ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இலட்சியவாதிகளின் நம்பிக்கை ஒளி நபிகள் நாயகம்! தோழர் பெ. மணியரசன்.

இலட்சியவாதிகளின் நம்பிக்கை ஒளி நபிகள் நாயகம்! தோழர் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். 
பெருக்கெடுத்து ஓடும் பேராறு, பல திசைகளில் சிதறி ஓடி, காலப்போக்கில் தனக்கான கரையைத் தானே உருவாக்கிக் கொள்கிறது. மண்ணை அறுத்து அறுத்து நிரந்தரமான பாதையை ஆறு அமைத்துக் கொள்கிறது. மனித சமுதாயத்தில் எவ்வளவோ சிதைவுகள், சீரழிவுகள், பண்புக் கேடுகள், பாதிப்புகள் உருவாகி, மனித வாழ்வு சிதறித் துன்புறும் போது அறிஞர்கள், அருளாளர்கள், புரட்சியாளர்கள் தலையிட்டு சமூகத்தைச் செம்மைப் படுத்துகிறார்கள்.

திருவள்ளுவப் பெருந்தகை, ஏசுபிரான், நபிகள் நாயகம், வள்ளலார் இராமலிங்க அடிகளார், காரல் மார்க்சு, காந்தியடிகள் முதலியவர்கள் சமூகத்தைச் சீர்த்திருத்த உருவாகிறார்கள்; சமூகம் உருவாக்கிக் கொள்கிறது.

இப்படிப்பட்ட சமூகச் சீர்திருத்தச் செம்மல்கள், புரட்சியாளர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றும் மக்கள் இல்லையென்றால் இந்த மனித சமூகம் சீரழிந்து அழிந்துவிடும். இந்தப் பொருளில் தான் திருவள்ளுவப் பெருந்தகை “பண்புடையார் இருப்பதால் உலகம் இருக்கிறது; இல்லாவிடில் மண்ணாகிப் போயிருக்கும்” என்று கூறினார் (குறள் 996).

எல்லாப் புரட்சியாளர்களையும் போல் நபிகள் நாயகம் கடுந்துன்பங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்தார். அவற்றிலிருந்தெல்லாம் வெற்றிகரமாக மீண்டு எழுந்தார்.

அன்னையின் வயிற்றில் ஆறுமாதக் கருவாக இருக்கும் போதே தந்தையை இழந்தார். ஆறு அகவையில் அன்னையை இழந்தார். எடுத்து வளர்த்த பாட்டனாரை எட்டு அகவையில் இழந்தார். பெரிய தந்தையால் வளர்க்கப்பட்டார்.

இடையறாத இறைச் சிந்தனையால் மனப் பக்குவம் பெற்றார். நாற்பதாம் அகவையில் நபிப் பட்டம் பெற்றார். “இறையுரைகள்” என்று போற்றப்படும் “திருக்குர் ஆன்” நபிகள் நாயகம் வாயிலாகவே வெளி வந்தது. நாயகத்தின் அருளுரைகள் மனித சமத்துவம் பேசின. மூடபப்பழக்க வழக்கங்களை எதிர்த்தன.

மன அழுக்கு கொண்டோரும் வஞ்சகர்களும், பிற்போக்காளர்களும் நாயகத்தின் சமூக மறுசீரமைப்புக் கருத்துகளை எதிர்த்தனர். எதிர்த்தனர் என்றால் – கருத்தை – கருத்தால் எதிர்க்கவில்லை. 

நபிகள் நாயகத்தின் சொந்த ஊரான மக்காவில் இருந்த பிற்போக்காளர்களும் தன்னலவெறியர்களும் நாயகத்தை “வஞ்சகன், பொய்யன், புரட்டன்” என்று சொல்லால் அடித்தனர். அதுமட்டுமா? கல்லால் அடித்தனர்; கழுத்தில் துணியைச் சுற்றி முறுக்கினர். ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர். குடும்பத்தோடு பல நாள் பட்டினி கிடந்தார் நாயகம்!

இன்றைக்கு மனித சமத்துவத்திற்காகவும் மக்கள் உரிமைக்காகவும் தேச விடுதலைக்காகவும் போராடுபவர்கள், நபிகள் நாயகம் ஏற்றுக்கொண்ட துன்பங்களிலிருந்து பாடம் கற்று ஊக்கம் பெற வேண்டும். அந்தத் துன்பங்களால் நபிகள் நாயகம் தமது கொள்கையை - இலட்சியத்தைக் கைவிடவில்லை. கொடியவர்களை எப்படி வெல்வது என்று சிந்தித்தார். மக்களைச் சந்தித்தார். மக்காவிலிருந்து மதீனாவுக்குத் தப்பிச் சென்று மக்களைத் திரட்டினார். மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து வந்த மக்களுக்கும் மதீனா மக்களுக்கும் இடையே உடன்பிறப்பு உறவை வலுப்படுத்தினார்.

மதீனாவில் இஸ்லாத்தைத் தீவிரமாகப் பரப்பும் முயற்சியில் இறங்கினார். பாதுகாப்புப் படைக் குழுக்களை உருவாக்கினார். மதீனாவிலும் சுற்றுப்புறங்களிலும் இருந்த பிற இனத்தாருடன் நல்லுறவு உடன்படிக்கை செய்து கொண்டார். எதிரிகளைக் குறைத்துக் கொண்டார். 

அதன்பிறகு, மக்காவின் பிற்போக்காளர்கள் மற்றும் தன்னலவெறியர்கள் மீது போர் தொடுத்தார் நாயகம். பதுரு, உகுது, அகழ் என முப்பெரும் போர்களை நடத்தி அவற்றில் வெற்றி கண்டார். இறுதியில் எதிர்ப்பு எதுவுமின்றி மக்காவைக் கைப்பற்றினார் நாயகம்!

அதன்பின் அறம் சார்ந்து மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்கான கருத்துகளை – கட்டளைகளை வழங்கினார். ஐம்பெரும் கடமைகளை மக்களிடம் எடுத்துக் கூறினார். 

கலிமா மொழிதல் (ஓர் இறைக் கொள்கை), 2. தொழுகை, 3. நோன்பு, 4. கட்டாயக் கொடை (வறியவர்களுக்கு நன்கொடையாக அளிக்கும் சக்காத்), 5. புனிதப்பயணம் (ஹஜ்).

இவையே ஐம்பெரும் கடமை! 

அண்டை அயல்நாடுகளிலும் இஸ்லாத்தைப் பரவச் செய்தார். 

மதுக் குடித்தும், விலை மகளிர் பெருக்கியும், வெறி கொண்டு சண்டையிட்டும், பல தெய்வங்களை வணங்கிப் பிணங்கியும், பிளவுண்டும் கிடந்த மக்களை ஓர் இறை வணக்கத்தின் கீழ் ஒருங்கிணைத்து அமைதி வாழ்வுக்குத் திருப்பினார் நபிகள் நாயகம். 

ஓர் இறை வணக்கம் வேண்டும் – பல தெய்வ வணக்கம் வேண்டாம் என்ற கருத்து தமிழ்நாட்டுச் சமயங்களில் முன் வைக்கப்பட்டிருந்தாலும், அக்கோட்பாடு நடைமுறைக்கு வரவில்லை. “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்றார் திருமூலர். உருவ வணக்கம் கூடாது, ஒளி வணக்கம் மட்டுமே செய்ய வேண்டும் என்றார் வள்ளலார். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற நோக்கில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் நிறுவினார். ஆண் – பெண், சமய வேறுபாடின்றி அனைவரும் அதில் உறுப்பினர் ஆகலாம் என்றார். புலால் மறுத்தலை நிபந்தனையாக்கினார். 

மனித நேயத்தையும் மனித சமத்துவத்தையும் கொள்கையாகக் கொண்டவர்கள் வெவ்வேறு நாடுகளில் பிறந்தாலும் ஒன்றுபோல் சிந்திக்கிறார்கள் என்பதற்கு நபிகள் நாயகம் வழங்கிய அருளுரைக்கும் திருமூலர் மற்றும் வள்ளலார் வழங்கிய சிந்தனைகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையே சான்று!

பிற்போக்காளர்கள் நபிகள் நாயகத்தின் இளமைப் பருவத்தில் மக்காவில் இருந்தது போலவே இன்றும் இருக்கிறார்கள் என்பதற்கான சான்றாகத்தான் இந்தியாவில் மத அடிப்படையில் கொலைகள் நடக்கின்றன. 

முற்போக்கான சமூகப்புரட்சியாளர்கள், சமூக விடுதலைப் போராளிகள் ஆகியோர் நபிகள் நாயகத்தின் போராட்டங்களிலிருந்தும், வாழ்விலிருந்தும் ஊக்கம் பெற வேண்டும். தங்கள் இலட்சியத்தை நிலைநாட்ட முன்னேற வேண்டும். 

(“தினமணி” நாளேட்டின் “ஈகைப் பெருநாள் மலர் – 2018”இல் வெளியாகியுள்ள கட்டுரை).

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.