வன்முறைத் தூண்டல் குற்றத்தின்கீழ் எச். இராசாவை தமிழ்நாடு அரசு கைது செய்ய வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
வன்முறைத் தூண்டல் குற்றத்தின்கீழ் எச். இராசாவை தமிழ்நாடு அரசு கைது செய்ய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க.வின் அசல் முகத்தை மறைத்துக் கொள்ளாமல் அப்படியே வெளிப்படுத்தும் நபர்கள் எச். இராசா மற்றும் சுப்பிரமணிய சாமி போன்ற கயவர்கள். திரிபுராவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க. கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், ஜெர்மனியில் நாஜி குண்டர்கள் செய்த வேலைகளைத் தொடங்கியுள்ளார்கள். அதில், ஒரு பகுதிதான் வரலாற்று நாயகர் மாமேதை லெனின் சிலையை அவர்கள் திரிபுராவில் உடைத்தது!
உடனடியாக எச். இராசா என்பவர், தமிழ்நாட்டில் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டுமென்று தமது சுட்டுரையில் கூறி, தமது ஆரியத்துவா வெறியை வெளிப்படுத்தினார். சிரியாவில் மக்கள் படுகொலை செய்யப்படும் கொடுமையை எதிர்த்து நேற்று (06.03.2018) ஆர்ப்பாட்டம் நடத்தி ஐ.நா. பிரிவு ஒன்றின் அலுவலகத்தில் மனு கொடுக்கும் நிகழ்ச்சியில், தோழமை அமைப்புகளோடு நானும் கலந்து கொண்டிருந்தபோது, சன் தொலைக்காட்சியில், இது குறித்து எனது கருத்தையும் கேட்டார்கள்.
நான் உடனடியாக, பெரியார் சிலை உடைத்திட செய்தி வெளியிட்ட எச். இராசாவின் ஆரியத்துவா வெறியை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும், தமிழ்நாட்டில் ஆரியத்துவா பா.ச.க.வில் தமிழர்கள் உறுப்பு வகிப்பது பற்றி மறு சிந்தனை செய்ய வேண்டும் என்றும் கூறினேன்.
பெரியார் மீது ஆரியத்துவாவாதிகளின் சினத்திற்குக் காரணமென்ன? அவர் தொடர்ந்து பார்ப்பன ஆதிக்கத்தை, ஆரியத்தை, வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்து பரப்புரையும், போராட்டமும் நடத்தியதுதான் பார்ப்பனிய மற்றும் ஆரியத்துவா ஆற்றல்கள் அவர் மீது தீராத சினம் கொண்டு, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கி வருகின்றன.
தமிழர் அடையாளங்களை ஒழித்தல், தமிழினத்தை ஆரியத்துக்கு அடிமை இனமாக மாற்றுதல் என்ற ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க.வின் ஆரிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதிதான் பெரியார் சிலை உடைப்புக் கோரிக்கை என்பதைத் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை அண்மையில் இழிவுபடுத்தியதையும் நாடறியும்!
பெரியார் சிலை உடைக்கும் கருத்துகளை வெளியிட்டு, வன்முறையைத் தூண்டியுள்ள எச். இராசா மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பொழுது மட்டுமல்ல ஏற்கெனவே, வைகோ உயிரோடு வீடு திரும்ப மாட்டார் என்று கூறியும், கவிஞர் வைரமுத்துவின் தலையை வெட்டி உருட்டியிருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பேசி வன்முறையைத் தூண்டி வருகின்ற ஆரியக் குண்டர் எச். இராசா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் பொறுப்பு! இதைத் தமிழ்நாடு அரசு தட்டிக் கழிக்கக் கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment