ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஐ.நா.வை ஏமாற்றி நீதியின் பிடியிலிருந்து தப்ப முயலும் இனக்கொலை இலங்கை அரசின் தூதரக முற்றுகைப் போராட்டம்!

ஐ.நா.வை ஏமாற்றி நீதியின் பிடியிலிருந்து தப்ப முயலும் இனக்கொலை இலங்கை அரசின் தூதரக முற்றுகைப் போராட்டம்!
 

தமிழீழத்தில் இலட்சக்கணக்கான தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்து கொன்றொழித்த சிங்கள அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முற்படாமல், அவ்வரசுக்கு மீண்டுமொருமுறை வாய்ப்பு வழங்கும் நிகழ்வு ஐ.நா. மனித உரிமையில் நடைபெறவிருக்கிறது.

தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை அவைக் கூட்டத்தில், கடந்த 2015ஆம் ஆண்டு வட அமெரிக்காவின் முன்முயற்சியால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி, சிங்கள அரசு தன்னைத் தானே விசாரித்துக் கொள்ளும் பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டுமெனக் கோரியது. 2017ஆம் ஆண்டு வரை அது அமைக்கப்படவில்லை! எனவே, இரண்டாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது! இப்போதும் அது அமைக்கப்படவில்லை! இப்போது, மீண்டும் இரண்டாண்டுகள் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.

இந்திய அரசின் செல்வாக்கில் நடைபெற்று வரும் இந்தக் கால நீட்டிப்புகள், தமிழீழத்தில் நடைபெற்று வரும் கட்டமைப்பு இன அழிப்புக்கு துணை செய்யும் நடவடிக்கையாகும்! இதற்கெதிராக தமிழ்நாட்டு மக்களை அணிதிரட்டும் வகையில், “ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு” சார்பில், வரும் 14.03.2019 - வியாழன் அன்று காலை 10.30 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

சிறீலங்காவிற்கு கால நீட்டிப்பு வழங்கப்படக் கூடாது, சிறீலங்கா அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அல்லது போர்க்குற்றப் புலன் விசாரணைக்கென்று சிறீலங்காவுக்காக அமைக்கப்படும் சிறப்புப் பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும், போரினால் பாதிப்புற்றவர்களின் துயரம் குறித்தும், ஏனைய பன்னாட்டு மனிதவுரிமை, மனிதநேயச் சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக்கொரு முறை அறிக்கையளிக்கும் பொறுப்பில் சிறீலங்காவுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும், இன அழிப்புச் சான்றுகளை அழியவிடாமல் காக்க ஒரு நடுநிலையான பன்னாட்டுப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் இப்போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் தலைமையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பங்கெடுக்கிறது!

தமிழின உணர்வாளர்களும், தமிழ் மக்களும் இப்போராட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கிறது!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.