ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மலைவாழ் மக்களை தாயகத்திலிருந்து வெளியேற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வன உரிமை காக்க இந்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

மலைவாழ் மக்களை தாயகத்திலிருந்து வெளியேற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வன உரிமை காக்க இந்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 13 (2019) அன்று பிறப்பித்து, 21.02.2019 அன்று வெளியாகியுள்ள வன உரிமைச் சட்டம் தொடர்பான தீர்ப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

“பழங்குடியினர் மற்றும் மரபுவழி மலையக வாழ் மக்கள் வன உரிமைச் சட்டம் – 2006”–இன் மீது நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகிய மூவர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள இந்தத் தீர்ப்பு, ஏறத்தாழ பத்து இலட்சம் மலைவாழ் குடும்பங்களை அவர்களது வரலாற்றுத் தாயகத்திலிருந்து வெளியேற்றும் ஆணையாக அமைந்துள்ளது.

“வொயில்டு லைப் பர்ஸ்ட்” (Wildlife First) என்ற பெருங்குழுமங்களின் பினாமி தொண்டு நிறுவனம் தொடுத்த வழக்கில், இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் வாழும் பழங்குடி மற்றும் மரபுவழி மலைவாழ் மக்களின் வன நில உரிமைச் சிக்கல், நீண்டகாலமாக நீடித்து வருகிறது. 2006 வன உரிமைச் சட்டத்தின்படி முன்வைக்கப்பட்ட நில உரிமைப் பட்டா கோரிக்கை மனுக்கள் எந்தவித காரணமும் சொல்லாமல் நிராகரிக்கப்படுவதே அனைத்து மாநிலங்களிலும் பொதுப்போக்காக உள்ளது.

தலைமுறை தலைமுறையாக மலைக்காடுகளோடும், வன உயிரினங்களோடும் இணக்கமாக வாழ்ந்து வரும் மலைவாழ் மக்கள், அவர்களது நிலவுரிமை உறுதி செய்யப்படாமல் வனத்துறை அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாவது அன்றாட நிலைமையாக இருக்கிறது.

மலைவாழ் மக்களின் இந்த அவல நிலையைப் போக்கி, வன உரிமைச் சட்டத்தின்படி அவர்கள் நிலவுரிமைப் பட்டா பெறுவதற்கு உதவி செய்ய வேண்டிய உச்ச நீதிமன்றம் நிலவுரிமை ஆவணம் இல்லாத மலைவாழ் மக்கள் அனைவரையும் அவர்களது வரலாற்று வாழ்விடங்களை விட்டு வரும் 2019 சூலை 24-க்குள் வெளியேற்ற வேண்டும் என்று இத்தீர்ப்பில் கூறியிருக்கிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் இந்த ஆணையை நிறைவேற்றி மலைவாழ் மக்களை சூலை 24-க்குள் வெளியேற்றத் தவறினால், அந்த மாநிலத் தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

அரசும், பெருங்குழும நிறுவனங்களும் வனங்களையும், மலைகளையும் கேள்வி முறையின்றி சூறையாடுவதற்கே இத்தீர்ப்பு துணை புரியும்.

பழங்குடியினர் உள்ளிட்ட மலைவாழ் மக்கள்தான் வனங்களையும், மலைகளையும், வன உயிரினங்களையும் பாதுகாத்து வருகிறார்கள் என்பது மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்ட உண்மையாகும். ஏனெனில், வன வளமும், வள உயிர்மச் சூழலும் இம்மக்கள் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத அரண்களாகும்!

பிரித்தானிய ஆட்சிக்காலத்திலிருந்து அவ்வப்போது பிறப்பிக்கப்பட்ட வனச் சட்டங்கள், இம் மலைவாழ் மக்களின் வாழ்வுரிமையை பறிப்பதாக அமைந்தது வரலாறு. காந்தியடிகள் தொடங்கி பல தலைவர்களும் இச்சட்டங்கள் மலைவாழ் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வகையில் இருப்பதை எதிர்த்துப் போராடி வந்திருக்கிறார்கள் என்பதும் வரலாறு!

மலைவாழ் மக்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக கடந்த 2006ஆம் ஆண்டு, “வன உரிமைச் சட்டம்” பிறப்பிக்கப்பட்டது. மலைவாழ் மக்கள் கடுக்காய், தேன், மூலிகை உள்ளிட்ட சிறு வன விளைச்சல்களை எடுத்துப் பயன்படுத்துவதற்கும், தலைமுறை தலைமுறையாக மக்கள் வாழ்ந்து வந்த நிலங்களை அக்குடும்பங்களுக்கு தனிப்பட்டா வழங்கவும், சமூகங்களுக்கு கூட்டுப் பட்டா வழங்கவும் இந்த வன உரிமைச் சட்டம் வழிவகுத்தது. ஆயினும், இச்சட்டம் செயலுக்கு வரவே இல்லை!

இச்சட்டத்தின்படியான தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள கிராமசபைகளின் அதிகாரத்தைப் பயன்படுத்தியும் இந்தியாவிலுள்ள அனைத்து மாநில மலைவாழ் மக்கள், குறிப்பாக பழங்குடியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

வன உரிமைச் சட்டம் பிரிவு 4 (5)-இன்படி மக்களின் மரபுவழிப்பட்ட கிராமசபைகளுக்கு விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இம்மக்களின் நிலவுரிமையையும், வன உரிமையையும் கண்காணித்து ஒழுங்கு செய்து பாதுகாக்கும் அதிகாரம் பெற்ற மன்றங்களாக கிராமசபைகளின் அதிகாரம் உறுதி செய்யப்பட்டது.

இச்சட்டப்பிரிவின்படி கிராமசபை விசாரித்து மரபுவழி வாழும் குடும்பங்களுக்கு நிலவுரிமைப் பட்டா வழங்கப் பரிந்துரைத்தால், அதனை அந்தந்த மாநில அரசுத் துறைகள் ஏற்றுக் கொண்டு நிலவுரிமைப் பட்டா வழங்க வேண்டும். ஆனால், நடைமுறையில் வனத்துறை அதிகாரிகளும், வருவாய்த் துறையினரும் இதை மீறியே வருகின்றனர்.

இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விவரங்களின்படி இந்தியா முழுவதும் 42 இலட்சத்து 19 ஆயிரம் நிலப்பட்டா கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதில், 23 இலட்சத்து 30 ஆயிரம் மனுக்கள் எந்தக் காரணமும் சொல்லாமல் நிராகரிக்கப்பட்டன. பட்டா வழங்குவதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 இலட்சத்து 89 ஆயிரம் மனுக்களில் பெரும்பாலானவர்களுக்கு பட்டா வழங்கப்படவே இல்லை!

இந்திய அரசின் பழங்குடியினர் நலத்துறையும், மாநில அரசின் வனத்துறையும், வருவாய் துறையும் மலைவாழ் மக்களுக்கு உரிமை வழங்கும் இச்சட்டத்தை மீறியே வந்திருக்கின்றன.

நீதிமன்றத்தின் விசாரணைப் போக்கில் ஆணையிடப்பட்டதற்கிணங்க, வன உரிமைச் சட்டம் எவ்வாறு செயலாக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை வழங்குவதற்காக இந்திய அரசின் பழங்குடியினர் நலத்துறை அனைத்து மாநிலங்களிலும் விசாரணைக் குழுக்களை அமர்த்தியது. 2017ஆம் ஆண்டு அக்குழுக்கள் அறிக்கைகளை முன்வைத்தன.

தமிழ்நாட்டில் வனத்துறை சட்டம் செயலாவதை விசாரித்த குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், 2008ஆம் ஆண்டு தொடங்கி 2016ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு மலைவாழ் மக்களின் பட்டா கோரிக்கை மனுக்களின் நிலைமை தொடர்பாக வழங்கிய அறிக்கை ஒரு எழுத்தும் எண்ணும் மாறாத ஒரே அறிக்கையாக இருந்தது. அதாவது, எந்த முயற்சியும் ஆய்வும் செய்யாமல் தமிழ்நாடு அரசு ஒரே அறிக்கையை ஏழாண்டுகள் நகலெடுத்து அனுப்பி வந்திருக்கிறது.

கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் வன உரிமைச் சட்டம் செயலான நிலை இதுதான்!

ஒரு போராட்ட அழுத்தத்தின் காரணமாக வன உரிமைச் சட்டத்தைப் பிறப்பித்திருந்தாலும், இந்திய அரசு மலைகளையும் காடுகளையும் அழித்து அவற்றில் உள்ள கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பெருங்குழுமங்களுக்கும் வழங்குவதில் குறியாக இருக்கிறது. மாநில அரசுகளும் அவ்வாறே இருக்கின்றன. இதனால்தான், நிலப்பட்டா கோரி மலைவாழ் மக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்படாமல் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்படுவதும், எக்காரணமும் கூறாமல் பட்டா வழங்க மறுப்பதும் தொடர்கிறது.

உச்ச நீதிமன்றம் கோரி பெற்ற அனைத்து மாநில விசாரணை அறிக்கைகள், இந்த உண்மையைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. தங்கள் முன்னால் உள்ள இந்த உண்மையை கவனத்தில் கொள்வதற்கு மாறாக, அரசுகளின் மக்கள் பகைப் போக்கையே தனது தீர்ப்புக்கு அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது.

பட்டா கோரிக்கை ஏற்கப்படாத அனைத்து மக்களும் வெளியேற்றப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றமே செய்யும் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்! வன உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்த ஆணையிடுவதற்கு மாறாக மலைவாழ் மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்ற ஆணையிடுவது சட்டத்தின் ஆட்சியை கேலிக்குரியதாக மாற்றி இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி வாதம் நடைபெற்றபோது, இந்திய அரசின் வனத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பான வழக்குரைஞர்கள் எந்தவாதமும் செய்யாமல் நீதிமன்றத்திலேயே இல்லாமல் போனது – இதில் ஓர் கூட்டுச் சதி நடந்திருப்பதற்கு சான்று கூறுகிறது.

இந்நிலையில், இத்தீர்ப்புக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மட்டுமின்றி இந்திய அரசு மலைவாழ் மக்களை வெளியேற்ற மறுக்கும் அவசரச் சட்டமொன்றை உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும்.

காலங்காலமாக மலையகத்தில் வாழ்ந்து வரும் இம்மக்களின் நிலைமையை சான்றுகளோடு அவர்களே மெய்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதை மாற்றி, அவர்களை வெளியேற்ற முயலும் அரசுதான் இம்மக்கள் அவர்களுடைய வாழிடத்தில் பரம்பரைப் பரம்பரையாக வாழவில்லை என்பதை மெய்ப்பிக்க வேண்டும் என்ற சட்ட நிலையை ஏற்படுத்துவதாகவும் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்துகிறது.

அமைப்பு வலுவின்றி குரலற்றவர்களாக இருக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வுரிமையை இந்திய அரசு பாதுகாக்க வேண்டுமென்றும், அதற்குரிய அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசும், அனைத்துக் கட்சியினரும் இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.