மாநில உரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிரானஊடகப் பதிவுச் சட்டத்தை திரும்பப் பெறு! கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!
மாநில உரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிரானஊடகப் பதிவுச் சட்டத்தை திரும்பப் பெறு!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!
அதிகாரக் குவிப்பு, கருத்துரிமைப் பறிப்பு ஆகிய நோக்கில் மிகக் கடுமையான சட்ட வரைவு ஒன்றை “அச்சு ஊடகம் மற்றும் வெளியீடுகள் பதிவுச் சட்ட வரைவு – 2019” (Registration of Press and Periodicals Bill – 2019) என்ற பெயரில், மோடி அரசு முன்வைத்திருக்கிறது.
வெள்ளையராட்சியில் 1867இல் பிறப்பிக்கப்பட்டு பெரிதும் வெறுத்து ஒதுக்கப்படும் நடப்பிலுள்ள “புத்தகங்கள் பதிவு சட்டம் – 1867”-ஐவிட மிக மோசமான சட்டமாக இச்சட்ட வரைவு அமைந்திருக்கிறது.
ஏடுகள், இதழ்கள், வெளியீடுகள் போன்றவற்றை பதிவு செய்யும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவு செய்வதற்கு மாறாக, முற்றிலும் இந்திய அரசின் கைகளில் கருத்துரிமைப் பறிப்பு அதிகாரத்தை நிரந்தரமாக வழங்கும் நோக்கோடு இப்புதிய சட்ட வரைவு அமைந்திருக்கிறது.
இது தொடர்பாக இந்திய அரசு அமர்த்தும் அச்சு ஊடகத் தலைமைப் பதிவாளர் (Press Registrar General) அச்சு ஊடகம் மட்டுமின்றி, காட்சி ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்கள் மீதும் வல்லாதிக்கம் செய்பவராக மாற்றப்படுகிறார். (இச்சட்ட வரைவு 5(3)).
ஒரு ஊடகத்தின் உரிமையாளர், ஆசிரியர், ஆசிரியர் குழு, அச்சகத்தார், மின்னணு ஊடகத்தில் பதிவேற்றிப் பரப்புவோர் ஆகிய அனைவரும் தலைமைப் பதிவாளரின் சர்வாதிகாரத்தின் கீழ் ஆட்டிவைக்கப்படும் வகையில் விரிந்த அதிகாரங்கள் வழங்கப்படுகிறது. ஒரு ஊடகம் தொடர்பான எந்தவித தகவல்களையும் எப்போது வேண்டுமானாலும் ஆணையிட்டுப் பெறலாம், எந்த ஊடக நிலையத்தையும் எப்போது வேண்டுமானாலும் உள்நுழைந்து ஆய்வு செய்யலாம், பொருத்தமானது என்று தான் கருதும் எந்த ஆவணத்தையும் கொண்டு வரச் சொல்லி வலியுறுத்தலாம், இவற்றில் அவருக்கு மனநிறைவு ஏற்படாவிட்டால் பதிவு செய்ய மறுக்கலாம் என்ற கட்டற்ற அதிகாரம் தலைமைப் பதிவாளருக்கு வழங்கப்படுகிறது (பிரிவு 5 மற்றும் 6).
தலைமைப் பதிவாளருக்குக் கீழே மாநிலங்களில் பதிவு அலுவலர்கள் அமர்த்தப்படுவார்கள். அவர்கள் மீது மாநில அரசுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது!
இவ்வாறு அனைத்து அதிகாரமும் உள்ள தலைமைப் பதிவாளர் தற்சார்பான அதிகாரம் கொண்டவரும் அல்லர். இறுதிக்கும் இறுதியாக, இந்தத் தலைமைப் பதிவாளர் இந்திய அரசு அவ்வப்போது மேற்கொள்ளும் கொள்கை முடிவுகளுக்கும், வழிகாட்டல்களுக்கும் கேள்வி முறையின்றி கட்டுப்பட்டவர் என்றும், இம்முடிவுகள் குறித்து முரண்பாடு வந்தால், இந்திய அரசின் முடிவே இறுதியானது என்றும் முற்றதிகாரமும் இந்திய அரசுக்கு வழங்கப்படுகிறது (பிரிவு 19).
இந்திரா காந்தி ஆட்சியில் அவசரநிலைக் காலத்தில் கிடைத்த சிறப்பதிகாரத்தைப் பயன்படுத்தி, ஊடகங்களுக்கு முன் தணிக்கை முறை வந்தது. ஆனால், இப்போது முன்வைக்கப்படும் சட்டத்தின் மூலம் மோடி ஆட்சியில் முன் தணிக்கை அதிகாரம் நிரந்தரமாக வழங்கப்படுகிறது. இவ்வாறான முன் தணிக்கைக்கு அச்சு ஊடகங்கள் மட்டுமின்றி, அனைத்து வகை மின்னணு ஊடகங்களும் உட்படுத்தப்படும் என சர்வாதிகாரம் விரிவாக்கப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்ட உறுப்பு 370 நீக்கப்பட்டதை எதிர்த்து, எந்த முணுமுணுப்பும் வெளியில் வரக் கூடாது என்பதற்காக அனைத்து வகை தகவல் தொடர்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டதையும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடக்கும் இடங்களிலெல்லாம் இணையச் சேவை உள்ளிட்ட அனைத்தும் முடக்கப்பட்டிருப்பதைப் போல, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு வேட்டை நடந்தபோது தூத்துக்குடி – நெல்லை – கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையத் தகவல்கள் முடக்கப்பட்டதைப் போல இனி தாங்கள் விரும்பாத தகவல்கள் பரவுவதை தடுத்து நிறுத்தவும் தங்களது ஒரு தரப்புத் தகவல் மட்டுமே பரப்பப்படவும் அரசுக்கு வாய்ப்பளிக்க இச்சட்டத்தின் மூலம் நிரந்தர ஏற்பாடு செய்யப்படுகிறது.
சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப்படி (UAPA) தண்டிக்கப்பட்டவர்களும், அரசின் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவர்களும் எந்த வகை ஊடகமும் நடத்த முடியாது என இச்சட்டம் தடை போடுகிறது (பிரிவு 4 மற்றும் 11).
ஏற்கெனவே, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் பயங்கரவாத அல்லது பிரிவினைவாத கருத்துகள் என்று கருதப்படுபவை அச்சு ஊடகத்திலோ, காட்சி ஊடகத்திலோ, பேச்சிலோ, கலை வடிவிலோ, பிற எந்த வடிவிலோ பரப்புவது தண்டனைக்குரிய குற்றச் செயல் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டப்படி தண்டனை அனுபவித்துவிட்டு, வெளியில் வந்த பின்னும் அவர்களது கருத்துரிமைக்கு தடை போடப்படுகிறது. இரட்டைத் தாழ்ப்பாள் போல இந்தச் சட்டம் மயான அமைதிக்கு வலுசேர்க்கும் சட்டமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.
அதைவிட, “அரசின் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்கள்” என்று மிக தொளதொளப்பானப் பிரிவு சேர்க்கப்பட்டிருப்பது அரசு விரும்பாத எந்தத் தகவலும் பரவுவதை குற்றச் செயலாக வரையறுக்கும் வாய்ப்பை வழங்குகிறது. அரசின் பாதுகாப்புக்கு எதிரான செயல்பாடுகள் என்னென்ன என்ற எந்த வரையறுப்பும் இல்லாமல், எந்த எதிர்ப்பையும் அரசின் பாதுகாப்புக்கு எதிரான குற்றமாக வரையறுத்து ஊடக உரிமையை மறுக்கும் ஆபத்து இதில் உள்ளது.
அவசரநிலைக் காலத்தில், தனக்கு எதிராக கருத்துக் கூறிய அனைவருமே நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என வரையறுத்து, இந்திரா காந்தி ஆட்சி சிறையில் தள்ளியது. இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற வலுவான ஊடகங்களே முடக்கப்பட்டன. இப்போது மோடி ஆட்சியில் எல்லா வகை எதிர்க் கருத்துகளும் “இந்திய எதிர்ப்பு” (Anti Indian) என தூற்றப்படுவதும், கொடும் அடக்குமுறைகளை சந்திப்பதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
இச்சட்ட வரைவு நிறைவேறிவிட்டால், இந்த அச்சுறுத்தல்கள் நிரந்தரமாக்கப்படும்.
வெள்ளையர் ஆட்சி தொடங்கி இப்போது செயலில் உள்ள ஏடுகள் பதிவு சட்டம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது நீண்டகாலம் நீடிக்கும் கோரிக்கையாகும். ஆனால், அதைச் செய்வதாக இப்போது பிறப்பிக்கப்படும் சட்டம் அதைவிட பன்மடங்கு மோசமானது.
இப்புதிய சட்டத்தை கருத்துரிமையில் அக்கறையுள்ள எந்தவொருவரும் ஏற்க முடியாது!
எனவே, மாநில உரிமையைப் பறித்து, கருத்துரிமையை முற்றிலும் முடக்கும் “அச்சு ஊடகம் மற்றும் வெளியீடுகள் பதிவுச் சட்ட வரைவு – 2019”-ஐ முழுவதுமாக இந்திய அரசு கைவிட வேண்டும் என்றும், ஊடகப் பதிவு அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment