ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வுக்கு மாற்ற வேண்டும்!” தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகளுக்கு காவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை!

“காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வுக்கு மாற்ற வேண்டும்!” தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகளுக்கு காவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை! 
“காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை” என வரும் 22.02.2018 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றிட வேண்டுமென காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன், கூட்டத்தில் பங்கேற்கவுள்ள கட்சிகளுக்குக் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து, அனைத்துக் கட்சியினருக்கும் அவர் மின்னஞ்சலில் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது :
“உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கில் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பு, தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரின் அளவை மேலும் குறைத்துள்ளதுடன் காவிரி உரிமையைப் பறிப்பதற்கான அடிப்படைக் கூறுகளையும் கொண்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் அமிதவராய், ஏ.எம். கான்வில்கர் ஆகிய மூன்று பேரையும் கொண்ட அமர்வு, தமிழ்நாடு - கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே நடுநிலையைக் கடைபிடிக்கவில்லை!
காவிரிப்பாசனப் படுகையில் வராத கர்நாடக மாவட்டங்கள் 28இல், கடும் வறட்சி நிலவுகிறது என்று உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்புரையில் கூறுகிறது. அதற்காக தமிழ்நாட்டுக் காவிரிப்படுகையின் நிலத்தடி நீரிலிருந்து 10 ஆ.மி.க. (டி.எம்.சி.) ஒதுக்கியிருப்பதாகக் கூறுகிறது. தமிழ்நாட்டில் காவிரிப்படுகை மாவட்டங்களிலும், காவிரிப்படுகைக்கு வெளியே உள்ள பல மாவட்டங்களிலும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வறட்சி நிலவுகிறது. சாகுபடி செய்தப் பயிர்கள் தண்ணீரின்றி கருகி, தமிழ்நாடு அரசு வறட்சி நிவாரணம் வழங்கியிருக்கிறது. பயிர்க் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடும் வழங்கியிருக்கிறது. இந்த வறட்சியை உச்ச நீதிமன்றம் கணக்கில் கொள்ளாமல், கர்நாடகத்தின் வறட்சிக்குக் கவலைப்பட்டு தமிழ்நாட்டுக் காவிரி நீரிலிருந்து நிலத்தடி நீரைக் கர்நாடகத்திற்குத் தர தீர்ப்பளித்திருப்பது மனச்சான்று இல்லாத ஒருதலைச் சார்பாகும்!
பெங்களூரு நகரத்தைவிட பல மடங்கு பரப்பளவு, மக்கள் தொகை, தொழில் கூடங்கள் முதலியவற்றில் சென்னை நகரம் பெரியது. சென்னை மாநகரம் கடுமையான குடி தண்ணீர்த் தட்டுப்பாட்டில் தொடர்ந்து தவிக்கிறது. அதைப் பற்றிக் கவலைப்படாமல், பெங்களூரு நகரம் உலகளாவிய நகரம் என்று புகழ்ந்து, காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புக்கு முரணாக பெங்களூரு முழு நகரத்திற்கும் காவிரியிலிருந்துதான் தண்ணீர் தர வேண்டுமென்று புதிய கொள்கை உருவாக்கி, அதற்காக தமிழ்நாட்டுத் தண்ணீரிலிருந்து 4.76 ஆ.மி.க. ஒதுக்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்!
பெங்களூரு நகரத்தின் மூன்றில் ஒரு பகுதிதான் காவிரிப்படுகையில் வருகிறது. அதற்குரியத் தண்ணீரைத்தான் காவிரி நீரிலிருந்து ஒதுக்க வேண்டுமென்று, காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் கூறியிருக்கிறது. அத்தீர்ப்பை உச்ச நீதிமன்றம் புறக்கணித்து, ஒருதலைச்சார்பாக தமிழ்நாட்டுப் பங்கு நீரை எடுத்து பெங்களுருக்கு வழங்கியுள்ளது. இப்படிப்பட்ட நடுநிலை தவறிய அணுகுமுறையால்தான், ஏற்கெனவே இறுதித் தீர்ப்பில் குறைக்கப்பட்ட தமிழ்நாட்டுக்குரிய 192 ஆ.மி.க.விலிருந்து, மேலும் 14.75 ஆ.மி.க.வை பறித்துக் கர்நாடகத்திற்கு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்!
பெங்களூரு நகரத்திற்கு கூடுதலாகத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகத்துக்கு ஒதுக்கியுள்ள 270 ஆ.மி.க.விலிருந்து ஏன் எடுக்கவில்லை?
அடுத்து, தமிழ்நாட்டில் காவிரிப்படுகையில் நிலத்தடி நீர் இருக்கிறது என்பதற்கு 1972ஆம் ஆண்டு UNDP என்ற ஐ.நா. நிறுவனம் கொடுத்த கணக்கையும், அதன் பின்னர் 1980களில் இந்திய அரசு நிறுவனம் கொடுத்த கணக்கையும் சான்றாகக் காட்டிய உச்ச நீதிமன்றம், கர்நாடகத்தில் காவிரிப்படுகையில் கிடைக்கும் நிலத்தடி நீர் பற்றி கணக்கு இல்லை என்று கைவிரிக்கிறது. இது உண்மைக்குப் புறம்பானது! கர்நாடகத்தின் நிலத்தடி நீர் இருப்பு குறித்த ஆய்வுகளை இந்திய அரசும், கர்நாடக அரசும் கூட்டுச் சேர்ந்து செய்துள்ளன. அதன் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டு ஏடுகளில் வந்துள்ளன. அதுபற்றி கணக்கு இல்லை என உச்ச நீதிமன்றம் சொல்வது சரியல்ல!
உண்மையில், தமிழ்நாட்டின் காவிரிப்படுகையில் 1972 - 80க்குப் பிறகு, இன்றைய நிலையில் நிலத்தடி நீர் பல பகுதிகளில் சாகுபடிக்கும் குடிநீருக்கும் பயன்படாத உப்பாகிவிட்டது. கர்நாடகம் காவிரியைத் தடுத்துவிட்ட நிலையில், தொடர்ந்து நிலத்தடி நீரை எடுத்து சாகுபடி செய்ததால் நிலத்தடி நீரின் ஆழம், பல நூறு அடிகளுக்குக் கீழே போய்க் கொண்டே இருக்கிறது.
உச்ச நீதிமன்றம் முன் வைக்கப்பட்ட வழக்கு என்பது, காவிரியில் ஓடி வரும் நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான (Cauvery Water Dispute) சிக்கல்தானே தவிர, காவிரிப்படுகை நிலத்தடி நீரைப் (Cauvery Ground Water Dispute) பகிர்ந்து கொள்வதற்கான சிக்கல் அல்ல!
இவ்வழக்கில், இந்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக செய்த வஞ்சக வேலைகள் கொஞ்ச நஞ்சமல்ல! எடுத்துக்காட்டாக, மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டப் பிரிவு 6A - தண்ணீர்த் தீர்ப்பாயம், தீர்ப்பளித்துவிட்டால், அதை செயல்படுத்த - அதற்குரிய தனிப் பொறியமைவை (SCHEME) நடுவண் அரசு உருவாக்க வேண்டும் என்பதில் ஆங்கிலத்தில் “May” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அச்சொல், “அமைக்கலாம்” என்ற பொருள் தருவதால், அதை மாற்றி “அமைக்க வேண்டும்” எனப் பொருள் தரும் “Shall” போட வேண்டுமென்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியபோது, நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் (Sollicitor General) இரஞ்சித்குமார், “அதைக் கட்டாயமாக்கி மாற்ற வேண்டாம், “மே”(May) அப்படியே இருக்கட்டும், நடுவண் அரசு பார்த்துக் கொள்ளும்” என்று கூறினார். இது தீர்ப்புரையில் வந்துள்ளது. ஆனால், உச்ச நீதிமன்ற அமர்வு, பொறியமைவு அமைப்பது கட்டாயம் என்ற வகையில் தனது தீர்ப்பில் ‘Shall’ போட்டுள்ளது.
இதிலிருந்து இந்திய அரசின் - மோடி அரசின் தமிழ்நாட்டிற்கெதிரான இனப்பாகுபாட்டு அணுகுமுறையைப் புரிந்து கொள்ளலாம். ஏற்கெனவே, 2016 செப்டம்பரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட கெடு விதித்து உச்ச நீதிமன்றம் ஆணையிட்டபோது அதை செயல்படுத்த மறுத்தது மோடி அரசு! இப்பொழுது, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என வெளிப்படையாகக் கர்நாடக முதல்வர் கூறி வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கர்நாடக அரசின் சட்டக்கடமை என்று அறிவுறுத்த வேண்டிய நடுவண் அரசு அமைதி காப்பதன் மர்மம் என்ன? சித்தராமையா கருத்தில், நரேந்திர மோடி அரசுக்கு உடன்பாடா?
அதே வேளை உச்ச நீதிமன்றம், இன்னொரு குழப்பத்தை வைத்துள்ளது! காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அத்துடன், அதற்கான அதிகாரக் கட்டமைப்பு, தலைமை, உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பணி போன்றவற்றை வரையறுத்துக் கூறியுள்ளது தீர்ப்பாயம்! எனவே, உச்ச நீதிமன்ற அமர்வு இந்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்றுதான் குறிப்பாகக் கூறியிருக்க வேண்டும்!
அதைவிடுத்து, ஒரு பொறியமைவு (A SCHEME) அமைக்க வேண்டுமென்று, பொத்தாம் பொதுவில் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது ஏன்? இதைப் பயன்படுத்தி, இந்திய அரசு பல் இல்லாத - அதாவது அதிகாரமில்லாத காவிரிப் பொறியமைவு ஒன்றை அமைக்கும் அபாயம் இருக்கிறது! இந்தக் குழப்பத்தை உச்ச நீதிமன்றம் உருவாக்கி இருப்பது ஏன்?
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு செய்துள்ள இன்னொரு அநீதி - 1924 காவிரி ஒப்பந்தத்திற்கு எதிராக அளித்துள்ள விளக்கமாகும். காவிரி ஒப்பந்தம், 1974ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்ததாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புரை கூறுவது 1924 ஒப்பந்தத்திற்கே எதிரானதாகும்.
இந்த ஒப்பந்தத்தின், பகுதி 10 - உட்பிரிவு XI கூறுவதாவது : “இந்த ஒப்பந்தம் செயலுக்கு வந்து ஐம்பதாம் ஆண்டில், மேலே சொல்லப்பட்ட விதிகள் IV முதல் VIII வரை உள்ளவற்றை அனுபவ வெளிச்சத்தில் மறு ஆய்வு செய்து, தொடர்புடைய அரசுகளின் எல்லைகளுக்குள் மேலும் பாசனத்தை விரிவுபடுத்துவது பற்றி ஆராய மைசூர் மற்றும் சென்னை அரசாங்கங்கள் ஒத்துக் கொள்கின்றன. இவ்வாறான மறு ஆய்வுகள் மூலம், தக்க திருத்தங்கள் மற்றும் சேர்க்கைகள் செய்து கொள்ள அரசாங்கங்கள் பரஸ்பரம் ஒப்புக் கொள்கின்றன” என்பதாகும்.
இதில் எந்த இடத்திலும், 50 ஆண்டுக்குப் பிறகு ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாக கூறப்படவே இல்லை! இதற்கு மாறாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறுவது இச்சிக்கலின் அடிப்படை ஆவணமான 1924 - காவிரி ஒப்பந்தத்தையே புறக்கணிப்பதாகும்!
காவிரி ஆறு யாருக்கும் சொந்தமில்லை, குறிப்பாக தமிழ்நாட்டிற்கோ - கர்நாடகத்திற்கோ சொந்தமில்லை, அது “இந்தியத்தேசிய சொத்து” என்று தீர்ப்புரையில் கூறியதன் மர்மம் என்ன? காவிரி ஆறு, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு உரிமையுள்ள ஆறு! இந்த உரிமை இருப்பதால்தான், தண்ணீர்ப் பகிர்வு அளவுகளில் முரண்பாடுகள் ஏற்பட்டு அதைத் தீர்த்து வைக்க நீதித்துறையை நான்கு மாநிலங்களும் நாடியுள்ளன.
ஹெல்சிங்கி உடன்பாட்டின்படி, ஓடிவரும் ஆற்று நீரில் மரபுரிமை அடிப்படையிலான நீர் உரிமை, நாடுகளின் எல்லை கடந்து இருக்கிறது. அதன் பெயர் தண்ணீர் மரபுரிமை (Riparian Right). இந்த உரிமையை இந்த நான்கு மாநிலங்களிலிருந்தும் பறிக்கின்ற வகையில், காவிரி ஆறு யாருக்கும் சொந்தமில்லை - “தேசிய சொத்து” என்கிறது. இதன் பொருள், காவிரி - இந்திய அரசின் சொத்து என்பதாகும்! அதாவது, மாநில அதிகாரப்பட்டியில் உள்ள காவிரியை - இந்திய அரசு அதிகாரப்பட்டியலில் உச்ச நீதிமன்றம் சேர்ப்பதாகும்.
உச்ச நீதிமன்ற தீபக் மிஸ்ரா அமர்வுக்கு இந்த கருத்து இருக்கிறது என்பதற்கு அடையாளமாக தீர்ப்புரையில், திரும்பத் திரும்ப இந்திய அரசின் “தேசிய நீர்க் கொள்கை” என்ற பழைய சட்டத்தையும் புதிய வரைவையும் கூறுகிறது. “தேசிய நீர்க் கொள்கை” என்பது, ஆறுகளை மாநில அரசுகளிடமிருந்து பிடுங்கி இந்திய அரசின் கையில் வைத்துக் கொண்டு, அவற்றை பன்னாட்டு நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடுவது என்பதுதான்! உழவர்கள் பாசனத்திற்கோ, மக்கள் குடிநீருக்கோ அந்தத் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டுமெனில் “மீட்டர்” பொருத்தி, அந்த அளவுக்குக் கட்டணம் செலுத்தும் முறை என்பதுதான் “தேசிய நீர்க் கொள்கை”!
“தேசிய நீர்க் கொள்கை”க்கான சட்டம் 2002இலிருந்து இருக்கிறது. அதன்பின்னர், 2012 - 2016 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட திருத்தச் சட்ட வரைவுகளும் இருக்கின்றன. இவை அனைத்தும் ஆறுகளை மாநில அரசுகளின் அதிகாரத்திலிருந்து எடுத்து, நடுவண் அரசின் அதிகாரத்திற்குக் கொண்டு போகும் நோக்க முடையவை ஆகும்! இந்த தேசிய நீர்க் கொள்கை முழுமையாக செயலுக்கு வந்தால், ஆறுகளை இந்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் குத்தகைக்கு விடும்! அவை, மீட்டர் பொருத்தி பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீரை விற்கும்!
இந்தத் தேசிய நீர்க்கொள்கையைத்தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, திரும்பத் திரும்ப தனது வழிகாட்டும் நெறி என்று கூறிக் கொள்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவானது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கும், அதிகாரப் பகிர்வுகளுக்கும் எதிரானது. இதுபற்றி முடிவு செய்வதற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு (Constitution Bench)-க்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது.
அனைத்துக் கட்சி ஆய்வில், காவிரி வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வுக்கு மாற்ற வலியுறுத்தியும், அதே வேளை உச்ச நீதிமன்றம் இப்பொழுது வழங்கியுள்ளத் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், அது விதித்துள்ள காலக் கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் - ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வலியுறுத்தியும் தீர்மானம் இயற்றி - இந்திய அரசையும், உச்ச நீதிமன்றத்தையும் அணுக வேண்டும்.
முல்லைப் பெரியாறு வழக்கில் உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் தீர்ப்புக்குப் பிறகு, சிக்கல் எழுந்தபோது, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயத்தின் தீர்ப்புக்கு விட்டதை முன் எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும்.
அரசியல் அழுத்தம் தருவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், அனைத்துக் கட்சிக் குழுவினர் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியை நேரில் சென்று அணுக வேண்டும்.
மேற்கண்ட எங்கள் கருத்தை முதலமைச்சர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் பரிசீலித்து, தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பாதுகாக்க தக்க முடிவுகள் எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் கடிதம் எழுதியுள்ளார்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.