ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சமூக ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளை மோடி அரசு கைவிட வேண்டும்! - ஐயா கி. வெங்கட்ராமன் அறிக்கை!


சமூக ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளை
மோடி அரசு கைவிட வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


கொரோனா முழுமுடக்கத்தைப் பயன்படுத்தி, அனைத்து சனநாயக உரிமைகளையும் பறிக்கும் மோடி ஆட்சியின் பாசிச நடவடிக்கைகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். இப்போது, பா.ச.க. ஆட்சி, இணையதள முடக்கத்தில் இறங்கிவிட்டது!


இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2020 மார்ச்சில் முன்வைத்த “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை – 2020” (Environment Impact Assessment 2020 – EIA 2020) என்ற வரைவின் மீது முதலில் 2020 சூன் 30-க்குள் கருத்து சொல்ல வேண்டுமென்று அறிவித்த தில்லி அரசு, நீதிமன்றத் தலையிட்டுக்குப் பிறகு 2020 ஆகத்து 11 வரை மக்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவித்தது. அதற்கான மின்னஞ்சல் முகவரியையும் வெளியிட்டிருக்கிறது.



இதன் மீது பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், இயக்கங்களும் தங்கள் கருத்துகளை அனுப்பி வருகிறார்கள்.



சுவீடன் நாட்டின் சூழலியல் செயல்பாட்டாளர் சிறுமி கிரேட்டா துன்பெர்க்கைப் பின்பற்றி, “எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை” (Fridays for Future) என்ற அமைப்பின் பெயரில் இந்தியாவிலும் பள்ளி – கல்லூரி மாணவர்களும், இளையோரும் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பரப்புரையில் இறங்கி வருகிறார்கள். இவர்கள் www.fridaysforfuture.in என்ற இணையத்தை நடத்தி வருகிறார்கள். இந்திய அரசு முன்வைத்துள்ள EIA – 2020 குறித்து, சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அளிக்க வேண்டிய மனுவின் மாதிரி வடிவத்தை வெளியிட்டிருந்தனர். இந்த இணையத்தில் வெளியிட்டிருந்தனர்.



இதைப் பின்பற்றி, சூழலியல் ஆர்வலர்களும், பள்ளி – கல்லூரி மாணவர்களும் பல்லாயிரக்கணக்கில் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தங்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியிலிருந்து மனுக்களை அனுப்பியிருக்கிறார்கள்.



ஒருபக்கம் - வரைவின் மீது கருத்து கேட்ட மோடி அரசு, மாற்றுக் கருத்துகள் ஏராளம் வந்தவுடன் ஆத்திரமடைந்தது.



சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தில்லி காவல்துறைக்கு புகார் அளித்து, இந்த இணையதளத்தைத் தடை செய்யுமாறு வலியுறுத்தினார். அந்தப் புகார் மனுவில், ஒரே மாதிரியான வாசகங்கள் உள்ள மனுக்கள் பல்லாயிரக்கணக்கில் வந்ததை சுட்டிக்காட்டி, “பொது அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் இந்திய இறையாண்மைக்கும் எதிரான பயங்கரவாதச் செயல் இது” என்று குறிப்பிட்டிருந்தார்.



அதை அப்படியே ஏற்றுக் கொண்ட தில்லி பெருமாநகர இணையக் குற்றங்கள் சிறப்புப் பிரிவு காவல்துறை துணை ஆணையர் அங்கிலேஷ் ராய், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66-இன் கீழும், பயங்கரவாதத்திற்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப் பிரிவு 18இன் கீழும் வழக்குப் பதிந்து, 10.07.2020 அன்று அந்த இணையதளத்தைத் தடை செய்தார்.



இது அப்பட்டமான சட்ட மீறல் – கருத்துரிமைப் பறிப்பு என எதிர்ப்பு வந்ததற்குப் பிறகு, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப் பிரிவு 18இன் கீழ் வழக்குப் பதிந்தது “ஒரு தட்டச்சுப் பிழையால்” நேர்ந்தது எனச் சொல்லி, அந்தப் பிரிவை காவல்துறை துணை ஆணையர் திரும்பப் பெற்றார்.



தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66-ம் வேண்டுமென்றே இதற்குப் பொருத்தப்படுகிறது. அப்பிரிவு, “கணினியைப் பயன்படுத்தி வெளியிடப்படும் எந்தத் தகவலும் அச்சமூட்டுவதாகவோ, பொய்யானதாகவோ, தொந்தரவு தரக்கூடியதாகவோ, ஆபத்தான விளைவுகளை உண்டாக்கக் கூடியதாகவோ, இழிவான பரப்புரையாகவோ அமைந்தால் அந்தத் தகவல் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும்” எனக் கூறுகிறது.



“எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை” அமைப்பின் இளையோர் முன்வைத்துள்ள மாதிரி மனு – எந்த வகையிலும் இச்சட்டப் பிரிவின் கீழ் குற்றமாக சொல்லத்தக்கதல்ல.



“சூழலியல் தாக்க அறிவிக்கை – 2020 எல்லா வகையிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது. எனவே, அதனை முழுவதுமாக இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கொரோனா முடக்கக் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, எல்லா நிறுவனங்களையும், தொழில்களையும் எந்த சனநாயக விவாதத்திற்கு உட்படுத்தாதமல் தனியார்மயமாக்குவது என்ற இந்திய அரசின் முடிவிற்கு இசைய இந்த EIA – 2020 அறிவிக்கை அமைந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் – 1986இன் பிரிவு 3-க்கு முற்றிலும் எதிரானதாக இந்த EIA – 2020 அறிவிக்கை அமைந்துள்ளது” என்று இந்த இளையோர் முன்வைத்த மனு கூறுகிறது.



இது தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66-இன் கீழ் குற்றச்செயலாக வரையறுக்கத்தக்கதல்ல என்பது தெளிவு!



ஆனால், மோடி அரசு சட்டத்தின் ஆட்சியைப் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாமல் செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அதன் மக்கள் பகை செயல்பாடுகளை கேள்வி கேட்டாலே “பயங்கரவாதம்”, “அச்சுறுத்தும் செயல்” என வாய்ப்பூட்டுப் போடுகிறது.



“எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை” அமைப்பினர் தில்லி இணையக் குற்றப்பிரிவு காவல்துறையில், இக்குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என எடுத்துக்காட்டிய பிறகு, வடநாட்டில் இயங்கும் பல்வேறு ஆங்கில இணைய ஊடகங்கள் எதிர்த்தற்குப் பிறகு, பன்னாட்டு அரங்கிலும் அழுத்தம் வந்ததற்குப் பிறகு – இந்தத் தடை ஆணையை முற்றிலும் விலக்கிக் கொண்டதாக துணை ஆணையர் அங்கிலேஷ் ராய் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஆனால், அந்தத் தடையாணை திரும்பப் பெற்றதாகத் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப் படவில்லை என்றும், இன்னும் தங்களுடைய இணையம் முடங்கியே இருக்கிறது என்றும் அந்த இணையத்தின் வழக்கறிஞர் அப்பர் குப்தா தெரிவித்தார்.



இந்த இணையம் மட்டுமின்றி, EIA – 2020-க்கு எதிராகப் பரப்புரை செய்த “இந்தியா மூச்சு விடட்டும்” (Let India Breathe) என்ற சூழலியல் இளையோர் இணையதளமும், “இரண்டாவது புவி இல்லை” (There is No Earth B) என்ற இணையதளமும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் NIXI-ஆல் (National Internet Exchange of India) தடை செய்யப்பட்டது. அந்த இணைய முடக்கமும் நீடிக்கிறது.



சட்டத்தை அப்படியே வைத்துக் கொண்டு, நடைமுறையில் அதனை மீறவது என்பதையே பா.ச.க. ஆட்சி வழமையாகக் கொண்டுள்ளது. இந்தச் சிக்கலிலும் அதுதான் நடக்கிறது.



குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய தில்லி பல்கலைக்கழக – ஜாமியா மிலியா பல்கலைக்கழக – சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது கொடும் தாக்குதலை நடத்திவிட்டு, அவர்கள் மீதே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்திருப்பதும், அதிலும் இணையங்களின் வழியாக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததையே குற்றச்செயலாக்குவதும் இதே வகை சட்டமீறல்தான்!



இந்திய அரசு சமூக ஊடகங்களின் மீதான இந்தத் தடை ஆணைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பாசிசத்தை எதிர்கொள்ள கட்சி கடந்து – மாணவர்களும் இளையோரும் மக்கள் வாழ்வின் மீது அக்கறை கொண்டோரும் எழுச்சி கொள்ள வேண்டியது அவசரத் தேவையாகும்.



தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



1 comment:

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.