ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மார்ச்சு - 8 - அனைத்துலக #மகளிர் நாள் #பெண்ணுரிமை வெல்க! பெண்ணும் ஆணும் #வாழ்வாங்கு வாழ்க! ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை !

மார்ச்சு - 8 - அனைத்துலக #மகளிர் நாள் #பெண்ணுரிமை வெல்க! பெண்ணும் ஆணும் #வாழ்வாங்கு வாழ்க! தமிழ்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை !
"பன்னாட்டு மகளிர் நாளில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பெண்களுக்கும் பெண்ணுரிமைப் போராளிகளுக்கும் நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்ணுரிமைப் போராட்டம் வெல்க!


தமிழர் அறம், அனைத்துவகைச் சமத்துவத்தையும் கூறுகிறது. மனிதர்கள் அனைவரும் சமம்; தமிழர்கள் அனைவரும் சமம் என்று கூறுகின்றோம். சாதி, மதம், இனம் கடந்த சமத்துவத்தைப் பேசுகிறோம். மனித உரிமை அடிப்படையில் சமத்துவத்தைப் பேசுகிறோம். தமிழர் அறம் ஆண் பெண் சமத்துவத்தையும் கூறுகிறது. நம்முடைய சங்க இலக்கியங்கள் தலைவன் தலைவி என்று கணவனையும் மனைவியையும் சமமாகத்தான் அழைத்தன. பிற்காலத்தில் தமிழ்ச் சமூகத்திலும் ஆணாதிக்கம் கொடியேற்றியது.

மனித உளவியலில் ஆதிக்க உணர்வு இயல்பாக இணைந்துள்ளது. தனக்குக் கட்டுப்பட்டவர்கள், தான் சொல்வதைக் கேட்டு நடக்கக் கூடியவர்கள் இருக்க வேண்டும் என்று மனித மனம் விரும்புகிறது. இதற்கு சாதியைப் பயன்படுத்துவர், மதத்தைப் பயன்படுத்துவர், இனத்தைப் பயன்படுத்துவர், செய்யும் தொழிலைப் பயன்படுத்துவர், குடும்பத்திற்குள்ளே பாசத்தைப் பயன்படுத்துவர், வயதைப் பயன்படுத்துவர். அந்த வரிசையில் பெண்ணாகப் பிறந்ததை ஆண் உளவியல் பயன்படுத்திக் கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறது.

பெண்ணைத் தனக்குக் கட்டுப்பட்டவளாக, தனது விருப்பத்தை நிறைவேற்றுபவளாக ஆணாதிக்க உளவியல் மாற்றிக் கொள்கிறது. மேல்சாதிப் பெண்ணாக இருந்தாலும், பணக்காரப் பெண்ணாக – சொத்துமிகவுள்ள பெண்ணாக இருந்தாலும் – படித்த பெண்ணாக இருந்தாலும், அதிகாரம் உள்ள பதவியில் இருக்கின்ற பெண்ணாக இருந்தாலும் அப்பெண்ணும் ஏதோ ஒருவகையில் சமூகத்திலும் தனது குடும்பத்திலும் ஆணாதிக்கத்தின் கீழ் வாழ்பவராகவே இருக்கிறார்.

எந்த ஆதிக்கமானாலும் அது எப்படித் தொடர்கிறது? ஆதிக்கம் என்பது ஆதிக்கம் என்று உணரப்படாதவாறு, சமூகத்தின் இயற்கையாக – காலம் காலமாக சமூகம் ஏற்றுக் கொண்ட செயல்முறையாக – உளவியல் மாற்றம் செய்யப்படுகிறது. அதுவே சமூக நன்மையாக சித்தரிக்கப்படுகிறது. சூரியன் கிழக்கே தோன்றுவது போல், தென்றல் தெற்கிலிருந்து வீசுவது போல் இயற்கையானதாக - இயல்பானதாக ஆதிக்கம் என்பதை அனைவரும் உணரும்படி செய்துவிடுவார்கள் ஆதிக்கவாதிகள்!

ஆதிக்கத்தால் பாதிக்கப்படும் மக்கள் தாங்களே அதை விரும்பி ஏற்றுக் கொள்ளும் மனநிலையை அவர்கள் ஏற்படுத்தி விடுவார்கள். அதற்கான கதைகள், புராணங்கள், கலைகள் எல்லாவற்றையும் உருவாக்கிவிடுவார்கள். வண்டி இழுத்துப் பழக்கப்பட்ட மாடு தானே முன்வந்து நுகத்தடியில் கழுத்தைக் கொடுப்பதைப் போல், பெண்கள் தாமே முன்வந்து தங்களது அடிமை நிலையை ஏற்றுக் கொள்ளும்படி செய்துள்ளார்கள். அதுதான் பண்பு, அதுதான் ஒழுக்கம் என்பதாகப் பெண்கள் கருதும்படிச் செய்துவிட்டார்கள்.

ஆணாதிக்கம் மட்டுமல்ல, இன ஆதிக்கம், மொழி ஆதிக்கம், சாதி ஆதிக்கம், மத ஆதிக்கம், முதலாளிய ஆதிக்கம், ஏகாதிபத்திய ஆதிக்கம், இந்தியத் தேசிய ஆதிக்கம் உட்பட எல்லா ஆதிக்கங்களும், பாதிக்கப்பட்டவர்கள் தாங்களே முன்வந்து அந்த ஆதிக்கங்களை ஏற்றுக் கொள்ளும் சமூகக் கட்டுக்கோப்பையும் மனநிலையையும் உருவாக்கி வைத்துள்ளன.

பெண்களுக்கெதிரான ஆணாதிக்கத்தை முதலில் எதிர்க்கும் பொறுப்பும், கடமையும் விழிப்புணர்வு பெற்ற, சனநாயக உணர்வுள்ள ஆண்களுக்குத்தான் இருக்கிறது. இந்த ஆண்கள் முதலில் தங்கள் மனத்தில் உள்ள ஆணாதிக்க அழுக்கைத் துடைத்து மனத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். தன் தாயை, உடன் பிறந்தாளை, தன் காதலியை, தன் மனைவியை சமமாகக் கருதும் மனநிலையை, அவர்களோடு சமத்துவ நிலையில் உறவு கொள்ளும் உளவியலை, ஆண்கள் பெற வேண்டும்.

வீட்டு வேலைகளைப் பெண்களுடன் பகிர்ந்து கொள்ளும் மனப் பக்குவம் ஆண்களுக்கு வர வேண்டும். சமைத்தல், துவைத்தல், கூட்டிப் பெருக்குதல், பாத்திரங் கழுவுதல் போன்ற பல வேலைகளைப் பெண்களுடன் பகிர்ந்து கொள்வது இழிவல்ல, பெருமைக்குரிய செயல் என்ற மனமலர்ச்சி உருவாக வேண்டும்.

பெண்கள் பெற வேண்டிய உரிமைக்கான இலக்கு இப்போது ஆண்கள் பெற்றிருக்கும் ஆதிக்கங்கள் அல்ல. ஆண்களும் பெண்களும் சம உரிமைகள் – பொது உரிமைகள் பெறுவதே பெண்ணுரிமையின் இலக்காக இருக்க வேண்டும்.

ஆணைப் போல் முடிவெட்டிக் கொள்ளுதல், ஆடை அணிந்து கொள்ளுதல், பொட்டு – பூ போன்றவற்றைத் துறத்தல் போன்றவற்றைப் பெண்ணுரிமைச் செயல்பாட்டின் அடையாளங்களாகக் கொள்ள வேண்டியதில்லை. பெண்ணுரிமையின் இலக்கு ஆண் அடையாளங்களை – ஆணின் ஒப்பனைகளைப் பெண்கள் ஏற்றுக் கொள்வதல்ல! அவ்வாறு செய்வது, மறைமுகமாக ஆணாதிக்கத்தைத் தனது முன்மாதிரியாக ஏற்றுக் கொள்வதாகும்.

அழகியல் உணர்வுகள் – அது சார்ந்த ஒப்பனைகள் ஆணுக்கொரு வகையாக இருக்கும்; பெண்ணுக்கொரு வகையாக இருக்கும். அது தவறல்ல. பெண் விரும்பினால் ஆண்களைப் போல் ஆடை அணிந்து கொள்ளட்டும். பொட்டு வைத்தல், பூ வைத்தல் போன்ற பழக்கங்களைக் கைவிடட்டும். ஆனால், புடவை கட்டிக் கொண்டு, பொட்டும் பூவும் வைத்துக் கொண்டு வாழும் பெண்ணுக்கும் சம உரிமை வேண்டும். பெண் ஒரு பெண்ணாக ஒப்பனைகள் செய்து கொண்டாலும் அவருக்கும் அனைத்து உரிமைகளும் வேண்டும். இதுவே முன்மாதிரியான பெண்ணுரிமைப் போராட்டமாகும்.

பாலியல் உறவில் உருவாகும் ஆண் – பெண் சமத்துவம்தான் நிலையான பெண்ணுரிமையாக அமையும். அதில் நிலவும் ஆணாதிக்கம் சமூக அமைதியை மட்டுமின்றி குடும்ப அமைதியையும் கெடுக்கிறது. பாலியல் உறவில் பெண்ணுக்குப் புனிதங்கள் கற்பிப்பதைக் கைவிட வேண்டும். ஆணும் பெண்ணும் பாலியல் உறவில் ஒருவர்க்கொருவர் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள குறைபாடுகளை ஆணும் பெண்ணும் மனம் திறந்து விவாதிக்கும் பண்பு பெற வேண்டும். வீணான ஐயங்களும், புனிதங்களும் பேசி வாழ்க்கையைச் சீர் குலைத்துக் கொள்ளக் கூடாது. பாலுறவில் பிறழ்ச்சிகள் ஏற்பட்டால் சரி செய்து கொள்ள வேண்டும். உடனே உறவை முறித்துக் கொள்ள முனையக்கூடாது.

சேர்ந்து வாழவே முடியாத அளவிற்கு மனமுறிவு ஏற்பட்டுவிட்டால், மணமுறிவு செய்து கொள்ளும் உரிமை எப்போதும் வேண்டும். அதேவேளை பாலுறவில் வெறும் நுகர்வு வெறி மட்டுமே தலைதூக்கி நின்றால், அது ஆண் – பெண் இணக்கத்தை, நல்லுறவைக் கெடுத்துவிடும். வரம்பில்லா பாலுறவு ஆண் – பெண் இணக்கத்தையும், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் மட்டுமல்ல வாழ்க்கையையும் அழித்து விடும்.

எந்தப் பொருளை நுகர்வதற்கும் வரம்பும் கட்டுப்பாடும் தேவை. அதைப் போல் ஆண் – பெண் பாலுறவு நுகர்வுக்கும் வரம்பும் கட்டுப்பாடும் தேவை. வரம்பற்ற நுகர்வு எதிலும் கூடாது. மிகை நுகர்வு வேட்கையும் வெறியும் கூடாது! அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சென்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்!

ஆணாதிக்கத்தை மட்டும் எதிர்த்து நடத்தும் பெண்ணுரிமைப் போராட்டங்கள் பெண்ணுரிமையில் சிறுசிறு முன்னேற்றங்களை அடைய உதவும். ஆனால், முழுமையான பெண் விடுதலைக்கு இட்டுச் செல்லாது.

எந்த வகை ஆதிக்கமும் செலுத்தாத – எந்த வகை ஆதிக்கத்தையும் ஏற்காத சமூகம் அமைவதே ஆணாதிக்கத்தை முற்றமுழுதாக நீக்கும். ஐரோப்பாவில் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பெண்ணுரிமைப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நம் நாட்டுப் பெண்களைவிடக் கூடுதலான உரிமைகளை அவர்கள் பெற்றுள்ளார்கள். ஆனால் அங்கு இன்னும் ஆணாதிக்கம் நிலவுகிறது. பெண்ணுரிமைப் போராட்டங்கள் தொடர்கின்றன. ஏன்?

அந்நாடுகளில் இன ஆதிக்கம், முதலாளிய ஆதிக்கம், ஏகாதிபத்திய ஆதிக்கம் போன்ற ஆதிக்கங்கள் நிலவுகின்றன. எனவே, ஆணாதிக்கம் தொடர்வதற்கான உளவியல் களமாகவே ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன.

எந்தவகை ஆதிக்கமும் இல்லாத சமூகத்தைத் தொலைநோக்கு இலக்காக வைத்துக் கொண்டு – ஆதிக்க அழுக்குகளிலிருந்து விடுபட்டதாக நம் மனத்தை அன்றாடம் தூய்மைப்படுத்திக் கொண்டே, நிலவுகின்ற ஆதிக்கங்களை எதிர்த்துப் போராட வேண்டும். அவ்வாறான போராட்டமாகப் பெண்ணுரிமைப் போராட்டம் நடக்க வேண்டும்.

பெண்ணுரிமைப் போராட்டம், மற்றவகை உரிமைப் போராட்டங்களிலிருந்து ஒருவகையில் மாறுபட்டுத் தனித்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. ஆணாதிக்கத்தை எதிர்த்த போராட்டம் என்பதன் செயற்களம் எது? சமூகம் மட்டுமல்ல தன் வீடும்தான்!

ஆணாதிக்கத்தை எதிர்த்துத்தன் தந்தையோடு – தம்பியோடு – அண்ணனோடு – காதலனோடு – கணவனோடு போராட வேண்டியுள்ளது. ஆண்டானை எதிர்த்து, ஆதிக்க சாதிக்காரரை எதிர்த்து, ஆதிக்க மதவாதியை எதிர்த்து, ஆதிக்க இனத்தை எதிர்த்து, முதலாளியை எதிர்த்து, இந்தியத் தேசியத்தை எதிர்த்துப் போராடுவது போல் ஆணாதிக்கத்தை எதிர்த்துப் பெண்கள் போராட முடியாது!

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கும் ஆணாதிக்க எதிர்ப்புப் போராட்டம் ஒரு பகை முரண்பாடல்ல! உறவைத் துண்டித்துக் கொள்வதற்கான போராட்டமல்ல, உறவை மேம்படுத்திக் கொள்வதற்கான போராட்டம்! அந்தப் புரிதலோடு, அந்தப் பக்குவத்தோடு ஆணாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தைப் பெண்கள் நடத்த வேண்டும். விழிப்புணர்வு பெற்ற ஆண்கள், சனநாயக உணர்வுள்ள ஆண்கள் அதே புரிதலோடு – பக்குவத்தோடு பெண்ணுரிமைப் போரட்டத்தை ஏற்க வேண்டும் என்பது மட்டுமல்ல, ஆண்களும் அப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்!

பெண்ணுரிமைப் போராட்டம் வெல்க! பெண்ணும் ஆணும் வாழ்வாங்கு வாழ்க!

இன்னணம்,
பெ. மணியரசன், 
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.