மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ்.? தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!
மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ்.? தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!
“நாக்கு நாட்டியத்தாலேயே நாட்டை ஆண்டு விடலாம்” எனக் கருதிக் கொண்டு வண்ண வண்ண வாய்வீச்சு நடத்திய நரேந்திர மோடி, நாட்டின் பொருளியலை முட்டுச்சந்தில் நிறுத்திவிட்டார்.
“இந்தியாவை பொருளாதார வல்லரசாக தூக்கி நிறுத்த வந்தவர்’’ என்று நரேந்திர மோடிக்கு வண்ணம் பூசிய ஆர்.எஸ்.எஸ்.சின் பதவித் தரகர் தணிக்கையாளர் குருமூர்த்தியே, “நாட்டின் பொருளியல் மூழ்கிக் கொண்டிருக்கிறது’’ என அபாய அறிவிப்பு செய்கிறார்!
இன்னொரு பதவித் தரகரான சுப்பிரமணியம் சாமி, “பொருளியல் மந்தநிலை நோக்கி இந்தியா வேகமாக சரிந்து வருகிறது” என்று கூறுகிறார்.
இந்த இருவரும் ஏதோ விவரம் தெரியாமல், அவசரப்பட்டு மோடியின் செல்லாத பணம் அறிவிப்பையும், ஜி.எஸ்.டி.யையும் ஆதரித்துவிட்டு இன்று உண்மை தெரிந்தவுடன் திருத்திக் கொண்டு பேசுகிறார்கள் என அப்பாவியாக யாரும் கருதிவிடக் கூடாது!
சில நாட்களுக்கு முன்னால், 2019 இந்திய நாடாளு மன்றத் தேர்தலை எவ்வாறு சந்திப்பது என “வியூகம்’’ வகுப்பதற்காகக் கூடிய ஆர்.எஸ்.எஸ்.சின் தலைமைக் குழு, தொழில்துறை, வேளாண்மை, பணப்புழக்கம், வேலை வாய்ப்பு ஆகிய பல முனைகளில் மிகப்பெரும் சிக்கலை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதை உணர்ந்து மோடியின் முகத்தைக் காட்டியே அத் தேர்தலில் வாக்கு வாங்க முடியாது என்ற முடிவுக்கு வந்தது.
மக்கள் சந்திக்கும் இச்சிக்கலைப் பயன்படுத்தி, ஒன்றிணைந்த எதிர்ப்பைக் காட்டும் நிலையில் எதிர்க்கட்சிகள் இல்லை என்ற வாய்ப்பான சூழலையும் உணர்ந்தார்கள். இதற்கேற்ப இச்சிக்கல்களை முன் வைக்கும் “எதிர்க்கட்சி” இடத்திலும் தாங்களே இருந்து செயல்படுவது, தேவையானால் போராடுவது, இப்போராட்டங்கள் அனைத்திலும் மோடியைத் தவிர மற்றவர்களை திறனாய்வு செய்வது, ஒருவேளை இறுதியில் மோடியையும் மக்கள் கோபத்திலிருந்து பாதுகாக்க முடியாது என்றால் அவரைக் கழற்றிவிட்டு, வேறு ஒருவரைத் தேடுவது என்ற செயல்திட்டத்தில் இருக்கிறார்கள்.
இதற்கேற்பவே, இப்போது குருமூர்த்தியும் சுப்பிரமணியம் சாமியும் பேசுகிறார்கள்.
இந்தியத் தேர்தல் வரலாறு காணாத அளவில், இல்லாத பெருமைகளையெல்லாம் சொல்லி, மோடியை தலைமை அமைச்சராக உட்கார வைக்க பெருங்குழும ஊடகங்கள் படாதபாடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றன. அம்பானி, அதானி போன்ற முன்வரிசைப் பெருமுதலாளிகள் பணத்தை வாரி இறைத்து, மோடிக்காக “தேர்தல் பணி” ஆற்றினார்கள்.
வாங்கிய காசுக்கு ஏற்ப மிக வேகமாக அடுத்தடுத்த திட்டங்களை இப்பெருங்குழுமங்களுக்கு ஆதரவாக மோடி அறிவித்தார். அவற்றுள் முகாமையானவை ரூபாய் 500 - 1,000 பணத்தாள்கள் செல்லாது என்ற பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, சரக்கு சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. பணமதிப்பு இழப்பில் நாடே தத்தளித்து நின்ற போது, அனைத்து ஊடகங்களிலும் முதன்மையானக் கல்வி நிறுவனங்களிலும், ஆய்வு நிறுவனங்களிலும் குருமூர்த்தி ஓடோடிப்போய் அதனை ஞாயப்படுத்திப் பேசினார்.
எடுத்துக்காட்டாக, “தூர்தர்சன்’’ செய்தி ஊடகத்திற்கு 18.11.2016 அன்று அளித்த விரிவான நேர் காணலில், “பணமதிப்பிழப்பு நீண்டகாலமாக நாடு எதிர்பார்த்த பொருளியல் நடவடிக்கை; நாடு பொருளாதாரத்தில் புதிய உயரங்களை எட்டுவதற்கு நேர்த்தியான தயாரிப்புகளோடு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. நெஞ்சுரமிக்க செயல் துடிப்புள்ள நரேந்திர மோடியைத் தவிர வேறு எந்தப் பிரதமராலும் இப்படிப்பட்ட நடவடிக்கையை இவ்வளவு விரைவாக மேற்கொண்டிருக்க முடியாது” என்றார் குருமூர்த்தி.
ஆனால் அதே குருமூர்த்தி இன்று, நாட்டுப் பொருளியல் அனைத்து முனைகளிலும் பெரும் சரிவை சந்தித்து வருவதைப் பார்த்து, மக்களோடு சேர்ந்து கொண்டு கூப்பாடு போடுகிறார்.
சென்னை “பன்னாட்டுப் பொருளியல் பள்ளி” என்ற ஆய்வு நிறுவனத்தில், பொருளியல் ஆய்வாளர் களிடையே 22.09.2017 அன்று பேசிய குருமூர்த்தி, ஏற்கெனவே தான் பேசியதை அப்படியே மாற்றி, “முறையான தயாரிப்பு ஏதுமின்றி பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 90 விழுக்காடு மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் சிறு தொழில்கள், சிறுவணிகம் போன்ற முறைசாரா துறைகள் தங்களது முதலீட்டுத் தேவைக்கு 96 விழுக்காடு நேரடிப் பணப் பரிமாற்றத்தையே நம்பி இருந்தன. பணமதிப்பு இழப்பு இத்தொழில்களை மேல் எழும்ப முடியாமல் நொறுக்கி விட்டது. நுகர்வும், வேலை வாய்ப்பும் தேங்கி நின்று கீழே இறங்கின. மீண்டும் பண சுழற்சி வந்தபோதும், இந்நிறுவனங்கள் 360லிருந்து 480 விழுக்காடு வட்டிக்கு பணம் வாங்கி முதலீடு செய்ய வேண்டிய நெருக்கடியில் சிக்கிவிட்டன. சிறு தொழில்களுக்கு தாராளமாக குறைந்த வட்டியில் முதலீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தாமல், பணமதிப்பை இழக்கச் செய்தது மோசமான தோல்வியைக் கொடுத்தது. உரிய தயாரிப்பின்றி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விட்டது இந்த நெருக்கடியிலிருந்து மீளாத நிலையில், ஜி.எஸ்.டி. அறிவிப்பு அடுத்த சிக்கலை ஏற்படுத்தி விட்டது’’ என்று புலம்பினார்.
மோடியின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கைத் திட்டத்தை ஏற்க மறுத்து, அம்பானி, அதானி, எஸ்ஸார் குழுமத்தின் ருய்யா, டாடா, ஜி.எம்.ஆர்., வீடியோகான் ஆகிய பெரும்புள்ளிகள் அரசு வங்கிகளில் நிலுவையில் வைத்துள்ள பல்லாயிரம் கோடி கடனை திரும்ப வசூலிக்க வேண்டும் என வலியுறுத்திய, அன்றைய இந்திய சேம வங்கி (ரிசர்வ் வங்கி) ஆளுநர் இரகுராம் ராஜனை அவமானப்படுத்தி - பதவி விலகச் செய்த சுப்பிரமணியம் சாமி, இன்று “எல்லாம் தவறாகிப் போய்விட்டது’’ என்று அரற்றுகிறார்.
இப்போது அவர் நிதியமைச்சர் அருண் செட்லியின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று பேசத் தொடங்கி யிருக்கிறார்.
மிகப்பெரிய மந்தநிலையை நோக்கி இந்தியப் பொருளியல் சரிந்து கொண்டிருக்கிறது!
மார்ச் 2016இல், 9.2 விழுக்காடாக இருந்த பொருளியல் வளர்ச்சி விகிதம் சூன் 2017இல் 5.7 விழுக்காடாக சரிந்திருக்கிறது. அதிலும், வேளாண்மையும் உற்பத்தித் துறையும் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கின்றன.
மறுபுறம், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.4 விழுக் காட்டளவில் உள்ளது.
பன்னாட்டு சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை மிகப்பெருமளவுக்குக் குறைந்து வரும் நிலையில், இந்த நிதிப் பற்றாக்குறை இருப்பது அபாயத்தின் விளிம்பில் இந்திய நிதிநிலை இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறு பொருளியல் சரிவு, தனியார் முதலீடுகள் குறைந்து வருவது, வேளாண்மை நெருக்கடியில் இருப்பது ஆகியவற்றோடு சேர்ந்து வரலாறு காணாத வகையில் அரசு வங்கிகளின் வாராக் கடன்கள் வளர்ந்து வருகின்றன.
2013இல் 1.56 இலட்சம் கோடி ரூபாயாக இருந்த வாராக்கடன், இப்போது 14.47 இலட்சம் கோடி ரூபாயாக 2017இல் உயர்ந்திருக்கிறது. இதுகுறித்து இந்திய அரசின் தலைமைத் தணிக்கை அதிகாரி சசிகாந்த் சர்மா கூறியிருப்பது, அதிர்ச்சியளிக்கிறது!
“பல்லாயிரம் கோடி வாராக்கடனில் பெரும் பகுதி சட்டப் புறம்பான வழிகளில் வெளிநாடுகளில் முதலீடாக எடுத்துச் செல்லபட்டிருக்கலாம். அவற்றை மீட்க முடியுமா என்பது பெரும் ஐயத்திற்குரிய செய்தி!” என்கிறார் சசிகாந்த் சர்மா (பிசினஸ் ஸ்டாண்டர்டு, சூலை 2 - 2016).
வாங்கிய கடனை வங்கிகளுக்குச் செலுத்தாமல், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா, லலித் மோடி போன்றவர்கள் பா.ச.க. தலைவர்களின் ஒத்துழைப்போடுதான் சென்றார்கள் என்பது ஊரறிந்த கமுக்கம்! ஆனால், கணக்குப்படி பார்த்தால் இவர்கள் சிறிய புள்ளிகள்! 80,000 கோடி - 1 இலட்சம் கோடி கடன் கட்டாத அதானி, அம்பானி, டாடா போன்றவர்கள் தப்பித்துச் செல்ல வேண்டியதில்லை. மோடியின் பாதுகாப்பிலேயே அவர்கள் இருக்கிறார்கள்.
“ஒரே வரி - ஒரே சந்தை’’ என்ற பெயரால், செயல் படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி., சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை பெரும் சிக்கலில் ஆழ்த்தியிருக்கிறது. விழாக்கால விற்பனையையும், ஏற்றுமதியையும் குறி வைத்து இரட்டிப்பு மடங்கு முயற்சியோடு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த சிறு தொழில் முனைவோர், தாங்கள் வாங்கிய கச்சாப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. சட்டத்தின்படி முன் வரி செலுத்திவிட்டார்கள். அவை, கச்சாப் பொருள் உற்பத்தியாளரிடமிருந்து திரும்பக் கிடைக்க வேண்டும். அது கிடைக்கவில்லை!
கச்சாப் பொருள் உற்பத்தியாளரிடமிருந்து வரி திரட்டி அத்தொகையை திருப்பிச் செலுத்த வேண்டியது அரசின் கடமை. ஆனால் அது நடக்கவில்லை.
இவ்வாறு 65 ஆயிரம் கோடி ரூபாய் வர வேண்டிய தொகை முடங்கிக் கிடப்பதால், மறு முதலீட்டுக்குப் பணம் இல்லாமல், பல இலட்சக்கணக்கான சிறுதொழில் முனைவோர் கைபிசைந்து நிற்கிறார்கள்.
“கருப்புப் பணத்தை மீட்கிறோம். இன்னும் 3 நாட்களுக்குள் 3 இலட்சம் கோடி கருப்புப் பணத்தை வெளியில் கொண்டு வர இருக்கிறோம். கருப்புப் பணக்காரர்கள் கதிகலங்கி இருக்கிறார்கள்” என்றெல்லாம் கொடியேற்றிவிட்டு, இந்திய விடுதலை நாளில் நரேந்திர மோடி செங்கோட்டையில் நின்று கொண்டு வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான், இந்திய சேம வங்கி, “செல்லாது என்று அறிவித்த பணமெல்லாம் மீண்டும் வங்கிக்கு வந்து விட்டது. இதை வைத்து கருப்புப் பணம் ஒன்றும் கிடைக்கவில்லை’’ என்று கைவிரித்தது.
மோடியின் குசராத் மாநிலம் சூரத் நகரில், பல இலட்சம் நெசவாளர்கள் மற்றும் அது சார்ந்த தொழில் முனைவோர் மிகப்பெரும் பேரணியை நடத்தி, ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இவை பற்றியெல்லாம் கவலைப்படாமல், “டிஜிட்டல் இந்தியா’’ கூச்சல் போட்டுக் கொண்டு நாடு நாடாக சுற்றி வருகிறார் மோடி!
அறமதிப்போ நாணமோ கொஞ்சமும் இல்லாத சாணக்கியத் தனமான ஆட்சியாளரல்லவா நரேந்திர மோடி!
(இக்கட்டுரை தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 அக்டோபர் 1-15 இதழில் வெளியானது).
த.தே.த.க. முகநூல் : https://www.facebook.com/tkannottam
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment