ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைக்கும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியதை வரவேற்கிறோம்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைக்கும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியதை வரவேற்கிறோம்!  காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
மாநிலங்களுக்கிடையிலான ஆற்றுநீர்ச் சிக்கல்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க அனைத்திந்திய அளவில் நிரந்தரமான ஒற்றைத் தீர்ப்பாயம் அமைப்பது என்றும் நடைமுறையில் உள்ள காவிரித் தீர்ப்பாயம் உள்ளிட்ட ஐந்து தீர்ப்பாயங்களைக் கலைத்துவிடுவது என்றும் இந்திய அரசின் நீர் வளத்துறை புதிய சட்டமியற்றிட நாடாளுமன்ற மக்களவையில் முன்வைத்துள்ள சட்ட முன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களுக்கு 29.11.2017 அன்று கடிதம் எழுதி இருப்பதைக் காவிரி உரிமை மீட்புக் குழு வரவேற்கிறது; பாராட்டுகிறது! 

ஒற்றைத் தீர்ப்பாய சட்ட முன்வடிவை அன்றைய இந்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அவர்கள் 14.03.2017 அன்று மக்களவையில் முன்வைத்துள்ளார் என்ற செய்தி வந்தபின், அந்த முன்வடிவைத் திரும்பப் பெற வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் அறிக்கை கொடுத்தேன். 

அதன்பிறகு ஒற்றைத் தீர்ப்பாய முன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும்; ஒரு வேளை ஒற்றைத் தீர்ப்பாயச் சட்டம் நிறைவேறினால் நிலவுகின்ற காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைக்கக் கூடாது; காவிரி வழக்கை ஒற்றைத் தீர்ப்பாயத்திற்கு அனுப்பக் கூடாது; காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புப்படி உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், கர்நாடகம் மேக்கேதாட்டில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை முதன்மையாக வைத்து, காவிரி உரிமை மீட்புக் குழு என் தலைமையில் 2017 மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை, 19 நாள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன் இரவு பகலாக 24 மணி நேரமும் காத்திருப்புப் போராட்டம் நடத்தியது. காவிரி டெல்டா மாவட்டங்களின் உழவர்களும், உணர்வாளர்களும் அன்றாடம் அக்காத்திருப்புப் போராட்டத்தில் திரளாகக் கலந்து கொண்டார்கள். 

காவிரி உரிமை மீட்புக் குழுவில் உறுப்பு வகிக்கும் தமிழக விவசாயிகள் சங்கம், தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழர் தேசிய முன்னணி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, இந்திய சனநாயகக் கட்சி, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டியக்கம், மனித நேய சனநாயகக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்..

உள்ளிட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், மற்றும் கூடிப்பிரியேல், மக்கள் பாதை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஆண்களும் பெண்களுமாக இப்போராட்டத்தில் பங்கேற்றனர்; பணியாற்றினர். 

இந்தத் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை கட்சி வேறுபாடின்றி, அனைவரும் ஆதரித்தனர். அ.இ.அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரசு, சி.பி.எம்., சி.பி.ஐ., தமிழ் மாநிலக் காங்கிரசு, அனைத்திந்திய முஸ்லிம் லீக், திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழர் நலம் பேரியக்கம், தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் தலைவர்கள் போராட்டப் பந்தலுக்கு வந்து ஆதரவு தெரிவித்து வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழ்நாடு அளவில் செயல்படும் பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் தலைவர்களும் போராட்டப் பந்தலுக்கு வந்து ஆதரவு தெரிவித்தார்கள். 

குறிப்பாக தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் திரு. துரைக்கண்ணு அவர்களும், மேனாள் அமைச்சர் திரு. வைத்திலிங்கம் அவர்களும் போராட்டப் பந்தலுக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள ஒற்றைத் தீர்ப்பாய சட்ட முன்வடிவின் நகலை அவர்களிடம் வழங்கி, அதன் அபாயத்தை எடுத்துரைத்தோம். முதலமைச்சரிடம் இது குறித்து எடுத்துச் சொல்வதாக உறுதி அளித்தார்கள். 
இப்போராட்டத்தை மக்களிடமும், ஆட்சியாளர்களிடமும் கொண்டு செல்வதற்கு உரிய வகையில் காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் மிகவும் பாராட்டுக்குரியவை. போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நிலையில், நாடாளுமன்ற விவாதப்பட்டியலிருந்து ஒற்றைத் தீர்ப்பாய சட்ட முன்வடிவை நீக்கி நிலுவையில் வைத்தார்கள். நாடாளுமன்றக் கூட்டத்தொடரும் ஏப்ரல் 12 அன்று முடிந்தது. 

இதனையடுத்து காத்திருப்புப் போராட்டத்தின் 19ஆம் நாள் (15.04.2017), இதே கோரிக்கைகளுக்காக மே 15 முதல் 21 வரை தொடர்ச்சியாக ஏழு நாட்கள், திருச்சி - தஞ்சை - திருவாரூர் - நாகை - கடலூர் மாவட்டங்களில் தொடர்வண்டி (ரயில்) மறியல் போராட்டங்களை நடத்தும் போராட்டத்தை அறிவித்தோம். தொடர்வண்டி இருப்புப் பாதைகளில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் குவிந்து நின்று தொடர்வண்டிகளைத் தடுத்து நிறுத்தம் போராட்டமாக, அதை வெற்றிகரமாகக் காவிரி உரிமை மீட்புக் குழு நடத்தியது. 

இப்போது, 29.11.2017 அன்று தமிழ்நாடு முதல்வர், நடுவண் நீர்வளத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தாங்கள் ஏற்கெனவே நிரந்தரத் தீர்ப்பாயம் வேண்டாம் என்று கூறியதாகவும் மீண்டும் அதை வலியுறுத்துகிறோம் என்றும் விளக்கமாகக் கூறியுள்ளார். 

தமிழ்நாடு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ள மிக முக்கியமான கருத்துகள் உறுதியாக வலியுறுத்தத் தக்கவை.

1. ஒவ்வொரு மாநிலத் தண்ணீர்ச் சிக்கலும் வெவ்வேறு தன்மை கொண்டவை என்பதால், இந்தியா முழுவதற்கும் நிரந்தரமான ஒற்றைத் தீர்ப்பாயம் கூடாது. 

2. மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டம் 1956-இல் 2002 வரை செய்த திருத்தங்கள் போதும். மேலும் புதுத்திருத்தம் தேவை இல்லை. எனவே, மக்களவையில் முன்வைத்துள்ள நிரந்தர ஒற்றைத் தீர்ப்பாய சட்ட முன்வடிவை நடுவண் நீர்வளத்துறைத் திரும்பப் பெற வேண்டும். 

3. ஒரு வேளை ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டால், அதனிடம் காவிரி வழக்கை விடக்கூடாது. இப்போது மேற்படி 1956 சட்டத்தின் - 5(3) பிரிவின்படி காவிரித் தீர்ப்பாயத்தில் உள்ள வழக்கை - காவிரித் தீர்ப்பாயம் முடிவுக்குக் கொண்டு வரட்டும். 

தமிழ்நாடு முதல்வர் அவர்களின் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்பட தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடுவண் அரசை வலியுறுத்த வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், உறுதியாக வாதம் செய்ய வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.