ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சம்மு காசுமீரில் பறிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை இந்திய அரசு திரும்ப அளிக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்!

சம்மு காசுமீரில் பறிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை இந்திய அரசு திரும்ப அளிக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுவின் நான்காவது கூட்டம், 2019 ஆகத்து 15 – 16 ஆகிய நாட்களில் திருச்செந்தூர் வட்டம் – குரும்பூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.

பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் பழ. இராசேந்திரன், நா. வைகறை, குரும்பூர் மு. தமிழ்மணி, இரெ. இராசு, க. அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி அம்மாள், க. முருகன், தை. செயபால், முழுநிலவன் உள்ளிட்ட தலைமைச் செயற்குழு தோழர்களும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுக்குழு தோழர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 1

சம்மு காசுமீரில் பறிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை இந்திய அரசு திரும்ப அளிக்க வேண்டும்!

சம்மு காசுமீருக்கு இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 35A மற்றும் 370 ஆகியவை வழங்கியிருந்த சிறப்பு அதிகாரங்களைப் பறித்து, அத்தாயகத்தையே இரண்டாக சிதைத்து கடந்த 05.08.2019 அன்று இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை கடுமையாகக் கண்டிக்கத்தக்க சட்ட விரோத நடவடிக்கையாகும்!

தனி நாடாக இருந்து ஒப்பந்தம் அடிப்படையில் இந்தியாவில் இணைந்த சம்மு காசுமீரில் அம்மக்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்தியத் தலைமையமைச்சர் நேரு ஐ.நா.வில் வழங்கிய உறுதிமொழி ஏற்கெனவே மீறப்பட்ட நிலையில், இப்போது அம் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளும் பறிக்கப்பட்டது அம்மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்!

சம்மு காசுமீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாததால் ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வரும் நிலையில், பா.ச.க. அரசு இந்த சனநாயகப் படுகொலையை அரங்கேற்றியுள்ளது, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். காசுமீரைப் போல், தமிழ்நாடும் நாளை பிரிக்கப்படலாம் என்பதற்கான எச்சரிக்கையாகும்!

இந்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக காசுமீர் மக்கள் இராணுவ முற்றுகைக்குள் அறப்போராட்டம் நடத்தி வருவதாகவும், அதை துப்பாக்கிக் குண்டுகளால் இந்திய அரசு ஒடுக்கி வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய அரசு இப்போக்கைக் கைவிட்டு, உடனடியாக சம்மு காசுமீருக்குப் பறிக்கப்பட்ட அதிகாரத்தைத் திரும்ப வழங்கி, அம்மாநிலத்தை இரண்டாக சிதைக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்! அங்கு குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை மீள அழைத்து, காசுமீரி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வித்திட வேண்டும் என இப்பொதுக்குழு இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் - 2

புதிய தொழில் முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் குவிக்க, முதலமைச்சர் வெளிநாடு பயணம் செய்யக்கூடாது!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், பெருமுதலீட்டாளர்களை தமிழ் நாட்டில் தொழில் தொடங்க அழைப்பதற்காக 28.08.2019 அன்று வட அமெரிக்கப் பயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே, தானியங்கி ஊர்தித் தொழிலகங்கள், வேதியியல் தொழிற்சாலைகள், அணு உலைகள் என்று வெளிநாட்டு மற்றும் இந்தியப் பெருங்குழும நிறுவனங்கள் - மக்கள் தொகை மிகை அடர்த்தி உள்ள தமிழ்நாட்டில் நீர் வளத்தை உறிஞ்சி சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தி விட்டன.

இந்தியாவின் சராசரி மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 375 பேர். தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தியோ 555 பேர். சென்னையில் 26,553 பேர். திருவள்ளுர் மாவட்டத்தில் 1,098 பேர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 892 பேர் என்று மக்கள் தொகை அடர்த்தி இருக்கிறது. ஆனால், மக்களின் தேவைக்குரிய நீர் வளமோ, நிலப்பரப்போ போதிய அளவு கிடைக்காத நெருக்கடியான பகுதி தமிழ்நாடு. இந்நிலையில், ஏற்கெனவே மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைந்து, கிடைக்கிற குறைவான நீர் வளத்தையும் உறிஞ்சி வருகின்றன. நிலம், நீர், காற்று ஆகியவை அதிக அளவில் மாசுபட்டு வருகின்றன.

இப்போது அமெரிக்க நாட்டிலிருந்து பெருங்குழுமத் தொழிற்சாலைகளை புதிதாக இங்கே அழைத்து வரப் போவதாக முதலமைச்சர் கூறுகிறார். இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புப் பெருகும் என்றும் முதலமைச்சர் கூறுவது உண்மை நிலவரத்திற்கு மாறாக உள்ளது.

ஏற்கெனவே இங்கு உள்ள பெருந்தொழில் நிறுவனங்களில் வெளி மாநிலத் தொழிலாளர்களே அதிகம் பேர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கு எந்த சட்டப் பாதுகாப்பும் தமிழ்நாட்டில் செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் 90 விழுக்காடு வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்கப்பட வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கு இட ஒதுக்கீடு ஒழுங்கு செய்யும் வகையில் கர்நாடகம், ஆந்திரம், குசராத், மராட்டியம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்ட ஏற்பாடுகள் உள்ளன. அதுபோல், தமிழ்நாட்டிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வழங்குவதற்கான ஒதுக்கீடு கோரி சட்ட மாதிரி வரைவையும் அணியப்படுத்தி முதலமைச்சர் அவர்களிடம் கடந்த 2018 மார்ச் மாதம் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வழங்கியிருக்கிறது.

இதுவரை அவ்வாறான சட்ட வரம்புகள் வழங்கப்படாததால், தமிழ்நாடு திறந்த வீடாக மாறி எல்லாத் தொழில்களிலும் இந்திக்காரர்களும் பிற மாநிலத்தவரும் தமிழ்நாட்டு வேலை வாய்ப்பைக் கைப்பற்றி வரும் நிலை உள்ளது. இப்போக்கு புதிதாக வரப்போகும் தொழிற்சாலைகளிலும் தொடரவே செய்யும். தமிழ்நாட்டில் உரிய கல்வி கற்று வேலை தேடி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 90 இலட்சம்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டு சிறு – நடுத்தரத் தொழில்களை ஊக்குவிப்பதாகவே இருக்க வேண்டும். இதற்கு மாறான முயற்சியில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மற்றபடி அமெரிக்க அரசியல் தலைவர்களை சந்திக்கவும், அங்கு வாழும் தமிழர்களை சந்தித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் பயணம் சென்றால் அது வரவேற்கத்தக்கதே! அமெரிக்கப் பெருங்குழும நிறுவனங்களைத் தமிழ்நாட்டுக்கு அழைக்கும் முயற்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கைவிட வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் - 3

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது!

தொடர்ச்சியாக இந்தியாவை ஆண்டு வரும் காங்கிரசு – பா.ச.க. உள்ளிட்ட இந்தியத்தேசிய வெறிக் கட்சிகள், இந்தியாவின் குப்பைத்தொட்டியாக தமிழ்நாட்டைக் கருதுகின்றன. இதன் வெளிப்பாடாகவே, இந்தியாவின் பிற மாநிலங்களில் சுற்றுச்சூழலுக்குக் கேடு என எதிர்க்கப்படும் திட்டங்கள் தமிழ்நாட்டின் மீது திணிக்கப்படுகின்றன.

இப்போது, தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலையில் இந்தியாவெங்கும் உள்ள அணுக்கழிவுகளை சேகரித்து வைக்கும் “அணுக்கழிவு மையம்” அமைக்கப் போவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

அணுக்கழிவிலிருந்து வெளிப்படும் ஆபத்தானக் கதிரியக்கம் பாதி குறையவே 24,000 ஆண்டுகள் ஆகும் என்று அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். வெறும் ஐந்தாண்டுக்கே கூட முறையாகத் திட்டமிட முடியாத அரசுகளை வைத்துக் கொண்டு, இவ்வளவு நீண்ட காலத்திற்கு இவர்கள் அணுக் கழிவைப் பாதுகாப்பார்கள் என்று எப்படி நம்ப முடியும்?

ஏற்கெனவே, அணுக்கழிவுகளை வெளியே கொண்டு செல்வதற்குப் பாதுகாப்பான எந்தவொரு தொழில்நுட்பமும் தங்களிடம் இல்லை என உச்ச நீதிமன்றத்திலேயே கைவிரித்த இந்திய அரசு, அதற்குப் பதிலாக அணுக்கழிவு மையத்தை கூடங்குளத்திற்குள்ளேயே நிறுவ உள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும்!

எனவே, இந்திய அரசு கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்கக் கூடாது! ஏற்கெனவே இங்கு நிறுவப்பட்டுள்ள அணு உலைகள் இயங்க இயங்க அணுக்கழிவு வந்து கொண்டேதான் இருக்கும் என்பதால், கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூட என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இப்பொதுக்குழு இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 4

“தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019”ஐ திரும்பப் பெறுக!

இந்திய அரசு முன்வைத்துள்ள “தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019”, ஆரிய சமற்கிருத ஒற்றைப் பண்பாடு, இந்தி இனத்தின் ஆதிக்கம், பன்னாட்டு பெருங்குழுமங்களுக்கான படிப்பாளிகளை உருவாக்குவது, அதற்கேற்ப இந்திய அரசிடம் அதிகாரக்குவிப்பு ஆகியவற்றையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

மழலையர் கல்வி தொடங்கி ஆராய்ச்சிக் கல்வி வரை உள்ள கல்வி தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் மொழிவழி தேசிய இன மாநிலங்களிடமிருந்து பறித்து இந்திய அரசின் கைகளில் குவிக்க இக்கல்விக் கொள்கை வரைவு வழிசெய்கிறது. 
பல்வேறு கல்வி மரபும், கல்வி வாய்ப்புகளும், பண்பாடும் உள்ள பல்வேறு தேசிய இன மக்களின் கல்வித் தேவைகள் பெரிதும் வேறுபடுகின்றன. அந்தந்த மாநில மொழிகளில் கல்வி வழங்க வேண்டிய தேவைகள் பெருகி வருகின்றன. இச்சூழலில் கல்வி அதிகாரம் தில்லியில் குவிக்கப்படுவது மாநில உரிமைப் பறிப்பு மட்டுமின்றி, கல்வியில் நிலவ வேண்டிய பன்மைத்தன்மையை மறுப்பதாகும்.

அனைத்து நிலையிலும் மக்களின் கல்வி உரிமைக்கும், மொழிவழி தேசிய இனங்களுக்கும் எதிராக உள்ள “தேசிய கல்விக் கொள்கை வரைவு – 2019”-ஐ இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், கல்வி குறித்த அதிகாரத்தை மாநில அரசிற்குத் திரும்ப அளிக்க வேண்டுமென்றும் இப்பொதுக்குழு இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தமிழ்நாடு அரசு, இந்திய அரசின் இந்த பிற்போக்கான கல்விக் கொள்கையை முற்றிலும் மறுத்து கல்வி அதிகாரத்தை மாநிலத்திற்கு மீட்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இப்பொதுக்குழு தமிழ்நாடு மாநில அரசைக் கோருகிறது!

தீர்மானம் – 5

தேசிய இன உரிமைகளைப் பறிக்கும் என்.ஐ.ஏ. மற்றும் யு.ஏ.பி.ஏ. சட்டத் திருத்தங்களுக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் வலுப்பெற வேண்டும்!

அரசமைப்புச் சட்டத்தை அப்படியே வைத்துக் கொண்டு, தேசிய இன மாநில உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிப்பது, சனநாயகம் என்பதை மிகப்பெரும் அளவுக்கு சுருக்குவது என்பதை நோக்கி அடுக்கடுக்கான சட்டங்களை மோடி ஆட்சி பிறப்பித்து வருகிறது.

“தானியங்கி ஊர்தி சட்டத்திருத்தம் – 2019” என்ற பெயரால் மொத்த சாலைப் போக்கு வரத்து அதிகாரத்தையே இந்திய அரசு எடுத்துக் கொள்ளும் வகையில் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது. இந்திய மருத்துவக் கழகச் சட்டத் திருத்தம், மருத்துவப் படிப்பு குறித்த மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிப்பதோடு மாநில அரசுகள் வழங்கும் மருத்துவப் பட்டமே இந்திய அரசு நடத்தும் “தேசிய இறுதித் தேர்வு” (NEXT) அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று கூறுகிறது. அதன்பிறகு, இப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முற்றிலும் முடக்கிப்போடும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தை மோடி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது.

இதன் அடுத்தகட்டமாக, “இசுலாமியர்களை மட்டுமல்ல, தமிழ் அமைப்புகளையும் ஒடுக்கவே இந்தச்சட்டம்” என்ற இந்திய உள்துறை அமைச்சர் அமித்சாவின் கொக்கரிப்போடு நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட “தேசிய புலனாய்வு முகமை” திருத்தச்சட்டத்தை நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றி இருக்கிறது, மோடி அரசு. எதிர்த்துப் பேசுவது, ஆதரித்து நடந்து கொள்வது என்பதில் அ.தி.மு.க.வுக்கு சற்றும் சளைத்ததல்ல தி.மு.க. என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இத்திருத்தச்சட்டம் நிறைவேறி இருக்கிறது. இத்திருத்தத்திற்கு இசைவாக “சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் - 1967”-இல் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

முற்றிலும் சனநாயக விரோத அடக்குமுறைச் சட்டங்களான என்.ஐ.ஏ., சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட திருத்தம் ஆகிய அரச பயங்கரவாத சட்டங்களை எதிர்த்து முறியடிக்க வேண்டிய பொறுப்பு - மக்கள் இயக்கங்களின்பாலும், மனித உரிமையை நேசிக்கும் ஊடகத்தினர் பாலும் வைக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டங்களுக்கு எதிரான பரந்துபட்ட போராட்டத்தைக் கட்டமைக்க சனநாயக ஆற்றல்களை இப்பொதுக்குழு அழைக்கிறது!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.