"குமரிப் புயலில் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டும் முதலமைச்சர் அங்கு போகாதது ஏன்?" தோழர் பெ. மணியரசன் கேள்வி!
"குமரிப் புயலில் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டும் முதலமைச்சர் அங்கு போகாதது ஏன்?" தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
குமரி மாவட்டத்தைத் தாக்கிய ஒக்கிப் புயலால் உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கையையும், இதுவரை மீட்கப்படாமல் காணாமல் போனோர் என்று அறிவிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கையையும் பார்த்தால் எதிரிப்படை ஒன்று, தமிழர்களை இனப்படுகொலை செய்ததுபோல் ஏற்பட்ட அழிவாகக் கருத வேண்டியுள்ளது! இந்த உயிரிழப்பு மற்றும் பொருளிழப்பு உள்ளிட்ட பேரழிவுகளுக்கு ஆளான மக்கள், குமரி மாவட்டத்தை மீண்டும் கேரளத்துடன் சேருங்கள் என்று குரலெழுப்பும் துயரமும் நடந்து கொண்டுள்ளது.
கடலோர மீனவர்களுக்கு இந்த இழப்பு என்றால், வேளாண் நிலங்களுக்குப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலன் தரும் இலட்சக்கணக்கான மரங்கள் விழுந்துவிட்டன. குமரி மாவட்டமே எதிரிகளால் சூறையாடப்பட்ட நாடுபோல் காட்சியளிக்கிறது. ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேரழிவுக்கு உள்ளாகி, உறவுகளையும் உடைமைகளையும் இழந்து கதறிக் கொண்டிருக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல ஏழு நாட்களாகியும் அங்கு வரவில்லை!
கேரளத்திலும் கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் உயிரிழப்பு ஏராளமாக நடந்திருக்கிறது. அங்கும் கடலுக்குப் போன மீனவர்கள் திரும்பாத நிலை உள்ளது. மரங்களும், வீடுகளும் புயலால் தாக்கப்பட்டு வீழ்ந்துள்ளன. அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், அந்த மக்களோடு நேரில் நின்று துயர் துடைப்புப் பணிகளை கவனித்து வருகிறார். இறந்த மீனவர் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபாய் உதவித் தொகை என்று ஏற்கெனவே அறிவித்து விட்டார். “இது ஒரு பேரிடர்” என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.
இன்று (07.12.2017) பாதிக்கப்பட்ட கடலோர மக்கள் பல்லாயிரக்கணக்கானோர், 12 கிலோ மீட்டர் பேரணியாக நடந்து சென்று குழித்துறை தொடர்வண்டி நிலையத்தை முற்றுகையிட்டு, தண்டவாளத்தில் பட்டினியோடு இந்த இரவிலும் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களின் முதன்மையானக் கோரிக்கைகள் - தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் வந்து பார்வையிட வேண்டும், கேரளத்தில் கடலில் சிக்கிய மீனவர்களை மீட்பதற்கு எடுக்கப்பட்ட விரைவான பல்வகை மீட்புப் பணிகளைப் போல் கன்னியாகுமரி மீனவர்களை மீட்கவும் நடைபெற வேண்டும், கேரளத்தில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு 20 இலட்சம் தருவதைப்போல் தமிழ்நாட்டிலும் தர வேண்டும் என்பன போன்றவையாகும்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய அரசு அமைச்சர் பொன். இராதாகிருட்டிணன் வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்குப் போய்விட்டு, இன்றுதான் வந்திருக்கிறார் என்றும், வந்தவர் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்ப்பதற்கு மாறாக நாகர்கோவிலில் ஒரு வணிக நிலையத் திறப்புவிழாவில் கலந்து கொள்வதில் அதிக அக்கறை காட்டினார் என்றும் அம்மக்கள் விமர்சிக்கிறார்கள். நடுவண் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இரண்டு இடங்களுக்கு வந்து பேசிவிட்டு திரும்பிவிட்டார். கன்னியாகுமரி பேரிழப்பை “தேசியப் பேரிடர்” என்று நடுவண் அரசை ஏற்கச் செய்ய அவர் முயலவில்லை என்றும் குமரி மாவட்ட மக்கள் கூறுகின்றனர்.
புயல் பாதிப்பைப் பார்க்க வந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், பாதிக்கப்பட்ட கடற்கரை கிராமங்களுக்குப் போகாமல் நகரத்தில் அதிகாரிகளோடும், மீனவப் பிரதிநிதிகளோடும் பேசிவிட்டுத் திரும்பிவிட்டார் என்றும் அம்மக்கள் துயரத்தோடு கூறுகிறார்கள்.
புயல் பேரழிவு நடந்து ஏழாம் நாள் பல்லாயிரக்கணக்கான மக்கள் குழித்துறை தொடர்வண்டி தண்டவாளத்தில் உட்கார்ந்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இன்று (07.12.2017) இரவு, இறந்துபோன மீனவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மிகவும் காலம் தாழ்த்தியும், மக்கள் போராடிய பின்னும் அறிவித்த இந்த இழப்பீட்டுத் தொகை, கேரள அரசு வழங்கியதில் பாதித் தொகைதான் என்பது மிகவும் வருத்தத்திற்குரியது!
இதுவரை சந்திக்காத பெரும் துயரை – பேரழிவை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சந்தித்துள்ளார்கள். எனவே, இந்திய அரசு இதை தேசியப் பேரிடராக அறிவித்து, தேவையான நிதியை வழங்கிட நடுவண் அரசை தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும். கேரளாவில் அறிவிக்கப்பட்டுள்ளதைப்போல், தமிழ்நாட்டிலும் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு 20 இலட்ச ரூபாய் இழப்பீடு அறிவிக்க வேண்டும்.
கடுமையான புயல் வரப்போகிறது என்று 36 மணி நேரத்திற்கு முன்பே கணிக்கக்கூடிய நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ள இக்காலத்தில், நவம்பர் 30 காலை தாக்கியப் புயல் பற்றி, அதற்கு முதல் நாள் (29.11.2017) மாலைதான் அறிவிக்கப்பட்டது என்பது மிகவும் எச்சரிக்கையற்ற – அக்கறையற்ற செயலாகும்! இதனால்தான், புயல் வரப்போகும் செய்தி தெரியாமல், பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் சென்று சிக்கிக் கொண்டார்கள்.
புயல் எச்சரிக்கை அறிவிப்பில் ஏற்பட்ட சகிக்க முடியாத இந்தக் காலதாமதம், துயர் துடைப்புப் பணியிலும் தொடர்வது கொடுமையாகும்! மக்கள் மீது அக்கறையற்ற அலட்சியப் போக்காகும்!
பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், தமிழ்நாடு முதலமைச்சர் இனிமேலாவது விரைந்து செயல்பட வேண்டும். முதலமைச்சர் வருகைக்காக குழித்துறை தொடர்வண்டி நிலையத்தில் காத்திருக்கும் மீனவர்களை உடனடியாக நேரில் சென்று சந்திக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment