ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“மூளைச் சோம்பலும் முகமூடித் தமிழ்த்தேசியமும்” பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

“மூளைச் சோம்பலும் முகமூடித் தமிழ்த்தேசியமும்” தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கன்னடர்களுக்கென்று ஒரு தேசியக் கொடியை வடிவமைத்துத் தருமாறு கேட்டு, ஒரு வல்லுநர் குழுவை நிறுவியுள்ளார். அந்த வல்லுநர் குழுவில் இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்த செயலாளர் (Secretary) அளவில் பணி மூப்புள்ள அதிகாரிகளை அமர்த்தியுள்ளார்.

பெங்களூர் மாநகரத் தொடர்வண்டி நிலையங்களில் இந்தியில் எழுதப்பட்டிருந்த வழிக்குறிப்புகளை கன்னடர்கள் அழித்துள்ளார்கள். இந்தி அழிப்பை சித்தராமையா ஆட்சி ஆதரித்தது. கர்நாடக அரசுப் பொறுப்பில் உள்ள பெங்களூர் மாநகராட்சித் தொடர்வண்டி நிலையங்களில் இனிமேல் இந்தியில் வழிக்குறிப்புகள் எழுதப்படமாட்டா என்று அத்துறை அதிகாரியும் அறிவித்துள்ளார்.

இந்த அதிரடிகளின் அதிர்வுகள் நிற்பதற்குள், கர்நாடகத்தில் உள்ள வங்கிகளில் பணியாற்றும் வெளி மாநில அதிகாரிகளும் பணியாளர்களும் ஆறு மாதத்திற்குள் கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும்; வாடிக்கையாளர்களிடம் கன்னடத்தில் பேசவும், கன்னட மொழியில் எழுதப்படும் படிவங்களைப் புரிந்து கொள்ளவும் திறன் பெற வேண்டும். இல்லையேல் அவர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் என்று கர்நாடக அரசின் கன்னட மொழி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சித்தராமையா இந்தியத்தேசியக் காங்கிரசுக்காரர். கர்நாடகத்தில் காங்கிரசு ஆட்சி நடக்கிறது.

அங்கே முதன்மை எதிர்க்கட்சியாக இருப்பது பா.ச.க! இந்தியத்தேசியத்தின் தீவிரப் பிரிவு அது! மேற்கண்ட கன்னட மொழி சார்பான - இந்தியத் தேசியத்திற்கு முரணான கர்நாடக அரசின் நடவடிக்கைகளை பா.ச.க. எதிர்க்கவில்லை.

கன்னட தேசியக் கொடியை வடிவமைக்க சித்தராமையா வல்லுநர் குழு அறிவித்த போது, “இது தேர்தல் தந்திரம்” என்று கர்நாடகப் பா.ச.க. விமர்சித்தது. அதற்கு மறுமொழி கூறிய சித்தராமையா, “கர்நாடகத்திற்கென்று தனிக்கொடி உருவாக்குவதைப் பா.ச.க. எதிர்க்கிறதா அல்லது ஆதரிக்கிறதா?” என்று நேரடியாகக் கூற வேண்டும் என்றார். பதுங்கிக் கொண்டது பா.ச.க.! அக்கட்சியும் கன்னடக் கொடி உருவாவதை எதிர்க்கவில்லை.

அடுத்து கர்நாடகத்தில் இன்னொரு முக்கியக்கட்சி தேவகவுடாவின் ஐக்கிய சனதா தளம்! இதுவும் இந்தியத்தேசியத்தை ஏற்றுக்கொண்ட அனைத்திந்தியக் கட்சி! இக்கட்சியும் தனிக்கொடியை எதிர்க்கவில்லை; இந்தி அழிப்பை எதிர்க்கவில்லை.

இந்தியத்தேசியத்தின் தாயகமாக - தலைமைப் பீடமாகக் கருதிக் கொள்ளும் காங்கிரசு, பா.ச.க. போன்ற கட்சிகளின் கர்நாடகத் தலைமை கன்னடத் தேசியத்துடன் தங்களைப் பிணைத்துக் கொண்டு, அதற்கான நடவடிக்கைகளில் இறங்குகின்றன. ஆனால் இந்தியத்தேசியத்திற்கு மாற்றாக திராவிடத்தை முன்வைத்த தி.மு.க.வோ, அதிலிருந்து பிரிந்த அ.தி.மு.க.வோ தமிழ்த்தேசியத்தோடு தங்களை இணைத்துக் கொள்ளாமல் - இந்தியத்தேசியத்தின் கங்காணிகளாகச் செயல்படுவதேன்?

இந்த உளவியல் திரிபை ஆய்வு செய்வது மிகமிகத் தேவை!

1970-இல் அன்று முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி, தமிழ்நாட்டிற்கென்று தனிக்கொடி உருவாக்கும் திட்டத்தை வெளியிட்டார். தமிழ்நாட்டுக் காங்கிரசும், பிராமண அமைப்புகளும் அறிவாளிகளும் எதிர்த்தவுடன், அத்திட்டத்தைக் கைவிட்டு விட்டார். கைவிட்டதோடு, நேர் எதிரான வேலையில் ஈடுபட்டார்.

இந்திய விடுதலை நாளில் ஆளுநர் இந்திய அரசுக் கொடியை ஏற்றி வந்த மரபை மாற்றி, அக்கொடியை முதலமைச்சர்கள் ஏற்றுவதற்கான “உரிமை” கோரினார். இந்திய அரசும் கருணாநிதியின் கோரிக்கையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டது.

தமிழ்நாட்டிற்கென்று தனிக்கொடி வடிவம் ஒன்றைக் காட்டி, அவ்வுரிமையைப் பெறப்போவதாக மார்தட்டிக்கொண்ட கருணாநிதி, அதற்கு மாற்றாரிடம் எதிர்ப்பு வந்தவுடன், உடனே மண்டியிட்டார். எந்த இந்திய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தி.மு.க. வளர்ந்ததோ, அந்த இந்தியக் கொடியை ஏற்றும் உரிமை பெற்ற “மாவீரராகத்” தம்மை வர்ணித்துக் கொண்டார்.

திராவிட இயக்கத்தின் இரண்டுங்கெட்டான் இனவாதத்தாலும் போலி வாய் வீச்சாலும் வளர்க்கப்பட்ட தமிழர்களும் “மூவண்ணக் கொடியேற்றும் உரிமையை” மூவேந்தர் கொடியினை ஏற்றும் உரிமை பெற்றதுபோல் பேசிப் பூரித்தனர்! கலைஞர் கருணாநிதிக்கு அவரின் அரசியல் தந்தை பெரியார் காட்டிய வழிதான் இதுவும்!

பெரியார் தனித்தமிழ்நாடு கேட்டுக் கொண்டே 1954 முதல் 1967 வரை, காங்கிரசுக்கு வாக்குக் கேட்டு, தேர்தலுக்குத் தேர்தல் பரப்புரை செய்து வந்தார். ஒரு கட்டத்தில் திராவிடர் கழகத் தோழர்களைக் காங்கிரசிலேயே சேரும்படி அறிக்கையும் வெளியிட்டார்.

“தமிழர்” என்பது கலப்பட இனப்பெயர், “திராவிடர்” என்பதுதான் அசல் அக்மார்க் இனப்பெயர் என பெரியார் பரப்புரை செய்தார். தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ்ச் சனியனைக் கைவிட்டு, ஆங்கிலத்திலேயே வீட்டில் மனைவியுடனும் வேலைக்காரியுடனும் பேசிப் பழகுங்கள் என்றார்.

ஒரு காலத்தில் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர்தான்! ஆனால் பிற்காலத்தில் எனது இந்தி எதிர்ப்பு தமிழ் ஆதரவு கொண்டது அல்ல; ஆங்கில ஆதரவு கொண்டது என்று அறிக்கையும் வெளியிட்டார்.

பெரியாரும் கருணாநிதியும் இன உறவு கொண்டாடிய ஆந்திர, கர்நாடக, கேரள தேசங்களில், தமிழ்நாட்டைப் போல் இரண்டுங்கெட்டான் இன அரசியல் கிடையாது. அங்கெல்லாம், காங்கிரசு, கம்யூனிஸ்ட்டுக் கட்சி போன்ற இந்தியத்தேசியக் கட்சிகள்தாம்! ஆனால் அவற்றின் “மாநிலத்” தலைமைகள், அலுவலகப் படிவங்கள் நிரப்பும்போது மட்டும்தான் தங்களை இந்தியர் என்று கூறிக் கொள்ளும்; மற்ற நேரங்களில் தங்களைத் தெலுங்கர், கன்னடர், மலையாளி என்றே அழைத்துக் கொள்ளும். ஆரியக் கைச்சரக்கான “திராவிடர்” என்ற இரண்டுங் கெட்டான் பெயரை அவர்கள் ஏற்கவில்லை.

இரண்டுங்கெட்டான் திராவிடப் பின்புலம் இல்லாதததால்தான், ஆந்திராவில் ஒரு நடிகர் இயல்பாகத் “தெலுங்கு தேசம்” என்ற பெயரில் கட்சி தொடங்க முடிந்தது. கேரளத்தில் கம்யூனிஸ்ட்டுத் தலைவர்களும், காங்கிரசுத் தலைவர்களும் மலையாள இனப்பற்றைத் தாண்டி, மலையாள இனவெறியுடன், தமிழ்நாட்டிற்குரிய முல்லைப் பெரியாறு அணையை முடக்கும் வேலைகளில் தீவிரமாகச் செயல்படுகிறார்கள். கர்நாடகத்தில் காங்கிரசு முதலமைச்சர் கன்னடக் கொடியேற்ற சட்டப்படி அதிகாரிகள் குழு அமைத்துள்ளார்.

இந்தியத்தேசிய வெறிக் கட்சிகளான காங்கிரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையின் கீழ் உள்ள கர்நாடக, கேரளத் தலைமைகள் கன்னட, மலையாள இனப்பற்றைத் தாண்டி, இனவெறியுடன் இருக்கிறார்கள்; தமிழ்நாட்டிலோ இன உரிமை என்ற பெயரில் “திராவிட” இனம் பேசி, இயற்கையான தமிழின உணர்வைக் கொன்று தமிழரல்லாத அயல் இனங்களின் மீது மோகத்தை வளர்த்துவிட்டனர், திராவிடத் தலைவர்கள்!

இருந்தும் தமிழ் இன உணர்ச்சி இங்கு மற்ற தென்மாநிலங்களைவிட குறைவாக இருப்பதற்குக் காரணம் தமிழின அரசியலில் திராவிட அரசியல் புகுந்ததுதான்!

ஆரிய ஏகாதிபத்தியவாதிகள் புதிதாக கட்டமைத்த “இந்தியன்” என்ற வடக்கத்திய இனப்புனைவுக்கு எதிராக தமிழ்நாட்டில் தமிழறிஞர்களும், தமிழர்களும் வெளிப்படுத்திய தமிழின உணர்ச்சியை - “திராவிடன்” என்று பெரியார் தலைமையிலான திராவிடத் தலைவர்கள் மடைமாற்றினார்கள். அந்த பாதிப்பைத் தான் இன்றையத் தலைமுறைத் தமிழர்கள் சுமக்கிறார்கள்.
கர்நாடகத்தில் கன்னடரல்லாதவர்களாக தெலுங்கர்கள், தமிழர்கள், மராத்தியர்கள் அதிகம் உள்ளனர். இவர்களின் கூட்டுத்தொகை கன்னடர்களின் மக்கள் தொகையைவிட அதிகம் என்றும் கூறுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்கள் 80 விழுக்காடு அளவிற்குப் பெரும்பான்மையினர்!

கர்நாடகத்தில் கன்னட மொழி அலுவல் மொழியாகச் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரமுள்ள கன்னட வளர்ச்சி ஆணையம் (Kannada Development Authority - KDA) அமைத்துள்ளது அம்மாநில அரசு. கர்நாடகாவில் கன்னடம் உரியவாறு பயன் படுத்தவில்லையென்றால் - அதற்குப் பொறுப்பான அதிகாரிக்கு அல்லது தனிநபருக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்பி வரவழைத்து, அவரை விசாரணை செய்யவும், அவரை இடைநீக்கம் செய்யவும், அவருக்குத் தண்டனை வழங்கவும் அதிகாரம் படைத்தது கன்னட ஆணையம்!

தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சித்துறை என்று ஒன்றுள்ளது. அதற்கு எந்த அதிகாரமும் இல்லை. வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் உரியவாறு தமிழ் எழுதப்பட்டிருக்கிறதா என்று பார்க்கக்கூட அதிகாரம் இல்லை! அதற்கான அதிகாரம், தொழிற்சாலை ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கன்னட ஆணையத்திற்கு அழைப்பாணை (Summoning Authority) அனுப்பும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட அதிகாரம் எதுவும் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர்களுக்கோ, இயக்குநருக்கோ இல்லை!

“இருப்பது ஓர் உயிர்; அது போவது ஒருமுறை; அது தமிழுக்காகப் போகட்டும்” என்று ஆயிரத்தோருமுறை பேசிய கருணாநிதி தம் ஆட்சிக் காலத்தில், கன்னட ஆணையம் போல் “தமிழ் ஆணையம்” (Thamizh Authority) அமைக்காதது ஏன்?

கன்னடப் பிராமணப் பெண்ணான செயலலிதாவுக்கு இயல்பிலேயே தமிழுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி உண்டு! எனவே அவர் தமிழ் ஆணையம் அமைக்காததைப் புரிந்து கொள்ள முடிகிறது. தமது தமிழ் ஆற்றலால் தமிழ் மக்களிடம் வேர் பிடித்த கருணாநிதி, கன்னட ஆணையம் போல், கன்னடத்தேசியக் கொடி போல் தமிழ் ஆணையம் _ தமிழ்த்தேசியக் கொடி முதலியவற்றிற்கு முயலாதது ஏன்?

பிற மாநிலப் பிராமணர்கள்

தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள பிராமணர்களும் பிராமண அறிவுத் துறையினரும், அந்தந்த மாநிலத் தேசிய இனத்துடன் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு, அந்தந்த மொழி, இன உரிமைக்குக் குரல் கொடுக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பிராமணர்களில் பெரும்பாலோர் தாங்கள் தமிழர்கள் என்ற உளவியல் ஒருங்கிணைப்பு இல்லாமல் ஒதுங்கியே சிந்திக்கிறார்கள். அதிலும் அறிவுத்துறை மற்றும் ஊடகத்துறையில் உள்ள பிராமணர்களில் பெரும்பாலோர் தமிழின அடையாளங்களுக்கும், தமிழ்மொழி உரிமைகளுக்கும் எதிராகவே செயல்படுகிறார்கள். அவர்கள் தங்களின் முன்னோர்கள் ஆரியர்கள், தங்களின் புனித மொழி சமற்கிருதம் என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தங்கள் வீட்டு நினைவுடனேயே (Nostalgia) வாழ்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்த பின்னும் அவர்களது ஆரிய கோத்திர நினைவுகள் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வரக் காரணம் என்ன? வர்ணாசிரம தர்மப்படி ஆரியப் பிராமணர்கள் எல்லோர்க்கும் தலைமையாக ஆதிக்கம் செலுத்தியவர்கள். அந்த ஆதிக்கத்தை இன்று விட்டுவிட மனம் வரவில்லை. நவீனமான முறையில், நளினமான வடிவங்களில் இன்றும் பிராமண ஆதிக்கம் நீடிக்க வேண்டும் என்பதே அவர்களின் உள்ளுணர்வு!

சோ, குருமூர்த்தி, சுப்பிரமணிய சாமி போன்றவர்கள் தங்களின் ஆரிய பிராமண ஆதிக்கம் தொடர வேண்டும் என்பதை ஓரளவு ஒளிவு மறைவின்றிச் சொல்லக் கூடியவர்கள். இடதுசாரிகள், சனநாயகர்கள், தாராளர்கள் என்று அறியப்படும் பிராமணர்களில் பலர் வர்ணாசிரம தர்மத்தின் மறைமுக இரசிகர்கள்!

தமிழ்நாட்டில் பெரியாரும், திராவிட இயக்கத்தினரும் மிகவும் கடுமையாக அவர்களைப் பகைவர்களாக்கும் வகையில் பிராமண எதிர்ப்புப் பரப்புரை செய்தார்கள்; அதனால் பிராமணர்கள் - குறிப்பாகப் பிராமண அறிவுத் துறையினர் தமிழ்த்தேசிய இனத்துடன் ஒருங்கிணையாமல் போய் விட்டார்கள் என்ற வாதம் இங்கு பேசப்படுகிறது. பிராமண ஆதிக்கக் கொடுமைகள் - சகிக்க முடியாத நிலையில் இருந்ததால், பெரியாரும் அவர் வழி வந்தோரும் கடுமையாக எதிர்வினை ஆற்ற வேண்டிய தேவை இருந்தது. அதனைக் குறைகூற முடியாது!

பிராமண வகுப்பில் பிறந்த பாரதியாரே, “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளை பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே” என்று பாடினார். “ஏது செய்தும் பார்ப்பான் காசு பெற பார்ப்பான்” என்றார்.

சங்க காலத்திலிருந்து ஆரிய இன ஆதிக்கத்தையும் ஆரிய மொழி ஆதிக்கத்தையும் எதிர்த்து வந்த மரபு தமிழர்களுக்குண்டு! “பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் போர் கொண்ட மன்னர்க்குப் பொல்லாத வியாதியாம்” என்று பாடினார் திருமூலர். “வேதாகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்”, “நால்வருணம் தோல் வருணம் ஏது” என்று பேசினார் வள்ளலார்!

தமிழ்நாட்டுப் பிராமணர்களில் உண்மையான சீர்திருத்தவாதி தோன்றி, களைப்படையாமல் தன் சமூகத்தைத் திறனாய்வு செய்து, அவர் பிராமணர்களிடையே செல்வாக்கு பெற்று அந்த வரலாற்றுப் போக்கில் தமிழர்களும் பிராமணர்களும் தேசிய இன அடிப்படையில் ஒருங்கிணைந்திருக்க வேண்டும். அந்தச் சீர்திருத்தம் தமிழ்நாட்டுப் பிராமணர்களிடையே நடைபெறவில்லை.

கர்நாடகத்தில் தனிக்கொடிக்கு அரசுக் குழுவை அம்மாநில முதல்வர் சித்தராமையா அமைத்ததை அம்மாநிலப் பிராமண அறிவுத்துறையினர் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டில் 1970-இல் கலைஞர் கருணாநிதி தனிக்கொடி திட்டத்தை அறிவித்தபோது இங்குள்ள பிராமண ஏடுகள் அதை எதிர்த்துக் கொதித்துக் கொந்தளித்தன. 1938-இல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடந்த போது, “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று தமிழ்த்தேசியத் தாயகக் குரல் கொடுத்தபோது, “எலிவளை எலிகளுக்கே” என்று பிராமண ஏடோன்று கேலி செய்தது.

தமிழ்நாட்டுப் பிராமணர்களிடையே உள்ள சனநாயக ஆற்றல்கள் பிராமணியத்தை வெளிப்படையாக விமர்சிக்க வேண்டும். தமிழ் வளர்ச்சிக்கு அரும்பெரும் பங்காற்றிய அறிஞர்களில் பிராமணர்கள் பலர் உள்ளனர்.

ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மண்ணில் வாழ்ந்து, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள பிராமணர்கள் மற்ற மாநிலங்களில் அந்தந்த தேசிய இனத்துடன் ஒன்றுகலந்ததுபோல், தமிழ்நாட்டிலும் தமிழ்த்தேசிய இனமாய் உளவியல் பெற வேண்டும்.

குருமூர்த்தி, எச். இராசா, சுப்பிரமணிய சாமி, எஸ்.வி. சேகர் போன்ற ஆரிய ஆதிக்கவாதிகள் இருக்கத்தான் செய்வார்கள். சனநாயக உணர்வுள்ள பிராமணர்கள் அவர்களை ஓரங்கட்ட வேண்டும். எச். இராசாக்கள், தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றால் பிராமணியத்திற்கு எதிரான தமிழர்களின் எதிர்வினை விமர்சனங்களும் கடுமையாகத்தான் இருக்கும்!

பிறமொழி பேசுவோர்

கர்நாடகத்தில் தெலுங்கு, தமிழ், மராத்தி மொழிகள் பேசுவோர் - கன்னடத்தேசியக் கொடி உருவாவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. கன்னட மொழிதான் கர்நாடக அலுவல் மொழி என்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

அதேபோல் வரலாற்றின் போக்கில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் குடியேறி இந்த மண்ணின் மக்களாக வாழும் பிறமொழி பேசும் மக்கள், தமிழுடனும் தமிழ்த்தேசியத்துடனும் ஒருங்கிணைந்தவர்கள். இந்த உணர்வை, உறவைக் குலைக்கும் வகையில் தெலுங்கு மாநாடு நடத்தி தமிழ்நாட்டில் தெலுங்கை இரண்டாவது ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று சிலர் தீர்மானம் போடுகிறார்கள். இந்தத் தன்னலவாதிகளின் சூழ்ச்சி வலையில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் வீழ்ந்துவிடக் கூடாது!

தமிழ்நாட்டை தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் இருமொழி மாநிலமாக மாற்றும் சூழ்ச்சித் திட்டத்தில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு சாரார் முயல்கிறார்கள். இந்த முயற்சியின் பின்னணியில் தெலுங்குத் தொழில் அதிபர்களில் ஒரு சாரார் இருக்கிறார்கள். இந்த முயற்சியின் அறிவிக்கப்படாத தலைவராக வெங்கையா நாயுடு, நிர்மலா சீத்தாராமன் போன்றோர் செயல்படுகின்றனர். இந்த ஏற்பாட்டின் ஒரு பகுதியாகத்தான், ஆந்திரத் தெலுங்கர்களைத் தமிழ்நாட்டின் ஆளுநராக இந்திய அரசு அவ்வப்போது அமர்த்துகிறது.

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் தங்களைத் தமிழர்களாக உணர்கிறார்கள். தமிழ்மொழி உரிமைப் போராட்டங்களில், ஈழ விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள். அந்த சிறந்த மரபு தொடர வேண்டும்.

பலநூறு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு வாழும் பிறமொழி பேசும் மக்கள் அனைவரும் இந்த மண்ணின் மக்கள் மட்டுமல்ல, மரபுவழிப்பட்ட தமிழர்களுக்குள்ள உரிமைகள் அனைத்தும் அவர்களுக்கும் இருக்கிறது என்ற நிலைபாடு கொண்டது நாம் முன்வைக்கும் தமிழ்த்தேசியம்!
பிறமொழி பேசுவோரும் தமிழைத் தமிழ்நாட்டின் அலுவல் மொழியாகவும், கல்வி மொழியாகவும் ஏற்க வேண்டும். விருப்பப்பாடமாக அவர்கள் தாய் மொழியைக் கற்கும் வாய்ப்பும் இங்கு இருக்க வேண்டும்.

முகமூடித் தமிழ்த்தேசியம்

“தமிழ்நாடு தமிழர்க்கே” என்ற முழக்கத்துடன் 1930களில் தமிழ்த்தேசியக் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. பின்னர் பெரியார் தலைமையிலும் அண்ணா தலைமையிலும் திரிபான திராவிட வடிவம் என்ற போதிலும் தமிழ்நாட்டு விடுதலையை பெருவாரியான தமிழ் மக்கள் ஆதரித்து அணிவகுத்தனர்.

தனிநாட்டு விடுதலைக்குரல் எழுப்பாத ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றையும் ஒருதலைக் காமம் போல் சேர்த்துக் கொண்டு, நான்கு மாநில விடுதலைக்குத் தி.மு.க. குரல் எழுப்பியது. தமிழ்நாட்டு விடுதலையாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் திரள் தி.மு.க.வை ஆதரித்தனர். விடுதலை முழக்கத்தை எழுப்பிக் கொண்டு முதல் முதலாக போட்டியிட்ட 1957 தேர்தலில் 15 சட்டப் பேரவை உறுப்பினர்களையும், அடுத்து 1962 தேர்தலில் 50 சட்டப் பேரவை உறுப்பினர்களையும் தமிழ் மக்கள் தி.மு.கழகத்திற்கு வழங்கினார்கள்.

அதன்பிறகு 1963இல் தி.மு.க. தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டது. 1971 தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தது தி.மு.க. அதன் பின்னர் காங்கிரசுடனும் பா.ச.க.வுடனும் மாறி மாறிக் கூட்டணி சேர்ந்து வருகிறது.

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் எழுப்பிய தனிநாட்டுக் கோரிக்கை தொடக்கத்திலேயே ஒரு பகட்டு முழக்கமாகவே முன்வைக்கப்பட்டது. பிறக்கும்போதே ஊனமாகப் பிறந்தது. தேசியம், தேசிய இனத் தாயகம் ஆகியவற்றைப் பற்றி இவர்களிடம் சமூக அறிவியல் படியிலான வரையறுப்பு இல்லை; அப்படி வரையறுக்க வேண்டும் என்ற விருப்பமும் இவர்களிடம் இல்லை! எல்லாவற்றிற்கும் மேலாக இம்மூவருக்கும், இவர்கள் எழுப்பும் விடுதலைக் கோரிக்கையின் மீது இவர்களுக்கே நம்பிக்கை இல்லை; எனவே விடுதலை இயக்கத்திற்கேற்ற நடைமுறை அரசியலை இவர்கள் பின்பற்றவும் இல்லை!

இந்திய ஏகாதிபத்தியத் தலைமையுடன் கூடிக் குலாவிக் கொண்டனர். தங்கள் இயக்கத்தின் எல்லைக்குள் வராத இன்ன பிற இனங்களையும் இவர்களாக சேர்த்துக் கொண்டு, அவற்றிற்கும் விடுதலை கேட்டனர்.

இவர்களால் தமிழர் இன அரசியலில் - அதாவது தமிழ்த்தேசிய அரசியலில் ஏற்பட்ட குழப்பங்களும், பின்னடைவுகளும் கொஞ்ச நஞ்சமல்ல. இன்றையத் தலைமுறை அவர்கள் ஏற்றி வைத்த சுமைகளைத் தாங்கித் தவிக்கின்றனர்.

மீண்டும் அவ்வாறான குழறுபடிகள் இல்லாமல் தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு இளந்தலைமுறையினர்க்கு இருக்கிறது.

இந்தியம், திராவிடம் இரண்டையும் புறக்கணிக்காமல் தமிழ்த்தேசியம் பேசினால், அது முகமூடித் தமிழ்த்தேசியம்! முகமூடியில் தமிழர் முகம்; உள்ளே பச்சோந்தி முகம்!

இந்தியம், எதிரியாகச் செயல்பட்டு தமிழர் உரிமைகளைப் பறிக்கிறது. இது நேர்முக எதிரி! திராவிடம் - உறவாடிச் சீர்குலைக்கிறது! இது மறைமுக எதிரி!

இந்தியத்தேசியம் பேசும் அனைத்திந்தியக் கட்சிகள் செல்வாக்குப் பெற்றுள்ள மாநிலங்களில் வளர்ந்துள்ள சொந்த இன உணர்ச்சியும் சொந்த இன அரசியலும், மாநிலக்கட்சிகள் செல்வாக்குப் பெற்றுள்ள தமிழ்நாட்டில் இல்லை. இதை உணர்ந்து படிப்பினைகள் பெறுவோம்!

தமிழ்த்தேசிய முழக்கங்கள் இன்று பல முனைகளிலிருந்து வருகின்றன. அம்முழக்கம் எழுப்புவோர், தமிழ்த்தேசிய இறையாண்மையை முன் வைக்கிறார்களா? பதவி, பணம், விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத தன்னல மறுப்பு இலட்சியவாதிகளாக இருக்கிறார்களா?

பகட்டு ஆரவாரத்துடன் தமிழ்த்தேசியம் பேசிக் கொண்டே, பகைவன் அனுமதிக்கும் கங்காணிப் பதவிகளுக்காகக் காத்திருக்கிறார்களா?

இளந்தலைமுறையினர் இப்படியெல்லாம் அலசி ஆராய வேண்டிய தேவை உள்ளது. ஏற்கெனவே நம் முன்னோர் ஏமாற்றப்பட்டனர்!

சிந்திக்கத் தயங்காதீர்; மூளைச்சோம்பல் அறிவை முடக்கிவிடும்! திறனாய்வு செய்ய அஞ்சாதீர்; தேசத்தின் தலைவிதி உங்கள் கையில் உள்ளது! நம்தேசம் தமிழ்த்தேசம்!

“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” - தமிழ்த்தேசிய மாதமிருமுறை இதழின் ஆகத்து 16-31 இதழில் தோழர். பெ. மணியரசன் எழுதிய கட்டுரை இது!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.