ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரிப் போராட்ட வழக்கு : தருமபுரி தோழர்கள் பிணையில் விடுதலை!

காவிரிப் போராட்ட வழக்கு : தருமபுரி தோழர்கள் பிணையில் விடுதலை!
தமிழினத்தின் காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள அநீதித் தீர்ப்பு, தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆங்காங்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தீர்ப்பு வெளியான 16.02.2018 அன்று, தீர்ப்பைக் கண்டு கொதித்துப்போன தருமபுரி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், தருமபுரி இந்திய அரசுத் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், காவிரித் தீர்ப்பு நகலை எரித்ததாகக் குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய தருமபுரி த.தே.பே. செயலாளர் தோழர் க. விசயன், தோழர் ஜெ. முருகேசன் ஆகியோரை, 16.02.2018 அன்று நள்ளிரவு வீடு தேடிச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.

நள்ளிரவு 11.30 மணியளவில் தோழர் விசயன் வீட்டுக் கதவு சாத்தப்பட்டிருந்த நிலையில், அவரைக் கைது செய்யச் சென்ற தருமபுரி பி-1- காவல் நிலைய ஆய்வாளர் திரு. இரத்தினக்குமார் வீட்டிற்குள் சுவரேறி குதித்தார். தம்மைக் காவல்துறையினர் கைது செய்ய வந்திருப்பது தெரிந்து தோழர் விசயன் வழக்கறிஞருக்குக் கைப்பேசி வழியே தகவல் சொல்வதைப் பார்த்தவுடன், இரத்தினக்குமார் கதவை வேகமாகத் தட்டிக் கூச்சலிட்டுள்ளார். அதன்பிறகே தோழர் விசயனையும், காரிமங்கலத்திலிருந்த தோழர் ஜெ. முருகேசனையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 143, 147, 188, 290, 293, 285 ஆகியவற்றின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பி-1- காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து விடியற்காலை 5.30 மணியளவில் நேரில் சென்று சந்தித்தார். பின்னர், தோழர்கள் இருவரையும் தருமபுரி மாவட்ட குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஜீவா பாண்டியன் அவர்கள் முன் காவல்துறையினர் நேர் நிறுத்தியபோது, தோழர்கள் இருவரையும் சிறைக்கு அனுப்ப மறுத்துவிட்டார். காவல்துறையினர் மீண்டும் மீண்டும் என நான்கு முறைக் கோரிய போதும் சிறைக்கு அனுப்ப மறுத்துவிட்டார்.

காவல்துறையினர் மிகவும் நெருக்கடி கொடுக்கவே, தோழர்கள் இருவருக்கும் நீதிபதி அவர்கள் அங்கேயே பிணை வழங்கியதோடு பிணை தாரர்களை திங்கள்கிழமை (19.02.2018) நேர் நிறுத்தும்வரை சிறையில் வைத்திருக்கும்படி ஆணையிட்டார். இதனையடுத்து, தோழர்கள் இருவரும் தருமபுரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன்று (19.02.2018), வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் இருந்த நிலையில், தோழர் விசயனின் மனைவியும், தோழர் ஜெ. முருகேசனின் தம்பியும் நீதிபதியிடம் தாங்களே முறையிட்டு, பிணைதாரர்களையும் நேர் நிறுத்தி தோழர்களை பிணையில் விடுவதற்கான ஆணையைப் பெற்றனர். பா.ம.க. வழக்கறிஞர் வேல்முருகன் இதற்கான உதவிகளை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி செய்தார்.

இதனையடுத்து, இன்று மாலை தருமபுரி கிளைச் சிறையிலிருந்து விடுதலையான தோழர்கள் விசயன் - ஜெ. முருகேசன் ஆகியோரை எழுச்சி முழக்கங்களுடன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் வரவேற்று, மலர் மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, ஐயா தங்கவேலு, தோழர்கள் கோ. பிரகாசம், கனகராசு, வனமூர்த்தி, தங்கவேலு சங்கர் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

ஒவ்வொரு முறையும் கர்நாடகத்தில் காவிரிக்கானப் போராட்டங்கள் நடக்கும் போது, தமிழ்நாட்டு முதல்வர் படத்தையும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் படத்தையும், தீர்ப்புகளையும், ஆணைகளையும், பொதுச் சொத்துகளையும், தமிழர்களின் நிறுவனங்களையும், தமிழர்களின் பேருந்துகளையும் கன்னட இனவெறியர்கள் எரித்துப்போராடுகின்றனர். அம்மாநிலக் காவல்துறையினர், அவர்கள் அருகில்கூட வருவதில்லை! ஆனால், தமிழ்நாட்டிலோ தமிழர் உரிமைக்காகப் போராடுவோரை நள்ளிரவில் வீடு தேடிச் சென்று தமிழகக் காவல்துறையினரே கைது செய்த செயல், தமிழின உணர்வாளர்களிடம் கடும் கண்டனத்தை எழுப்பியது. சமூக வலைத்தளங்களில் இக்கைது நடவடிக்கையைப் பலரும் கண்டித்து எழுதினர். அவர்கள் அனைவருக்கும் எமது நன்றி!

காவிரி உரிமை மீட்புக்கான நமது போராட்டம் இன்னும் வீரியமாகத் தொடரும்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.