளின் மக்கள் தொகையைவிடத் தமிழ்நாட்டின் மக்கள் தொகை அதிகம். ஆனால் நம்முடன் தொடர்பில்லாத அயல் இனங்களுடன் நம்மைச் சேர்த்து வைத்திருப்பதால், செயற்கையாக நாம் சிறுபான்மை ஆக்கப்பட்டிருக்கிறோம்.

ஒரு கோடிக்குக் கீழ் மக்கள் தொகை உள்ள நார்வே, டென்மார்க், இசுரேல் போன்ற எத்தனையோ நாடுகள் தங்கள் நாட்டில் மிகப்பெரும் பெரும் பான்மையுடன் சொந்த ஆட்சி நடத்திக் கொண்டிருக் கின்றன. அவற்றின் நாடாளுமன்றம் அவர்களுக்கான தாக இருக்கிறது. நாம் செயற்கையாகச் சிறுபான்மை ஆக்கப்பட்டிருக்கிறோம்.

இந்தித் திணிப்பைத் தடுத்திட, கச்சத்தீவை மீட்டிட, தென்கடலில் தமிழர் மீன்பிடி உரிமையைத் தக்க வைக்க, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட, காவிரி மண்டலத்திலிருந்து ஓ.என்.ஜி.சி.யை, வெளி யேற்றிட விளைநிலத்தில் கெய்ல் குழாய் பதிப்பதைத் தடுத்திட - இன்னபிற உரிமைகளுக்காகத் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினால் நம்மை மற்றவர்கள் ஆதரிப்பதில்லை.

தமிழீழத்தில் நம் இன மக்களை இலட்சக்கணக்கில் இந்தியாவின் பங்களிப்போடு இலங்கை அரசு இனப் படுகொலை செய்தபோது, போர் நிறுத்தம் கேட்ட நம் உறுப்பினர்களின் குரலை வேறு மாநில உறுப்பினர்கள் ஆதரிக்கவில்லை. சிங்கள அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க பன்னாட்டுப் புலனாய்வு நம் உறுப்பினர்கள் கேட்டபோது வேறு மாநில உறுப்பினர்கள் ஆதரிக்க வில்லை.

தி.மு.க., அ.தி.மு.க. போன்ற சந்தர்ப்பவாதக் கட்சிகளின் உறுப்பினர்கள் கேட்டதால் உறுதியற்ற அவர்களின் குரலுக்கு மற்ற மாநிலத்தவர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று தமிழ்த்தேசியர்கள் கருதலாம். ஊசலாட்டமில்லாமல் உறுதியாகத் தமிழ்த் தேசியம் பேசுவோர் நாடாளுமன்றத்துக்குப் போனால் இன்னும் கூடுதலான வெறுப்புடன்தான் நம்மை மற்ற மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பார்ப்பார்கள்.

நாடாளுமன்ற மக்களவை என்பதுதான் இருக் கின்ற இந்திய நிறுவனங்களிலேயே மிக மோசமான தமிழின ஒடுக்குமுறை நிறுவனம்! இந்த உண்மையை உள்ளது உள்ளபடி உணரும் ஆற்றல் தமிழ்த்தேசியர் களுக்கு வேண்டும்.

‘சனநாயக முடிவு” என்ற பகட்டு முழக்கத்துடன், பெரும்பான்மையைக் கொண்டு, நம்மைத் தொடர்ந்து வீழ்த்தும் அரங்கம்தான் “மக்களவை”!

இந்திய அரசின் இனப்பாகுபாடு

எந்த நாட்டு அரசுக்கும் அதற்கான சொந்த இனக் கொள்கை இருக்கும். இந்தியாவின் இனக்கொள்கை ஆரிய இனம் சார்ந்தது. இந்தியாவின் பெயரைப் “பாரதம்” என்று ஏன் அழைக்கிறார்கள்? ஆரியப் புராணத்தில் பரதன் என்ற ஆரியன் ஆண்டான் என்ற கதையை வைத்துதான் “பாரதம்” என்று அழைக்கி றார்கள். அந்த ஆண் மகனைத்தான் அவர்களே பெண்ணாக மாற்றி பாரதத்தாய் என்கிறார்கள்.

மூவாயிரம் ஆண்டுகளாக ஆரிய ஆக்கிரமிப்பையும் ஆரிய இனத்தையும் எதிர்த்து வரும் ஒரே இனம் - இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழர்கள் மட்டுமே! ஆரியர்களின் சமற்கிருத மொழிக் கலப்பில்லாமல் இந்தியத் துணைக் கண்டத்தில் இயங்கக் கூடிய ஒரே மொழி - தமிழ் மட்டுமே!

ஆரியப் படையைப் போரில் புறமுதுகு காட்டச் செய்தவன் என்பதற்காக அந்த பாண்டிய அரசனை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்” என்று போற்றும் இனம் தமிழினம்தான்! தமிழர்களை இழி வாகப் பேசிய ஆரிய மன்னர்களான கனகனையும் விசயனையும் வென்று அவர்கள் தலையில் இமயக் கல்லை ஏற்றி வந்து கண்ணகிக்குச் சிலை எடுத்தான் சேரன் செங்குட்டுவன் என்று பெருமிதம் கொள்ளும் தமிழ்க் காப்பியம் இளங்கோவடிகள் யாத்துத் தந்த சிலப்பதிகாரம்!

தமிழர்களின் ஆரியப் பிராமண ஆதிக்க எதிர்ப்பு சங்க இலக்கியங்களில் - காப்பிய இலக்கியங்களில் - பக்தி இலக்கியங்களில், திருமூலரின் திருமந்திரத்தில் - சித்தர்கள் பாடல்களில் - வள்ளலாரின் திருவருட்பா வில் மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்தில் தொடர்ந்து வரும் பின்னணியில்தான் பெரியாரின் ஆரியப் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு இயக்கம், சனநாயகக் காலத்தில் உருவாகி வளர்கிறது. அவர் திரிபான திராவிடப் பெயர் சூட்டி - அந்த இயக்கத்தை நடத்தினாலும் தமிழர்கள் தங்களின் வரலாற்றுத் தொடர்ச்சி காரணமாக - அவ்வியக்கத்தின் வழியாக ஆரிய பிராமணிய ஆதிக்கத்தை எதிர்த்துத் திரண்டார்கள்.

திரிபான வடிவில் பெரியாரும் அண்ணாவும் தனிநாடு கேட்டாலும், தமிழ்நாடு தனியாகும் என்ற நம்பிக்கையில் அவ்வியக்கங்களுக்கு தமிழர்கள் பேராதரவு நல்கினார்கள். ஆனால் அவர்கள் முன்வைத்த திராவிட இனக்கொள்கை அவர்கள் கூறிக் கொண்ட ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் வேரும் விடவில்லை; கிளையும் விடவில்லை.

அண்மையில் இதே தமிழினத்தில் விடுதலைப் புலிகள் தோன்றி, உலகம் வியக்கும் வகையில் - உலக நாடுகள் தலையிடும் வகையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடத்தினார்கள்.

எனவே, இந்த வரலாற்றுப் பின்னணியில் தமிழினம்தான் ஆரிய இனத்தின் முதல் எதிரி என்று வடநாட்டு அரசியல் தலைமைகள் கருதுகின்றன. காங்கிரசுத் தலைமையும், பா.ச.க. தலைமையும் தமிழி னத்தைப் பகை இனமாகப் பார்ப்பதில் ஒரே நிலையில் உள்ளன. ஒரு கரு இரட்டையர்கள்!

இந்தியாவுக்குள் - மற்ற தேசிய இனங்களுடன் சமமாக வைத்து, தமிழ்த்தேசிய இனத்தை தில்லித் தலைமை பீடம் என்றுமே பார்க்காது. தமிழர்களின் உரிமையை எந்த இனம் பறித்தாலும் அந்த இனத்திற்கு இந்திய அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை நிற்கும். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, பவானி ஆற்று உரிமைகளை அண்டை இனங்கள் சட்ட விரோதமாகப் பறிக்கின்றன. அந்த சட்ட விரோதச் செயல்களுக்கு இந்திய அரசு, அது காங்கிரசுத் தலைமை யில் இருந்தாலும், பா.ச.க. தலைமையில் இருந்தாலும் துணை போகின்றன.

இதே தமிழினப் பகை நோக்குடன்தான் கச்சத் தீவை இலங்கைக்குக் கொடுத்தது தில்லி அரசு; தென் கடலில் தமிழ் மீனவர்களின் மீன்பிடி உரிமையைத் தடுத்து, சிங்களப் படையாட்கள் நம் மீனவர்களைக் கொல்வதற்கும், தாக்குவதற்கும் மீனவர்களையும் படகுகளையும் கடத்திச் செல்வதற்கும் இந்திய அரசு பக்கத் துணையாக செயல்படுகிறது. ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த போரில் தமிழர்களின் குருதியில் இந்தியா கை நனைத்தது!

இந்த உண்மைகளைக் கவனத்தில் கொள்ளாமலோ, அல்லது மூடி மறைத்தோ - இந்திய அரசின் தமிழினப் பகை அரசியலை வெளிப்படுத்தாமல் ஒருவர் தமிழ்த் தேசியம் பேசினால், அவர் கருணாநிதியை விட மோச மான இனத்துரோகி ஆவார்!

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உள்ள அதிகாரம் மிகமிகக் குறைவு என்றாலும், அந்தக் குறைந்த அதிகாரத்தைக் கொண்டும் தமிழின உரிமைகளைப் பாதுகாக்கவும் மீட்கவும் இந்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளா தவர் தமிழினத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் வழி காட்டத் தகுதியற்றவர்!

என்ன செய்ய வேண்டும்?

“நாம் தலையிட்டால் நாளைக்கே சிக்கல் தீர்ந்து விட வேண்டும்” என்பது போல் தன்முனைப்பு அவசரம் இருந்தால், அது சமூக மாற்றப் போராட்டத்தில் எதிர் விளைவைத்தான் உண்டாக்கும்.

எவ்வளவு காலமாகத் தமிழினம் ஏமாற்றப்பட்டிருக்கிறது! எவ்வளவு காலமாகத் தமிழினம் ஏமாந்திருக்கிறது! இதையெல்லாம் ஐந்தாண்டிலோ பத்தாண்டிலோ, ஒரு தேர்தலிலோ, இரண்டு தேர்தலிலோ தீர்த்துவிட முடியுமா? முடியாது!

இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் தேர்தலைப் பயன்படுத்தியதுபோல், ஈழ விடுதலைப் போராட்டத்தில் பிரபாகரன் அவர்கள் தேர்தலைப் பயன்படுத்தியதுபோல் தமிழ்த்தேசியத்தில் நாமும் பயன் படுத்தலாம். அதற்கு முதலில் தமிழ்த்தேசியத்தின் இலக்கு என்ன என்பதைக் குழப்பமின்றித் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். இலக்கிற்குரிய கட்டுத் திட்டங்களுடன், கட்டுப்பாடுகளுடன், ஈக உணர்வுடன் இலட்சிய உறுதியுடன் உள்ளவர்களைக் கொண்ட அமைப்பை வளர்க்க வேண்டும்.

அப்படி ஓர் அமைப்பையே கட்டாமல், இவர் முதலமைச்சர் ஆனால் தமிழ்த்தேசியம் கிடைக்கும்; அவர் முதலமைச்சர் ஆனால் தமிழ்த்தேசியம் கிடைக்கும் என்பது, இஞ்சி மரப்பா சாப்பிட்டு இருதய நோயைக் குணப்படுத்தலாம் என்பது போன்ற ஏமாற்று வேலையாகும்.

இப்போது நடைபெறும் தேர்தல் மூலம் பதவி பெற வேண்டும் என்று ஆசையில்லாத இயக்கத் தலைமை முதல் தேவை. அதேபோல், தன்னைத் தமிழ்த் தேசியத்திற்கு ஒப்படைத்துக் கொள்ளும் உறுதியான அடுத்த கட்ட பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் தேவை!

“அக்கா வந்து கொடுக்க / சுக்கா, மிளகா சுதந்திரம் கிளியே!” என்ற பாவேந்தரின் பாடலை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

நமது தமிழ்த்தேசியப் போராட்டம் வன்முறை தவிர்த்த அறப்போராட்டப் பாதை கொண்டது! ஆயுதப் போராட்டம் நடத்திய தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட வில்லை. அவரை முதலமைச்சர் பதவி ஏற்க இந்தியத் தலைமை அமைச்சர் இராசீவ் காந்தி வற்புறுத்தினார். மறுத்து விட்டார் பிரபாகரன்!

காந்தியடிகளிடம் இருந்த, பிரபாகரன் அவர்களிடம் இருந்த இலட்சிய உறுதியை, இலட்சியத் துறவிகளாக வாழ்ந்த மனப்பக்குவத்தை பல நூறு ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழின இளைஞர்கள் பெற வேண்டும்.

தேர்தலைப் பற்றி இப்போது சிந்திக்க வேண்டாம். மேலிருந்து கீழ்வரை ஒப்படைப்புள்ளம் கொண்ட வர்களின் உறுதியான தமிழ்த்தேசிய அமைப்பை வளர்ப்போம்!

அந்த இயக்கப்போக்கில் தேர்தலைப் பயன்படுத்தும் வரலாற்றுத் தேவை எழுந்தால் அப்போது அதுபற்றி முடிவெடுக்கலாம்!

(இக்கட்டுரை தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 செப்டம்பர் 1-15 இதழில் வெளியானது).
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.